இந்தியாவில் உள்ள 46 அரசு மனநல மருத்துவமனைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் செயல்பட்டு வருவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மனநல மருத்துவமனைகளின் மனிதத்தன்மையற்ற நிலை மனநல நோயாளிகளின் மனித உரிமைகளை மீறும் வகையில் இருக்கிறது. மேலும் மனநல பிரச்னை குணமான நோயாளிகள் சட்டத்துக்குப் புறம்பாக நீண்ட காலம் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையும் அதிகம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

குவாலியர், ஆக்ரா, ராஞ்சி ஆகிய இடங்களில் உள்ள மனநல மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதன் அடிப்படையிலும், நாட்டின் பிற இடங்களிலுள்ள மீதமுள்ள மருத்துவமனைகளுக்கு தங்களால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் ஆய்வு நடத்தியதன் அடிப்படையிலும் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் எந்த மனநல மருத்துவமனையும் அதன் நோயாளிகள் எவ்வித பிரச்னையுமின்றி சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான நீண்ட கால நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து, மத்திய சுகாதாரத் துறைச் செயலர், சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல், மாநில சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள், பெருநகர காவல்துறை டிஜிபி மற்றும் கமிஷனர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், குணமடைந்த நோயாளிகளை சட்டத்துக்குப் புறம்பான வகையில் மருத்துவமனையில் வைத்திருப்பது, மனநல ஆணையம் அமைப்பது, மாநில மனநல மதிப்பாய்வுக் குழு அமைத்தல், மாநில மனநல பராமரிப்புக்கான விதிமுறைகள், நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு வசதிகள், ஊழியர்கள் நியமனம் குறித்த அப்டேட், மனநல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பேராசிரியர்கள் நியமனம், மனநல மருத்துவமனைகளில் அவசர கால சேவைகள், 5 ஆண்டுகளில் வீடு திரும்பியுள்ள நோயாளிகள் குறித்த தரவுகள், மனநல நோயாளிகளின் உணவுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி மற்றும் அதற்குச் செலுத்தப்பட்ட உண்மையான தொகை, மருத்துவமனைகளின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதித் தணிக்கை அறிக்கை ஆகியவை குறித்து எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்து மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலர்களை அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.