Published:Updated:

ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!

ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1தன்னம்பிக்கை

ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1தன்னம்பிக்கை

Published:Updated:
ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!

“நான் கௌசல்யா... கௌசல்யா ஹெச்ஐவி பாசிட்டிவ்” - தன்னைப் பற்றிய அறிமுகத்தைத் தெளிவாக, அழுத்தமாக இந்த ஒற்றைவரியில் பதிவுசெய்கிறார் கௌசல்யா. “ஆமாங்க, நான் ஒரு எய்ட்ஸ் நோயாளிங்கிறதை வெளியே சொல்ல ஒருபோதும் தயங்கினதில்லை. என்கூடப் பழகுறவங்க, அக்கம்பக்கத்துல உள்ளவங்ககிட்ட என் உடம்புக்குள்ள ஹெச்ஐவி வைரஸ் இருக்கிறதைத் தெரியப்படுத்துறதுல எந்தத் தப்பும் இல்லைனு நினைக்கிறேன்.”

ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!

இப்போது அல்ல, 20 வருடங்களுக்கு முன்னரே, தான் எய்ட்ஸ் நோயாளி என்பதை வெளிப்படையாக இந்தியச் சமூகத்தின் மத்தியில் முழங்கிய முதல் பெண் குரல், கௌசல்யாவினுடையது. இந்தியாவிலேயே எய்ட்ஸ் பாதித்த பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பான, 30,000-க்கும் அதிகமான பெண் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டி அரவணைத்துக்கொண்டிருக்கிற ‘பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்’கை (PWN - Positive Women Network) உருவாக்கியவர். எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு திக்கற்று நிற்கும் பெண்களுக்கான கலங்கரை விளக்கம்... கௌசல்யா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!“எனக்கு நாமக்கல் பக்கத்துல ஒரு கிராமம்தான் சொந்த ஊரு. ப்ளஸ் டூ முடிச்சதும், எங்க அத்தை பையனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. அவர் லாரி டிரைவர். தாலிக்கயிறு, எனக்கு சாவுக்கயிறா மாறும்னு அப்போ யாருமே நினைச்சுக்கூடப் பார்க்கலைங்க. கல்யாணம் முடிஞ்ச சில நாள்கள்லயே என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாமப் போக, ஆஸ்பத்திரியில டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். அப்போதான் அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது தெரிய வந்துச்சு. பதறித் துடிச்சு அவர்கிட்ட போய், ‘ஏங்க, உண்மையிலேயே உங்களுக்கு அந்த நோய் இருக்குதா?’னு கேட்டேன். ‘ஆமா, இப்ப அதுக்கு என்ன பண்ணணும்ங்கிற... எனக்கும் என் அப்பாவுக்கும் கல்யாணத்துக்கு முன்னமே இது தெரியும். உனக்கு இஷ்டம்னா என்கூட வாழு... இல்லைனா, கிளம்பிப் போயிடு’னு சொன்னாரு. நெருப்பை அள்ளி நெஞ்சுல போட்ட மாதிரி இருந்துச்சு. வீட்டுல இருக்கிறவங்க எனக்கும் டெஸ்ட் எடுத்துப் பார்க்கணும்னு சொல்லிக் கூட்டிட்டுப் போனாங்க. ரிசல்ட் வந்துச்சு. கல்யாணமாகி 45-வது நாள்... எனக்கும் எய்ட்ஸ் இருக்குனு டாக்டர் சொல்லிட்டாங்க” - அமைதியாகிறார் கௌசல்யா. அந்த அமைதி நம் நெஞ்சைக் குத்தூசி கொண்டு துளைக்கிறது.

ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!

“கல்யாணமாகி ஒன்றரை மாசத்துல கணவரைவிட்டு தனியா வந்தேன். ஏழாவது மாசத்துல அவர் இறந்து போனாரு.   `18 வயசுல எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை’னு யோசிச்சு யோசிச்சு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு. யார்கிட்டேயும் பேசாம ஒதுங்க ஆரம்பிச்சேன். ஆனா, எங்க வீட்டுல உள்ளவங்களும் கிராமத்துல உள்ளவங்களும் என்னை ஒதுக்கிவைக்கவோ, புறக்கணிக்கவோ இல்லை. அந்த மனுஷங்க கொடுத்த ஆதரவுதான் எனக்கு வாழ்றதுக்கான நம்பிக்கையைக் கொடுத்துச்சு. சென்னைக்கு வந்தேன். எய்ட்ஸ் பற்றின விழிப்பு உணர்வே இல்லாத காலம் அது. நான் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்துல எய்ட்ஸ் நோயால பாதிக்கப்பட்ட ஒருத்தரை எரிச்சுக் கொன்னுட்டாங்க. உயிர் உறைஞ்சுபோய் வாழ்ந்துட்டிருந்தேன். எப்படியோ என்னைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டு தூர்தர்ஷன்ல ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ நிகழ்ச்சியில் பேச அழைச்சாங்க. அதில் நான் என் கதையைச் சொல்ல, அதைப் பார்த்த அக்கம்பக்க மக்கள் எல்லாம் என் மேல அனுதாபப்பட்டாங்க. ‘உங்களை டி.வி-யில பார்த்தோம். உங்களை ஒதுக்க மாட்டோம், என்ன உதவின்னாலும் கேளுங்க’னு சொல்லி அன்பா நடந்துகிட்டாங்க.” உறவினர்களின் ஆதரவும் அக்கம்பக்கத்தினரின் அன்பான அணுகுமுறையும் கௌசல்யாவுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன. அடுத்த சில நாள்களிலேயே, கௌசல்யா தன்னைப்போல் பாதிக்கப்பட்ட பிற எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்.

“ஒரு கட்டத்தில், நான் எய்ட்ஸ் நோயாளி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் ஆரோக்கியமான சூழல் எனக்கு அமைஞ்சது. ஆனா, எத்தனையோ எய்ட்ஸ் நோயாளிகள் இருட்டிலேயேதானே இருக்காங்கனு நினைச்சுப் பார்த்தேன். குறிப்பா, பெண்கள். உதாரணமா, ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் பிரசவத்தின் போதுகூட பிள்ளைக்கு ஹெச்ஐவி வராமல் தடுக்குறதுக்காகத் தான் சிகிச்சைகளில் கவனம் செலுத்துவாங்களே தவிர, பிரசவித்த அந்தப் பெண்ணைக் காப்பாத்த இங்கே எந்த முனைப்பும் இருக்காது. இந்தியா முழுக்க 46 சதவிகிதம் எய்ட்ஸ் நோயாளிப் பெண்களுக்கு தங்களோட கணவர் மூலமா ஹெச்ஐவி பரவுது. இளம் வயசுலேயே வாழ்க்கையைத் தொலைச்சுட்டு, சமூகத்துக்குப் பயந்து தற்கொலை பண்ணிக்கிற கைம்பெண்கள்  நிறைய. அந்தப் பெண்களுக்கு எல்லாம் ஆதரவாகவும் அவங்க எல்லோருடைய பிரச்னைகளையும் கொட்டித் தீர்க்கும் ஓர் இடமாகவும்தான் ‘பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்’ அமைப்பை 1998-ம் ஆண்டில் தொடங்கினேன்.

ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களின் நம்பிக்கை!

ஆரம்பத்தில், ஊடகங்கள் மூலமா ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்கள் எங்க அமைப்பைக் கண்டுபிடிச்சு வந்தாங்க. பிறகு, மருத்துவமனைகள் மூலமா அவங்களை எங்களைத் தொடர்புகொள்ள வெச்சோம். எங்ககிட்ட வந்த பலருக்கும் வீட்டுல, வேலைபார்க்கிற இடத்துல, அக்கம்பக்கத்துல உள்ளவங்களாலதான் பிரச்னை இருந்துச்சு. அதைவிட முக்கியமா, மருந்து கிடைக்காம பலர் இறந்துட்டே இருந்தாங்க. ஏன்னா, அப்போ ரெண்டு மருந்துகளோட விலை மட்டும் ஏழாயிரம் ரூபாய். தினமும் மருந்து சாப்பிட்டே ஆகவேண்டிய சூழல்ல, அவ்வளவு தொகை கொடுத்து மருந்து வாங்க முடியாத எத்தனையோ ஏழைப் பெண்கள் இருந்தாங்க, அவங்க இறந்துட்டாங்க. அதனாலதான், முதல்ல ஹெச்ஐவி மருந்து விலையைக் குறைக்கப் போராட்டம் நடத்தினோம்.

மருந்தை அரசாங்கமே அரசு மருத்துவமனைகள்ல வழங்கணும்னு கேட்டுப் போராடினோம். எய்ட்ஸ் நோயாளிகளை மருத்துவமனைகளில் அட்மிட் பண்ணி சிகிச்சையளிக்கவைக்கப் போராடினோம். ஹெச்ஐவி பெண்களுக்கு டெலிவரி பார்க்கச்சொல்லிப் போராடினோம். இப்படி ஒவ்வொரு தேவைக்கும் இப்போவரை போராடிட்டேதான் இருக்கோம். இப்போகூட அரசாங்கத்துடைய பட்ஜெட்ல எங்களுக்கான கோரிக்கைகளைக் கொடுத்திருக்கோம். எங்க கோரிக்கைகள்ல ரெண்டு நடந்தாகூட பெரிய விஷயம்தாங்க” என்றவர், ‘அருவி’ படம் குறித்து ஒரு ஹெச்ஐவி பாதிப்பாளராக தன் அதிருப்தியையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

“கொஞ்சம் கொஞ்சமா முன்னோக்கி நகர்ந்திட்டிருந்த எங்களை, எங்க வாழ்க்கையை அந்தப் படம் பல அடி பின்னோக்கி இழுத்துவிட்டுருச்சு. நான் ஒரு ஹாஸ்டல் நடத்திட்டிருந்தேன். சமையலுக்கு ஆள் கிடைக்கிறது சிரமமா இருந்ததால அங்கே நானே சமைப்பேன். ஹாஸ்டல்ல தங்கியிருந்த பொண்ணுங்ககிட்ட, எனக்கு எய்ட்ஸ் இருக்குங்கிற உண்மையைச் சொன்னேன். அந்தப் பொண்ணுங்க எல்லாரும் படிச்சவங்க. ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கிறவங்க. ‘அருவி’ படம் வந்ததுக்கு அப்புறம், அந்தப் பொண்ணுங்க எல்லாம் ஹாஸ்டலை காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. அந்தப் படத்துல இளநீர் மூலமா ஹெச்ஐவி பரவுறதா காண்பிச்சிருந்தது, இப்படித்தான் பலரோட மனதிலும் எதிர்மறையான சிந்தனையைக் கொடுத்துடுச்சு. ஒரு தவறான தகவலை ஒட்டுமொத்த மக்கள்கிட்டயும் கொண்டுபோய், எங்க எல்லோரோட வாழ்க்கையையும் மனசையும் பதம்பார்த்துட்டாங்க. இங்கே எத்தனையோ ஹெச்ஐவி பாசிட்டிவ் அம்மாக்கள் இருக்கிறாங்க; தள்ளுவண்டிக்கடைகள் நடத்திப் பிழைப்பை ஓட்டுறவங்க இருக்கிறாங்க. நாங்களே வெளிப்படையா எங்களுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு சொல்லத் துணிஞ்சாலும், இப்படியான எதிர்மறைச் சிந்தனைகளை மக்கள்கிட்ட கொண்டு போகும்போது எத்தனை பேர் எங்களை ஏத்துப்பாங்க?’’ என்கிறார் வேதனையுடன்.

‘’இந்த 20 வருஷத்துல இந்தியா முழுக்க 35,000-க்கும் அதிகமான ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண்களைப் பார்த்திருக்கேன். எத்தனை அம்மாக்கள், எத்தனை கைம்பெண்கள்,  எத்தனை கர்ப்பிணிகள், எத்தனை மாணவிகள், எத்தனை குழந்தைகள். கல்லூரிக்குப் போனா துரத்துறதும், வேலைக்குப் போனா வெளிய தள்ளுறதும், குடும்பத்துல இருந்து விரட்டுறதும் இப்போதும் நடந்துக்கிட்டுதாங்க இருக்கு. இப்படி எல்லா பக்கமும் எங்களை விரட்டினா நாங்க எங்கே போவோம்? சொந்தமா தொழில் தொடங்கிப் பிழைக்கலாம்னு பேங்க்ல லோன் கேட்டா,  ‘நீதான் கொஞ்சநாள்ல செத்துடுவியே, உன் கடனை யார் அடைப்பா?’னு சொல்லி அவமானப்படுத்துறாங்க. அரசும் எந்த உதவியும் செய்ய முன்வர்றது இல்ல. விரக்தியில உடைஞ்சுபோய் எத்தனை பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க தெரியுமா? பெண்ணா பிறந்து இப்படி கணவனோட சாபத்தை வாங்கிட்டு காலத்துக்கும் கஷ்டப்படுற பெண்களுக்கான வெளிச்சம் இங்கே எங்கே இருக்கு? அந்த வெளிச்சத்தைத் தேடித்தான் நாங்க ஓடிட்டு இருக்கோம்” - துயரத்தை மீறி ஒரு புன்னகை தந்து முடிக்கிறார் கௌசல்யா.

அந்த வெளிச்சத்தின் ஊற்றுக்கண்... நம் அன்பும் அரவணைப்புமே!

- மு.பார்த்தசாரதி

படங்கள்: க.பாலாஜி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism