Published:Updated:

வேலை எலெக்ட்ரிஷியன்... சேகரித்திருப்பது 600 மூலிகைச் செடிகள்! புதுக்கோட்டை பவானந்தம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மூலிகைச் செடிகளின் காதலன் பவானந்தம்!
மூலிகைச் செடிகளின் காதலன் பவானந்தம்!

அபூர்வமாகக் கிடைக்கும் கறுப்பு இஞ்சி, கல்தாமரை போன்ற மூலிகைகளை, தனது மூலிகைப் பண்ணையில் வளர்த்து வருகிறார் 60 வயதாகும் செ.சி.பவானந்தம்.

மூலிகைகள் என்றாலே ஏழு மலை, ஏழு கடல் தாண்டி பறித்து வர வேண்டும். தடைகள் பல தாண்டி அமேசான் போன்ற காடுகளில் எடுத்து வர வேண்டும் என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நமக்கு அருகிலேயே எண்ணற்ற மூலிகைகள் கிடைக்கின்றன. சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் வயல்வெளிகளிலும் ஆற்றங்கரைகளிலும் குளத்துமேட்டிலும் மிகச் சாதாரணமாக வளரும் மூலிகைகளின்மூலம் நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். மிகச் சாதாரணமாக வளரும் கீழாநெல்லி, நெருஞ்சில் முதல் அபூர்வமாகக் கிடைக்கும் கறுப்பு இஞ்சி, கல்தாமரை போன்ற மூலிகைகளை, தனது மூலிகைப் பண்ணையில் வளர்த்து வருகிறார் 60 வயதாகும் செ.சி.பவானந்தம்.

மூலிகைச் செடிகளின் காதலன் பவானந்தம்!
மூலிகைச் செடிகளின் காதலன் பவானந்தம்!

செ.சி.பவானந்தம், தனது பண்ணையில் வளரும் சில மூலிகைகளை இலவசமாகக் கொடுப்பதுடன் அவற்றின் மருத்துவக் குணம் பற்றி எடுத்துச் சொல்லி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் உள்ள செ.சி.ப மூலிகைப் பண்ணைக்குச் சென்றோம்.

முகப்பில் செழித்து வளர்ந்திருக்கும் தழுதாழை, மல்பெரி மரங்கள் நம்மை வரவேற்றன. உள்ளே நாகமல்லி, ஆவாரை, சித்தரத்தை, நத்தைச்சூரி, கடுக்காய், கஸ்தூரி மஞ்சள், தவசு முருங்கை, நிலவேம்பு, நாயுருவி, நெருஞ்சி, கீழாநெல்லி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளும் அத்தி, அரசு, பதிமுகம், செண்பகம், அசோக மரம் என நூற்றுக்கணக்கான மரங்களும் இருந்தன.

மூலிகைகளின் நறுமணம் நாசி வழியாக உள்ளே செல்லச் செல்ல புதிய உத்வேகம் கிடைத்தது. அதை மிக எளிதாக உணர முடிந்தது. மூலிகைச் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பவானந்தத்திடம் பேசினோம்.

`மூலிகைப் பண்ணை தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?' என்தற்கு, ``என்னோட அம்மாவுக்கு நாட்டு வைத்தியம் தெரியும். அதனால மூட்டுவலி, கை, கால் வலிக்காக மருந்து கேட்டு அம்மாவைத் தேடி நிறைய பேர் வீட்டுக்கு வருவாங்க. அப்போ எனக்கு இதுல பெரிய ஆர்வம் கிடையாது. ஐ.டி.ஐ முடிச்சிட்டு எலக்ட்ரீஷியனா வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒருநாள் திடீரென்று அம்மா இறந்துவிட்டார். அவங்க அஸ்தியைக் கரைப்பதற்காக, (தஞ்சாவூர் மாவட்டம்) மல்லிப்பட்டினம் கடற்கரைக்குப் போயிருந்தோம்.

பவானந்தம்
பவானந்தம்

அஸ்தியைக் கடலில் கரைத்துவிட்டு கரைக்குத் திரும்பும்போது பாம்பு என்னைக் கடிச்சிருச்சு. பக்கத்துல உள்ள மெடிக்கல்ல போய் கேட்டபோது, `இங்க தடுப்பூசி போட மாட்டோம், ஹாஸ்பிட்டல் போங்க'னு சொல்லிட்டாங்க. அப்பத்தான் நிலவேம்பு சாப்பிட்டா நாலு மணி நேரம் வரை விஷம் பரவாதுன்னு அம்மா சொன்னது எனக்கு ஞாபகம் வந்துச்சு. உடனே அந்த இடத்துல நிலவேம்பைத் தேடி அலைஞ்சோம். ஆனா அது கிடைக்கலை. அதுக்கப்புறம் பேராவூரணி போய் வைத்தியம் பார்த்துட்டு வந்தோம். பிறகு, நாட்டு மருந்து சாப்பிட்டதால அது குணமாயிடுச்சு. அப்போதான் எங்கயுமே கிடைக்காத மூலிகைகளை, நாம வளர்த்துத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கணும்னு முடிவு பண்ணி மூலிகைச் செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போ ஆரம்பித்த மூலிகைகள் மீதான என் தேடல், இப்போ வரை தொடருது. அம்மா இறந்து 25 வருஷமாச்சு. எனக்கு பாம்பு கடிச்சப்ப நிலவேம்பைத் தேடும்போது கிடைக்கல. ஆனா, இன்னைக்கு விஷக்கடிக்கு மருந்தாகிற நாகமல்லி, நாகநந்தி, சர்ப்பகந்தி, விஷதாரணி, சிறியாநங்கைன்னு ஏராளமான மூலிகைச் செடிகளை நான் வளர்க்கிறேன். இந்த மூலிகைகளை இலவசமாகவும் கொடுத்துக்கிட்டு வருகிறேன். மூலிகைச் செடிகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக நம்ம நாடு முழுக்க பல ஊர்களுக்குப் போனேன். அப்போது நிறைய சித்த மருத்துவர்களோட அறிமுகம் கிடைச்சது. கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரி, சித்த மருத்துவத்துறையில மூலிகைச் செடிகள் வளர்ப்பு தொடர்பாக ஒரு வருடம் படித்தேன். மதுரை சித்த மருத்துவ குருகுலத்துல படித்து `சித்த மருத்துவ பண்டிட்' சர்டிஃபிகேட் வாங்கினேன். அனுபவப் பாடம்தான் எனக்கு பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தது. என்னோட விவசாய நிலத்துலதான் மூலிகைச் செடி வளர்க்கிறேன்.

குடும்பத்தினருடன் பவானந்தம்!
குடும்பத்தினருடன் பவானந்தம்!

இதைப்பார்த்து என்னோட உறவுக்காரங்க என்னை ஏளனம் செஞ்சாங்க. ஆனா, அதை நான் கண்டுக்கல. எலக்ட்ரீஷியன் வேலைக்குப் போய் அதுல வர்ற வருமானத்துல ஒரு பகுதியைக் குடும்பத்துக்கும் இன்னொரு பகுதியை மூலிகைச் செடிகள் வளர்க்கிறதுக்கும் ஒதுக்குறேன்'' என்றார் பவானந்தம்.

`சில அபூர்வ மூலிகைகள்கூட வளர்க்கிறதா கேள்விப்பட்டோமே!" என்றோம்.

``சிறுநீரகக் கோளாறைச் சரி பண்ணக்கூடிய மூலிகை `பூனை மீசை.' இந்த மூலிகையைப் பற்றி, பல சித்த மருத்துவர்கள்கிட்ட கேட்டேன். ஆனா, அவங்கள்லாம் சித்த மருத்துவக் குறிப்புகள் எதையும் சொல்லல. ஆனா, பூனை மீசைச் செடி பெங்களூர்ல இருக்கிறதா கேள்விப்பட்டு அங்கபோய் தங்கி அந்த மூலிகையை வாங்கிட்டு வந்தேன்.

மூலிகைகள் வாங்கிட்டு வர்றதுக்காகப் பணம் செலவு பண்ணி வெளியூர் போய் கிடைக்காம திரும்பினதும் உண்டு. ஆனா, இப்போ நிறைய அபூர்வ மூலிகைகள்லாம் என்கிட்ட இருக்கு. புற்றுநோயைக் கட்டுப்படுத்துற கல்தாமரை மூலிகை வெச்சிருக்கேன். வயாகரா மாத்திரை தயார் பண்ற கறுப்பு இஞ்சியைக் கேரளாவுல உள்ள இடுக்கிக்குப் போய் வாங்கி வந்தேன். நாராயண சஞ்சீவி மூலிகை, மனநோய்க்கு நல்ல மருந்து. இந்த மூலிகைக்காகப் பல வருஷமாகப் போராடிக்கிட்டு இருக்கேன்.விரைவில் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு" என்று கூறும் பவானந்தம் ஒரு மூலிகையை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அமேசான் காடாக இருந்தாலும் அங்கேபோய் எடுத்து வந்துவிடுவார்.

மூலிகைச் செடிகள்
மூலிகைச் செடிகள்

மூலிகைச் செடிகள் பற்றி யார், எங்கே பேசக் கூப்பிட்டாலும், உடனே அங்கே கிளம்பி போய்விடுவார் பவானந்தம். நள்ளிரவு 12 மணி செல்போனில் அழைத்த ஒருவர், தன் தங்கைக்கு காலில் நெருப்பு பட்டு கால் வெந்து புண்ணாகிவிட்டதாகவும் வலி தாங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் சொல்ல, சோற்றுக்கற்றாழையை உடைக்கும்போது அதில் வடியும் மஞ்சள் நிற திரவத்தை புண்ணில் தடவச் சொல்லியிருக்கிறார். அத்துடன் கற்றாழையைப் பிளந்து அதிலுள்ள ஜெல்லைக்கொண்டு ஒத்தடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னபடி 10 நிமிடத்தில் அந்தப் பெண் எரிச்சல் குறைந்து இயல்புக்கு வந்திருக்கிறார். மேலும், அவருக்கு இவரே சிகிச்சை அளித்திருக்கிறார்.

மூலிகைகளின் காதலனாக இருக்கும் பவானந்தம் இறுதியாகச் சில கோரிக்கைகளைச் சமூகத்திடம் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

``வீட்டில் உள்ள பெரியவங்க சிலருக்கு சித்த மருத்துவ முதலுதவி தெரிஞ்சிருக்கும். ஆனா, அதை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பது இல்லை. மூலிகைச் செடிகள், மரங்கள், காடுகள், மலைகள்ல மட்டுமே கிடைக்கும்னு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, உண்மையில பல மூலிகைச் செடிகளும் மரங்களும் நமக்குப் பக்கத்திலயே இருக்கு. ஆனா நாமதான் அதைக் கண்டுக்கிறது இல்லை. நம்ம மூலிகைகளை எடுத்துட்டு போய் இன்னைக்கு சித்தமருத்துவத்துல நம்பர் பல வெளிநாடுகள் பயன்படுத்திட்டு இருக்காங்க.

மூலிகைச் செடிகளின் காதலன் பவானந்தம்!
மூலிகைச் செடிகளின் காதலன் பவானந்தம்!
ஆர். வெங்கடேஷ்

சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களோட புத்தகத்தில் உள்ள மூலிகைகளை என்னோட மூலிகைப்பண்ணையில இருக்கிறதால இங்க வந்து பார்க்கிறாங்க, அதுபற்றி சந்தேகங்கள் கேட்கிறாங்க. அவங்களுக்குச் சொல்லித்தருவது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. பறவைகளுக்காகவே மல்பெரி மரம் வச்சிருக்கேன். பறவைகள் பழத்தைச் சாப்பிட்டு இங்கே கூடுகட்டி வாழுது. மூலிகைச் செடிகள்ல பெருசா வருமானம் கிடையாது. ஆனா, ஏதோ இந்தச் சமூகத்துக்கு நல்லது செஞ்ச ஆத்ம திருப்தி எனக்கு இருக்கு. முன்னாடி 1,008 மூலிகைச் செடிகளை அடையாளப்படுத்தி வளர்த்து வந்தேன். கஜா புயலுக்கு அப்புறமா இப்போ 600 செடிகள்தான் இருக்கு. சீக்கிரமே பழைய நிலைக்குக் கொண்டுவந்திடுவேன்" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் பவானந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு