Published:Updated:

வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்? #VitaminDDeficiencyAlert

வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்? #VitaminDDeficiencyAlert

வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்? #VitaminDDeficiencyAlert

வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்? #VitaminDDeficiencyAlert

வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்? #VitaminDDeficiencyAlert

Published:Updated:
வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்? #VitaminDDeficiencyAlert

`ந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் பெரும்பாலானோர்  வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (National Institution of Nutrition). ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இது தொடர்பாக அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் பங்கேற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 56 சதவிகிதம் பேர் இந்தப் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.  

உலகிலேயே ஒரு ரூபாய்கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, வைட்டமின் டி மட்டும்தான். தண்ணீர், காற்றுகூட விற்பனைக்கு வந்துவிட்ட இந்தக் காலத்திலும், செலவில்லாமல் கிடைக்கும். இது மறுக்க முடியாத உண்மை. `உடலில் வெயில்பட்டால் போதும், நம் உடல் வைட்டமின் டி யை உருவாக்க ஆரம்பித்துவிடும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். 

இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். பூமத்தியரேகைக்கு அருகில் வாழ்வதால், அதிகமாகவே கிடைக்கிறது

வெயில். அதிலும் பெரும்பாலான மாதங்களில் வெயில் நிலவுகிறது. ஆனாலும், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்காமல், பலரும் இந்தச் சத்து தொடர்பான பல நோய்களுக்கு ஆளாகும் நிலை என்பது சற்று முரணாகத்தான் தோன்றுகிறது. 
இது ஒரு பக்கம் என்றால், `நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயில்  வைட்டமின் டி இருக்கிறதா?’, `சாப்பிடும் பூரியில் வைட்டமின் டி இருக்கிறதா?’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, சில நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விற்று, மற்றொரு பக்கம் கல்லாகட்டிக் கொண்டிருக்கின்றன. 

உண்மையில், சூரிய ஒளியிலிருந்து நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்குமா அல்லது உணவின் மூலமே பெற முடியுமா... இந்தியர்களிடம் இந்தக் குறைபாடு அதிகரிக்க என்ன  காரணம்... இதன் அளவு நம் உடலில் இருக்கவேண்டிய அளவைவிடக் குறைவாக இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்.... போன்ற கேள்விகளை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.

"வைட்டமின் 'டி'-யை நமது உடல் சூரிய ஒளியின் உதவியோடு உற்பத்தி செய்துகொள்கிறது.  சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் உடலின் சருமப்பகுதியில் படுகின்றன. அப்போது, சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து, இது உற்பத்தி செய்யப்படுகிறது.

பால் பொருள்கள், மீன், முட்டை, இறைச்சி, வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலும் வைட்டமின் டி கிடைக்கும். ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியின் மூலம்தான் அதிகமாக இச்சத்து உடலுக்குக் கிடைக்கிறது.
இதன் பற்றாக்குறை முன்பைவிட அதிகரிக்கக் காரணம், நம் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டதுதான். குறிப்பாக, வெயில்படாமலேயே வாழ்வதுதான். இன்றைக்கும் பச்சிளம் குழந்தைகளை இளம் வெயிலில் காட்டும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. வைட்டமின் டி கிடைப்பதற்காக இந்தப் பழக்கத்தை நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் வைத்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்ததைப்போல இந்தக் காலத்தில்  பெரும்பாலானோர் நவீன குகைகளாகிய வீடு, ஆபீஸ், கார் என்று வெயில்படாமலேயே வாழ்கிறார்கள். சூரியன் உதிப்பதற்கு முன்னர் அலுவலகம் செல்லும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சூரியன் மறைந்த பிறகே வெளியில் வருகிறார்கள். சூரிய வெளிச்சம் அவர்கள் மேல்படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. அதோடு, வெளியில் செல்பவர்கள் சருமத்தைப் புற ஊதாக் கதிர்களிலிருந்து காத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் போன்ற பல லோஷன்களைத் தடவிக்கொள்கிறார்கள். இது 95 சதவிகிதம் நேரடியாக வெயில் தோலில் படுவதைத் தடுக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. இன்றைக்குப் பல பள்ளிகளில், மைதானங்களே இல்லை. பிறகு பிள்ளைகளுக்கு வைட்டமின் டி எப்படிக் கிடைக்கும்? இதனால்தான் வயது வித்தியாசமில்லாமல் இதன் குறைபாடு ஏற்படுகிறது.

நன்மைகள்...

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். நம் உடல், கால்சியத்தை உறிஞ்ச உதவும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலும்புப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்கும்.  தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும். மூட்டுகளில் உண்டாகும் வலியைத் தடுக்கும் குணம் இதற்கு உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க உதவும். திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

அறிகுறிகள்... 

முதுகுவலி, தசைவலி, உடல் சோர்வு ஏற்படும். சிலருக்கு உடலில் இனம்புரியாத வலி இருக்கும். என்ன பரிசோதனை செய்து பார்த்தாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற பிரச்னைக்கு ஆளானவர்கள் வைட்டமின் டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம். 

குறைந்தால்...

`ரிக்கட்ஸ்’ என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வைட்டமின் டி போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு உப்புசம். எலும்புகள் வலுவிழந்துவிடும்.  பற்கள்,  நரம்புகளில் பாதிப்பு உண்டாகும். பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.

தீர்வுகள்!

`சுமார் 600 யூனிட் (International Unit s- IUs) முதல் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு வைட்டமின் தேவை’ என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். வயது, உடல் எடையைப் பொறுத்து இதன் தேவை மாறுபடும். 

குறைந்தபட்சம்  வாரத்துக்கு மூன்று நாள்கள், 20 நிமிடங்கள் சூரிய ஒளி நேரடியாகப்படும்படியாக இருந்தாலே போதும். இந்தப் பிரச்னை வராது.  உங்கள் குழந்தை வெளியில் போய், வெயில்படும்படியாக விளையாடுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், மேலைநாடுகளைப்போல, உணவுகளில் இந்த சத்தைச் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

வயது ஆக ஆகத் தோலில் சுருக்கம் ஏற்பட்டுவிடுவதால், சூரிய ஒளியை உள்வாங்கி வைட்டமின்  டியை உற்பத்தி செய்யும் சக்தி தோலுக்குக் குறைந்துவிடும். எனவே, வைட்டமின்  டி மாத்திரைகளை உட்கொள்ளலாம். 

அதேபோல, சிறுநீரகம், கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள் 'வைட்டமின் டி' சப்ளிமென்ட்ரிகள் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.

வைட்டமின் டி உடலுக்குக் கிடைக்க, தினமும் காலை அல்லது மாலை இளம் வெயிலின் ஒளி உடம்பில் படும்படி பார்த்துக்கொள்வது நல்லது. இந்தச் சத்து நிறைந்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்" என்கிறார் செந்தில்வேலன்.