Published:Updated:

டெங்கு பீதியில் தமிழகம்! -கைகொடுக்கும் முன்னோர்களின் தடுப்பு மருந்து

டெங்கு பீதியில் தமிழகம்! -கைகொடுக்கும் முன்னோர்களின்  தடுப்பு மருந்து
News
டெங்கு பீதியில் தமிழகம்! -கைகொடுக்கும் முன்னோர்களின் தடுப்பு மருந்து

டெங்கு பீதியில் தமிழகம்! -கைகொடுக்கும் முன்னோர்களின் தடுப்பு மருந்து

ந்தியாவை சமீப காலத்தில் அதிகம் உலுக்கிய ஒரு நோய் டெங்கு. பொதுவான மற்ற காய்ச்சல்களைப் போல் அல்லாமல் உயிரிழப்பு வரை கொண்டுபோகக் கூடியது என்பதால் டெங்கு என்பது பீதி ஏற்படுத்தியிருக்கிற நோயாக மாறியிருக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் கணிசமான உயிர்களை காவு வாங்கியிருக்கிறது டெங்கு.

கடந்த 2012-ம் ஆண்டு உலகம் முழுவதும் டெங்குவால் 50 மில்லியன் முதல் 100 மில்லியன்கள் வரை மக்கள் பாதிக்கப்பட்டதும் பலரது உயிர்கள் அதனால் பலியானபோதும்தான் டெங்குவின் கோரமுகம் உலகிற்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த உலக சுகாதார நிறுவனம், டெங்குவின் பாதிப்புகள் இல்லாத உலகத்தை வரும் 2025-ம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும் என்று திட்டங்களை வகுத்து  அதற்கான செயல்முறைகளில் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் டெல்லி மாநிலம்தான் டெங்குவை முதன்முதலாக வரவேற்றது. ஜீன் மாதம் 6 பேரில் துவங்கிய டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை ஜலை  மாதம் 28 என்றானது. டெல்லியின் சுகாதார சீர்கேட்டின்படி இம்முறை டெங்குவின் பாதிப்பு கடந்த முறையை விட கூடுதலாக இருக்கும் என எச்சரித்துள்ளது மருத்துவ உலகம்.

மர்மக்காய்ச்சல்

தமிழகத்தின் டெங்கு பீதியை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காவேரிராஜபுரம் என்ற கிராமம் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் விவரிக்கமுடியாத பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு கடந்த மாத இறுதியில் படையெடுத்தனர். இவர்களில் 4 குழந்தைகள் பலியானார்கள். இன்னும் சிலர் ஆபத்தனா அறிகுறிகளுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மர்ம காய்ச்சல்  என்று அரசு இதை பதிவு செய்தாலும் டெங்கு காய்ச்சல் என்பதுதான் அப்பகுதிகள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்பகுதியை ஆய்வு செய்து மர்ம காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர் என்கிறது அரசுக் குறிப்பு.

தமிழகத்தில் டெங்குவின் அறிகுறிகளோடு எழும்புர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கும் மர்ம காய்ச்சல்தான் என்கிறது மருத்துவமனை பதிவேடுகள். அரசியல் காரணங்களுக்காக டெங்குவுக்கு, அரசும் அதன் அதிகாரிகளும் எந்த பெயரை சூட்டினாலும் அறிகுறிகளும் பாதிப்புகளுக்கு அவர்களால் மாற்று சொல்லமுடியாது.

டெங்கு ஆதியும் அந்தமும்...

டெங்கு என்பது வைரஸ் காய்ச்சல். 'ஏடிஸ் எஜிப்டி’ எனும் வகைக் கொசுக்கள் இதை பரப்புகின்றன.  இந்தக் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும் இயல்புடையவை. தேங்கி இருக்கும் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் இயல்பைக் கொண்ட இந்த கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியாக தடுப்பு ஊசியோ, தடுப்பு மருந்தோ கிடையாது.

டெங்கு காய்ச்சல் தாக்கியதும் ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதன் எண்ணிக்கையை தக்கவைத்து உரிய  சிகிச்சையில் இயல்புநிலைக்கு கொண்டுவந்து நோயாளியை காக்கமுடியும். விழிப்புணர்வின்மையால் காய்ச்சலைக் கவனிக்காமல் விட்டால், நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை எனப் பல இடங்களில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்திவிடும். மற்ற காய்ச்சல்களைப்போல் இது இருமல், தும்மல் மூலம் நேரடியாகப் பரவாது என்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் தரக்கூடிய விஷயம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டெங்கு என அறியவந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைமுறைகளை மேற்கொள்ளவேண்டும். சுய மருத்துவத்தை தவிர்க்கவேண்டும். ஆரம்பநிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் இரு வாரங்களில் டெங்கு பாதிப்பிலிருந்து மீண்டுவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அறிகுறிகள் என்னென்ன...

சில குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் டெங்குவை அடையாளம் காண முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மலேரியா, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் தைராய்டு காய்ச்சல் போன்ற நோய்களின் அறிகுறிகளை ஒத்தவை இவை.

டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருவிதமாக காலகட்டங்களில் பாதிப்பு வெளிப்படும். முதற்கட்டத்தில் வழக்கமான காய்ச்சல், தலைவலி, திடீர் காய்ச்சல் (சமயங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை செல்லும்) ரத்தப் போக்கு, மூக்கு அல்லது பல் ஈறுகளில் ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல், தசை மற்றும் மூட்டு வலி, வாந்தி, கண்களின் பின்புறம் கடும் வலியுடன் கூடிய  எரிச்சல், கடுமையான வயிற்று வலி, தோலில் சிவப்புப் புள்ளிகள், தோலில் எரிச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை.

இரண்டாவது காலகட்டம் மிக சிக்கலானதாகும். இந்த காலகட்டத்தில்,  உயர் ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னை, வயிற்றில் ரத்தக் கசிவு, வயிற்றில் நீர்கோத்தல் பெரும் அசதி ஆகியவை நோயாளியிடம் தென்படும்.

டெங்குவிடமிருந்து தப்பிக்க

இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் காரணமின்றி காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலாக இருந்தாலும் டெங்குவை உறுதிப்படுத்த குறைந்தது 3 முதல் ஒருவாரம் வரை நாம் காத்திருக்கவேண்டும்.

தடுக்க முடியுமா...

டெங்குவுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்காமல் இன்னமும் உலக சுகாதார நிறுவனம் கையை பிசைந்தகொண்டிருக்கிறது. ஆனால் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டனர். ஆம் சுத்தமே சுகாதாரம் என்பதுதான் இந்த மருந்து.  டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நம்மை சுற்றி உருவாகாதபடி சுகாதாரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதன்மூலம் அதன் பாதிப்பை தவிர்த்துக்கொள்ளலாம்.

வீட்டைச் சுற்றி தேங்கிக் கிடக்கும் பொருட்களில், ஏடிஸ் எஜிப்டி கொசு முட்டையிட்டு வளர்கிறது. அதாவது உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய்ச் சிரட்டை, பூந்தொட்டி, ஆட்டுக்கல், உபயோகமற்ற பாட்டில்கள், பழைய டயர் என இப்படி வீட்டைச் சுற்றி நீண்ட காலமாக கண்டுகொள்ளப்படாமல் கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம், இந்தவகை கொசு உற்பத்தியைத் தடுக்கலாம்.

வீட்டினருகே, தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்வது, வீட்டு உபயோகத்துக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில், கொசு புகாமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் உபயோகத்திற்காக பயன்படுத்தும் குடங்கள், பக்கெட் உள்ளிட்ட வற்றை அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்துவது போன்றவை டெங்குவை விரட்ட வழிகளாகும். செப்டிக் டேங்க் வென்டிலேஷன் குழாயில் நைலான் வலை கட்டி, கொசு உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி’ கொசுக்கள், பொதுவாக பகல் நேரத்தில் கடிக்கக்கூடியது. விடியற்காலை நேரம் மற்றும் சூரியன் மறையும் மாலை நேரங்களில் அதிக தீவிரம் காட்டும். எனவே இந்த நேரங்களில் பாதுகாப்பாக இருப்பதன் மூலம், டெங்குக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

டெங்குவிற்கு நேரடியாக மருந்துகள் கிடையாது என்பதால் அதன் பாதிப்புகளை சரிசெய்வதற்கான சித்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தீர்க்கலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

1. பப்பாளி இலைச் சாற்றை 5 முதல் 10 மி.லி வெறும் வயிற்றில் அருந்தினால், டெங்கு காய்ச்சல் குறைந்து, ரத்த வட்டுக்கள் மற்றும் உடலின் இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும்.

2. டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம்.

3. நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சம் வேர், சந்தனம் கட்டை, பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றைச் சமஅளவில் இடித்துப் பொடியாக்கிக் கஷாயமாக அருந்தலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் பொடியை, அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து, கால் லிட்டராகச் சுண்டவைத்து அருந்த வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

பொதுவாக ஒருவரது உடலின் நோய் பாதிப்பு என்பது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே உள்நுழைகிறது. எந்தக் கொசு கடித்தாலும் நோய் வராமல் இருக்க, வைரஸோ கிருமிகளோ நம்மைத் தாக்காமல் இருக்க, எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது அவசியம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

டெங்கு என்கிற எதிர்கட்சியினருக்கோ, 'இல்லையில்லை அது 'மர்மக்காய்ச்சல்தான்' என்கிற அரசை ஆள்பவர்களிடமோ டெங்கு எட்டிப்பார்க்கப்போவதில்லை. அதனால் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் மீது கவனம் செலுத்தாமல் இன்றிலிருந்தே டெங்குவுக்கு விடைகொடுக்க சுத்தத்தை பேண ஆரம்பித்துவிடுவோம் மக்களே!

- எஸ்.கிருபாகரன்