Published:Updated:

’என் பேரு கேண்டிடா ஆரீஸ்!’ - மருத்துவர்களுக்குச் சவால் விடும் 'சூப்பர்பக்’

’என் பேரு கேண்டிடா ஆரீஸ்!’ - மருத்துவர்களுக்குச் சவால் விடும் 'சூப்பர்பக்’
’என் பேரு கேண்டிடா ஆரீஸ்!’ - மருத்துவர்களுக்குச் சவால் விடும் 'சூப்பர்பக்’

அவற்றை சூப்பர்பக் (Superbug ) என்கின்றனர். அப்படிப்பட்ட நோய்த்தொற்றுதான் தற்போது உலகமெங்கிலும் மர்மமான முறையில் பரவி வருகிறது. இந்த மர்மமான நோய்க்குக் காரணம் பூஞ்சைகள்.

டல் சார்ந்த எந்தப் பிரச்னைக்கும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். நோய்க்கான மருந்தை உட்கொள்ளும்போது அதன்  வீரியம் குறைந்து, நாம் குணமடைவோம். ஆனால், எந்த மருந்துக்கும் அசராத நோய்த்தொற்றுகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  எவ்வளவு சக்தி வாய்ந்த மருந்துக்கும் தனது வீரியத்தைக் குறைத்துக்கொள்ளாத நோய்த் தொற்றுகள் இருந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்திருக்கிறீர்களா? அவற்றை சூப்பர்பக் (Superbug ) என்கின்றனர். அப்படிப்பட்ட நோய்த்தொற்றுதான் தற்போது உலகமெங்கிலும் மர்மமான முறையில் பரவி வருகிறது. இந்த மர்மமான நோய்க்குக் காரணம் பூஞ்சைகள். பூஞ்சைகள் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை, ஆனால் அவை காளானாக விருத்தியடையும்போதுதான் தெரியும். மற்ற நுண்ணுயிரிகளைப்போல இவற்றிலும் மனிதர்களுக்குப் பயனுள்ளவை, பயனற்றவை, தீங்கு விளைவிப்பவை எனப் பல வகைகள் உள்ளன. தற்போது அனைவரையும் பயமுறுத்தி வரும் `கேண்டிடா ஆரிஸ்’தான் நோய்த்தொற்றுக்குக் காரணம், இது பூஞ்சைகளில் ஓர் இனம். மருந்துகளை எதிர்க்கும் திறனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆரிஸ் என்பதற்கு லத்தீன் மொழியில் காது என்று பொருள். இவை காது மட்டுமல்லாமல் உடலின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கலாம். 

இந்நோய் எங்கிருந்து வந்தது என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. ஆனால், முதன்முதலில் 2009-ம் ஆண்டில் ஜப்பானில் டோக்கியோ நகரப்பகுதியில் 70 வயதான ஒரு பெண்ணின் காதைப் பாதித்தது. அவரது காதிலிருந்து மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் திரவக்கசிவு ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் அந்தத் தொற்று குணமாகவில்லை. அறுவைசிகிச்சையின் பின்னர் அது கேண்டிடா ஆரிஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 2011-ல் தென்கொரியாவிலும் 2013-ல் அமெரிக்காவிலும், மேலும் ஆசியா, ஐரோப்பாவிலும் இந்நோய்  பரவி காணப்படுகிறது.  

உலகெங்கிலும்  இங்கிலாந்து, ஸ்பெயின், இந்தியா, வெனிசுலா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்நோயின் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது எங்கிருந்து பரவுகிறது என்பதுதான் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து இந்த நோய் பரவுகிறது. இது நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களை எளிதில் பாதிக்கும். வயதானவர்களுக்கும், மிக இளம் வயதினருக்கும் இந்நோய் ஆபத்தானது.   

ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், சோர்வு, வலி ஏற்படும். மேலும் இதயம், ரத்தம் மற்றும் மூளையில் பரவும்போது ஆபத்தானதாக மாறுகிறது. இந்த நோயினால் ரத்தக்குழாய், மைய நரம்பு மண்டலம், உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம். சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் பாதிப்பு உண்டாகலாம். இவை சில ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் சமீபத்தில் இவற்றின் பல மருந்துகளை எதிர்க்கும் தன்மையினால் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ரத்தம் மற்றும் உடல் திரவம் பரிசோதனை செய்து இந்நோய் பாதிப்பு உள்ளதா என அறியலாம். இந்த நோய்க்கான சிகிச்சையும் சிக்கலாக உள்ளது. ஏனெனில் இவற்றை எளிதாக மற்றும் சரியாக அடையாளம் காண முடிவதில்லை. மற்ற கேண்டிடாஸ் இனங்களில் ஒன்றாக இருக்கலாம் எனத் தவறாகக் கணிக்கப்பட்டுவிடுகிறது. இவற்றைத் துல்லியமாக அடையாளம் காண சிறப்பு ஆய்வக முறைகள் தேவைப்படுகின்றன. 

(Centers for Disease Control and Prevention - CDC)  

நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மையங்கள் (சிடிசி) அறிவிப்பின்படி பொதுவாக கேண்டிடா ஆரிஸ் தோல் மற்றும் மியூகஸ் சவ்வுகளில் சாதாரணமாக இருக்கும், பாதிப்பு இல்லாத ஒரு பூஞ்சை. சிடிசி அமைப்பு முதன்முறையாக 2016-ல் ’வளர்ந்து வரும் அச்சுறுத்தல்’  எனக் கேண்டிடா ஆரிஸ் பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டது. அதில் இந்நோய் ஒரு 'தீவிர அச்சுறுத்தல்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இது இவ்வளவு ஆபத்தானதாக தெரிவதற்குக் மற்றொரு காரணமும் உண்டு. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மையுடையது.  

மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள சிகாகோ பகுதிகளில் உள்ள சில மருத்துவமனைகளில் சோதனை செய்தபோது அங்கே இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது என டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இப்பொழுது சிடிசி-யின்  முதல் நோக்கமே கேண்டிடா ஆரிஸ் மரபணுவைக் கண்காணிப்பதும், அது பரவுவதை நிறுத்துவதும்தான். இது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றுள்ளனர். 

லண்டனுக்கு அருகில் உள்ள ராயல் ப்ரோம்ப்டன் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் நுண்ணுயிரிகளைக் கொல்ல ஹைட்ரஜன் பெராக்ஸைடை அறை முழுவதும் ஸ்பிரே செய்தனர். எல்லா நுண்ணுயிரிகளும் இறந்ந்துதுவிட்டன. கேண்டிடா ஆரிஸை தவிர! 

சில நிபுணர்கள் அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஆன்டிஃபங்கல் பயன்படுத்துவதன் காரணமாகவே இவை உருவாகியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். கால்நடை மற்றும் பயிர்களில் இதுபோன்ற பூச்சிக்கொல்லிகள், ஆன்டிபயாட்டிக்குகளை அதிகமாக உபயோகிக்கும் போது, அந்த பாக்டீரியாவோ அல்லது பூஞ்சையோ அவற்றை எதிர்த்துவாழும் தன்மையை பெருக்கிக்கொள்ளும் எனக் கூறியுள்ளனர். தற்போது நம் முன் எந்த மருந்துக்கும் அசராத, எளிதில் கண்டுபிடிக்க இயலாத, மருத்துவமனையிலிருந்து பரவக்கூடிய, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடிய நோய் மட்டும் உள்ளது. 

நோயாளிகளைத் தொடுவதற்கு முன்னரும் தொட்ட பிறகும் கைகளை சோப்பு மற்றும் கை சுத்திகரிப்பானைக் கொண்டு கழுவவும், இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தால் பொது சுகாதாரத் துறைக்கு அறிவிக்கும்படியும் சி.டி.சி கேட்டுக்கொண்டுள்ளது.  

அடுத்த கட்டுரைக்கு