ஹெல்த்
Published:Updated:

“நான் போராடப் பிறந்தவள்!”

“நான் போராடப் பிறந்தவள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் போராடப் பிறந்தவள்!”

தன்னம்பிக்கை

``கடவுள் கஷ்டத்தைக் கொடுக்குறார்னா அதுலருந்து நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்குனு அர்த்தம். கஷ்டத்தைக் கடக்க முடியாமல் துவண்டு போனால், வாழ்க்கை தோல்வியைக் காண்பிக்க ஆரம்பிச்சுடும்’’ என தத்துவார்த்தமாகப் பேசும் கெளசல்யா பாட்டி, முன்னாள் நடிகர் செந்தாமரையின் மனைவி. சீரியலில் வில்லி கேரக்டர்களில் அசத்திவருபவர். மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு எழுந்த தன்னம்பிக்கை மனுஷி இவர் என்பது, நாம் அறியாத மற்றொரு பக்கம். அதைப் பற்றி விவரிக்கிறார்.

“நான் போராடப் பிறந்தவள்!”

“ `நான் எதையும் போராடி ஜெயிச்சு வந்துடுவேன்.’ - எனக்கு நானே சொல்லிக்கிற தாரக மந்திரம் இது. இப்போ எனக்கு 74 வயசாகுது. வாழ்க்கை எப்பவும் நிலையா, ஒரே மாதிரி இருக்காது. அப்படி இருந்தால், அதில் சுவாரஸ்யமும் இருக்காது. இதுதான் என் ஒவ்வொரு பிறந்தநாளிலும் நான் நினைச்சுக்கிற பாடம். வசதி நிறைந்த பாரம்பர்யக் குடும்பம் என்னுடையது. சின்ன வயசுல, `ஸ்கூல் போக மாட்டேன்’னு அடம்பிடிச்சதால எங்க வீட்டுக்கே வாத்தியாரை வரவழைச்சு படிப்பு சொல்லிக்கொடுத்தாங்க என் அப்பா. ஆனா, முட்டி மோதிப்  பார்த்தும் எனக்குப்  படிப்பு மேல ஈடுபாடு வரலை. என் அண்ணன் சினிமாத் துறையில் தயாரிப்புப் பணியில் இருந்ததால் எனக்கும் சினிமா மேல காதல் வர, என்னோட எட்டு வயசில் சினிமாவில் காலடி எடுத்துவெச்சேன். சினிமா எனக்கு எல்லாமுமாக, எல்லாவற்றையும் தரும் ஒன்றாக இருந்தது. என் கணவர் உட்பட எனக்கு எல்லாமே சினிமாதான் கொடுத்தது.

“நான் போராடப் பிறந்தவள்!”நடிப்பு ரத்தத்தில் ஊறிப்போக, சினிமாவுக்காக நிறைய கத்துக்கிட்டேன். என்னை நிறைய மாத்திக்கிட்டேன். `நடிப்பு என்பது இயல்பா இருக்கணும்’னு  தலைவர் எம்.ஜி.ஆர் அடிக்கடி சொல்லுவார். அதைப் பாடமா எடுத்துக்கிட்டு நடிப்பேன். பாட்டியாக நடிக்கும் இந்த வயதில்கூட, சீரியலிலும் எனக்கு ரசிகர்கள் கிடைச்சிருக்கிறதுக்கு அதுதான் காரணம்’’ என்று எனர்ஜெட்டிக்காகப் பேசும் கெளசல்யா பாட்டி, ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் தெறிக்கவிடும் க்யூட் ரியாக்‌ஷன்களுக்காக ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். 

‘`சினிமாவுக்கு வந்தப்போ சின்னச் சின்ன ரோல்கள், நாடகங்கள்னு நடிச்சிட்டிருந்தேன். பிறகு முக்கியக் கதாபாத்திரங்களில்  நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சினிமாவில் பிஸியாக இருந்த நேரத்தில், நடிகர் செந்தாமரைக்கும் எனக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு ஈடுபாடு வர, பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன்  திருமணம் செய்துக்கிட்டோம். திருமணத்துக்குப் பிறகு எனக்கு அப்பாவாகவும் இருந்தார் என் கணவர். சின்னச் சின்ன விஷயத்தையும் எனக்காகப்  பார்த்துப் பார்த்துச் செய்வார். மகள் பிறந்தப்போ மகிழ்ச்சி இரட்டிப்பானது. அப்போதான் வாழ்க்கை அதன் மறுபக்கத்தை எனக்குக்  காண்பிக்க ஆரம்பிச்சுது’’ எனக் கண்கலங்கி அமைதியானவர், சில நொடிகளுக்குப் பின்னர் தொடர்ந்தார்.

“நான் போராடப் பிறந்தவள்!”

‘`என் 35-வது வயதில் திடீரென்று வலதுபுற மார்பில் தீராதவலி ஏற்பட, பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தாங்க. ரிசல்ட்டைப் பார்த்த மருத்துவர்கள் புற்றுநோய்னு சொல்ல, என் கணவர் ஆடிப்போயிட்டார். வலியால் நான் அழுததைவிட, எனக்காக அவர் அழுததே அதிகம். ஒவ்வொரு முறை கீமோதெரபி பண்ணும்போதும், சாவின் விளிம்புக்குப் போயிட்டு வருவேன். ஒருமுறை வலி தாங்க முடியாம டாக்டர்களிடம், ‘இது தீராத வியாதினு சொல்றாங்களே... என்னைக் காப்பாத்த முடியாதுன்னா இப்போவே சொல்லிடுங்க. இந்த வலி, வேதனையாவது மிஞ்சும்’னு அழுதேன்.

அப்போ என் மருத்துவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். சிகிச்சையின் கொடுமையான வலியை ஏற்றுக்கொண்டு எதிர்கால வாழ்வுக்காகப் போராடிய அந்தப் பிஞ்சுகளின் வேதனையைப்  பார்த்தப்போ, `வலியையும் வேதனையையும் எனக்குக் கடவுள் லேட்டாதான் கொடுத்திருக்கார்’னு மனதைத் தேத்திக்கிட்டேன்.

இப்போ புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வு அதிகரிச்சிருக்கு. ஆனா, 30 வருஷத்துக்கு முன்னாடி அது தீராத வியாதி. எனக்குப் புற்றுநோய் இருக்குனு சொல்லிட்டா போதும், யாரும் பக்கத்தில்கூட வர மாட்டாங்க. என் கணவர் மட்டும்தான், ‘நீ மீண்டு வருவே’னு சொல்லி எனக்கு வேராக நின்றார். என்னையும் என் மகளையும் இரண்டு கண்களில்வைத்துப் பார்த்துக்கொண்டார். ஒரு நாளும் எனக்கான வேலைகளைச் செய்து கொடுப்பதில் ஈகோ பார்த்ததில்லை. அந்த அன்புதான் என்னை புற்றுநோயிலிருந்து மீட்டுக் கொடுத்தது. நாங்க `ஐ லவ் யூ’ சொல்லிக்கிட்டதில்லை; கிஃப்ட் கொடுத்துக்கிட்டது இல்லை. ஆனாலும், எங்க காதலின் ஆழம் அதிகம். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்ததாலதான் அவரோட மரணத்தை இப்போகூட என்னால ஏற்றுக்கொள்ள முடியலை’’ என்பவர், அந்தத் துன்பத்திலிருந்து மீண்ட கதையும் தன்னம்பிக்கை நிறைந்தது.

‘`அவரோட மரணம் என்னைத் தனிமையின் விளிம்புக்குத் தள்ளிருச்சு. மகளுக்குத் திருமணம் செய்துவெச்சுட்டு வாழ்க்கையின் வெறுமையுடன் போராடினேன். எந்தப்  படிப்பு எனக்குச் சின்ன வயசில் பிடிக்காமல் இருந்ததோ, அதைச் சவாலாக  எடுத்துக்கொண்டு வாசிக்க, எழுதனு தீவிரமா கத்துக்கிட்டேன். வீடு முழுவதும் புத்தகங்களால் நிரப்பினேன். 

“நான் போராடப் பிறந்தவள்!”

நடிப்புக்கு விடுப்புக் கொடுத்து புத்தகத்தை வாழ்க்கையாக மாற்றிக்கொண்டேன். புத்தகங்கள் எனக்கு வாழ்வதற்கான வெளிச்சமாக மாறின. வாழ்க்கை ஒரு மாதிரி செட்டாக, மீண்டும் இடதுபுற மார்பில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை புற்றுநோயுடன் போராடவில்லை, துணிச்சலாக எதிர்த்து நின்று மீண்டெழுந்தேன். வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அதனாலதான் நடிப்புக்கு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கேன். ஸ்பாட்டில் ஒரு நாளும் சோர்ந்து போய் உட்கார்ந்தது இல்லை. ஜூனியர்கள் எல்லாம் என்னை நல்லபடியாக பார்த்துக்கிறாங்க. நடிப்பின் மூலம் கிடைக்கும் தொகையில் என் தேவை போக மீதமிருக்கும் தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவங்களுக்குக் கொடுத்து உதவுறேன்.

‘இந்த வயசுல நீ ஏன் பாட்டி கஷ்டப்படுறே? எங்ககூட வந்து இரு’னு என் பேரக் குழந்தைகள் அடிக்கடி சொல்லுவாங்க. ‘என் உடலுக்குத்தான் வயசாகுது, மனசுக்கு வயசாகலை’னு சொல்லிச் சிரிப்பேன். என்னைத் தவிர என்னை யாராலும் தோற்கடிக்க முடியாது. போராடப்  பிறந்தவள், போராடித்தான் சாவேன்!” - சவாலாகச் சொல்கிறார்.

சல்யூட்!


- சு.சூர்யா கோமதி

படங்கள்: க.பாலாஜி