Election bannerElection banner
Published:Updated:

`ஓடும் விமானத்தில் அவசர சிகிச்சை!' - மருத்துவரின் திக்...திக் அனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

மருத்துவராக விமானத்தில் அவசர சிகிச்சை மேற்கொண்டதைப் பற்றிய பகிர்வு இது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எனது 40வது வயதில் பட்டமேற்படிப்பு படிக்க வேண்டும், அதுவும் குழந்தைகள் மருத்துவத்துறையில் புகழ்பெற்ற ராயல் காலேஜ் ஆஃப் பீடியாட்டிரிக்ஸ் அண்டு சைல்டுஹெல்த் படிப்பை முடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

தமிழகத்தில் தனியார் மருத்துவத் துறையில் குழந்தை மருத்துவராகப் பட்டமேற்படிப்பு முடித்துவிட்டு பணிபுரிந்து வந்தேன். ஓய்வு நேரத்தில் தயார் செய்ய ஆரம்பித்தேன். இதில் பார்ட் 1 பார்ட் 2 மற்றும் பார்ட் 3 என இருக்கும். பார்ட் 2 தேர்வு எழுத்து வடிவில் இங்கிலாந்தில் நடைபெறும். அதற்கென இங்கேயே கிடைக்கும் புத்தகங்கள் மூலம் தயாராகி, அங்கு போய் எழுத வேண்டும். ஒவ்வொரு பார்ட்டாக முடித்தபின் பார்ட் 3 என்கிற கிளினிக்ஸ் வரும்.

நான் சொல்லும் இந்தச் சம்பவம் பார்ட் 2 எழுத இங்கிலாந்து சென்றுகொண்டிருந்தபோது நடந்தது. சென்னையிலிருந்து லூப்தான்ஸா விமானத்தில் பிராங்க்பர்ட் அங்கிருந்து லண்டன் எனத் திட்டம். லண்டனில் தேர்வுக்கு இரண்டு நாள் முன்பே செல்வது, பின்னர் தேர்வு முடிந்து ஒருநாள் கழித்துத் திரும்பி வருவது. இதுதான் நான் கடைப்பிடித்த நடைமுறை.

Representational Image
Representational Image

வழக்கமான விமான நிலையப் பரிசோதனைகள் முடிந்த பின் ஏறி சீட் பெல்ட் போட்டு காலை உணவை உண்டபின் லேசான அயர்ச்சியினால் உறக்கம். திடீரென்று ஒலிபெருக்கியில் ஒரு குரல். `மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா... அவசரம்' என ஒலித்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாராவது கையைத் தூக்குகிறார்களா என. எட்டிப்பார்த்தால் இரண்டு சீட் தள்ளி என்னுடைய எகானமி வகுப்பில் ஒருவர் மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்தார். அவர் அருகே கவலையுடன் அவர் மனைவி. வேறு யாரும் முன்வராததால் குழந்தை மருத்துவராக இருந்தாலும் ஆபத்துக்கு பாவமில்லை என எழுந்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

விமானப் பணிப்பெண், `இவருக்குத் திடீரென்று மூச்சுத்திணறல் இருக்கிறது என்ன செய்ய முடியும்... என்ன செய்யலாம்' என்றார். நான் நோயாளியிடம், `உங்கள் பெயர் என்ன... உங்களுக்கு என்ன பிரச்னை?' என்று கேட்டேன்.

மூச்சுத் திணறிக்கொண்டிருப்பதால் சைகை செய்தார். அவருடைய மனைவி அவருக்குப் பதிலாகப் பேசினார். ``நாங்கள் ஆரோவில் நகரில் வசித்து வருகிறோம். இத்தாலி இவருடைய சொந்த ஊர். கோடை விடுமுறைக்காக இத்தாலிக்குச் செல்வதற்காக வந்தோம்.

Representational Image
Representational Image

இவருக்கு இதற்கு முன் பானிக் அட்டாக் வந்திருக்கிறது. அடைக்கப்பட்ட இடத்தில் அல்லது புதிய அனுபவம் ஏதும் ஏற்பட்டால் பயப்பட்டால் இதுவந்து விடும். அதனால் முன்னமேயே மருத்துவரிடம் சொல்லி அதற்கு ஏற்ற மருந்துகளை வாங்கி வைத்துள்ளோம். விமானத்தில் ஏறிய உடன் முதல் டோசையும் சிறிது நேரத்துக்கு முன்பு இரண்டாவது டோசையும் போட்டு விட்டேன். இருந்தபோதிலும் இப்போது மூச்சுவிட சிரமப்படுகிறார்'' என்றார்.

என்னுடைய பெரியவர்களுக்கான நோய் பற்றிய மருத்துவ அறிவு 20 வருடம் பிந்தியது. ஆபத்திற்கு பாவம் இல்லை எனச் சமாதானப்படுத்திக்கொண்டேன். உதவிக்கு அப்போதெல்லாம் அவசர நோய்களுக்கான செயலிகள் திறன்பேசிகள் இல்லை.

விமானப் பணிப்பெண்ணிடம், `பரிசோதித்துப் பார்க்க என் கையில் அவசர உபகரணங்கள் எதுவும் இல்லை. ஸ்டெதாஸ்கோப்கூட இல்லை' எனச் சொன்னேன். உடனே விமானத்தின் பின்பகுதியில் உள்ள அவசர சிகிச்சை மருந்துகள் வைத்திருந்த பகுதிக்கு கூட்டிச் சென்றார்.

ஜெர்மனியில் எழுதப்பட்ட மருந்துகள், சிரிஞ்சுகள் இருந்தன. என்ன இருக்கிறது என்று ஒரு தடவை நோட்டமிட்டேன். பின் பாதிக்கப்பட்ட நபர் அருகில் வந்து அவரிடம் பேச ஆரம்பித்தேன். முதலில் அவரை ஆசுவாசப்படுத்தி, `பயப்பட வேண்டாம், பிரச்னை எதுவும் இருக்காது. உங்கள் மருந்து கொஞ்ச நேரத்தில் வேலை செய்யும். கவலைப்பட வேண்டாம்' என்று சொல்லிவிட்டு நகர நினைத்தேன்.

பணிப்பெண் அவருக்கு அருகில் இருந்த சீட்டை காலி செய்து எனக்குக் கொடுத்துவிட்டு, `டாக்டர் முயற்சி செய்யுங்கள் முடியவில்லை என்றால் திருப்பி சென்னைக்கே சென்று விடுவோம்' என்று சொல்லிவிட்டார்.

Representational Image
Representational Image

ஒரு விஷயம் எனக்கு நம்பிக்கை ஊட்டியது பானிக் அட்டாக் உயிர் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமில்லை. இது மாரடைப்பு கிடையாது என்பதுதான் அது. சிறிது கண்ணயர்ந்தேன். என் தோளை மீண்டும் பணிப்பெண் தட்டி, `நிலைமை மறுபடியும் மோசமாக இருக்கிறது' என்றார். எழுந்து சென்று மருந்து குப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தாத நோயின் தீவிரத்தைக் குறைக்க கூடிய மருந்தை எடுத்தேன். இந்த மருந்து ஆசன வாயினுள் வைக்கும்போது, ரத்தக்குழாயில் நேரடியாகக் கொடுப்பதுபோல உடனடியாக வேலை செய்யும். எனவே, பணிப்பெண் உதவியுடன் அவரை ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்று அவர் மனைவி மூலம் ஆசனவாயில் மருந்து வைத்தோம். சிறிதுநேரம் தூங்கினார்.

நானும் அப்பாடா! பிரச்னை இல்லை என நிம்மதி அடைந்தேன். அடுத்த 2 மணி நேரத்துக்குப் பின் மறுபடியும் பானிக் அட்டாக். ரத்த நாளம் மூலம் அடுத்த மருந்து தர மறுபடியும் கட்டுப்பட. அவர் அருகிலேயே எனக்கு டியூட்டி. ரத்த அழுத்தத்தைப் பார்த்தேன். நாடித்துடிப்பு சீராக இருந்தது.

Representational Image
Representational Image

அவர் மனைவி மனதார நன்றி தெரிவித்தார். இந்தியரான அவர், `நம் மக்கள்தான் இவ்வாறு உதவுவார்கள்' எனப் பாராட்டினார். விமானம் பிராங்பர்ட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

விமானப் பணிப்பெண் என்னுடைய முகவரியை எழுதி வாங்கிக் கொண்டார். தேர்வு முடிந்த பின் ஊருக்கு வந்து சேர்ந்தபோது விமானத் தபால் மூலம் 50 யூரோவுக்கு வவுச்சர் வந்தது. அடுத்தமுறை தேர்வு எழுதப் போகும்போது அதை உபயோகப்படுத்தி லூப்தான்சாவில் சில பொருள்களை வாங்கினேன். அதற்கப்புறம்தான் தெரிந்தது, வெளிநாடுகளில் வசிக்கும் நிறைய மருத்துவ நண்பர்கள் இந்த மாதிரி சூழலில் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள மாட்டார்களாம். ஏனெனில், ஏதாவது பிரச்னை வந்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம் என்ற பயம். முதல்முறையாக விமானப் பயணத்தில் ஒருவருக்கு உதவ முடிந்தது என்பது எனக்கு இன்றளவும் ஒரு மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது.

பி.கு: அந்த முறை மயிரிழையில் தேர்வில் தோற்றேன். எனவேதான் அடுத்த முறை பயணம்.

- மருத்துவர் செல்வன் ரத்தினசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு