Published:Updated:

`அந்த ஊழியர்களை எவ்வளவு பெரிய ஆபத்தில் தள்ளி இருக்கிறோம்?'- ஒரு குடிமகன் எழுப்பும் கேள்வி #MyVikatan

Representational Image
Representational Image

வேறு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இந்த வெயிலில் வியர்த்து மாஸ்க் நனைய ஆரம்பித்துவிட்டது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மதியம் 12 மணிக்குக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தால், ஒரு பெண்ணும் எங்கள் அலுவலகக் காவலரும் நின்றுகொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று கேட்டேன், கொரோனா சர்வே என்று சொன்னார்கள். பெயர், தொலைபேசி எண் மற்றும் காய்ச்சல் இருக்கிறதா என்று கேட்டு, குறிப்பெடுத்துச் சென்றார்கள். அவர்களைப் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. அவர்கள் இருவரும் துணி மாஸ்க் மட்டும் அணிந்திருந்தனர்.

Representational Image
Representational Image

வேறு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இந்த வெயிலில் வியர்த்து மாஸ்க் நனைய ஆரம்பித்துவிட்டது. அந்த ஊழியர்களை எவ்வளவு பெரிய ஆபத்தில் தள்ளி இருக்கிறோம். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் குறுகிய படிகளில் ஏறி இந்தப் புள்ளி விவரத்தைச் சேகரிக்க வேண்டும். இந்தப் பணியினால் கிடைக்கும் பலனைவிட ஆபத்து அதிகம். இதுபோல பல அவசியமற்ற வேலைகள் நடக்கின்றன. வங்கிகள் மற்றும் கருவூல அலுவலகங்கள் திறந்துள்ளன.

இது அத்தியாவசியத் தேவை என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் பணத்தை சுகாதாரமான முறையில் கையாள்வதில்லை என்பது நமக்கெல்லாம் தெரியும். நான் அமெரிக்காவில் இருந்த சமயம், எங்கள் ஆய்வகத்திற்கு வரும் இந்தியர்களை பொருள்கள் வாங்க அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்தியாவிலிருந்து வந்த பெண் ஒருவர், வால்மார்ட்டில் எடுத்த பொருள்களுக்கு 30 டாலர் தர வேண்டும், அவர் பர்ஸிலிருந்து 20 டாலர் நோட்டை எடுத்து வாயில் கடித்துக்கொண்டு, 10 டாலரை தேடிக்கொண்டிருந்தார். அருகில் நின்ற எனக்குச் சங்கடமாகிவிட்டது. கடையில் இருந்த பெண் எங்களை விநோதமாகப் பார்த்தார். வேறு வழியில்லாமல் என் நண்பர் கொடுத்த 30 டாலரை வாங்கிக் கொண்டார். இனிமேல், பணத்தை வாயில் கடிக்காதீர்கள் என்று என் நண்பரிடம் சொன்னேன்.

Representational Image
Representational Image

அவர் ஆச்சர்யத்துடன், அமெரிக்காவில் இது தவறா என்று கேட்டார். உலகம் முழுவதும் தவறு என்று விளக்க வேண்டியிருந்தது. இந்தப் பெண் ஐஐடியில் படித்தவர். அவரே பணத்தை எவ்வளவு அசுத்தமாகப் பயன்படுத்துகிறார் எனக் கவனியுங்கள். பாமர மக்களை பற்றிச் சொல்லவே வேண்டாம். இப்படிக் கையாளப்படும் பணத்தை வங்கி மற்றும் கருவூல ஊழியர்கள் எந்தப் பாதுகாப்பும் இன்றிக் கையாள வேண்டும். சாதாரண நாள்களில் பணத்தைக் கையாண்டுவிட்டு கை கழுவினால், அந்த நீர் கருப்பு நிறமாக இருக்கும். இதை நான் சிறுவனாக இருந்த காலத்தில் கவனித்திருக்கிறேன்.

சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசி, நிலைமையை விசாரித்தால், "எந்த மாற்றமும் இல்லை" என்று சொல்கிறார். இவர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பை வழங்கியிருக்கிறோம். தனியார் துறையைவிட சிறந்த சேவையை வழங்குவது அரசுத்துறை வங்கிகள். அதற்கு காரணமான வங்கி ஊழியர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு தருவது அவசியம். அதேபோல காய்கறி மற்றும் பலசரக்குக் கடைகளின் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு மிக குறைவு. பலர் மாஸ்க் அணியாமல் கடையில் நிற்கிறார்கள். சமையல் எரிவாயு விநியோகம் செய்பவர்களும் துணி மாஸ்க் மட்டும் அணிந்துகொண்டு வீடு வீடாகச் செல்கின்றனர். இது போன்றவர்களுக்குப் போதுமான பாதுகாப்பை ஏற்பாடு செய்வது அவசியமா இல்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

Representational Image
Representational Image

இவர்கள் எல்லோரையும் விட கவலைக்குரியவர்கள் தூய்மைப் பணியாளர்கள். தினமும் வருகிறார்கள். இவர்கள் தினமும் வர வேண்டிய அவசியமென்ன? எல்லாக் காலங்களிலும் இவர்களுக்கு மாஸ்க், கையுறை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யப்படவில்லை. இந்த ஆபத்தான சூழலில், இவர்களுக்கு மாஸ்க் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் அரிதாகவே பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு அது தொடர்பான புரிதலை உருவாக்காமல், அவர்கள் உயிரோடு விளையாடுவது சரியா?

பொறுப்பற்று நடந்துகொள்ளும் மக்களிடம், போராடும் காவல் துறையினரின் துயரம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்படிப் பல பணிகள் ஆபத்தான நிலையில் நடந்து வருவது பெருந்துயரம். இதுபோன்ற தொற்று நோய் பரவும்போது பல வித்தியாசமான அணுகுமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அதைத் துரிதமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும். ஆபத்தான நிலையில் கடமையாற்றும் அலுவலர்களைப் பாராட்டுகிறேன், வணங்குகிறேன் என்பதால் எந்தப் பயனும் இல்லை.

-முனைவர். கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு