Published:Updated:

``நோயாளிகள் தங்கள் துயரைக் கேட்கும் ஒரு ஜோடி செவிகளைத்தான் கோருகிறார்கள்!"

மருத்துவர்கள் ( https://pixabay.com/ )

டாக்டர் எல்.மகாதேவன் நோய்களைக் கண்டறியும் முறையை சில நேரங்களில் அருகிலிருந்து கண்டிருக்கிறேன். பெரும் கருவிகளின், சிக்கலான பரிசோதனைகளின் உதவியின்றி மருத்துவமனை அளவில் நோயைத் துல்லியமாகக் கண்டறிவது படைப்பூக்கமிக்கச் செயல்பாடு என்பதை உணர்ந்திருக்கிறேன்.

``நோயாளிகள் தங்கள் துயரைக் கேட்கும் ஒரு ஜோடி செவிகளைத்தான் கோருகிறார்கள்!"

டாக்டர் எல்.மகாதேவன் நோய்களைக் கண்டறியும் முறையை சில நேரங்களில் அருகிலிருந்து கண்டிருக்கிறேன். பெரும் கருவிகளின், சிக்கலான பரிசோதனைகளின் உதவியின்றி மருத்துவமனை அளவில் நோயைத் துல்லியமாகக் கண்டறிவது படைப்பூக்கமிக்கச் செயல்பாடு என்பதை உணர்ந்திருக்கிறேன்.

Published:Updated:
மருத்துவர்கள் ( https://pixabay.com/ )

`பெருமாள் பள்ளிக்கொண்டிருக்கும் ஆதிசேடன் மனிதர்களின் உடல், மனம், வாக்கு ஆகிய தோஷங்களை நீக்குவதற்காக சரகர், பதஞ்சலி, பாணினியாக அவதரித்து 'சரக சம்ஹிதை' என்ற ஆயுர்வேத மருத்துவ நூலையும், 'மகா பாஷ்யம்' என்ற வடமொழி இலக்கண நூலையும் படைத்தார். 'யோக சூத்திரம்' என்ற யோக நூலையும் அளித்தார். அப்பேர்ப்பட்ட ஆதிசேடனை வணங்குவோம்' என்றொரு துதியை ஆயுர்வேத மாணவனாக இருந்த காலத்திலேயே நான் வாசித்திருக்கிறேன்.

மருத்துவர் சுனில் கிருஷ்ணன்
மருத்துவர் சுனில் கிருஷ்ணன்

இன்றும் இந்த துதி எனக்கு வியப்பைத் தருகிறது. ஆயுர்வேதம், காந்தியம், புனைவு போன்றவற்றின் அடிப்படையில் நானும் இதையே எழுத முயல்வதாகக் கற்பனை செய்துகொள்கிறேன். ஒன்றின் மூன்று பரிணாமங்கள் என இதைக் கொள்ளலாம். இவை ஒன்றோடொன்று முரண்பட வேண்டியதில்லை. இவற்றில் எதில், எப்போது ஈடுபட்டாலும் முழு நிறைவும், மகிழ்ச்சியும் கிடைக்கும். அதனால் ஒன்றை விடுத்து மற்றொன்றை தொடரவேண்டிய அவசியமில்லை.

என் ஆசான்களில் ஒருவராக நான் கருதும் டாக்டர் எல்.மகாதேவன் நோய்களைக் கண்டறியும் முறையை சில நேரங்களில் அருகிலிருந்து கண்டிருக்கிறேன். பெரும் கருவிகளின், சிக்கலான பரிசோதனைகளின் உதவியின்றி மருத்துவமனை அளவில் நோயைத் துல்லியமாகக் கண்டறிவது படைப்பூக்கமிக்கச் செயல்பாடு என்பதை உணர்ந்திருக்கிறேன். உள்ளுணர்வும், தர்க்கமும் ஒருங்கே செயல்படவேண்டும். ஆயுர்வேதத்தில் நோயறிதல் அளவிற்கே மருந்துகளின் தேர்வும் படைப்பூக்கமிக்க செயல்பாடு. தர்க்க முனையை வலுப்படுத்த வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டியிருக்கிறது. உள்ளுணர்வை அனுமதிக்கக் கற்றவை அனைத்தையும் ஒதுக்கி வழிவிட வேண்டி இருக்கிறது. நல்ல மருத்துவர் எப்போதும் இந்த இரண்டு விசைகளுக்கு இடையே பிரக்ஞைபூர்வமாக சமநிலை பேண முயல்வார். இது கலைக்கும் துல்லியமாக பொருந்தக்கூடிய வரையறைதான்.

மருத்துவர்
மருத்துவர்
https://pixabay.com/

மருத்துவர்கள் படைப்பாளிகளாக திகழ்வது ஒன்றும் புதிதல்ல. செகாவ், வில்லியம் கார்லோஸ், வில்லியம்ஸ் தொடங்கி தமிழ் நவீன இலக்கியத்தின் முக்கிய சிறுகதை ஆசிரியரான சார்வாகன் வரை பல முன்னோடிகள் உள்ளனர். கவிஞர் குட்டி ரேவதி மற்றும் எழுத்தாளர் சித்ரன் இருவருமே சித்த மருத்துவர்கள். கடந்த ஆண்டு நண்பர் வேணு வெட்ராயன் தன் கவிதைத் தொகுப்பை கொண்டு வந்தார். முழுக்க ஐசியுவில் பணியாற்றி வருபவர்.

மருத்துவராக அன்றாடம் நான் வெவ்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்கிறேன். இன்னமும் குடும்ப மருத்துவர் வழக்கொழிந்து போகாத பண்பாட்டு வட்டத்தில்தான் நான் இருக்கிறேன். ஆயுர்வேத மருத்துவராக இருப்பதில் கூடுதல் வசதி யாதெனில் அவசரகால சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவர்களை எவரும் நாடுவதில்லை. சற்று தளர்வாக நேரத்தை பங்கிட்டுக்கொள்ள முடியும். நாள்பட்ட நோய்கள் என்பதால் சிகிச்சைகளும் நெடுங்காலம் நீடிக்கும். அவ்வகையில் ஆக்கப்பூர்வமான உறவாக 'மருத்துவர் - நோயாளி' உறவு பரிணாமம் கொள்ளும். பெரும்பாலும் தீர்வுகளைக் காட்டிலும் ஆறுதல் வேண்டும் மனிதர்களை சந்திக்கும்போது அவர்கள் கோருவது தங்கள் துயரைக் கேட்கும் ஒரு ஜோடி செவிகளைத்தான். நம்ப முடியாத பல கதைகளை கேட்டிருக்கிறேன். அவை வாழ்வு பற்றிய அடிப்படை வினாக்களை ஓயாமல் எழுப்புபவை. வேறு எந்த தொழிலைக் காட்டிலும் மருத்துவர் தன் செயலின் பயன்மதிப்பை உடனடியாகக் கண்ணுறுவார். ஒருவகையில் இந்த அகங்கார நிறைவே இத்தொழிலின் போதையும்கூட.

மருத்துவர் சுனில் கிருஷ்ணன்
மருத்துவர் சுனில் கிருஷ்ணன்

வாழ்வின் அர்த்தம் / அர்த்தமின்மை பற்றிய கேள்விகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் தருணங்கள் வேறுஎவரையும்விட மருத்துவர்களுக்கு உண்டு. மரணத்தை அன்றாட நிகழ்வாகக் காண்பவர்கள். எனது புனைவுலகத்தின் ஒருபகுதி இளம் வயது முதல் நான் கண்ட மரணங்களால் உருவானதுதான்.

தீவிரமாக வாசிக்கக்கூடிய நவீன மருத்துவ நண்பர்கள் எனக்கு உண்டு. காரைக்குடியில் நாங்கள் நிகழ்த்தும் மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் மாதாந்திரக் கூட்டமே ஒரு மருத்துமனையின் கூடுகை அறையில்தான் நிகழ்கிறது. இப்பகுதியில் புகழ்பெற்ற மருத்துவர்கள் மாதம் தவறாமல் கூடுகையில் முழுவதுமாக பங்குபெறுவார்கள். எனது ஆலோசனை அறையில் யாரும் இல்லாதபோது எழுதவும் வாசிக்கவும் செய்கிறேன்.

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்

நொடியில் என்னால் மருத்துவரிலிருந்து எழுத்தாளராகவும் எழுத்தாளரில் இருந்து மருத்துவராகவும் மாறிவிட முடிகிறது. அப்படியான துண்டுபட்ட காலத்தில் இயங்க பழகியதே மிக முக்கியமான திறன் என்றே நம்புகிறேன். மேலும் அவ்வப்போது இலக்கியக் கூட்டங்களில் மருத்துவ ஆலோசனை சொல்வதும் நோயாளிகளிடம் இலக்கிய விசாரம் செய்வதும்கூட ஒரு மாதிரி நன்றாகத்தான் இருக்கிறது.