Published:Updated:

``நேரில் பார்த்த பிறகு வேலை கிடையாதுனு சொல்லிடுவாங்க!" - புற்றுநோயிலிருந்து மீண்ட தீபாவின் கதை

தீபா ரமணி
தீபா ரமணி

``கல்வித் தகுதி நல்லா இருக்குனு நேர்காணலுக்குக் கூப்பிடுவாங்க. ஆனா, என் தோற்றத்தைப் பார்த்துட்டு, `உங்களால ஆக்டிவா வேலை செய்ய முடியாதுனு தோணுது'ன்னு அவங்களா முடிவெடுத்து வேலை இல்லைனு சொல்லிடுவாங்க..."

குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடியாத வகையில், ஏழு வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார், தீபா ரமணி. அதுவும், மிகச் சவாலான மூளைப் புற்றுநோய். சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டவர், நன்றாகப் படித்து சுய அடையாளத்துடன் வேலைக்குச் செல்லும் அளவுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டார்.

தீபா ரமணி
தீபா ரமணி

பெற்றோரைக் கவனித்துக்கொள்ள, திருமணத்தையும் தவிர்த்திருக்கிறார். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தது, சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொண்டது உட்பட பல விஷயங்கள் குறித்து உற்சாகமாகப் பேசுகிறார், தீபா.

``பூர்வீகம் சென்னைதான். பிறகு, சேலத்தில் சில ஆண்டுகள் வசிச்சேன். அப்போது தாங்க முடியாத அளவுக்கு எனக்கு அடிக்கடி தலைவலியுடன், சாப்பிட்டதுமே வாந்தியும் வந்திடும். உடல் எடையும் கணிசமாகக் குறைந்ததுடன், காலில் செருப்பு நிற்காம கழன்றுவிடும். சிகிச்சைக்காகச் சென்னை வந்தோம். தொடக்கத்துல பிரெயின் டியூமரா இருக்கலாம்னு சொன்ன மருத்துவர்கள், பிறகுதான் கடைசி கட்டத்தில் மூணாவது ஸ்டேஜ் மூளைப் புற்றுநோய் எனக்கு இருப்பதை உறுதிசெய்தாங்க.

தீபா ரமணி
தீபா ரமணி

அந்த ஏழு வயசுல, ரெண்டாவதுதான் படிச்சுகிட்டிருந்தேன். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில, அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்ல மேல் சிகிச்சை பெற்றேன். அங்கதான் ரேடியேஷன் சிகிச்சை எடுத்தேன். அப்போ உடல் ரீதியாக நான் வலிகளை எதிர்கொண்டதுபோல, மகளுக்கு இப்படி ஆகிடுச்சேனு மன ரீதியாகப் பெற்றோர் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. என்னைக் குணப்படுத்த அவங்க ரொம்பவே போராடினாங்க" என்கிற தீபா, ஒரு வருட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கிறார்.

``புற்றுநோயிலிருந்து குணமாகிட்டாலும், உடலளவில் பல்வேறு சிரமங்கள் தொடர்ந்துச்சு. முடி உதிர்வு, இயல்பாக நடக்க முடியாதது உட்பட உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுச்சு. அதனால சமூகத்துலயும் பல்வேறு புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன். அதையெல்லாம் மீறி, பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு, பி.ஏ மற்றும் ஸ்பெஷல் எஜுகேஷன் டிப்ளோமா படிச்சேன். உரிய கல்வித் தகுதி இருந்தும் எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கலை. கல்வித் தகுதி நல்லா இருக்குனு நேர்காணலுக்குக் கூப்பிடுவாங்க. ஆனா, என் தோற்றத்தைப் பார்த்துட்டு, `உங்களால ஆக்டிவா வேலை செய்ய முடியாதுனு தோணுது'ன்னு அவங்களா முடிவெடுத்து வேலை இல்லைனு சொல்லிடுவாங்க.

தீபா ரமணி
தீபா ரமணி

இதுபோன்ற தொடர் நிகழ்வுகளால் ரொம்பவே கவலையுடன் இருந்த நிலையிலதான், அடையாறு புற்றுநோய் மையத்தில் வேலைக்காக இன்டர்வியூல கலந்துகிட்டேன். அந்த மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா அம்மாதான் என்னை நேர்காணல் நடந்தினாங்க. `இவ்வளவு சவால்களை மீறி, நல்ல கல்வித் தகுதியுடன் திறமையுடன் இருக்கீங்க'ன்னு என்னைப் பாராட்டியவர், எனக்கு வேலை கொடுத்தாங்க. ரொம்பவே சந்தோஷப்பட்டேன். தொடர்ந்து எட்டு வருஷமா அந்த மையத்துல உதவியாளர் பொறுப்பில் டேட்டா என்ட்ரி வேலை செய்றேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

புற்றுநோயாளிகள் மீதான சமூகத்தின் பார்வை மாற வேண்டியது குறித்துப் பேசுபவர், ``என் பெற்றோருக்கு எந்த உடல்நிலை பாதிப்பும் இல்லை. ஆனாலும், எனக்குப் புற்றுநோய் வந்துச்சு. புற்றுநோய் யாருக்கு எப்போ வரும்னு சொல்ல முடியாது. அதுவும் உடல் உறுப்புகளில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரக்கூடும். அதற்காக, `நமக்குப் புற்றுநோய் வந்திடுமோ?, வந்த பிறகு குணமாவது கடினமோ?'ன்னு யாரும் கவலைப்படவோ வருத்தப்படவோ தேவையில்லை. நம்ம உடலில் இயல்புக்கு மாறான அறிகுறிகள் தெரிஞ்சா உடனே மருத்துவரை அணுகி, ஏதாவது பிரச்னை இருப்பின் ஆரம்பகட்டத்துலயே குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழலாம். மேலும், வருஷத்துக்கு ஒருமுறையாவது எல்லோரும் முழு உடல் பரிசோதனை செய்துக்கணும். துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்துக்கு உட்படாத வேலை சூழல்னு எல்லோரும் வாழ்ந்தால், எந்த நோயும் வராமல் வரும்முன் நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.

தீபா ரமணி
தீபா ரமணி

`புற்றுநோய் என்பது தொற்றுநோய் இல்லை. முழுமையாகக் குணப்படுத்தக்கூடியது'ன்னுதான் நாங்க தொடர்ந்து விழிப்புணர்வு செய்கிறோம். ஆனாலும், புற்றுநோயாளிகளை எதிர்கொள்வதில் மனிதர்கள் பலரும் வேறுபாடு காட்டுறாங்க. எங்களோடு இயல்பாகப் பழகாட்டியும் பரவாயில்லை. ஆனா, எங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்க வேண்டாம். எங்க திறமைக்கு முன்னுரிமை கொடுங்க. எங்களைப் புறக்கணிக்க வேண்டாம்" என்கிறார் ஆதங்கத்துடன்.

``தினமும் காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணிவரைதான் வேலை நேரம். நான் வேலை செய்ற புற்றுநோய் மையத்துல சக ஊழியர்கள் எல்லோரும் எனக்கு ஊக்கம் கொடுக்கிறாங்க. ரொம்ப மனநிறைவுடன் வேலை செய்றேன். புற்றுநோயிலிருந்து மீண்டபோதே, இனி என் காலம் முழுக்க சுய அடையாளத்துடன் வாழணும்னு முடிவெடுத்தேன். இப்போவரை அப்படித்தான் செயல்படறேன்.

தீபா ரமணி
தீபா ரமணி

இப்போ மருத்து மாத்திரைகள் எதுவும் பயன்படுத்துறதில்லை. புற்றுநோய் தாக்கத்தால் உண்டான பக்க விளைவுகளால், என்னால வேகமா நடக்க முடியாது. நீண்ட தூரம் பயணிக்கிறதா இருந்தா உடன் யாராவது ஒருத்தர் என் உதவிக்குத் தேவைப்படுவாங்க. நான் வெளிநிகழ்ச்சிகளில் கலந்துக்கும்போது என் அம்மாதான் துணையா வருவாங்க.

நிறைய புற்றுநோயாளிகளை நான் பார்த்திருக்கேன்; பழகியிருக்கேன். அதில் பலரும் கால் இல்லாமல், கை இல்லாமல், என்னைவிட குள்ளமாக, முழுமையாக முடியே இல்லாமல் இருப்பதுனு பல்வேறு சவால்களுடன் வாழறாங்க. அவங்களோடு ஒப்பிடுகையில் நான் எவ்வளவோ பரவாயில்லை. எனவே, புற்றுநோய் பாதிப்புகளால் எனக்கு வருத்தமே கிடையாது.

தீபா ரமணி
தீபா ரமணி
ஜோக்கரை விடுங்கள்... அவருக்கு இருந்த `சிரிப்பு' நோய் இருப்பவரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

பெற்றோர் ரொம்பவே சிரமப்பட்டு என்னை வளர்த்து ஆளாக்கினாங்க. இனி அவங்க வாழும் காலம்வரை நான் அவங்களை நல்லா பார்த்துக்க ஆசைப்படறேன். எனவே, எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். வீட்டுக்கு வந்ததும் என் அக்கா பையனுடன் விளையாடுவேன். அம்மாவுக்குச் சமையலுக்கு உதவி செய்வதுடன், எங்க மாடித்தோட்டப் பராமரிப்பிலும் கவனம் செலுத்துவேன். மகிழ்ச்சியாகவே வாழறேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார், தீபா.

அடுத்த கட்டுரைக்கு