Published:Updated:

ஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? #DoubtOfCommonMan

நம் நாட்டில் மருத்துவத்துக்குச் செய்யும் செலவால் மட்டும் வருடத்துக்கு 6 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகிறார்கள்' என்கின்றன ஆய்வுகள்.

மாத்திரை
மாத்திரை

அதில், 70 சதவிகித தொகை, மருந்து, மாத்திரைகளுக்காக மட்டுமே செலவிடப்படுகின்றன என்பதுதான் நம்மை அதிர்ச்சியுறச்செய்கிறது. அப்படி மருந்து மாத்திரைகளின் அசுர விலையிலிருந்து மக்களை ஓரளவேணும் மீட்க வந்தவைதான் ஜெனரிக் மருந்துகள். ஆனால், `ஜெனரிக் மருந்தா...அப்படின்னா?' என்று கேட்கும் நிலையில்தான் நம்மிடம் விழிப்புணர்வு இருக்கிறது.

மாத்திரை
மாத்திரை

"நாம் கடையில் வாங்கும் மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் மிகக்குறைவான விலையில் கிடைக்கும் என்கின்றனரே? அது என்ன ஜெனரிக் மருந்து? அது எங்கே கிடைக்கும்? ஏன் அதுமட்டும் விலை குறைவாக இருக்கிறது?'' என்கிற கேள்விகளை #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருந்தார் மாரிமுத்து என்ற வாசகர். அந்தச் சந்தேகங்களுக்கான விளக்கம்தான் இந்தக் கட்டுரை.

அதென்ன ஜெனரிக் மருந்து?

ஒரு மருந்தையோ மாத்திரையையோ அதன் மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது ‘ஜெனரிக்'. ஒரு மருந்து நிறுவனம் புதிதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்தால், முதல் 20 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் மட்டுமே அதை விற்பனை செய்யமுடியும். இதைக் ‘காப்புரிமைக் காலம்’ என்று சொல்லலாம். காப்புரிமைக் காலம் முடிந்தபிறகு அது எல்லோருக்கும் பொதுவானதாகிவிடும். பிறகு அதை எந்த மருந்து நிறுவனம் வேண்டுமானாலும் தயாரித்து விற்பனை செய்யலாம். அப்படி விற்கப்படும் மருந்துகளையே ‘ஜெனரிக் மருந்துகள்’ என்கிறோம்.

வைட்டமின் மாத்திரை
வைட்டமின் மாத்திரை

காப்புரிமைக் காலம் முடிந்தபின்னர், அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டிக்கொள்வார்கள். 'பாராசிட்டாமல்' என்பது ஜெனரிக் பெயர். அதுவே தயாரிக்கும் நிறுவங்களைப்பொறுத்து, கால்பால், குரோசின், டோலோ, மெட்டாசின் எனப் பலபெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஜெனரிக், பிராண்டட் தவிர்த்து 'பிராண்டட் ஜெனரிக்' என்கிற ஒருவகை மருந்துகளும் இருக்கின்றன.

காப்புரிமைக் காலத்தில் அதிகமான விலையில் மருந்து விற்பனை செய்யப்படுவது ஏன்?

மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனம், மருந்தின் விலையை நிர்ணயம் செய்யும்போது மூலப்பொருள்களுக்கு ஆகும் செலவோடு, மருந்தைக் கண்டுபிடிக்க ஆன செலவுகளையும் சேர்த்து விலை நிர்ணயம் செய்வார்கள். அதனால்தான் மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது. காப்புரிமைக் காலத்தில் பிற நிறுவனங்கள் அந்த மருந்தைத் தயாரிக்க விரும்பினால், மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனத்துக்கு 'ராயல்டி' (காப்புத்தொகை) கொடுக்கவேண்டும். அதனால், மருந்துகளின் ஒட்டுமொத்த தயாரிப்புச் செலவு என்பது ராயல்டிக்கான செலவு, மூலப்பொருள்களின் செலவு என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருப்பதால் மருந்துகளின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.

ஜெனரிக்
ஜெனரிக்

மருந்து ஜெனரிக் ஆனபின் குறைவான விலைக்குக் கிடைப்பது ஏன்?

காப்புரிமைக் காலம் முடிந்துவிட்டால், யார் வேண்டுமானாலும் மருந்தைத் தயாரித்து விற்பனை செய்யமுடியும். மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனத்துக்கு ராயல்டி எதுவும் கொடுக்கத் தேவையில்லை. மருந்தின் மூலப்பொருள்களுக்கு ஆகும் செலவு மட்டும்தான். அதனால் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் குறைந்த செலவில் தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்யும். தயாரிக்கும் நிறுவனங்களின் லாப எதிர்பார்ப்பைப்பொறுத்து மருந்தின் விலையில் சிறு ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இப்படி மற்ற நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனமும் குறைந்த விலைக்கே மருந்தை விற்கவேண்டிவரும். அதனால், ஒட்டுமொத்தமாக மருந்தின் விலை குறையும்.

இந்தியா முழுவதும் 32,000 ‘ஜன் அவுஷதி’ மருந்தகங்கள் ஆரம்பிப்பதாக ஐந்து வருடத்துக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது. தற்போது 3000 மருந்தகங்கள்தான் தொடங்கப்பட்டுள்ளன. 32,000 மருந்தகங்களே போதாது என்கிற நிலையில் 3,000 மருந்தகங்களால் மக்களுக்கு பெரிய நன்மை ஏதும் இல்லை.
மருத்துவர் காசி

`மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைச் சீட்டில் மருந்து நிறுவனங்களின் பெயரை எழுதிக்கொடுக்கக் கூடாது. அதன் ஜெனரிக் பெயர்களைத்தான் எழுதிக்கொடுக்கவேண்டும்’ என்று இந்திய மருத்துவ கவுன்சில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு விதியை நிர்ணயம் செய்தது. ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் இந்த விதியைப் பின்பற்றுவதில்லை. தங்களுக்கு இணக்கமான மருந்து நிறுவனங்களின் பெயர்களைத்தான் எழுதிக்கொடுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. மருத்துவர்கள் எழுதிக்கொடுப்பதை மக்களும் அப்படியே பின்பற்றுகிறார்கள். அதே மருந்து, மருத்துவர் எழுதிக்கொடுத்த பெயரில் இல்லாமல் வேறு பெயரில் இருக்கிறது என்றால் அதை நம்பிக்கையோடு வாங்கிச் சாப்பிடுவதில்லை. மக்களே விரும்பிக் கேட்டாலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்கள் கொடுப்பதில்லை.

கூட்டு மருந்துகளில் அதன் ஜெனரிக் பெயர்களை மட்டும் எழுதமுடியாது. உதாரணமாக வைட்டமின் சிரப்களை எடுத்துக்கொண்டால், பத்து வைட்டமின் பெயர்களையும் தனித்தனியாக எழுதமுடியாது. பிராண்டுகளின் பெயர்களைத்தான் எழுதமுடியும்.
மருத்துவர் காசி

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் காசியிடம் பேசினோம்...

மாத்திரை
மாத்திரை

''ஜெனரிக், பிராண்டட் தவிர்த்து 'பிராண்டட் ஜெனரிக்' என்கிற ஒருவகை மருந்துகளும் இருக்கின்றன. மாத்திரையில் ஜெனரிக் பெயர், தயாரித்த நிறுவனத்தின் பெயர் இரண்டும் இருக்கும். மருத்துவர்கள் பெரும்பாலும் அதைத்தான் பரிந்துரைப்பார்கள். அதற்குக் காரணமும் இருக்கிறது. ஜெனரிக் மருந்துகளை குறைவான தரத்தோடு தயாரிக்கக்கூடிய நிறுவனங்களும் உண்டு. மருத்துவர்கள் ஜெனரிக் பெயரை மட்டும் பரிந்துரைத்து, அதுபோன்ற மருந்துகளை நோயாளிகள் வாங்கிச் சாப்பிட்டு, ஏதேனும் உடல்நலப் பிரச்னை என்றால் யார் பொறுப்பேற்பது? அதனால் தரமான நிறுவனங்கள் தயாரித்த ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைப்போம். உதாரணமாக, 'பாராசிட்டாமல்' என்றுதான் மாத்திரையின் பெயர் இருக்கும். எந்த நிறுவனம் தயாரித்த மருந்து என்கிற விவரமும் இருக்கும். இதனால், இதன் விலை மற்ற ஜெனரிக் மருந்துகளின் விலையைவிட சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மருந்து உற்பத்திசெய்யும் நிறுவனங்களிடம் உற்பத்தி விலையிலிருந்து இவ்வளவுதான் லாபம் வைக்கவேண்டும் என்ற வரைமுறையை உருவாக்கவேண்டும்.
மருத்துவர் காசி

அதுதவிர, கூட்டு மருந்துகளில் அதன் ஜெனரிக் பெயர்களை மட்டும் எழுதமுடியாது. உதாரணமாக வைட்டமின் சிரப்களை எடுத்துக்கொண்டால், பத்து வைட்டமின் பெயர்களையும் தனித்தனியாக எழுதமுடியாது. பிராண்டுகளின் பெயர்களைத்தான் எழுதமுடியும். இதுபோன்ற சிக்கல்கள்தான் ஜெனரிக் பெயர்களை எழுதமுடியாமல் போவதற்கான காரணங்கள். இதில் மருத்துவர்களை குறைசொல்வதில் எந்த நன்மையும் இல்லை.

பணம்
பணம்

அரசாங்கம்தான் சில முயற்சிகளை எடுக்கவேண்டும். தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து ஜெனரிக் மருந்துகளை அரசு மொத்தமாக கொள்முதல் செய்யவேண்டும். அதன் தரத்தைச் சோதனையிடவேண்டும். மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகளை மட்டும்தான் விற்கவேண்டும் என்கிற சூழலை உருவாக்கவேண்டும். வெளிநாடுகளிலிருந்து ஜெனரிக் மருந்துகளை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து, அரசு மருந்து உற்பத்தியைத் தொடங்கவேண்டும்'' என்றவரிடம், மத்திய அரசின் உதவியோடு ‘ஜன் அவுஷதி’ என்கிற பெயரில் இந்தியா முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இருக்கின்றன. அங்கே குறைந்த விலையில்தான் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் பயன்பாடு எந்தளவுக்கு இருக்கிறது? எனக் கேட்டோம்,

''இந்தியா முழுவதும் 32,000 ‘ஜன் அவுஷதி’ மருந்தகங்கள் ஆரம்பிப்பதாக ஐந்து வருடத்துக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது. தற்போது 3000 மருந்தகங்கள்தான் தொடங்கப்பட்டுள்ளன. 32,000 மருந்தகங்களே போதாது என்கிற நிலையில் 3,000 மருந்தகங்களால் மக்களுக்கு பெரிய நன்மை ஏதும் இல்லை. இரண்டு லட்சம் மருந்தகங்களாவது தொடங்கவேண்டும்.

மாத்திரை
மாத்திரை

தவிர, அங்கே அனைத்து மருந்துகளும் கிடப்பதில்லையென புகார்கள் வருகின்றன. அதைச் சரிசெய்யவும் முன்வரவேண்டும். மருந்து உற்பத்திசெய்யும் நிறுவனங்களிடம் உற்பத்தி விலையிலிருந்து இவ்வளவுதான் லாபம் வைக்கவேண்டும் என்ற வரைமுறையை உருவாக்கவேண்டும்.'' என்கிறார் மருத்துவர் காசி.

Doubt of Common Man
Doubt of Common Man