Published:Updated:

கொரோனாவின் தீவிரத்தை குறைக்க உலக நாடுகள் கையிலெடுத்த குளோரோகுயின்! - சிக்கல் என்ன? #MyVikatan

Representational Image
Representational Image

இந்த அறிக்கைக்கு தன் பாணியில் உடனடி ஆதரவு தெரிவித்து மருத்துவ உலகை இரண்டாகப் பிரிக்க வித்திட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா பாதிப்பின் தீவிரத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மருந்தை உபயோகப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரைத்திருக்கும் நிலையில், அம்மருந்தைப் பற்றியும், அது கொரோனா தொற்றுக்கு எந்த அளவுக்கு தீர்வைத் தரும் என்பதைப் பற்றியும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

Representational Image
Representational Image

கடந்த மூன்று மாதகாலமாகவே உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கொரோனா தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புது மருந்து கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் ஒருபுறமிருக்க, ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் ஏதாவது கொரோனா பாதிப்பைத் தடுக்கவோ அல்லது குணமாக்கவோ உதவுமா என்ற ஆராய்ச்சிகளும் தீவிரமடைந்து வருகின்றன. இதுவரை சோதிக்கப்பட்ட மருந்துகளில், திருப்திகரமான முன்னேற்றம் தரும் மருந்தாக சில ஆராய்ச்சியாளர்களால் முன்னிறுத்தப்படுவதுதான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்.

குளோரோகுயின் எனும் மருந்து எழுபது ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மலேரியா நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. தயாரிப்பு விலை குறைவான, உலகம் முழுவதும் அதிகமாக பரிந்துரைக்கப்படும் இந்தக் குளோரோகுயின் மருந்தின் மூலக்கூற்றை சற்றே மாற்றியமைத்து தயாரிக்கப்படும் மருந்துதான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்.

Representational Image
Representational Image

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்து என்றாலும், கடுமையான அஜீரணக்கோளாறு, இதய படபடப்பு போன்ற பக்கவிளைவுகளையும் கொண்டது ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு ஆராய்ச்சியின் முலம் இம்மருந்தின் அழற்சி நீக்கம் மற்றும் வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவும் என அறியப்பட்டது.

கொரியாவிலும் இந்த மருந்து பரிசோதனை முயற்சி நிலையில் இருக்க, உலகின் சிறந்த பத்து மருத்துவ ஆய்வாளர்களில் ஒருவராக கருதப்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திதியே ரவோல்ட் என்பவர் கொரோனா தொற்றின் தீவிரத்துக்கு ஆளான இருபது நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொடுத்து பரிசோதித்ததில் நல்ல முன்னேற்றமும் பலனும் இருப்பதாக வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாறியது ! இந்த அறிக்கைக்கு தன்பாணியில் உடனடி ஆதரவு தெரிவித்து மருத்துவ உலகை இரண்டாகப் பிரிக்க வித்திட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் !

``அவசரகாலத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம்தான் என்றாலும் லட்சக்கணக்கான மக்களுக்கு தேவைப்படும் ஒரு சிகிச்சையின் மருந்தை சிறுசிறு ஆராய்ச்சிகளின் முடிவைக் கொண்டு தீர்மானிப்பதை ஏற்க முடியாது. அம்மருந்தின் பலனையும் பக்கவிளைவுகளையும் முறையான காலகட்டத்துக்கும், பல்வேறு நோயாளிகளுக்கும் உட்படுத்திய பின்னரே முடிவெடுக்க வேண்டும்" என ஒரு தரப்பும்,

Representational Image
Representational Image

``தலைக்குமேல் வெள்ளம் போன பிறகு காலக்கெடு விதிக்க முடியுமா? கையில் கிடைப்பதை வைத்துக்கொண்டு பிழைக்க முடியுமா என முயல்வதுதான் விவேகம்" என்பதாக மற்றொரு தரப்பும் விவாதத்தில் இறங்கிவிட்டன.

``ஹைட்ராக்ஸி குளோரோகுயின் நேரடியான வைரஸ் அழிப்பு மருந்து கிடையாது. தீவிரமான கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் எழுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், இம்மருந்தின் பக்கவிளைவுகளான அஜீரணக்கோளாறு மற்றும் படபடப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதெல்லாம் உறுதி செய்யப்படாததால் ஐரோப்பிய யூனியனின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் முடிவுக்குப் பிறகுதான் அனுமதிக்க முடியும்" என முதலில் மறுத்த பிரான்ஸ் அரசு, கடந்த சில நாள்களுக்கு முன்னர் தன் முடிவை மாற்றிக்கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் இம்மருந்தை பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.

Representational Image
Representational Image

``ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா தடுப்பு மருந்து அல்ல. முன் தடுப்பு முயற்சியாகவோ அல்லது கொரோனா தாக்கம்தான் என கணிக்க முடியாத ஆரம்ப கட்டத்திலோ உரிய மருத்துவ ஆலோசனைகளின்றி பயன்படுத்தினால் பலன் கிடையாது என்பதுடன் தீவிரமான பக்கவிளைவுகளும் ஏற்படலாம். இம்மருந்தை உட்கொள்ளும்போது அத்துடன் வேறு சில மருந்துகளை சேர்க்கவோ அல்லது தொடர்ந்து உபயோகித்து வரும் மருந்துகளை நிறுத்தவோ வேண்டிய கட்டாயங்களும் ஏற்படலாம் என்பதால் மருத்துவர்களின் அனுமதி மற்றும் கண்காணிப்புடன் மட்டுமே உட்கொள்ளப்பட வேண்டும்"

என்பதை அனைவரும் அறிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும்.

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு