
உடலுழைப்பென்றால் 8 முதல் 12 மணி நேரம்கூட செய்யலாம். மூளை உழைப்பென்றால் 6 மணி நேரம்தான் செய்ய முடியும் என்கிற கருத்தொன்று பரவலாக இருக்கிறது
நம்மில் சிலர் உடலுழைப்பைப் பிரதானமாகக் கொண்ட
வர்கள்; சிலரோ மூளை உழைப்பைப் பிரதானமாகக் கொண்டவர்கள். எனில், பலருக்கும் இருக்கிற கேள்வி, நாளொன்றுக்கு எத்தனை மணி நேரம் உடலுழைப்பைச் செய்யலாம்; மூளை உழைப்பென்றால், அதை நாளொன்றுக்கு எத்தனை மணி நேரம் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதுதான். இந்த இரண்டு கேள்விகளையும் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவின் முன் வைத்தோம்.

‘‘உடலுழைப்பென்றால் 8 முதல் 12 மணி நேரம்கூட செய்யலாம். மூளை உழைப்பென்றால் 6 மணி நேரம்தான் செய்ய முடியும் என்கிற கருத்தொன்று பரவலாக இருக்கிறது. இதேபோல, உடலுழைப்பு அதிகமாகச் செய்பவர்களிடம் மூளை உழைப்பு குறைவாக இருக்கும் என்றும், மூளை உழைப்பு அதிகம் செய்பவர்
களிடம் உடலுழைப்பு குறைவாக இருக்கும் என்றும்கூட கருத்து இருக்கிறது. ஆனால், இவை எதுவுமே உண்மை கிடையாது. மூளை உழைப்பு செய்பவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தாலும், உடலின் குறிப்பிட்ட சில தசைகள், தண்டுவட எலும்புகள், கழுத்தெலும்புகள், கை எலும்புகள் மற்றும் அவை சார்ந்த தசைகள் எல்லாமே வேலை செய்துகொண்டுதான் இருக்கும்.
உடலுழைப்பாளிகளை எடுத்துக்கொண்டால், எவ்வளவு கடின வேலை செய்தாலும் குறிப்பிட்ட சில தசைகள் மட்டுமே வேலை செய்யும். தவிர, இவர்
களுக்கும் அந்த வேலை தொடர்பாக மூளை தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டே தான் இருக்கும்.

நாள் முழுக்க நம்முடைய மூளை வேலை செய்துகொண்டேதான் இருக்கும்... நாம் தூங்கும்போதுகூட! மூளை உழைப்பை அடிப்படையாகக் கொண்டவர்களில் 90 சதவிகிதத்தினர் முழுமையான அறிவு சார்ந்த பணிகளில் இருப்பதில்லை என்பதே யதார்த்தம். கணிதம், மொழித்திறன், பேச்சுத்திறன், முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் நோயாளிகளை அணுகுவது உள்ளிட்ட சில பணிகளை முழுமையான அறிவு சார்ந்த பணிகள் எனலாம்.
மூளையை அடிப்படையாகக் கொண்டு வேலைபார்க்கும் சிலர் 7 அல்லது 8 மணி நேரம் வரைகூட சுறுசுறுப்பாக இயங்குவார்கள். இவர்கள், நான் மேலே சொன்ன 90 சதவிகிதத்தில் வருபவர்கள். மூளை உழைப்பே என்றாலும் பல வருடங்களாக தினமும் ஒரே விதமான வேலையைச் செய்கிறவர்கள் என்றால், 6 மணி நேரம்கூட அவர்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். சிலருக்கோ, 3 அல்லது 4 மணி நேரத்துக்கு மேல் மூளை சார்ந்த பணிகளில் ஈடுபட முடியாது. புதிய மென்பொருளை உருவாக்குவது, புதிய கதையொன்றை எழுதுவது, புதிதாக ஒரு டியூனை உருவாக்குவது என ஒரு விஷயத்தைப் புதிதாக உருவாக்குபவர்கள் இவர்கள். இயங்க ஆரம்பித்த 3 அல்லது 4 மணி நேரம் வரை இவர்களுடைய கற்பனைத் திறனும் புத்திசாலித்தனமும் அடுத்தவர் வியக்கும் அளவுக்கு இருக்கும்.
மூளை உழைப்பில் இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். உலகம் முழுக்க அலுவலக நேரமென்பது 8 மணி நேரமே என்றாலும், அதில் உற்பத்தியும் உருவாக்கமும் 3 முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை, தொழில் சாராத பேச்சுகள், அரட்டை, போன் பேசுவது என மனிதமூளை பல திசைத் திருப்புதலுக்கு ஆளாகக்கூடிய ஒன்றுதான்.

`கடினமாக உடலுழைப்பு செய்பவர்கள் ஆரோக்கியமானவர்கள், அப்படிப்பட்ட உழைப்பு இதயத்துக்கு நல்லது' என்கிற கருத்துகள் சமூகத்தில் இருக்கின்றன. உண்மையில், தொடர்ச்சியாக 10 அல்லது 12 மணி நேரம் உடலுழைப்பு செய்தால் அது அவர்களுடைய இதயத்துக்கு நல்லதல்ல. இவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஓய்வை கட்டாயம் எடுக்க வேண்டும். 2 மணி நேரம் கடின உடலுழைப்பு செய்தால், ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இல்லையென்றால், காலப்போக்கில் இவர்களுக்கு மூட்டுகளில் வீக்கம், எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்னைகள் வரலாம்.
உடலுழைப்பு செய்பவரோ மூளை உழைப்பு செய்பவரோ, தினமும் 8 - 9 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். அப்போதுதான் 3 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பீர்கள். இந்த நேரத்தில், இதயத்துடிப்பு, மூச்சு விடுதல் போன்ற தன்னிச்சை செயல்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்க, மூளை 90 சதவிகிதம் வரை ஓய்வில் இருக்கும். இது உங்கள் மூளைத்திறனை மட்டுமல்லாமல், உடலையும் புத்துணர்வாக்கும்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.