Published:Updated:

நாடு முழுக்க 40 ஆயிரம் பேர் டெங்கு, சிக்குன் குனியாவால் பாதிப்பு!

நாடு முழுக்க 40 ஆயிரம் பேர் டெங்கு, சிக்குன் குனியாவால் பாதிப்பு!
நாடு முழுக்க 40 ஆயிரம் பேர் டெங்கு, சிக்குன் குனியாவால் பாதிப்பு!

புதுடெல்லி: நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேர் டெங்கு, சிக்குன்குனியா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜே.பி.நட்டா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் திடீரென நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேர் இந்நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்திலேயே அதிக அளவிலான மக்களை இந்நோய்க் கிருமிகள் தாக்கியிருக்கின்றன.

அதனால், இந்நோய்கள் பரவுவதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதால் எந்தப் பயனும் கிடையாது.

இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகளைக் கண்டறியும் பரிசோதனை முறைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு முறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இந்தப் பரிசோதனைகளுக்கு குறைந்த அளவிலான கட்டணங்களே வசூலிக்கப்படுகின்றன. இந்த நோய்கள் குறித்து பொதுமக்களிடம் அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், டெங்குவால் நாடு முழுவதும் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 27 ஆயிரத்து 879 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ‌மேற்குவங்கம், ஒடிஷா, கேரளா மாநிலங்களில் தலா 5 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை" என்றார்.