Published:Updated:

`ஒரு குடிசை, பென்ச்.. இதுதான் மருத்துவமனை..!’-பழங்குடி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தம்பதி

`ஒரு குடிசை, பென்ச்.. இதுதான் மருத்துவமனை..!’-பழங்குடி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தம்பதி
`ஒரு குடிசை, பென்ச்.. இதுதான் மருத்துவமனை..!’-பழங்குடி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தம்பதி

நகரங்களில் இப்போதெல்லாம் மளிகைக் கடையைவிட மருந்துக் கடைகள் அதிகமாகத் தென்படுகின்றன. தெருவுக்குத் தெரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வானுயர ஓங்கி நிற்கின்றன. சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் மருத்துவம் படிப்பவர்கள் இன்று வெகு சிலரே.  

இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் பல இன்றுவரை வெளியுலகுடன் தொடர்பற்ற நிலையில் இருக்கிறது. அதாவது அந்த ஊர்களுக்குச் செல்ல சாலை வசதி இருக்காது. அடிப்படை வசதிகள் இருக்காது. கல்வி, மருத்துவம் போன்றவை அங்குள்ள மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். ஒரு சில பழங்குடியின கிராமங்களில் தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அரசும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. அப்படியான ஒரு கிராமம்தான் `சிட்டிலிங்கி’.

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சியை அடுத்து உள்ளது சிட்டிலிங்கி என்னும் பழங்குடியின கிராமம். இங்கு செயல்படும்  `டிரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ்’ எனும் மருத்துவமனை மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த மருத்துவமனைக்குப் பின்னால் இருக்கும் குட்டிக் கதையை இங்கு பகிர்கிறேன்..

ரெஜி ஜார்ஜ் – லலிதா ஜார்ஜ் எனும் மருத்துவத் தம்பதி 25 ஆண்டுகள் முன்பு சிட்டிலிங்கியில் மருத்துவ சேவை செய்ய வந்தனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவரும், மருத்துவத்தைச் சேவையாக செய்ய வேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள். இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ரெஜி ஜார்ஜ் அனெஸ்தீசியா ஸ்பெஷலிஸ்ட். அவரின் மனைவி லலிதா ஜார்ஜ் மகப்பேறு மருத்துவர். இருவரும் சிட்டிலிங்கி வந்தபோது முதலில் அந்த மக்கள் அவர்களை நம்பவில்லை. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அவர்களின் சேவை மனப்பான்மையை புரிந்துகொள்ளத் தொடங்கினர். இருவரும் மருத்துவம் பார்க்க வசதியாக மக்களே குடிசை அமைத்துக் கொடுத்தனர். ஒரு பென்ச், 100 வாட்ஸ் பல்ப் இதுதான் மருத்துவமனை.

ஜார்ஜ் தம்பதி சிட்டிலிங்கியில் மருத்துவமனை தொடங்கும்போது குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் அதிகம். சிட்டிலிங்கியில் பிறக்கும் 10 குழந்தைகளில் 2 குழந்தைகள் 5 வயதைத் தாண்டுவதற்கு முன்னரே இறந்துவிடுவார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி வாந்தி, பேதி, காய்ச்சல் வந்துவிடும். மருத்துவம் செய்வது மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான உணவுமுறை குறித்த விழிப்புணர்வையும் ஜார்ஜ் வழங்கினார். ஜார்ஜ் தம்பதி முதல் ஆறு வருடங்களில் மிகவும் கடினமாக உணர்ந்தார்கள். போதுமான பண வசதி இல்லை. நாம் செய்துகொண்டிருப்பது சரியா தவறா என்னும் குழப்பம் வேறு. ஆனாலும் அங்கேயே தங்கி தங்கள் சேவையைத் தொடர்ந்து செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், தனிநபர் மூலமாகவும் சின்னச் சின்ன உதவிகள் கிடைத்தன.

குழந்தைகளின் இறப்பு விகிதமும் குறையத் தொடங்கியது. கிராமத்தில் 8வது, 10வது படித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு செவிலியர் பயிற்சி கொடுக்க லலிதா முடிவு செய்தார். இப்படியாக 25 வருடங்கள் கடந்தது. சின்னக் குடிசையாக இருந்த மருத்துவமனை இன்று கட்டடமாக, 6 மருத்துவர்கள், 35 படுக்கைகள் கொண்ட 24 மணி நேர மருத்துவமனையாக வளர்ந்திருக்கிறது. அங்கு பணிபுரியும் மருத்துவர்களும் சேவை மனப்பான்மையில் பணிக்குச் சேர்ந்தவர்கள்தான். சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர். ஜார்ஜ் தம்பதி அலோபதி மருத்துவர்கள் என்றாலும் இவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருபவர்களுக்கு யோகா போன்ற மரபு மருத்துவ முறைகளையும் பரிந்துரைக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு லலிதா சிட்டிலிங்கி இளைஞர்கள் சிலரை அழைத்து இயற்கை விவசாயம் பற்றி பேசினார். தற்போது அவரின் ஊக்கத்தினால் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.  

மருத்துவம் மிகப்பெரிய வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தங்கள் சொந்த ஊர், உறவுகளை விட்டுவிட்டு பழங்குடி கிராமத்தில் மக்களோடு மக்களாக வசித்து, மருத்துவத்தைச் சேவையாக செய்துவரும் ரெஜி ஜார்ஜ்-ஐ தொடர்புகொண்டு பேசினோம்,

``எனக்கும், என் மனைவி லலிதாவுக்கும் கிராமத்தில் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம். தொண்டு நிறுவனம் வாயிலாக சிட்டிலிங்கியில்  நிறைய மருத்துவத் தேவைகள் இருப்பதைத் தெரிந்துகொண்டோம். இங்கேயே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தோம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. சின்னச் சின்ன பிரச்னைகளுடன் வருபவர்களுக்குச் சிகிச்சை அளித்து அனுப்பி வைப்போம். ஆனால், சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். எங்களிடம் போதுமான பண வசதி இருக்காது. இப்படித் தவித்த காலங்களும் உண்டு. தற்போது ஓரளவுக்குப் பண உதவிக் கிடைக்கிறது. இங்குள்ள மக்கள் எங்கள் உறவினர்களாக மாறிவிட்டார்கள். விபத்து, அவசர சிகிச்சைகளை எங்கள் மருத்துவமனையிலேயே செய்கிறோம். அதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கி வைத்துள்ளோம். பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்போது மிலாப் கூட்டு  நிதிய தளம் (milaap crowdfunding) வாயிலாக நிதி திரட்டுவோம். மக்களும் முன்வந்து உதவி செய்கிறார்கள்’’ என்று புன்னகைத்தார்.

ரெஜி ஜார்ஜ் - லலிதா ஜார்ஜ் தம்பதி பற்றி என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யலாம்.

 Image Courtesy : Milaap CrowdFunding

அடுத்த கட்டுரைக்கு