Published:Updated:

``உனக்கும் டி.பி. வந்துரும்பாங்க... கண்டுக்கவே மாட்டேன்..!"- `காட்டாஸ்பத்திரி' நர்ஸ் பேபிலதா

``உனக்கும் டி.பி. வந்துரும்பாங்க... கண்டுக்கவே மாட்டேன்..!"- `காட்டாஸ்பத்திரி' நர்ஸ் பேபிலதா
``உனக்கும் டி.பி. வந்துரும்பாங்க... கண்டுக்கவே மாட்டேன்..!"- `காட்டாஸ்பத்திரி' நர்ஸ் பேபிலதா

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தாய் போல காக்கும் ஒரு செவிலியரின் கதை!

``ராஜாஜி ஆஸ்பத்திரியிலிருந்து தோப்பூர் தொற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு டிரான்ஸ்ஃபராகிப் போனேன். `போயும் போயும் காட்டாஸ்பத்திரிக்கா மாற்றலாகிப் போற,தொத்து நோய் வந்து சீக்கு முத்திப் போனவங்களதான் அங்க கொண்டு வந்து போடுவாங்க. கொஞ்ச நாள்ல உனக்கும் சீக்கு வந்து நீயும் சிரமப்பட போற,  தூரமா இருந்தாலும் பரவாயில்ல, ராஜாஜி ஆஸ்பத்திரியிலேயே இருந்துடு'ன்னு எல்லாரும் சொன்னாங்க.  எனக்கு அதைப்பத்தி எந்தக் கவலையும் இல்லை. அங்க வர்றவங்களை எல்லாரும்  நோயாளியாப் பாக்குறாங்க. நான் மனிதர்களா, ஒரு உயிரா பாக்குறேன். அதனால இன்னைக்கு வரைக்கும் எனக்கு எந்தச் சிரமமும் தெரியல" - உற்சாகத்தோடும் புன்னகையோடும் பேச ஆரம்பிக்கிறார் மதுரை தோப்பூர் - ஆஸ்டின்பட்டி அரசு காசநோய் மருத்துவமனையின் செவிலியர் பேபி லதா. 

மதுரை - திருமங்கலம் நான்கு வழிச்சாலையில், கப்பலூருக்கு அருகே உள்ள தோப்பூரில் இருக்கிறது அரசுத் தொற்றுநோய் மருத்துவமனை. ஊருக்கு வெளியே, யாருமே வருவதற்கு அச்சப்படக்கூடிய காட்டுப்பகுதியில் இருப்பதால் இதற்கு `காட்டாஸ்பத்திரி' என்ற பெயரும் உண்டு. மற்றவர்களுக்கு எளிதாகப் பரவக்கூடிய நோய்களுக்குச் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவமனைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாகத்தான் இருக்கும். அந்த மருத்துவமனைகளை, `காட்டாஸ்பத்திரி' என்றுதான் பொதுவாக மக்கள் அழைப்பார்கள். அப்படியொரு மருத்துவமனைதான் இது. 

நோய் முற்றிய நிலையில் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியாத சூழலில் உள்ள நோயாளிகளைத்தான் இங்கே கொண்டு வந்து சேர்ப்பார்கள். ஒரு காலத்தில், நோயாளிகளே இந்த மருத்துவமனைக்கு வருவதற்கு மிகவும் அச்சப்படுவார்கள். அப்படியொரு நிலையில் இருந்தது மருத்துவமனை. இப்போது சில நல்ல மருத்துவர்களின் அக்கறையாலும் முயற்சியாலும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறந்த மருத்துவமனையாக வளர்ந்திருக்கிறது. ஆனாலும், இப்போதும் இங்கே பணியாற்றுவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் வரத் தயங்குகிறார்கள். நோயாளிகளின் மூலமாக நமக்கும் நோய் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். பேபி லதா ஆறு வருடங்களுக்கும் மேலாக, எந்த முகச் சுளிப்பும் இல்லாமல். முழு அர்ப்பணிப்போடு இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். . 

``மதுரை கே.புதூர்தான் என் சொந்த ஊரு. எனக்கு சின்ன வயசுல இருந்து டாக்டராகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, வீட்டுல வசதியில்லாததால டாக்டருக்குப் படிக்க முடியல. `சரி, நர்ஸ் வேலைக்காவது போயிடணும்ன்னு முடிவு பண்ணி திருச்சி ஹெட் குவாட்ரஸ் ஹாஸ்பிட்டல்ல  படிச்சு முடிச்சேன். அடுத்து கொஞ்சம் வருசம் தனியார் மருத்துவமனைகள்லதான் வேலை செஞ்சேன். 2002- ல தான் அரசு வேலை கிடைச்சது. முதல்ல ராஜாஜி ஹாஸ்பிட்டல்... அங்க பத்து வருஷம் ஆபரேஷன் தியேட்டர்ல சர்வீஸ் பண்ணேன். 2012 - ல இங்க தோப்பூர் ஆஸ்பிட்டலுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சது. 

`ஹெச்.ஐ.வி.,  டி.பி,  உள்ளவங்கதான் இங்க வருவாங்க...  உனக்கும் தொத்திக்கப் போகுது'ன்னு பல பேரு சொன்னாங்க. அதையெல்லாம் பத்திக் கவலைப்படாமதான் இங்க வந்தேன். நெறையா பேரு, அம்மா, அப்பாவையே இங்க கொண்டு வந்து விட்டுட்டு போய்டுவாங்க. அவங்க தனியா ரொம்பக் கஷ்டப்படுவாங்க. அவங்கள பாக்கும்போது கஷ்டமா இருக்கும். நல்லா அன்பா கவனிச்சுக்கணும்னு நினைப்பேன். ஆஸ்பிட்டலுக்கு வர்ற ஒவ்வொரு பேஷன்டையும் என் வீட்டுல உள்ள ஒரு ஆளா நினைச்சுப்பேன். அவங்கள பாத்ரூம் கூட்டிட்டுப் போறது, வாந்தி எடுக்கும்போது தலையைப் பிடிச்சுக்கிறதுன்னு எல்லாத்தையும் பாத்துக்குவேன். 

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி,  வட இந்தியாவுல இருந்து ஒரு அம்மா, அவங்களோடு ஒரு பொண்னு, பையன் மூணு பேரும் இங்க வந்து அட்மிட் ஆனாங்க. மூணு பேருக்குமே டி.பி... கொஞ்ச நாள்ல அந்த அம்மா இறந்துட்டாங்க. அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கும் ஆதரவு இல்லாமப் போச்சு. ரெண்டு பேருக்கும் நோய்ப் பாதிப்பு அதிகமா வேற இருந்துச்சு.  ஒரு அடி கூட அவங்களால நகர முடியாது. அவங்க ரெண்டு பேரையுமே குளிக்க வைக்கிறது, டிரெஸ் போட்டு விடுறது, சாப்பாடு ஊட்டுறது எல்லாமே நான்தான் பாத்துக்கிட்டேன். இப்ப அந்த ரெண்டு குழந்தைகளும் எங்க மருத்துவமனையின் உதவியோட ஒரு பிரைவேட் ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்காங்க. அடிக்கடி இங்க வருவாங்க. ஆன்டி, ஆன்டின்னு என்மேல ரொம்பப் பாசமா இருப்பாங்க. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் எந்தப் பண்டிகையா இருந்தாலும் இங்க வந்துடுவாங்க. அவங்களுக்கு டிரெஸ் எடுத்துக் கொடுப்போம். ஹாஸ்பிட்டலோட செல்லப்பிள்ளை அவங்க ரெண்டுபேரும். 

இப்பக்கூட ரஞ்சித்ன்னு 29  வயசுப் பையன அவங்க குடும்பத்து ஆட்கள் கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க. அவராலயும் ஒரு அடி கூட நகர முடியாது. அவரையும் கூட இருந்து பார்த்துக்கிட்டேன். இப்ப ஓரளவுக்குத் தேறிட்டாரு. சுயமா பாத்ரூம் போறளவுக்கு உடம்பு தேறியிருக்கு. அவங்க வீட்டுக்கு போன் பண்ணினாலும் யாரும் வரமாட்டேங்கிறாங்க. 

நர்ஸ் உடையில இருக்கும்போது இவங்கதான் என் குடும்பம். வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம்தான் என் கணவன், பிள்ளைகளைப் பத்தி யோசிப்பேன். குடும்பத்தோட கோயிலுக்கு சாமி கும்பிடப் போயிருப்போம். என் பக்கத்துல அடையாளம் தெரியாத யாராவது ஒரு அம்மா வருவாங்க  `என்னை ஞாபகம் இருக்காம்மா? நீதான்மா என்னை ஆஸ்பத்திரியில  பாத்துக்கிட்டேன்னு' ரெண்டு கையையும் மேல தூக்கி கும்பிட்டு நன்றி சொல்லுவாங்க. அப்பதான், எனக்கு அவங்கள நியாபகம் வரும். சிலபேர் கையைப் புடிச்சு  அழுவாங்க... `நீ நல்லா இருப்பம்மா, உன் குடும்பத்துல எல்லோருமே நல்லா இருப்பாங்கம்மா'ன்னு சொல்லுவாங்க.... இதைவிட வாழ்க்கையில வேற என்னங்க வேணும். என்னைப் பொறுத்தவரைக்கும் நர்ஸ்-ங்கிறது மத்த தொழில்களைப் போல இல்லை... அதுக்கு தாய்மை உணர்வு வேணும்... எல்லாத்துக்கும் மேல அன்பும் கனிவும் இருக்கணும்.

கஷ்டப்பட்டு பெத்து வளர்த்தவங்க நோய்வாய்ப்பட்டதும் இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போயிடுறாங்க. எத்தனை முறை போன் பண்ணினாலும் வர மாட்டேங்கிறாங்க. இதெல்லாம் மாறணும். எல்லா பேஷன்ட்டும் நல்லபடியா குணமடையணும்...  இப்படித்தான் நான் தினமும் கடவுள்கிட்ட வேண்டிக்குவேன்" நெகிழ்ச்சியாகப் பேசி முடிக்கிறார் நர்ஸ் பேபி லதா.

நம்மைச் சுற்றியும் பல ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு நாம்தான் கொண்டாடவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு