மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? - 3 - வயிறும்... வயிற்றைச் சார்ந்த உறுப்புகளும்!

என்ன நோய்... எந்த டாக்டர்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன நோய்... எந்த டாக்டர்?

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

‘பட்டினியாக இருக்கும்போது எந்த மனிதரும் ஞானியாக இருக்க முடியாது’ என்பது பிரபல பொன்மொழி. ‘எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என மாற்றி எழுதும் அளவுக்கு அத்தனை உயிரினங்களிலும் வயிறு முக்கியத் துவம் பெறுகிறது.

வாந்தி, பேதி, அஜீரணம், வலி என வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் ‘வயிறு சரியில்லை’ என்ற எளிய வார்த்தை களில் கடந்து போகிறோம். ஆனால், வயிறு என்கிற விசாலமான பகுதி பல உள் உறுப்புகளை உள்ளடக்கியது. வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு பெரும் பாலும் பலரும் சுயமருத்துவம் செய்து கொள்கிறார்கள். அது தவறென்பதை உணர்த்தி, வயிறு தொடர்பான பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கு அணுகவேண்டிய மருத்துவர் குறித்தும் விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா.

வயிறு என்பது யாதெனில்...

வாய் முதல் ஆசனவாய் வரையிலான செரிமான மண்டலம் மிகப் பெரியது. உணவுக் குழாய், இரைப்பை, பித்தப்பை, கல்லீரல், கணையம், சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், ஆசனவாய் என பல உறுப்புகளை உள்ளடக்கிய பகுதி இது. இவற்றில் எந்த உறுப்பில் பாதிப்பு என்றாலும் நீங்கள் அணுக வேண்டியவர் வயிறு, குடல், இரைப்பை மருத்துவரையே.

என்ன நோய்... எந்த டாக்டர்? - 3 - வயிறும்... வயிற்றைச் சார்ந்த உறுப்புகளும்!

25 செ.மீ நீளம் கொண்டது நம் உணவுக்குழாய். இரைப்பையில் அமிலம் சுரக்கும். ஆனால், உணவுக்குழாயில் அமிலச் சுரப்பு இருக்காது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு வால்வு இருக்கும். உணவானது இரைப்பைக்குப் போய் விட்டு, அதே பாதையில் திரும்ப வராது. வயிறுமுட்ட சாப்பிட்டு, தலைகீழாகத் தொங்கினால்கூட சாப்பிட்ட உணவு வெளியே வராது.

ஆனால், உடல் பருமனானவர்கள், சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள், ஒன்றுக்கு மேலான பிரசவத்தை எதிர்கொண்டவர்கள் போன்றோருக்கு அந்த வால்வு சற்று தளர்ந்துபோவதால், இரைப்பையில் உள்ள அமிலம் உணவுக்குழாய்க்கும் வந்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இதை ‘இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்’ (Acid Reflux Disease) என்று சொல்வோம். வாழ் வியல் முறை மாற்றங்களோடு சில மருந்துகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் இதை குணப்படுத்தலாம்.

தென்னிந்தியாவில் சமீப காலத்தில் மிகவும் அதிகரித்து வருவது உணவுக்குழாய் புற்றுநோய். இது உணவுக்குழாயின் 25 செ.மீ நீளத்தில் எந்த இடத்திலும் பாதிக்கலாம். 40 வயதுக்கு மேலானவர்களுக்கு தண்ணீர் குடிப்பதிலோ, உணவை விழுங்குவதிலோ சிக்கல்கள் இருந்தால் அவர்கள் புற்றுநோய்க்கான பரிசோதனையைச் செய்து பார்க்க வேண்டும்.

அடுத்தது, இரைப்பை தொடர்பான பிரச்னைகள்... வயிற்றுவலி, வயிற்று எரிச்சல், அல்சர், கேஸ்ட்ரைட்டிஸ் என இரைப்பையை பாதிக்கும் பிரச்னைகள் பல. வயதானவர்களில் சிலர், உடல்வலிக்காக அடிக்கடி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வார்கள். அது அல்சர் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இரைப்பையை பாதிக்கும் புற்றுநோயும் தென் னிந்தியாவில் மிக அதிகம். 50 வய துக்குப் பிறகு திடீரென பசி யின்மை, எடை குறைந்துகொண்டே போவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது. `எண்டோஸ்கோப்பி' என்கிற எளிய பரிசோதனையில் இரைப்பை புற்றுநோயைக் கண் டறியலாம். இரைப்பை என்பது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பை. அதில் எந்த இடத்தில் புற்றுநோய் பாதித்தாலும் அதன் தீவிரத்தைப் பொறுத்து, பாதி இரைப்பையை எடுக்கப் போகி றோமா, முழுவதையுமா என்பது முடிவு செய்யப்படும்.

அடுத்தது, இரைப்பைக்குப் பின்னாலிருக்கும் சுரப்பியான கணையம். அதில் பரவலாக பாதிக்கும் நோய் ‘பான்கிரியாட் டைடிஸ்’ எனப்படும் கணைய அழற்சி. மதுப்பழக்கமே இதற்கான முக்கிய காரணம். இது உயிருக்கே ஆபத்தான பிரச்னை. சிலருக்கு மெள்ள மெள்ள பாதித்து, ஒரு கட்டத்தில் கணையமே கல் போல இறுகிவிடும். இதை ‘க்ரானிக் பான்கிரியாட்டைடிஸ்’ என்று சொல்வோம். தீவிர வயிற்றுவலி, முதுகுவலி இருக்கும். கணையத்துக்குள் கல் உருவாகும். இதற்கு அறுவைசிகிச்சை தேவைப்படும். கணையத்தை பாதிக்கும் மற்றொரு முக்கியமான பிரச்னை மஞ்சள் காமாலை. தவிர, கணையத்தை பாதிக்கும் புற்றுநோயும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

பிறந்த உடன் ரத்த செல்கள் உற்பத்தியாகும் இடம் மண்ணீரல். 5 வயதுக்குப் பிறகு இந்த உறுப்புக்குப் பெரிய வேலைகள் இருக்காது.

ஃபங்ஷனல் பவல் டிசீஸ்... இது மனம் சம்பந்தப்பட்டது!

வயிறு மற்றும் இரைப்பை தொடர்பான பல பிரச்னைகள் மனம் சம்பந்தப்பட்டவை. அவற்றை ‘ஃபங்ஷனல் பவல் டிசீஸ்’ என்று சொல்கிறோம். அதற்காக வயிறு தொடர்பான எல்லா பிரச்னைகளுமே மனம் சம்பந்தப் பட்டவையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருவதும் ஆபத்தானது. அதை குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரால்தான் கண்டுபிடித்து உறுதிசெய்ய முடியும்.

உதாரணத்துக்கு, பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு, பரீட்சை நேரத்தில் வயிறு கலக்கும், அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதற்கு முக்கிய காரணமே பரீட்சை குறித்த பயமும் கவலையும்தான். வேலைக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கும் சிலருக்கும் வேலைநாள்களில் இந்த உணர்வு ஏற்படும். அதுவே விடுமுறை நாள்களில் நார்மலாக இருப்பார்கள். டூர் போகும்போது பிரச்னை இருக்காது. ஊருக்குத் திரும்பியதும் மறுபடி அதே பிரச்னைகள் ஆரம்பமாகும். வேலை யிடம், சக ஊழியர்கள் குறித்த கவலை, ஸ்ட்ரெஸ் போன்றவைதான் இதற்கு காரணம்.

இதயம் எப்படி 24 மணி நேரமும் துடித்துக் கொண்டே இருக்குமோ, குடலும் 24 மணி நேரமும் அசைந்துகொண்டே இருக்கும். இந்த அசைவு சீராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போகும்போதுதான் வயிற்றுவலி, உப்புசம் போன்றவை ஏற்படுகின்றன. கவலைக்கும் மன அழுத்தத்துக்கும் இவற்றுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பிட்ட பரிசோதனைகளைச் செய்து மருத்துவர்கள் இதை உறுதிசெய்வார்கள். பதற்றத்துக்கு சிகிச்சை அளித்தாலே இந்தப் பிரச்னைகள் சரியாகும்.

மலம் கழிக்கும்போது ரத்தமா?

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புடன் வரும் நபர்களையும் சமீப காலத்தில் அதிகம் பார்க்கிறோம். மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது இதன் அறிகுறி. ஆண்களைவிட பெண்களுக்கு மலச்சிக்கல் பாதிப்பு அதிகம். மலச்சிக்கல் காரணமாக ஆசனவாயில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவது சாதாரணம். மலச்சிக்கல் இல்லாமல் சிலருக்கு இப்படி ரத்தப்போக்கு இருந்தால் அதை அலட்சியப் படுத்தக்கூடாது. குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரை அணுகினால், அவர் கொலனோ ஸ்கோப்பி என்ற பரிசோதனையின் மூலம் நோய் பாதிப்பை உறுதிசெய்வார். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

செரிமானத்துக்கு சோடா, பீடா... சரியா?

சிகரெட்டை புகைத்தால்தான் மலம் கழிக்க முடியும் என்று நினைத்துக்கொண்டு காலங்காலமாக அதைப் பின்பற்றுபவர்கள் பலர். ஆனால், இந்த இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பல ஆய்வுகள் சொல்கின்றன. அது அவர்களது பழக்கம், அவ்வளவுதான். அதே போன்றதுதான் செரிமானத்துக்காக சோடா குடிப்பதும், பீடா மெல்லுவதும், ஆன்டாசிடு மருந்துகள் எடுத்துக்கொள்வதும்கூட. வேளாவேளைக்கு, சத்தான, சரிவிகித உணவுகளைச் சாப்பிடு வோருக்கு குடல், இரைப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. அந்த ஒழுக்கம் மீறப்படும்போதுதான் செரிமான பாதிப்புகள் வருகின்றன. பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயு வெளியேறுவது, வயிற்றுப்போக்கு என செரிமானம் தொடர் பான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

உணவுகளுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்புண்டா?

அளவுக்கதிக மசாலா பொருள்களையும் சேர்த்து கண்டபடி சமைத்துச் சாப்பிடுகிறோம். கூடவே மதுப் பழக்கமும் சேர்ந்துகொள்கிறது. இத்தகைய முறைதவறிய உணவுப்பழக்கம், செரிமான இயக்கத்தை பாதிக்கும்.

உணவுக்குழாய் தொடர்பான புற்றுநோய்க்கு பிரதான காரணமே முறையற்ற உணவுப் பழக்கம்தான். வருடக்கணக்கில் உப்பிலும் எண்ணெயிலும் ஊறும் ஊறுகாய், பதப் படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை சுவை யூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள் போன் றவை நிச்சயம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இருவரில் ஒருவருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் இருப்பதைப் பார்க்கிறோம். வாந்தியையும் வயிற்றுப் போக்கையும் சாதாரண அஜீரண பாதிப்பு களாக அலட்சியத்தோடு கடந்துவிடக்கூடாது. இந்தப் பிரச்னைகளால் உடலில் நீர்ச்சத்து வறண்டுபோகும். மெள்ள மெள்ள செரிமான மண்டல செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும்.

பட்டா ராதாகிருஷ்ணா
பட்டா ராதாகிருஷ்ணா

ஃப்ரிட்ஜ் காலியாக இருக்கட்டும்!

உங்கள் குடலும் இரைப்பையும் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? முதல் வேலையாக உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்துங்கள். சமைத்த உணவுகளை எல்லாம் ஃப்ரிட்ஜில் சேமித்துவைத்து சாப்பிடுவதைத் தவிருங்கள். ஃப்ரிட்ஜ் பெரும்பாலும் காலியாக இருக்கட்டும். கலர் கலர் பாட்டில்களில் வரும் குளிர்பானங்கள், கலர் கலர் பாக்கெட்டுகளில் வரும் பிஸ்கட், கேக் போன்றவை நிச்சயம் இருக்கக்கூடாது. அந்தந்த வேளைக்கு ஃப்ரெஷ்ஷாக சமைத்துச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம்.

வருடாந்தர செக்கப்பில் வயிறு தொடர்பாக செய்ய வேண்டிய சோதனைகள்...

`ஃபேட்டி லிவர் பாதிப்பு' என்பது கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகிறது. 35 வயதிலிருந்தே இந்தப் பிரச்னையுடன் வருகிறார்கள். அதிக கொழுப்புள்ள உணவு களைச் சாப்பிடுவார்கள். ஆனால், உடலி யக்கமோ, உடற்பயிற்சிகளோ இல்லாமல் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு வரும். இவர்கள் கல்லீரலுக்கான `லிவர் ஃபங்ஷன் டெஸ்ட்' செய்து பார்க்க வேண்டும்.

கல்லீரல், கணையம், பித்தப்பைகளில் ஏதேனும் பாதிப்புகள் இருப்பதைக் கண்டறிய வயிற்றுக்குப் பகுதிக்காக ‘அப்டமன் ஸ்கேன்’ தேவைப்படலாம். பிரத்யேக அறிகுறிகள் இருப்பவர்களுக்கு தேவைப்பட்டால் எண்டோஸ்கோப்பி மற்றும் கொலோனோ ஸ்கோப்பி சோதனைகள் செய்யப்படும்.

பித்தப்பைகளை அகற்றுவதால் உடலியக்கம் பாதிக்கப்படாதா?

உண்மையில் பித்தப்பைக்கும் செரிமானத் துக்கும் சம்பந்தமே இல்லை. பித்தப்பை என்பது உடலுக்குத் தேவையில்லாத ஓர் உறுப்பு. பித்தப்பை சரியாக இயங்காத நிலையில்தான் அதில் கற்கள் உருவாகும். பித்தப்பை கற்களை அலட்சியம் செய்தால் அது புற்றுநோய் வரை கொண்டு செல்லலாம். கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பதுதான் பித்தப்பை ஆரோக்கியத்துக்கான அடிப்படை. பித்தப்பையை அகற்றுவதால் செரிமானம் எந்தவகையிலும் பாதிக்கப்படுவதில்லை.

- அடுத்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம்

- அலெர்ட் ஆவோம்...

என்ன நோய்... எந்த டாக்டர்? - 3 - வயிறும்... வயிற்றைச் சார்ந்த உறுப்புகளும்!

டேஞ்சர் டேட்டா: உடல்பருமனில் நாம் நம்பர் 2

நமக்குத் தேவையான உணவு மிகக் குறைவுதான். ஆனால், ஒவ்வொருவரும் அதைவிட நான்கு மடங்கு அதிகமான உணவுகளை சாப்பிடுகிறோம். உடல் பருமனில் இந்தியாவின் தலைநகரம் எது தெரியுமா? ராஜஸ்தானோ, டெல்லியோ என்பதே பலரின் பதிலாக இருக்கும். ஆனால் அதில் முதலிடம் புதுச்சேரிக்கு. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. வாரத்தில் ஒருநாளாவது வெளியில் சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துவருகிறது. அப்படிச் சாப்பிடும்போது தேவைக்கதிமான அதிக அளவிலான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சாப்பாடு என்பது தேவை என்பதை மீறி, அது ஒரு பொழுதுபோக்கு என்பதாக மாறிவருகிறது. உடல் பருமன் என்பது மூட்டு பாதிப்பு, சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் என பல பாதிப்புகளுக்கு அடிப்படையாக அமைவது. எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடுகிறோமோ அதுதான் நல்லது. ஒரு காலத்தில் உணவை நாம் தேடிச் சென்று பெற்று சாப்பிட்ட காலம் மாறி, இன்று உணவு நம்மைத் தேடி உட்கார்ந்த இடத்துக்கே வருகிறது. உண்ணும் அளவுக்கேற்ற உடல் இயக்கம் இன்று இல்லை. டைனிங் டேபிளில், சீரியல் பார்க்கையில், தியேட்டரில், ரெஸ்டாரன்ட்டில் என நமது பெரும்பான்மை நேரம் உணவுக்கே போகிறது. இது கவனிக்கப்பட வேண்டிய அவசர, அவசிய விஷயம்.