Published:Updated:

N95 மாஸ்க் - இதில் 95 எதைக் குறிக்கிறது தெரியுமா? 400 வருட மாஸ்க் வரலாறு!

Evolution of mask

வாசனை தடுப்பானாக உருவாக்கப்பட்ட முகக் கவசங்கள் பல மாற்றங்களைச் சந்தித்து, விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்த 21-ம் நூற்றாண்டில் மனிதர்களைக் காத்து நிற்கும் மகத்தான மருத்துவக் கண்டுபிடிப்பாக உள்ளது!

N95 மாஸ்க் - இதில் 95 எதைக் குறிக்கிறது தெரியுமா? 400 வருட மாஸ்க் வரலாறு!

வாசனை தடுப்பானாக உருவாக்கப்பட்ட முகக் கவசங்கள் பல மாற்றங்களைச் சந்தித்து, விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்த 21-ம் நூற்றாண்டில் மனிதர்களைக் காத்து நிற்கும் மகத்தான மருத்துவக் கண்டுபிடிப்பாக உள்ளது!

Published:Updated:
Evolution of mask

சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவாகி, இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கிறது கொரோனா வைரஸ். உலக நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் கொரோனா வைரஸிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது மாஸ்க் எனச் சொல்லப்படும் முகக் கவசத்தை அணிந்தே வெளியில் செல்கின்றனர்.

corona face mask
corona face mask

கொரோனா பாதிப்பிற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்தே செயல்படுகின்றனர். எனவே, கொரோனா வைரஸின் மூலம் பரவும் தொற்றுநோயான கோவிட்19-ன் அடையாளமாக இந்த முகக் கவசங்கள்தான் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கொரானா தொற்று பரவாமல் இருக்க N95 ரக முகக் கவசங்களைப் பயன்படுத்தலாம்.
Centers for Disease Control and Prevention (CDC)

கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள, N95 முகக் கவசங்களைப் பயன்படுத்தச் சொன்ன அமெரிக்காவின் CDC சில நாள்களுக்கு முன், அதைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. காரணம், N95 முகக் கவசங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்த வகை முகக் கவசங்களை மருத்துவப் பணியாளர்களுக்கு விட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது சிடிசி. ``நீங்கள் இப்போது N95 ரக முகக் கவசங்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் தயவுசெய்து அருகிலுள்ள மருத்துவமனையில் அதை ஒப்படைத்துவிடுங்கள்" என்று அமெரிக்கர்களிடம் சிடிசி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வீட்டிலிருக்கும் துணியை வைத்தே முகக் கவசம் செய்வது எப்படி என்பதையும் ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளது.

மெலிதான பாலிமர் கொண்டு செய்யப்பட்ட இந்த N95 ரக முகக் கவசங்கள் கொடிய வைரஸான கொரோனாவை எதிர்த்து நிற்க உதவுமா... என்ற கேள்வி பலரிடமும் இருக்கலாம். கொரோனா தொற்று கண்கள் வழியாகவும் பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால் முகக் கசவங்கள் அணிவது மூலம் முழுமையாக கொரோனாவிடமிருந்து தப்ப முடியாதுதான்.

ஆனால், இந்த வகை முகக் கவசங்கள்தான், விஞ்ஞான வளர்ச்சியடைந்த 21-ம் நூற்றாண்டில் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள ஓரளவாவது கைகொடுக்கும் நவீன மருத்துவக் கண்டுபிடிப்பு என்கிறார்கள் மருத்துவர்கள்.
N95 Mask
N95 Mask
Amazon

உலகம் முழுவதும் இந்த மெல்லிய முகக் கவசத்திற்குத்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வகை முகக்கவசத்தைத்தான் உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு விட்டுக்கொடுக்கச் சொல்கிறது சிடிசி. எனவே, கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் முக்கியக் கருவிகளில் முதன்மையானது இந்த முகக்கவசங்கள்தான் என்பதை மறுத்துவிட முடியாது!

கொரோனா தொற்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் இந்நேரத்தில் அதன் அடையாளமாக இருக்கும் முகக்கவசத்தின் சுவாரஸ்யமான வரலாறு பற்றித் தெரிந்துகொள்ளத்தானே வேண்டும். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாசனை தடுப்பு முகக் கவசங்கள்!

காற்றில் பரவிக் கிடக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் மூலம் நோய்த் தொற்றுகள் பரவும் என்று கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே முகக் கவசங்களை மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்கிறார் லின்டெரிஸ் (Lynteris). இவர் ஸ்காட்லாந்தில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், முகக் கவசங்களின் வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

University of St. Andrews
University of St. Andrews
st-andrews.ac.uk

1720-களில் புபோனிக் பிளேக் நோய் உலக நாடுகள் பலவற்றிலும் பரவி இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிளேக் நோயை மையமாக வைத்து வரையப்பட்ட ஓவியங்களில் மக்கள் துணிமூலம் தங்களின் மூக்கையும் வாயையும் மூடியிருந்தனர். ஆனால், புபோனிக் பிளேக் நோயானது எலிக் கடியின் மூலம் மட்டுமே பரவக் கூடியது. பிறகு மக்கள் ஏன் மூக்கையும் வாயையும் மூடியிருந்தார்கள் என்பதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறார் லின்டெரிஸ்.

அப்போது வாழ்ந்த மக்கள், புபோனிக் பிளேக் நோய் மற்றவர்களிடமிருந்து பரவும் என்று நம்பியெல்லாம் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவில்லை. ஆனால், அந்த நோய் நிலத்திலிருந்து வெளியேறும் நச்சு கலந்த வாயுக்களால் பரவுவதாக நம்பினர். அந்த நச்சு கலந்த வாயுக்கள் காற்றில் பரவி நம்மைத் தாக்கிவிடும் என்று நினைத்திருந்தனர். அதன் காரணமாகத்தான் முகத்தைத் துணியால் மூடியபடி இருந்தனர்.
லின்டெரிஸ்

மக்கள் இந்த முறையைப் பின்பற்றுவதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. 1600-களில் ஐரோப்பாவில் பிளேக் நோய் உருவாகத் தொடங்கியிருந்தது. அப்போது அங்கு பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பறவைகளின் மூக்கைப்போல நீளமான ஒரு முகக் கவசத்தை அணிந்தகொண்டுதான் நோயாளிகளைப் பார்வையிட்டனர். பிளேக் நோய் மூலம் ஏற்படும் துர்நாற்றத்திலிருந்து தப்பிக்கவே அந்த முகக் கவசங்களை மருத்துவர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், மக்களோ, பிளேக் நோய் அந்த துர்நாற்றத்தால்தான் பரவுகிறது. எனவே, அந்த முகக் கவசம் அணிந்துகொண்டால் பிளேக் நோயிலிருந்து தப்பிக்கலாம் என்ற நினைத்துக்கொண்டனர்.

பறவைகளின் மூக்கைப்போல நீளமான முகக் கவசம்
பறவைகளின் மூக்கைப்போல நீளமான முகக் கவசம்
Wiki Commons

19-ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை துர்நாற்றம்தான் புபோனிக் பிளேக் நோய் பரவக் காரணம் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

1870-களில்தான் பாக்டீரியா என்றொரு விஷயம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். நிலத்திலிருந்து வரும் நச்சுக் காற்று மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றின் மூலம்தான் நோய்கள் பரவுகின்றன என்ற கூற்றை, இந்த பாக்டீரியா கண்டுபிடிப்பு உடைத்தெறிந்தது. ஆனால், நச்சு வாயு இருப்பதாக நினைத்து நடைபெற்ற ஆராய்ச்சிகளின் மூலம்தான் 19-ம் நூற்றாண்டில், தொழில்நுட்பங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சை முகக்கவசம்!

1897-ம் ஆண்டு அறுவைசிகிச்சை முகக்கவசங்களை மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். அந்த முகக் கவசங்கள் கைக்குட்டைகளை ஒத்து இருந்தன. அறுவைசிகிச்சை முகக் கவசங்களானது காற்றிலிருக்கும் துகள்கள், கிருமிகள் ஆகியவை மூக்கில் ஏறிவிடக் கூடாது என்பதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. அறுவைசிகிச்சை நடைபெறும்போது மருத்துவர்களின் தும்மல் மற்றும் இருமல் மூலம் வெளியேறும் நீர்த்துளிகள், காயங்களில் பட்டுவிடாமல் இருப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. அன்றிலிருந்து இன்று வரை அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் பல வடிவ மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், அதற்கான பயன்பாடு மட்டும் மாறவேயில்லை.

Surgical Mask
Surgical Mask
Amazon

அறுவைசிகிச்சை முகக் கவசங்களுக்கும் சுவாசக் கருவிகளாகப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களுக்குமான வித்தியாசத்தை முதலில் நாம் தெரிந்துகொள்ளலாம். அறுவைசிகிச்சை முகக் கவசங்கள் சற்று தொய்வாக இருக்கும். அதன் காரணமாகக் காற்றிலிருக்கும் கிருமிகள் நம் மூக்கு வழியாகவோ வாய் வழியாகவோ உள்ளே செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், சுவாசக் கருவிகளாகப் பயன்படுத்தப்படும் N95 போன்ற முகக் கவசங்கள் முகத்தை இறுக்கமாக மூடிக்கொள்ளவல்லவை. அவை, காற்று வழியே பரவும் கிருமிகளை 95 சதவிகிதம் வரை தடுத்துவிடும். இந்த வகை முகக் கவசங்கள், நாம் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப் படுத்தி நமக்குத் தருகிறது.

N95 முகக் கவசங்கள் கிடைக்காத பட்சத்தில் அறுவைசிகிச்சை முகக் கசங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் காரணம், அது ஓரளவாவது கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்பதற்காகத்தான். மேலும், உங்களுக்கு வைரஸ் தொற்று இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும் உதவும்.

முதல் மார்டன் முகக் கவசம்

1910-ம் ஆண்டு, இப்போது வட சீனாவாக இருக்கும் மஞ்சூர்யா பகுதியில் ஒரு வகை பிளேக் நோய் பரவ ஆரம்பித்தது. வட சீனாவில் பரவிய அந்த பிளேக் நோய் பற்றி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைச் சொல்லியிருந்தார் லின்டெரியஸ்.

இந்த பிளேக் நோய் 100 சதவிகிதம் மரணத்தை ஏற்படுத்தியது. இந்த வகை பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே உயிர் பிழைக்கவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதல் அறிகுறி தோன்றியதிலிருந்து 48 மணி நேரத்திற்குள்ளாக உயிரிழந்தனர். நவீனக் காலத்தில் இதுபோன்ற ஒரு கொடிய நோயை யாரும் கண்டதில்லை.
லின்டெரியஸ்

இந்த நோய் ரஷ்யாவிலும் பரவத் தொடங்கியதன் விளைவாகச் சீனா, ரஷ்யா நாடுகளுக்கிடையேயான அரசியல் ரீதியான உறவுகள் உடைந்தன. இரு நாடுகளும் இந்த பிளேக் எதன்மூலம் பரவுகிறது, அதைத் தடுப்பது எப்படி என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யத் தொடங்கின. இரண்டு நாடுகளில் எது சிறந்த விஞ்ஞான வளர்ச்சி கொண்ட நாடு என்பதற்கான போட்டியாகவே இந்த ஆராய்ச்சிகள் பார்க்கப்பட்டன

China Russia Border Map
China Russia Border Map
Map Credit : Jeff Blossom

சீனாவின் இம்பீரியல் நீதிமன்றம், மருத்துவர் வூ லியன் டே (Wu Lien teh) தலைமையில் மருத்துவக் குழு ஒன்றை அமைத்தது. இந்தச் சமயத்தில் பிளேக் நோய் உலக நாடுகள் பலவற்றிலும் பரவத் தொடங்கியது. உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள மருத்துவர்கள் இந்த வகை பிளேக் நோய் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களும் உண்ணிகளால்தான் இந்த வகை பிளேக் பரவுகிறது என்று கூறி வந்தனர். ஆனால், வூ லியன் டே பிளேக் பாதிக்கப்பட்ட ஒருவரை ஆய்வு செய்து, இது நிமோனிக் வகை பிளேக் நோய் என்பதையும் இது பரவுவதற்கான உண்மைக் காரணத்தையும் கண்டறிந்தார்.

̀நிமோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல் மற்றும் தும்மலின் மூலம் வெளியேறும் கிருமிகள், காற்றின் மூலம் பரவி மற்றவர்களையும் தாக்குகிறது' என்பதுதான் வூ கண்டறிந்த காரணம்.

மேலும், நிமோனிக் பிளேக் மக்களிடத்தில் பரவாமல் இருக்கப் புதிதாக முகக் கவசம் ஒன்றையும் தயாரித்தார் வூ. துணி மற்றும் பருத்தி ஆகியவற்றைக் கொண்டு வூ அந்த முகக் கவசத்தைத் தயாரித்திருந்தார். பல அடுக்குகளாகத் துணிகளை அந்த முகக் கவசத்தில் வைத்திருந்தார் வூ. இந்தப் பல அடுக்கு துணிகளின் மூலம் மக்கள் சுவாசிக்கும் காற்று வடிகட்டப்பட்டுவிடும் என்பதால் நோய் பரவுவதைத் தடுக்கலாம் என்று கூறினார் வூ. வூ-வின் இந்தக் கண்டுபிடிப்பு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், மருத்துவர்கள் சிலர் இந்த முகக் கவசத்தின் செயல்திறனைச் சந்தேகித்தனர்.

Lien teh wu
Lien teh wu
wellcomecollection.org

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த Girard Mesny என்ற மருத்துவரிடம் தனது பிளேக் கண்டுபிடிப்புகளைப் பற்றி விளக்கினார் வூ. `நிமோனிக் பிளேக் நோயானது காற்றின் மூலம் பரவக்கூடியது' என்று வூ சொன்னதைக் கேட்ட பிரெஞ்சு மருத்துவர், வூவை அவமானப்படுத்தினார். வூ-வை இனவெறி கொண்ட வார்த்தைகளால் தாக்கினார் அந்த பிரெஞ்சு மருத்துவர். ``சீனாவில் பிறந்த ஒருவனிடம் இருந்து இதைத்தானே எதிர்பார்க்க முடியும். நான், இது காற்றின் மூலம் பரவவில்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றும் கூறினார் அந்த பிரெஞ்சு மருத்துவர்.

தான் சொன்ன கூற்றை நிரூபிப்பதற்காக, பிளேக் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு முகக் கவசமின்றி சென்றார் அந்த பிரெஞ்சு மருத்துவர். அன்றிலிருந்து 2-வது நாளில், பிளேக் நோய் தாக்கத்தால் உயிரிழந்தார் அவர்.

இந்தச் சம்பவத்தை அறிந்ததும், மற்ற பகுதியைச் சேர்ந்த மருத்துவர்கள் அனைவரும் மாஸ்க் தயாரிக்கத் தொடங்கினர். அவர்கள் தயாரித்த முகக் கவசங்கள் பலவும் விசித்திரமாக இருந்தது. இறுதியில் வூ தயாரித்த முகக் கவசம்தான் சோதனைகளில் வெற்றி பெற்றது. பாக்டீரியாக்களிடமிருந்து காத்துக்கொள்ள வூ உருவாக்கிய முகக் கவசம், மிகக் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும் பொருள்கள் மூலம் செய்யப்பட்டது.

1911 mask
1911 mask
Univ. of Hongkong

1911-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான முகக் கவசங்களை உற்பத்தி செய்தது சீனா. மருத்துவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலரும் இந்த முகக் கவசங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். சாதாரணமாக வீதியில் நடக்கும் மக்களும் இந்த முகக் கவசத்தை அணிந்துகொள்ளத் தொடங்கினர்.

மாஸ்க்!
அன்றைய காலகட்டத்தில் முகக் கவசங்கள், பிளேக் நோய்த் தடுப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட கருவியாக மட்டும் பார்க்கப்படவில்லை. நவீன மருத்துவ அறிவியலின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது.

வூ கண்டுபிடித்த முகக் கவசங்கள், மிகக் குறைந்த நாள்களில் சர்வதேச கவனம் பெற். பல்வேறு நாடுகளில் வெளிவரும் செய்தித்தாள்களின் முகப்புகளையும் முகக் கவசங்களே அலங்கரித்தன. செய்தித்தாள்களில், கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களில் வெள்ளை நிற முகக் கவசங்கள் மட்டும் பளிச்சென்று தெரிந்தன. வூவின் அற்புதக் கண்டுபிடிப்பான முகக் கவசங்கள், சர்வதேசச் சந்தையில் மிகப் பெரிய அளவில் விற்பனையானது.

1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (spanish flu) என்ற நோய் உலக நாடுகளில் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் முகக் கவசங்கள் தயாரிப்பை அதிகப்படுத்தினர். வூவின் இந்தத் தயாரிப்பு உலக நாடுகளிடம் மீண்டும் ஒரு முறை மிகப் பெரிய பாராட்டைப் பெற்றது.

N95 முகக் கவசங்கள் உருவான கதை!

வூ கண்டுபிடித்த முகக் கவசத்தின் வழித் தோன்றல்தான் இந்த N95 முகக் கவசங்கள்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது, தூசி அதிகமிருக்கும் காற்றைச் சுவாசிக்க நேரிட்டதால், காற்றை வடிகட்டி சுவாசிக்க முகக் கவசங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கினர். வூ உருவாக்கிய முகக் கவசங்கள் மூக்கையும் வாயையும் மட்டுமே மூடிக் கொள்ளும் அளவிற்கு இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் வடிவமைப்பு, தலை முழுவதும் மூடிக் கொள்ளும் படியாக இருந்தது. இதே போன்று ஃபைபர்கிளாஸ் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களைச் சுரங்கத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் மூலம் சுரங்கத் தொழிலாளர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் மருத்துவ பிரச்னைகள் பாதியாகக் குறைந்தன.

2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசம்
2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசம்
erenow.net

இந்த முகக் கவசமானது பல உயிர்களைக் காத்து வந்தாலும், மிகப் பெரிய சுமையாகக் கருதப்பட்டது. அதில் சுற்றப்பட்டிருக்கும் ஃபைபர்களை தாண்டி சுவாசிப்பதென்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. மேலும், தலை முழுவதும் இந்த முகக் கவசத்தால் மூடிக்கொண்டு வேலை செய்வதால் அது சூட்டை ஏற்படுத்தியது.

1950-களில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பரிசுப் பொருள்களைத் தயாரிக்கும் 3M நிறுவனம் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. பரிசுப் பொருள்களின் மேல் ஒட்டப்படுவதற்காக பாலிமரை உருக்கி துணியோடு சேர்த்து ரிப்பன்கள் செய்யும் தொழில்நுட்பத்தைக் கொண்டு 100 பொருள்களுக்கு மேல் செய்யலாம் என்பதை அந்த ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தது அந்நிறுவனம்.

3M
3M
3m.com

இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு, 1961-ல் குமிழி வடிவிலான முகக் கவசத்தை அறிமுகப்படுத்தியது 3M நிறுவனம். இந்த வகை முகக் கவசங்கள் நோய்க்கிருமிகளைத் தடுக்காது என்பதை உணர்ந்த 3M நிறுவனம், தூசிகளைத் தடுக்கும் முகக் கவசங்கள் என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.

1970-ம் ஆண்டு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களை தயாரித்தது 3M நிறுவனம். தூசியிலிருந்து காத்துக்கொள்ள உதவும் அந்த முகக் கவசத்திற்கு N95 முகக் கவசம் என்று பெயரிட்டது அந்நிறுவனம். மே 25, 1972-ம் ஆண்டு அந்த முகக் கவசங்களுக்கு சிடிசியிடம் அனுமதி பெற்று சந்தையில் அறிமுகப்படுத்தியது 3M நிறுவனம்.

N95 முகக் கவசம்
N95 முகக் கவசம்

இம்முறை அந்த முகக் கவசத்தில் ஃபைபரைப் பயன்படுத்தாமல் பரிசுப் பொருள்களுக்கு மேல் ஒட்டப்படும் ரிப்பன் மெட்டீரியலை பயன்படுத்தியிருந்தது 3M நிறுவனம். முகக் கவசங்கள் செய்ய உதவும் பொருள்களில் மின்னியல் ஆற்றலையும் புகுத்தியிருந்தது அந்நிறுவனம். இதன்மூலம் சுவாசிப்பது எளிதானதோடு சிறிய தூசி துகள்கள்கூட உள் நுழைய முடியாதபடி செய்தது. இந்த முகக் கவசத்தில் உள்ள அடுக்குகளிடையே அதிகப் படியான தூசி துகள்கள் மாட்டிக்கொண்டால் சுவாசிப்பது கடினமாகிவிடும். எனவே 8 மணிநேரத்திற்கு மேலாக இந்த முகக் கவசங்களைப் பயன்படுத்த முடியாது.

1972-ல் N95 முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இது தொழிற்சாலைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1990-களில் காசநோய் ஏற்படுவது அதிகரித்தது. காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் காற்றின் மூலமாகக் காசநோய் பரவியது. இந்தத் தொற்றைத் தடுப்பதற்காக N95 முகக் கவசங்களில் சில மருத்துவ மாற்றங்களைச் செய்தது 3M நிறுவனம். இதன் மூலம் தூசி துகள்கள் மட்டுமல்ல கிருமிகளையும் வடிகட்டும் வல்லமை பெற்றது N95 முகக் கவசம். அதன் பின், மருத்துவர்கள் காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இந்த N95 முகக் கவசங்களை அணிந்து கொண்டனர்.

N95 பெயர்க் காரணம்
95 என்பது காற்றிலிருக்கும் 95 சதவிகித தூசிகளையும் கிருமிகளையும் இது வடிகட்டிவிடும் என்பதைக் குறிக்கிறது. 'N' என்பது Not resistant to oil என்பதைக் குறிக்கிறது. அதாவது, இது எண்ணெய்யைத் தாக்குப் பிடிக்கும் வகையில் செய்யப்படவில்லை என்பதை 'N' என்ற எழுத்து குறிக்கிறது.
N95 Face MAsk
N95 Face MAsk
AP
5 மாதங்களுக்கும் முன்பு வரை இந்த N95 முகக் கவசங்கள் சிறிய அளவில்தான் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், கொரோனா தொற்றின் காரணமாகத் தற்போது இந்த வகை முகக் கவசங்களை அதிகம் காணமுடிகிறது.

N95 முகக் கவசங்கள் சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள், தற்போது வரை எழுந்துகொண்டுதான் உள்ளன. இது குழந்தைகளுக்கும், அதிக தாடி வைத்துள்ளவர்களுக்கும் சரியாகப் பொருந்துவதில்லை. இறுக்கமாக அணிந்துள்ளதால், இது சூட்டை ஏற்படுத்துவதோடு முகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி தடம் பதியச் செய்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளைப் பலரும் முன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி, 3M நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், ``N95 முகக் கவசங்கள் அணிவதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அதிலிருக்கும் குறைகளைப் போக்கி, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, மக்களுக்கு எளிதானதாகக் கொடுக்க வேண்டுமென்பதற்காக எங்கள் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பணிபுரிந்து வருகிறார்கள். பல மேம்பாடுகளை முகக் கவசங்களில் அறிமுகம் செய்துகொண்டேதான் இருக்கிறோம். இன்னும் செய்வோம்." என்கின்றனர்.

N95 முகக் கவசங்களின் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஸ்பானிஷ் ஃப்ளூவில் தொடங்கி சார்ஸ், கொரோனா வரை மனிதர்களைக் காப்பாற்றுவதில் முதன்மை ஆயுதமாக இவைதான் இருந்தன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism