Published:Updated:

அடுத்த மாநிலங்களில் அசத்தும் தமிழர்கள்!

கார்த்திகேயன் கோகுலசந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திகேயன் கோகுலசந்திரன்

ஏதாவது அநீதி நடந்தால், மேளம் முழங்கியபடி கும்பலாக, கையில் வில் அம்புடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து...

கொரோனா காலத்தில், வேறு மாநிலங்களிலும் துடிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களான அதிகாரிகள் நால்வரைத் தொடர்பு கொண்டபோது...

கார்த்திக்

கேரள மாநிலம் எர்ணாகுளம் ரூரல் மாவட்ட எஸ்.பி-யாகப் பணிபுரியும் கார்த்திக் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கார்த்திக்
கார்த்திக்

வெளியில் நடமாட முடியாது. தினமும் முக்கால்வாசி நேரம் சமூக வலைதளங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். கையில் காசும் குறைந்து, பொருளாதாரச் சூழ்நிலை மோசமாகிக்கொண்டே போகிறது. இந்தச் சமூகச் சூழலுக்கு என்ன செய்யலாம். யோசித்தார் கார்த்திக். அவரது சொந்தத் தோட்டம் கண்ணில் பட்டிருக்கிறது. ஐடியா க்ளிக் ஆக, மாவட்டக் காவல்துறைக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் ‘கிச்சன் கார்டன் சேலஞ்ச்’ என்கிற பெயரில் அவர் பயிர் செய்துவரும் காய்கறிகளைப் படமெடுத்துப் போட்டார் கார்த்திக். புகைப்படங்கள் குவிய ஆரம்பித்தன. ஒரு சிலர் ‘விதை வாங்க வெளியில் போக முடியாதே?’ எனப் பதிவிட்டிருக்கிறார்கள். அவர்களின் போன் நம்பரை ஃபேஸ்புக்கிலேயே வாங்கிக்கொண்டு, அவர்களது எல்லையில் வரும் காவல் நிலையத்துக்கு விவசாயத் துறை மூலம் விதைகளை அனுப்பச் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் வீட்டுக்கு விதைகளைக் கொண்டு சேர்த்திருக்கிறார் கார்த்திக். விஷயம் நாடு முழுவதும் பரவி பிரபலங்கள் பலரும் கார்த்திக்கைப் பாராட்ட, கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார், கார்த்திக்கின் வீடு தேடி வந்து கைகுலுக்கிவிட்டுப்போயிருக்கிறார். இந்த முயற்சியில் இறங்க கேரள அரசும் முடிவெடுத்து, காய்கறி பயிர் செய்ய கிஃப்ட் பேக் ஒன்றை இலவசமாக மக்களுக்கு வழங்கியது. அதில் உள்ள பைகளில் மண்ணை நிரப்பி விதைகளைப் போட்டுப் பராமரித்தால், மூன்று மாதங்களுக்கான காய்கறித் தேவைகளைச் சமாளிக்கலாம் என்று கேரள விவசாயத்துறை அதிகாரிகள் மக்களிடத்தில் தற்போது பிரசாரம் செய்துவருகின்றனர். கார்த்திக்கின் யோசனை வைரல் ஆனதையடுத்து, கேரள மாநில டி.ஜி.பி, கார்த்திக்கின் யோசனையை மற்ற எஸ்.பி-களையும் தொடரச் சொல்லிக் கடிதமே அனுப்பியிருக்கிறார்.

கார்த்திகேயன் கோகுலசந்திரன்

மாச்சலப்பிரதேசம், உனா மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் தஞ்சை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கார்த்திகேயன் கோகுலசந்திரன்
கார்த்திகேயன் கோகுலசந்திரன்

பஞ்சாப் மாநிலத்திலிருந்து, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்திற்கு 25 தரைவழி மார்க்கங்கள் உண்டு. உனா மாவட்டத்தை விட்டு வெளியே போக 7 தரைவழிப்பாதைகள் இருக்கின்றன. ஏப்ரல் 26-ல் இருந்து மே 7 வரை சுமார் அறுபதாயிரம் பேர் உன்னா மாவட்டம் வந்திருக்கிறார்கள். தினமும் மூன்றாயிரம் பேர் வந்த வண்ணம் இருக்க, காவல்துறை யோசித்தது. கார்த்திகேயன் களத்தில் இறங்கினார். எல்லையில் செக்போஸ்ட் அமைத்து, சிறப்பு கவுன்டர்களை அமைத்தார்கள். மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி, வரும் வெளிநாட்டு நபர்களை அதை டவுன்லோடு செய்யச் சொன்னார்கள். ரயில்வே டிக்கெட் முன்பதிவு மாதிரி, மூன்றடி இடைவெளியில் கவுன்டர்களுக்கு வெளியே பாஸ் கேட்டு வருகிறவர்கள் நிற்பார்கள். கவுன்டர் உள்ளே போலீஸார் கம்ப்யூட்டர் சகிதம் அமர்ந்திருப்பார்கள். கொரோனாத் தொற்று உள்ளவர்களிடமிருந்து போலீஸாரைக் காத்தது இந்த ஏற்பாடு, முழு விவரங்களைக் கேட்டுப் பதிவு செய்துகொண்டு பாஸ் கொடுத்தார்கள். சுகாதாரத்துறைக்கு விவரங்கள் பகிரப்பட்டு அவர்களும் கொரோனா சோதனை மேற்கொண்டார்கள். எங்கிருந்து வருகிறார்கள், எங்கே செல்கிறார்கள், செல்போன் எண் போன்ற அனைத்து விவரங்களையும் காவல்துறையினர் பதிவு செய்துகொண்டார்கள். மாநிலத்துக்குள் அவர்கள் எங்கு சென்றாலும் டெக்னாலஜி உபயத்தில் போலீஸ் கண்காணிப்பில்தான் இருந்தார்கள்.

இதனால் சமூகப்பரவல் வெகுவாகக் கட்டுப்பட, பலராலும் பாராட்டுப் பெற்றார் கார்த்திகேயன். தவிர, ட்ரோன்களையும் பயன்படுத்தி, மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைக் கண்காணிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

அருண் பிரசாத்

மேற்கு வங்க மாநிலம் பான்குரா மாவட்ட ஆட்சியர் அருண் பிரசாத், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

காடுகளை ஒட்டிய கிராமங்களில் வாழும் ஏழை, எளிய பழங்குடி மக்கள் நிறைந்த மாவட்டம் பான்குரா. இந்தியாவிலேயே 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியதில் சிறந்த மாவட்டம் என்கிற விருது பெற்றது இம்மாவட்டம். இந்தியக் கைவினைப்பொருள்களுக்கான இந்திய அரசுச் சின்னம், டெரகோட்டா குதிரை இவற்றைக் கலைவேலைப்பாடுகளுடன் உருவாக்கிய பெருமை பான்குராவுக்கு உண்டு. ஏதாவது அநீதி நடந்தால், மேளம் முழங்கியபடி கும்பலாக, கையில் வில் அம்புடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பாரம்பர்ய முறைப்படி கோரிக்கையைத் தெரிவிக்கும் மக்கள் வாழும் இடம், தங்களின் கோரிக்கையைப் பழைய பாரம்பர்ய முறைப்படி ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டுப் போவார்களாம்.

அருண் பிரசாத்
அருண் பிரசாத்

மார்ச் 23 முதல் மே 12 வரை கடந்த 50 நாள்கள் இம்மாவட்டம் பச்சை மண்டலத்தில் இருக்கிறது. வெளியிலிருந்து உள்ளே நுழைந்தவர்கள் சுமார் இரண்டாயிரம் பேர்தான். தொழிற்சாலை அதிகம் இல்லை.இருக்கும் சில செங்கல் தொழிற்சாலைகளையும், உருளைக்கிழங்குக் கிடங்குகளையும் மூடிவிட்டனர். 15% பழங்குடியினர். தள்ளித் தள்ளி இருக்கும் வீடுகள், இடைவெளி விட்டு உறங்கும் குடும்ப உறுப்பினர்கள் என்று பழங்குடியினரின் சில பழக்கவழக்கங்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வசதியாக இருந்தது என்றார் அருண் பிரசாத்.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டமும் நடக்கவில்லை. வெளியே போய் எங்கும் வேலை செய்யமுடியாது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகள், ரேஷன் அட்டைகூட இல்லாதவர்கள் வாழும் பகுதிகளில் யாரும் பட்டினிச் சாவு நோக்கிப் போய்விடக்கூடாது என்பதில்தான் கவனம் செலுத்தினார் அருண். மாநில அரசு தரும் இலவச ரேஷன் பொருள்களைத்தான் பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கிறார்கள். பழைய மாவோயிஸ்ட் ஏரியா என்பதால் ஸ்பெஷல் பேக்கேஜ் தருகிறார்கள். பிற இடங்களில் ரேஷன் அட்டை ஒன்றிற்கு 2 கிலோ அரிசி என்றால், இங்கே 8 கிலோ. ஊரடங்கு நேரத்தில் சோப்பு, டெட்டால், சாப்பாடு இவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்குக் கொடுத்தார்கள். இவை போக, மக்கள் பசியாறக் கிச்சடி மாதிரி உணவு தயாரித்து விநியோகித்தார்கள்.

தவசீலன்

நாகலாந்து மாநிலம் மோன் மாவட்ட ஆட்சியர் தவசீலன் சென்னையைச் சேர்ந்தவர்.

தவசீலன் ஆட்சியராக இருக்கும் மோன் மாவட்டம் மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டி வருகிறது. அங்கிருப்பவர்களும் மோன் மாவட்ட மக்களும் கோன்யாக் என்கிற பழங்குடியினர். எல்லைக்கோடுதான் அவர்களைப் பிரிக்கிறது. மனதால் ஒன்றுபட்ட வர்கள். வெளி மாநிலங்களிலிருந்து பெரிய அளவில் மக்கள் வராதவண்ணம் மாவட்ட எல்லையை சீல் வைத்து விட்டார்கள்.

தவசீலன்
தவசீலன்

சமூக வலைதளங்களை ஆக்டிவாகப் பயன்படுத்தினார் தவசீலன். 30 வாட்ஸப் குழுக்கள் மூலம் பலதரப்பட்ட மக்களுக்கும் சமூக இடைவெளி பற்றியும், கொரோனா முன்னெச்சரிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தனிமைப் படுத்துதலை 14 நாள்களுக்கு பதில் 28 நாள்களாகக் கடைப்பிடிக்கச் செய்தார். குடை எடுத்துச் செல்லச் சொன்னார். மக்கள் ஏற்றுக்கொள்ள, சமூகப் பரவல் வெகுவாகக் கட்டுக்குள் வந்தது.

திடீர் விலையேற்றப் பிரச்னை சவாலாக அமைந்தது. ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு பல கட்டங்களாக விநியோகித்தனர். ஃபுட் பேங்க் என்ற பெயரில் மக்கள் கொடுத்த பொருள்களைத் தகுதியான நபர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள். இதனால் உணவுத் தட்டுப்பாட்டைத் தவிர்த்தார்கள்.

ஊரடங்கு நேரத்தில் நகர்ப் புறங்களில் அத்தியாவசியமான தேவைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே, ரேஷன் முறையில் பெட்ரோல் கொடுக்கப்பட்டதால் தேவையில்லாமல் வாகன உலா வருவது தடுக்கப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் ஒரு அட்டை கொடுத்து அதை எடுத்துக்கொண்டு யாராவது ஒருவர் மட்டுமே அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் 53,000 வீடுகள். டாஸ்க் ஃபோர்ஸொன்றை அமைத்து வீடு வீடாக மாவட்ட நிர்வாகம் செய்த சர்வே சுகாதாரத் துறைக்குப் பெரும்பலமாக அமைந்தது. மக்களின் வயது, நோய் விவரங்கள் எல்லாம் குறிப்பிடப்பட்ட அந்த டேட்டா மூலம் பலரையும் கண்காணிக்க முடிந்தது. பெங்களூரு கம்பெனி ஒன்றின் உதவியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் வெளியில் எங்காவது நடமாடினால் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியுமாறு ஏற்பாடு செய்தனர். அமெரிக்க கம்பெனி ஒன்றின் டெக்னாலஜி உதவியுடன் யாருக்கேனும் தொற்று உறுதியானால் அவர்கள் யார் யாருடன் தொடர்பிலிருந்தார்கள் என்ற ‘கான்டாக்ட் டிரேஸிங்’ நடைபெற்றது.

இதனால் சமூகப்பரவல், தனிமைப்படுத்துதல், ஏழை மக்களின் உணவுத்தட்டுப்பாடு எல்லாவற்றையும் மாவட்ட நிர்வாகம் சமாளிக்க, தவசீலனுக்குப் பரவலாகப் பாராட்டுகள் குவிகின்றன.