அமெரிக்க ஆக்ஷன் ஹீரோவான புரூஸ் வில்லிஸ் (Bruce Willis), `டை ஹார்ட்’ படத்தில், தன்னுடைய அபாரமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவருக்கு தற்போது 67 வயதான நிலையில், சிகிச்சை அளிக்க முடியாத டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திரைத்துறையை விட்டு கடந்த மார்ச் மாதம் இவர் விலகினார். அதன்பின் அவர் குறித்த எந்தத் தகவலும் பெரிதாக வெளி வரவில்லை.
இந்நிலையில், இவர் சிகிச்சை அளிக்க முடியாத டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ``2022 வசந்த காலத்தில், புரூஸ் அஃபேசியா (Aphasia) எனும் நிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தோம். (அஃபேசியாவால் பாதிக்கப்படுகையில், பேசவும் எழுதவும், மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியாது).
இதை அறிவித்ததில் இருந்து அவரின் நிலை மோசமடைந்தது. தற்போது அவர் `ஃப்ரன்டோடெம்போரல் டிமென்ஷியா’ (frontotemporal dementia) என்ற மறதி நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதனால் மூளையில் ஆளுமை, நடத்தை மற்றும் மொழி ஆகியவற்றைக் கையாளும் பகுதிகள் பாதிக்கப்படும்.

இந்நோயின் அறிகுறிகளில் ஒன்றான பிறரோடு `தகவல் தொடர்பு' கொள்ளும் சவால்களை புரூஸ் எதிர்கொள்கிறார். இன்று இந்நோய்க்கான சிகிச்சை இல்லை; வரும் ஆண்டுகளில் இது மாறக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
புரூஸின் இந்நிலைக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.