Published:Updated:

உண்மையான மன உறுதி படைத்தவர்கள் யார் தெரியுமா? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

பாலு சத்யா
உண்மையான மன உறுதி படைத்தவர்கள் யார் தெரியுமா? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory
உண்மையான மன உறுதி படைத்தவர்கள் யார் தெரியுமா? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

`உறுதியானவர்கள் யாரையும் கீழே தள்ளிவிட மாட்டார்கள்; கீழே விழுந்தவர்களைத் கைதூக்கி விடுவார்கள்’ - அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் பி வாட்சன் (Michael P. Watson) குறிப்பிட்டிருக்கும் முத்தான வாசகம் இது. பிறருக்கு உதவுவதற்கு ஒரு மனம் வேண்டும். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சாலையில் நடக்கும்போது தடுக்கிவிழும் முதியவரைத் தூக்கிவிட சில கரங்களே நீள்கின்றன... வெறும் செய்தியாகப் படித்துக்கொண்டிருக்கையில், ஏதோ ஒரு நாட்டில் பூகம்பத்தில் மாண்டவர்களை நினைத்து சில நெஞ்சங்களே கலங்குகின்றன... பள்ளத்தில் விழுந்து அல்லாடும் குட்டியானையை நினைத்து வருத்தப்பட சில உள்ளங்களே இருக்கின்றன. பிறருக்காக இரங்கும் குணம் வாய்த்தவர்கள் இயற்கையிடம் வரம் வாங்கி வந்தவர்கள். அப்படி வரம் வாங்கி வந்த ஓர் இளைஞனின் கதை

அமெரிக்காவின் சிகாகோ நகரம். அங்கே ஒரு விற்பனைப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக விற்பனைப் பிரதிநிதிகள் ஐந்து பேர் நியூ ஜெர்ஸியிலிருந்து வந்திருந்தார்கள். கூட்டம் நல்லபடியாக முடிந்தது. அடுத்த நாள் காலை 8 மணி விமானத்தைப் பிடித்தால், இரவு டின்னருக்கு வீட்டுக்குப் போய்விடலாம் என்பது அவர்கள் திட்டம். தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஒரு டாக்ஸி பிடித்தார்கள். விமானநிலைய வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். விமானம் கிளம்ப இன்னும் அரை மணி நேரமே இருந்தது. ஐந்து பேரும் டிக்கெட்டையும் தங்கள் லக்கேஜையும் எடுத்துக்கொண்டு வேக வேகமாக நடந்தார்கள். 

பாதையோரமாக ஒரு ஆப்பிள் கடை இருந்தது. அந்த ஐந்து விற்பனைப் பிரதிநிதிகளில் முதலில் சென்றுகொண்டிருந்தவர், பாதையோரமாக வைத்திருந்த அந்தக் கடையின் மேசையை இடித்துவிட்டார். மேசையின் மேல் ஆப்பிள்கள் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இடித்ததில், ஆப்பிள்கள் தரையில் விழுந்து சிதறி உருண்டன. இடித்தவர் அதைப் பார்த்தார்... விமானத்தைப் பிடிக்கவேண்டிய அவசரத்தை நினைத்தார். மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தார். மற்றவர்களும் அவருடன் வேகமாக நடந்தார்கள். அவர்களில் கடைசியாக வந்த ஒருவர் மட்டும் அப்படியே நின்றுவிட்டார். அந்த ஆப்பிள் கடையைப் பார்த்தார். கடைக்குக் காவலாக ஒரு 16 வயதுள்ள பெண் நிற்பது தெரிந்தது. அவள் எதையோ சொல்லி யாரையோ கூப்பிடுவதும் கேட்டது. அவருக்கு இதயத்தில் `சுரீர்’ என்று ஏதோ ஒரு வேதனை. அவ்வளவுதான்... வேகமாக ஓடினார். முன்னால் ஓடிக்கொண்டிருந்த தன் நண்பர்களில் ஒருவரின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார். 

``ஜார்ஜ்! நான் அடுத்த ஃப்ளைட்ல வர்றேன். ஊருக்குப் போனதும் என் ஒயிஃப்கிட்ட போன் பண்ணிச் சொல்லிடு!’’ 

``ஏம்ப்பா?’’ 

``வந்து சொல்றேன். பை!’’ 

இப்போது அந்த விற்பனைப் பிரதிநிதி திரும்பி நடந்தார். தெருவோர ஆப்பிள் கடைக்கு அருகே வந்தார். தரையெங்கும் ஆப்பிள்கள் சிதறிக்கிடந்தன. இப்போதுதான் அந்தப் பெண்ணை அவர் நன்றாக கவனித்தார். அந்தப் பெண் பார்வையற்றவள் என்பது தெரிந்து அதிர்ந்துபோனார். அவள் இரு கைகளையும் எதையோ தேடுவதுபோல நீட்டிக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களில் இறங்கிக்கொண்டிருந்தது. ஆப்பிள்கள் சிதறியிருப்பதையும் அந்தப் பெண்ணையும் அந்தப் பக்கம் போன பலர் பார்க்கத்தான் செய்தார்கள். ஆனால், நிற்காமல் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். அவரவருக்கு அவரவர் வேலை! ஒருவர்கூட அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. 

அந்த விற்பனைப் பிரதிநிதி இளைஞர் தன் சுமையை ஓர் ஓரமாக வைத்தார். தரையில் மண்டியிட்டு, சிதறிக் கிடந்த ஆப்பிள்களில் ஒவ்வொன்றாகப் பொறுக்கியெடுத்தார். எல்லா ஆப்பிள்களையும் சேகரித்து மறுபடியும் அந்தத் தெருவோரக் கடை மேஜையில் அழகாக அடுக்கிவைக்க அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தார். அந்த ஆப்பிள்களில் சில அடிபட்டு, நசுங்கிப் போயிருப்பதையும் கவனித்தார். அவற்றைத் தனியாக ஒரு பழக்கூடையில் போட்டு வைத்தார். 

எல்லாம் முடிந்தது, மறுபடியும் அந்தக் கடை மேஜையில் பழங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்துகொண்டார். தன் பர்ஸை எடுத்தார். அதிலிருந்து சில கரன்ஸிகளை உருவினார்... ``இந்தாம்மா... இதுல 40 டாலர் இருக்கு. வெச்சுக்கோ. உன் கடையை நாங்க சேதப்படுத்தினதுக்கு நஷ்ட ஈடுன்னு நினைச்சுக்கோ! சரியா?’’ என்று சொல்லி அந்தப் பணத்தைக் கொடுத்தார்.   

அந்தப் பெண் பணத்தை வாங்கிக்கொண்டாள். 

``ரொம்ப மோசமா உன் கடையை நாங்க சேதப்படுத்திடலைதானே... நான் கிளம்பவா?’’ அவர் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டபோது, அந்தப் பெண் கூப்பிட்டாள்... ``ஐயா...’’ 

``என்னம்மா?’’ 

``நீங்க கடவுளா?’’ 

அவர் ஒரு கணம் பார்வையிழந்த அந்தப் பெண்ணின் கண்களை உற்றுப் பார்த்தார். 

``இல்லைம்மா. அவர் ரொம்பப் பெரியவர். நல்லவர், நம்ம எல்லாருக்கும் அன்பானவர், நம்மை நேசிப்பவர், நம்ம மேல அக்கறை காட்டுறவர், அவர் எங்களை மாதிரி ஒருபோதும் ஆப்பிள்களைத் தட்டிவிட மாட்டார். வரட்டுமா?’’ 

அந்த இளைஞர் விமான நிலையத்தை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார். அடுத்த விமானம் வருவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது.