Published:Updated:

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”
பிரீமியம் ஸ்டோரி
“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

தன்னம்பிக்கை

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

தன்னம்பிக்கை

Published:Updated:
“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”
பிரீமியம் ஸ்டோரி
“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் திறனறியும் நிகழ்ச்சி ஒன்று ‘லிட்டலைட்’ (Litalight) என்கிற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, நடந்துகொண்டிருந்தது. நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அங்கு வந்த ஒரு பெண், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். அவர் கைகளைப் பற்றியபடி நின்ற ஓர் இளம் பெண், பார்வையற்றவர் போல் தோற்றம் அளித்தார். நேரம் முடியப் போவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சொல்லச் சொல்ல,  மீண்டும் மீண்டும் அந்தப் பெண்,  “ஒரே ஒரு நிமிஷமாச்சும் டைம் கொடுங்க.... என் குழந்தை நல்லா பாடுவா” என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். ஒருவழியாக மைக் அந்தப் பெண்ணின் கைக்கு வந்தது. 

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

மைக்கை கையில் வாங்கிய அந்தப் பெண், ஒரு நொடியும் தாமதிக்காமல் ‘கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை....’ என்று பாடத்  தொடங்கினார். அதுவரை சலசலத்துக்கொண்டிருந்த அரங்கம் அமைதியானது. துள்ளலும் மென்மையுமான அந்தக் குரல், ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் கட்டிப்போட்டது. சிலர் சட்டென செல்போனை கையிலெடுத்து, அந்தப் பெண் பாடிக்கொண்டிருக்கும்போதே முகநூலில் நேரலை செய்தார்கள். அது ஒரு மந்திரத் தருணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”அந்தப் பெண்ணின் பெயர் ஜோதி. அதுவரை வாழ்வில் ஒளி பொருந்திய ஒரு தருணத்தையும் சந்தித்திராத ஜோதியின் வாழ்வு, அந்தக் கணம் முதல் மெள்ள ஒளிபெறத் தொடங்கியது. ஜோதி, இசை ஆர்வலர்களின் கவனத்துக்கு வந்தார். புதிய மேடைகள் அவருக்கென்று உருவாகின. இசைக் கச்சேரிகளில் பாடினார். அவர் திறமைக்கான அங்கீகாரமாக, திரைப்படத்திலும் பாடும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் வெளியான ‘அடங்காதே’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நிலவின் நிறமும் வண்ணம் கொள்ள...’ என்னும் இனிய பாடல் ஜோதி பாடியதுதான். புதிய குரலாக இசை வானில் சுடர்விடத் தொடங்கியிருக்கும் ஜோதியின் இந்த வெற்றி, அத்தனை எளிதாகக் கிடைத்ததல்ல. இதற்குப் பின்னாலிருக்கும் வலிகளையும் உழைப்பையும் ஜோதியின் தாய் கலைச்செல்வி நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

“ஜோதி பிறந்தபோது அவளோட கண் பகுதியில் வெறும் சதை மட்டுமே இருந்தது. அந்தப் பிஞ்சு முகத்துல கண் இருக்கிறதே தெரியலை. குழந்தைக்குப் பார்வையில்லைங்கிற அதிர்ச்சியை மனம் ஏத்துக்கிறதுக்குள்ள, `பாப்பாவுக்குக் குடல்ல ஓட்டை இருக்கு’னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எவ்வளவோ போராடி அவளைக் காப்பாத்தினோம். அதன் பிறகு, ஜோதியை வளர்க்க நான் பட்ட வேதனைகளை வார்த்தையால சொல்ல முடியாது. சொல்லப்போனா, அந்த வேதனைகள்தான் என் வாழ்க்கையோட ஆதாரம். அத்தனையும் மறந்துபோகும்படி என் பொண்ணு இன்னைக்கு வெற்றிகளை எனக்குப் பரிசாகத் தந்திருக்கா.” பெருமிதமாகச் சொல்கிறார் கலைச்செல்வி. ஜோதி பிறந்தபோது, கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டுக்கே வந்துவிட்டார் கலைச்செல்வி. ஜோதி, குழந்தையாக இருந்தபோது, அவரிடம் ‘பிஹேவியரல்’ பிரச்னைகள் இருப்பதைக் கண்டுபிடித்த கலைச்செல்வி, ஜோதியை  கவனித்துக்கொள்வதற்காக, பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார்.

“பார்வையுள்ள குழந்தைன்னா, இடுப்புல தூக்கிவெச்சிக்கிட்டு... `அங்கே பாரும்மா ஆடு, மாடு, புறா, பூனை’னு வேடிக்கை காட்டலாம்.  ஆனா, இவளை எப்படி சமாதானப்படுத்துறதுனு எனக்குத் தெரியலை. அவ கோபமா இருக்கும்போது இடுப்புல தூக்கிவெச்சிருந்தாலும், என்னைக் கண்டபடி அடிக்க ஆரம்பிச்சுடுவா. சில நேரங்கள்ல, என் தலைமுடியைக் கொத்தாகப் பிடிச்சு இழுத்துடுவா. என்ன பண்றதுனு தெரியாம ரொம்பத் தடுமாறியிருக்கேன். ஒரு நாள் அவ ஆவேசமா இருந்தப்போ, ரேடியோவுல இளையராஜா சார் பாட்டு ஓடிட்டு இருந்தது.  அதைக் கேட்டு அவ அமைதியானதை கவனிச்சேன். பாட்டு கேட்டா, குழந்தை அமைதியாகிடுறா அப்படிங்கிறதைக் கண்டுபிடிச்சேன். அதை உறுதிபடுத்துறதுக்கு நாள் முழுக்க பாட்டு மட்டுமே கேட்குற மாதிரியான ஒரு சூழலை உருவாக்கினேன். அப்படித்தான் இசைக்கும் அவளுக்குமான உறவு தொடங்கிச்சு” என்கிறார் கலைச்செல்வி. 

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

ஜோதியைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் போனபோது வேறுவிதமான பிரச்னைகள்...

“மூளை வளர்ச்சிக் குறைபாடுகள் இருந்ததால, பார்வையற்றோர் பள்ளியில அவளைச் சேர்த்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. மியூசிக் காலேஜுக்குப் போனா, 13 வயசுலதான் சேர்க்க முடியும்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிக்கு அவளைக் கூட்டிட்டுப் போனேன். சரியா 13 வயசு ஆனதும், அடையாறு மியூசிக் காலேஜ்ல அவளைச் சேர்த்துட்டேன். மூணு வருஷம் கழிச்சு, மியூசிக் டீச்சருக்கான கோர்ஸ் படிச்சா. இப்போ எம் பொண்ணு மியூசிக் டீச்சர்!” என்கிறார் கலைச்செல்வி உணர்ச்சி பொங்க. பாட்டுப்  பாடத் தொடங்கியதும், கச்சேரிகளில் `மைக்’ பிடிக்க ஆரம்பித்துவிட்டார் ஜோதி. இடைவெளி இல்லாமல், 30 பாடல்களைக்கூட ஒரே நேரத்தில் பாடும் திறமை அவருக்கு உண்டு. திடீரென ஒரு ராகத்தை பின்னணியில் ஒலித்துக் காட்டினால், ‘அது என்ன ராகம்’ என்பதை நொடிக்குள் சொல்லிவிடுகிறார். திருக்குறளின் 133 அதிகாரங்களின் பெயர்களும் அவருக்கு அத்துப்படி. அனைத்து தலைப்புகளையும் சேர்த்துப் பாடுமளவுக்கு முன்னேறிவருகிறார். மியூசிக் காலேஜ், தியரி படிப்பு, பியானோ கிளாஸ், தினமும் வாக்கிங், அவ்வப்போது ஷாப்பிங், கச்சேரிகள், நிகழ்ச்சிகள், விருதுகள் என பிஸியாக  ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் அம்மாவும் மகளும். ஆனாலும் கலைச்செல்வியின் குரலில் விவரிக்க முடியாத ஒரு பயம் தென்படுகிறது.  

“பதினெட்டு வருஷமா, ஜோதிக்காக எல்லா இடத்துலயும் நான் நின்னுருக்கேன். எனக்கு சர்க்கரைநோய் இருக்கு. `அது மட்டும்தான் எனக்குப் பிரச்னை, வேற எதுவும் இல்லை’னு சந்தோஷப்பட்டுக்குற அளவுல என் வாழ்க்கை போகுது. ஒருவேளை, நாளை எனக்கு ஏதாவது ஆனா, என் குழந்தை என்ன பண்ணுவா... அவளை யாரு பொறுப்பாகப் பார்த்துக்குவாங்கிற தவிப்புதான் எனக்குள்ள எப்பவும் ஓடிட்டிருக்கு.

முன்னாடில்லாம் ‘நமக்காக யாருமே இல்லை’ங்கிற உணர்வு அதிகமாக இருக்கும். சமூக வலைத்தளத்துல ஜோதி பிரபலமான பிறகு, எங்க வாழ்க்கையில சில நல்ல மனுஷங்களைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. மனசுல நிறைய நம்பிக்கை வந்திருக்கு. அதே நேரம், எந்தச் சூழல்லயும் குழந்தையைத் தனியா விட்டுடக் கூடாதுங்கறதுல நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். ஆனாலும், எல்லா நேரமும் அவளை என்கூடவே வெச்சிட்டிருக்க முடியாதே... அவளை அவளே பார்த்துக்கற மாதிரியான ஒரு சூழலை நான் உருவாக்கிக் கொடுக்கணும். இப்போதைக்கு என்னோட எண்ணமெல்லாம் அது மட்டும்தான். ஜோதி மாதிரியான சிறப்புக் குழந்தைகளைப் பாதுகாக்க, அவங்க குடும்பங்கள் பெரிய பெரிய போராட்டங்களைச் சந்திக்கவேண்டியிருக்கு...” என்கிறார்  கவலையுடன். 

கலைச்செல்வியின் இந்தச் சொற்களை அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியவில்லை. ஆனால், இவை எதையும் அறியாதவராக,

“புதிய உலகை புதிய உலகை தேடிப் போகிறேன் என்னை விடு! விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு...”

என பியானோவை இசைத்தபடி பாடிக்கொண்டிருக்கிறார் ஜோதி. அந்தக் குரலில் நம்பிக்கையும் சேர்ந்தே ஒலிக்கிறது!

ஜெ.நிவேதா -  படங்கள்: வீ.நாகமணி

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”
“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

சரியான தூக்கமில்லாதவர்கள், பசியின்மையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பசியைத் தூண்டும் `லெப்டின்’ என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதே இதற்குக் காரணம். இதனால், உடல் எடையும் அதிகரிக்கும்.