மக்களிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத விஷயங்களில் மொபைல்போனும் ஒன்றாகி விட்டது.
மொபைல் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று சலித்துக் கொள்பவர்களும் உண்டு. மொபைல்போன் பழுதடைந்துவிட்டால் பதறிப்போய்விடுபவர்களும் உண்டு.

ஏற்கெனவே மொபைல்போன் இல்லாமல் இருந்தால் ஏற்படும் பயத்தை, நோமோபோபியா (Nomophobia) என்று அழைக்கின்றனர். இப்படியிருக்கையில், `மொபைல் போனில் பேட்டரி குறைந்தால் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு உண்டாகிறது' என பிரபலமான ஓப்போ (Oppo) மொபைல் நிறுவனத்துடன் இணைந்து, கவுன்ட்டர் பாயின்ட் (Counter Point) நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இந்தியாவில், 1,500 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முடிவுகள்:
* மொபைலை பயன்படுத்தும் 65 சதவிகிதத்தினர், பேட்டரி குறைந்தால் ஒருவித அசௌகர்யத்தை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
* 72 சதவிகிதத்தினர் பேட்டரியானது, 20 சதவிகிதம் அல்லது அதற்கும் கீழ் குறைந்தால் பயம் கொள்வதாகக் கூறியுள்ளனர்.
* ஸ்மார்ட்போன் ஆக்டிவிட்டிகளில் முதன்மையாக இருக்க, ஆய்வில் ஈடுபட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய ஸ்மார்ட்போன்களை ஒருநாளைக்கு இரண்டு முறையாவது சார்ஜ் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
* பேட்டரி குறைந்து போவது குறித்தான கவலை, 31 - 40 வயதுடையவர்களில் அதிகம் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 25 - 30 வயதுடையவர்கள் கவலை கொள்கின்றனர்.
* பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 15,000 முதல் 25,000 மதிப்புள்ள மொபைல் போனை பயன்படுத்துபவர்கள்.
* 40 சதவிகித மக்கள் எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை உபயோகிக்கின்றனர், அதோடு படுக்கைக்குச் செல்லும்போது உபயோகிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் இருந்து துண்டிக்கப்படுத்தல், பொழுதுபோக்கைத் தவறவிடுதல், தொலைந்து போவதற்கான பயம் இவையே மொபைலில் பேட்டரி குறைந்துபோனால் கவலை ஏற்படுதற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
``வேலை முதல் பொழுதுபோக்கு வரை, பிறரை தொடர்பு கொள்ளும் அனைத்துமாக ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதன் விளைவாக மொபைல் போனை உபயோகப்படுத்தாத சமயத்தில் மக்கள் பயம் கொள்கின்றனர்’’ என்று கவுன்ட்டர் பாயின்ட் ஆராய்ச்சி இயக்குநர் தருண் பதக் தெரிவித்துள்ளார்.