உதவி தேவைப்படுபவர்களுக்கு அதை காலத்தே செய்தால்தான், பெறுபவர்களுக்கு பலனும் தருபவர்களுக்கு நிறைவும் கிடைக்கும். இப்படியொரு நிறைவு சமீபத்தில் விகடனுக்குக் கிடைத்தது. சென்னை, மீனம்பாக்கத்தையடுத்த மூவரசன் பேட்டையைச் சேர்ந்த சுதா என்பவரின் மகனுக்குக் கழுத்து வழியாக டயாலிசிஸ் செய்கிறார்கள் என்பதையறிந்து அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தோம். வலதுபக்க கழுத்தில் டயாலிசிஸ் செய்வதற்கான உபகரணத்துடன் சோர்வாக உட்கார்ந்திருந்த 11 வயது சங்கரலிங்கத்தைப் பார்க்கையில் நம் மனதுக்குள் சொல்ல முடியாத பாரம் ஏறியது.

சுதா நம்மிடம் பேசுகையில், ``ரெண்டு வருசம் முன்னாடி வரைக்கும் என் சங்கரா (சங்கரலிங்கம்) நல்லாதாங்க இருந்தான். எந்நேரமும் விளையாட்டுதான். கைக்குச் சிக்கவே மாட்டான். அவ்ளோ சுறுசுறுப்பு. திடீர்னு பிள்ளையோட முகம், காலு, வயிறு மூணும் வீங்க ஆரம்பிச்சது. என்னவோ, ஏதோன்னு பயந்துட்டு எக்மோர் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனேன். கிட்னில நீர் ஏறிப்போச்சு. கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. பயந்துபோய் வேற ஒரு டாக்டரைப் பார்த்தோம். அவரும் அதையேதான் சொன்னாரு. அப்புறம், பிள்ளையைக் கூட்டிட்டு ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் போகச் சொன்னாரு. அந்த டாக்டர் அங்கதான் வேலைபார்க்கிறாரு. அங்கதான் இப்போ சங்கராவுக்கு டயாலிசிஸ் பண்ணிட்டிருக்காங்க. பிள்ளை நிலைமை சீரியஸா இருக்கிறதால கழுத்து வழியா டயாலிசிஸ் பண்ணிட்டிருக்காங்கம்மா'' என்கிற சுதாவுக்கு, நான்கு பிள்ளைகள். இரண்டு பேர் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மகள் அம்மாவுக்கு உதவியாக வீட்டோடு இருக்கிறார். சங்கரலிங்கம் கடைசிப்பிள்ளை. சுதாவின் கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இறந்திருக்கிறார். வீட்டு வேலைபார்த்துதான் பிள்ளைகளை வளர்த்து வருகிறார் சுதா. இதற்கிடையில்தான் இப்படியொரு சோதனை.
``பெரியவங்களாலேயே டயாலிசிஸ் வலியைத் தாங்க முடியாது. இவன் சின்னப்பிள்ள. இவனால இதுக்கு மேலேயும் கழுத்து வழியா செய்ற டயாலிசிஸை தாங்க முடியாது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கிட்னியை மாத்திடணும்னு டாக்டர் சொன்னாரு. என்னோட கிட்னியை என் புள்ளைக்கு கொடுக்கிறேன்னு சொன்னேன். ரத்தம் செக் பண்ணிட்டு `உங்க பிள்ளையோடது ஏ ஒன் பாசிட்டிவ். உங்களோடது வேற ரத்தம். அதனால, உங்க கிட்னி பிள்ளைக்கு சேராதுன்னு சொல்லிட்டாங்க. எங்கம்மாவோட ரத்தம் சங்கராவுக்கு செட் ஆகுது. ஆனா, அவங்களுக்கு சர்க்கரை அதிகமா இருக்கிறதால ஆபரேஷன் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

இதுக்கு நடுவுல பிள்ள உடம்புல ரத்தமில்லைன்னு ரத்தம் ஏத்தச் சொன்னாங்க. பணம் கொடுத்துதான் வாங்கிட்டிருந்தோம். இப்போ, ரத்தத்துக்கு பதிலா மருந்து ஏத்திக்கலாம்னு சொல்லியிருக்காங்க. ஓர் ஊசி 800 ரூபாய். வாரத்துக்கு நாலு ஊசி போட வேண்டியிருக்கு. மருந்துக்கும் பணம் தேவைப்படுது. பக்கத்துலேயே இருந்து சங்கராவை பார்க்க வேண்டியிருக்கிறதால வீட்டு வேலைங்களுக்கும் போக முடியலை. எங்கம்மா வீட்டு வேலைக்குப்போய் அந்தக் காசையெல்லாம் என் புள்ளையோட மருந்து, மாத்திரை செலவுக்குத்தான் கொடுத்திட்டிருக்கு. என் தங்கச்சி, தெரிஞ்சவுங்க இப்படி ஈரமிருக்கிற ஒருசிலர் என் பிள்ளையோட உயிரைக் காப்பாத்திட்டு வர்றாங்க'' என்று கண்ணீர் மல்கப் பேசிய சுதாவைப் பற்றியும் அவரின் மகன் சங்கரலிங்கம் என்கிற சங்கராவின் நிலைமை பற்றியும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். உடனடியாக, சங்கரலிங்கத்தையும் அவன் அம்மாவையும் சந்திக்க மார்ச் 7-ம் தேதிக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தார். அவர் குறிப்பிட்ட நேரத்தில், சங்கரலிங்கம் குடும்பத்தை அழைத்துச் சென்றோம்.
சிறுவன் சங்கரலிங்கத்துக்குத் தைரியமூட்டியவர், அவனுடைய அம்மாவுக்கும் ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். பிறகு தன்னுடைய உதவியாளரை அழைத்து, `சிறுவனின் கழுத்தில் செய்யப்பட்டு வருகிற டயாலிசிஸை உடனடியாக கைக்கு மாற்றி அவனுடைய சிரமத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். தவிர, சிறுவனுக்குப் பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கும்வரை அவனுக்குத் தேவைப்படும் அத்தனை மருத்துவ உதவிகளும் இலவசமாகச் செய்யப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தவர், சிறு தொகையையும் சிறுவன் குடும்பத்துக்கு வழங்கினார்.

இதையடுத்து மா.சுப்ரமணியத்தின் உதவியாளர், மறுநாளே (மார்ச் 8-ம் தேதி) சிறுவன் சங்கரலிங்கத்தையும் அவனுடைய தாயார் சுதாவையும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனைப் பரிசோதித்த சிறுநீரகவியல் துறையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள், வரும் வாரம் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை சங்கரலிங்கத்தின் கை வழியாகவே டயாலிசிஸ் செய்ய ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். மகனுடன் மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போது தாயார் சுதாவின் முகத்தில் தெரிந்த புது நம்பிக்கை நம் மனதுக்கு பெரும் நிறைவைக் கொடுத்தது.