Published:Updated:

`திருமணத்துக்கு மறுநாள்... லாரி மீது மோதிய கார்...’ - டாக்டர் அவினாஷின் போராட்ட வாழ்க்கை!

டாக்டர் அவினாஷ் மனைவியுடன்...

மருத்துவத்தை அறம் காக்கும் தொழிலாக நேசித்த அவினாஷூக்கு அந்த விபத்து எஞ்சிய வாழ்நாளுக்குமான வேதனையை உண்டாக்கியது சோகத்தின் உச்சம்.

`திருமணத்துக்கு மறுநாள்... லாரி மீது மோதிய கார்...’ - டாக்டர் அவினாஷின் போராட்ட வாழ்க்கை!

மருத்துவத்தை அறம் காக்கும் தொழிலாக நேசித்த அவினாஷூக்கு அந்த விபத்து எஞ்சிய வாழ்நாளுக்குமான வேதனையை உண்டாக்கியது சோகத்தின் உச்சம்.

Published:Updated:
டாக்டர் அவினாஷ் மனைவியுடன்...

மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மறுநாள் மனைவியின் ஊரில் வரவேற்பு நிகழ்ச்சி. அன்றிரவே மணமக்கள், காஞ்சிபுரத்திலிருந்து ஈரோடு நோக்கி காரில் கிளம்பினர். விடியற்காலை ஓமலூர் அருகே பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இடதுபுற சர்வீஸ் சாலையில் சென்ற லாரி ஒன்று, திடீரென பிரதான சாலையின் குறுக்கே நுழைந்தது. கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் பலமாக மோதிய கார், மூன்று முறை உருண்டு சாலையோர தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த நால்வரையும் மீட்டனர். அனைவருக்கும் லேசான காயம்தான். ஆனால், மருத்துவர் என்பதால் தனக்கு முதுகுத் தண்டுவடத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அப்போதே கணித்துவிட்டார் புது மாப்பிள்ளையான டாக்டர் அவினாஷ்.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்
மருத்துவத்தை அறம் காக்கும் தொழிலாக நேசித்த அவினாஷூக்கு அந்த விபத்து எஞ்சிய வாழ்நாளுக்குமான வேதனையை உண்டாக்கியது சோகத்தின் உச்சம். மருத்துவப் பணியுடன் காதல் திருமண வாழ்க்கையையும் நேசித்துக் கழிக்க வேண்டியவர், வீட்டில் வீல்சேரில் முடங்கியிருக்கிறார். பாசிட்டிவ் எனர்ஜியாலும் அன்பாலும் ஈர்க்கும் அவினாஷ், மருத்துவ முன்னேற்றத்துக்கான முக்கியமான கட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறார். இதற்காகக் காஞ்சிபுரத்திலுள்ள சித்தி வீட்டில் தங்கியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பூர்வீகம் காஞ்சிபுரம். டாக்டராவது என் கனவு. மெரிட்ல தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் படிச்சேன். தனியார் ஆஸ்பத்திரியில ரெண்டு வருஷம் டாக்டரா வேலை பார்த்தேன். வேலைவாய்ப்பு பதிவு மூலமாக, 2011-ல் எனக்கு அரசுப் பணி கிடைச்சுது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் ப்ளாக் அம்பலமூலா கிராம ஆரம்ப சுகாதார நிலையத்துல வேலை. அடுத்த சில மாதத்துலயே அந்த நிலையத்தின் தலைமை மருத்துவரானேன். முதுமலைக்கு ஒட்டிய அடர்ந்த வனப்பகுதிகள் சூழ்ந்தப் பகுதி. அந்த ஊர்ல வனவிலங்குகள் வருவது சர்வ சாதாரணம். இருப்பினும் அங்கு வேலைசெஞ்ச நாலு வருஷமும் பரவசமா இருந்துச்சு. அந்த ஊரில் பளியர், காட்டு நாயக்கர் உட்பட பல்வேறு பழங்குடியின மக்கள் வசிக்கிறாங்க.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்

தினமும் வேலை முடிஞ்சு வந்ததும், மாலையில் வீட்டில் இருந்தபடியேயும், நேரடியாகச் சென்றும் மக்களுக்கு சிகிச்சையளிப்பேன். இதனால் அந்தக் கிராம மக்கள் என்மேல அதிக அன்பு காட்டினாங்க. ஓய்வு நேரத்தில் மேற்படிப்பு நுழைவுத்தேர்வுக்கும் தயாரானேன். அந்தப் பணிச்சூழல் பசுமையான காலகட்டம்...” - மகிழ்ச்சியுடன் கூறும் அவினாஷூக்கு, அப்போது கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஸ்ரீமதியுடன் காதல் மலர்ந்துள்ளது. 2015-ல் அரசு ஒதுக்கீட்டில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்ட மேற்படிப்புக்கான இடம் கிடைக்க, அவினாஷ் அங்கிருந்து பிரியாவிடை பெற்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நரம்பியல் அறுவைசிகிச்சை சிறப்பு மருத்துவருக்கான, எம்.சிஹெச் (Master of Chirurgiae) என்ற ஒருங்கிணைந்த ஆறு வருஷ கோர்ஸ்ல சேர்ந்தேன். அதுக்குமேல உயர்படிப்பு எதுவும் இல்லை என்பதால கொஞ்சம் சிரமப்பட்டு படிச்சுடலாம்னு முனைப்புடன் இருந்தேன். மறுபடியும் ஹாஸ்டல். கூடவே, பொது அறுவைசிகிச்சை வார்டுல பயிற்சி மருத்துவர் பணி. அப்போ, எங்க மூணு வருடக் காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் கிடைச்சுது. 2016-ல் கல்யாணம். காஞ்சிபுரத்துல வரவேற்பு நிகழ்ச்சி முடிஞ்சதும், ஈரோட்டுக்குக் கிளம்பினோம். நான் கார் ஓட்ட, மனைவி, தாத்தா, பாட்டி மூணுபேரும் என்னுடன் வந்தாங்க. சாலையோர கடையில டீ குடிச்சுட்டு, வீட்டுக்குப் போன் பண்ணிட்டு கிளம்பிய கொஞ்ச நேரத்துல அந்த விபத்து நடந்துடுச்சு.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்

அப்பவே என் கழுத்தில் அதிக வலி இருந்துச்சு. அருகிலிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்தாங்க. அங்கு டியூட்டி டாக்டர்கள் யாருமில்லை. எனக்கு மயக்கம் தெளிஞ்சதும் அங்கிருந்த நர்ஸிடம், ‘பிரத்யேகமான ஸ்ட்ரெச்சர்ல என்னைப் படுக்க வைங்க. குளுக்கோஸ் போட்டுவிட்டுட்டு, ஸ்கேன் எடுங்க’ன்னு பல்வேறு ஆலோசனைகள் கொடுத்து அதன்படி சிகிச்சையளிக்கச் சொன்னேன். பிறகு, சீனியர் மருத்துவர்கள் வந்ததும் எனக்கு முதுகுத் தண்டுவடப் பாதிப்பை உறுதிசெய்தாங்க.

மேல் சிகிச்சைக்காக உடனே சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். ஆபரேஷன் முடிஞ்சு, ஒரு மாசம் அங்கதான் சிகிச்சையில் இருந்தேன். இனி சிகிச்சைகள் கிடையாது. பிசியோதெரபி பயிற்சிகள் மட்டும்தான். ஏராளமான வலிகளையும் வேதனைகளையும் கடந்து, மனதளவில் என்னைத் தயார்படுத்திகிட்டேன்” - தளர்வான குரலில் பேசும் அவினாஷூக்கு, அப்போது கழுத்துக்குக் கீழுள்ள மற்ற உடல் உறுப்புகளில் உணர்வுகளும் கட்டுப்பாடும் முழுமையாக இல்லை.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்
முதுகுத் தண்டுவட பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் முழுமையான மருத்துவ தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், சிறிய முன்னேற்றம் கிடைத்தால்கூட பெரும் நம்பிக்கையைத் தரும் எனத் தென்னிந்தியாவிலுள்ள பல்வேறு மறுவாழ்வு மையங்களுக்கும் ஆயுர்வேத சிகிச்சை மையங்களுக்கும் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதன் பலனாக இரண்டு கைகள் மட்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்தான், தற்போது அவினாஷூக்கு முக்கியத்துவம் வாய்ந்த அறுவைசிகிச்சை ஒன்று நடைபெற்றிருக்கிறது.

“முதல் வருஷம் பல்வேறு ஊர்களுக்கும் சிகிச்சைக்காகப் போனோம். பல லட்சம் ரூபாய்வரை செலவானதால, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எனக்காக நீண்ட விடுப்பில் இருந்த மனைவி மறுபடியும் வேலைக்குப் போனாங்க. கூடலூர்ல இருந்து கோயம்புத்தூர் ஆனைக்கட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பணிமாறுதல் வாங்கினாங்க. குடும்பத்துடன் கோயம்புத்தூர்லதான் வசிக்கிறோம். தொடர்ந்து மூணு வருஷமா வீட்டில் இருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சைகள் மட்டும் எடுத்துக்கறேன். முதுகுத் தண்டுவட பாதிப்பு உள்ளவர்களுக்குத் தண்டுவட முதுகெலும்பில் சிப் பொருத்தி அதுக்குக் கீழுள்ள செயல்படாத உடல் உறுப்புகளைச் செயல்முறைக்குக் கொண்டுவரக்கூடிய பெரும் முயற்சி, உலகின் சில நாடுகளில் மட்டும் முதல்கட்ட சோதனை முறையில நடக்குது.

டாக்டர் அவினாஷ் குடும்பத்துடன்
டாக்டர் அவினாஷ் குடும்பத்துடன்
dev

`கடைசி முயற்சியா இந்த ஆபரேஷனை செய்து பார்க்கலாம். ஒருவேளை முழுமையா பலன் கிடைக்காட்டியும், சில முன்னேற்றங்கள் கிடைச்சாகூட நல்லதுதான்’னு முடிவெடுத்தோம். சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில சமீபத்துலதான் அந்த ஆபரேஷன் எனக்கு நடந்துச்சு. இப்போ ஓய்வில் இருக்கேன். இந்த ஆபரேஷனுக்கு 15 லட்சம் ரூபாய் செலவாச்சு. அதுக்காக நாங்க தவிச்சு நின்னப்போ, என் ஃபிரெண்ட்ஸ், காலேஜ் சீனியர்ஸ் ஜூனியர்ஸ், மருத்துவர்கள், நலன்விரும்பிகள்னு பலரும் கேட்காமலேயே பண உதவி செய்தாங்க. அவங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை. கூடவே பேங்க் லோனும் வாங்கினோம். சில தினங்கள்ல அதே ஆஸ்பத்திரியில மறுபடியும் அட்மிட் ஆகணும்.

பொருத்தியிருக்கிற சிப்பை இயங்க வைக்கிறதுக்கு அங்கிருந்தபடியே சில மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கணும். அதுக்கான வேலைகள் தொடங்கிடுச்சு. இந்தச் சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய்வரை செலவாகும். என்ன பண்றதுனு தெரியலை. பெரும் சிரமத்துடன் பணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துட்டிருக்கோம்” என்பவரை, அந்தச் சாலை விபத்து முடக்கிப்போட்டாலும், மருத்துவப் பணியைக் கைவிடாமல் வீட்டிலிருந்தபடியே மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்

“கைக்குக் கீழுள்ள உடலுறுப்புகளில் எனக்கு உணர்வுகள் தெரியாது. கால்களைக்கூட அசைக்க முடியாது. பெட்லயோ, தரையிலயோ படுத்திருக்கணும் அல்லது பெட்லயோ, சேர்லயோ யாராச்சும் தூக்கி உட்கார வெச்சாதான், குறிப்பிட்ட நேரத்துக்கு என்னால உட்கார முடியும். வீட்டுக்குள்ளயே முடங்கியிருப்பதால வெறுமை பீடிக்கும். வீட்டில் இருந்தபடியே சேவை நோக்கத்துல மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளைச் சொல்றதால, படிச்ச படிப்பை இந்தச் சூழல்லயும் சரியா பயன்படுத்திக்க முடியுது. எனக்கு மழைனா ரொம்ப இஷ்டம். முன்பு கூடலூர் ப்ளாக்ல வேலைச் செஞ்ச இடத்துல அடிக்கடி மழை வரும். மணிக்கணக்கா மழையில நனைவேன். இப்ப மழையில் நனைய ஆசைப்பட்டாலும், ஜன்னல்வரை போகவே இன்னொருத்தர் உதவி தேவைப்படுது.

மருத்துவ மேற்படிப்பை முடிக்க முடியாம, ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்க்க முடியலையேனுதான் ஒவ்வொருநாளும் வருத்தப்படறேன். மத்தபடி வலிகளோடு வாழப் பழகிட்டேன். நீண்டகால மருத்துவ விடுப்புல இருக்கும் அரசு மருத்துவராகத்தான் இப்பவும் இருக்கேன். ஆனா, பயிற்சி மருத்துவரா நான் செயல்படாததால எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்காது. என்னோட மேற்படிப்பு கோர்ஸ் பீரியட் 2022-ல் முடியுது. அதுக்குள்ள நான் குணமாகிட்டா, அதே கோர்ஸ்ல சேர்ந்து படிப்பை நிறுத்திய இடத்துல இருந்து தொடரலாம். இல்லைன்னா, அந்த சீட் ரத்தாகிடும். மறுபடியும் நுழைவுத்தேர்வு எழுதித்தான் மேற்படிப்பில் சேர முடியும்.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்

இதெல்லாம் சாத்தியமான்னு தெரியலை. ஆனாலும், இப்ப நடந்திருக்கிற ஆபரேஷனுக்கு பலன்கிடைச்சு, வாக்கர் வெச்சு சுயமா நடக்கிற அளவுக்குக் குணமானாகூட போதும். நம்பிக்கையுடன் என் கனவுகளைப் போராடி வசப்படுத்திடுவேன். இப்போ எங்களுக்குச் சொந்த வீடில்லை. சேமிப்புனு எதுவுமில்லை. என் மனைவியின் சம்பளத்தை வெச்சுதான் சமாளிக்கிறோம். ஸ்ரீமதி இடத்துல வேறு ஒரு பெண் இருந்திருந்தா, என்னை விட்டுப்போயிருக்கக்கூட வாய்ப்புண்டு. ஆனா, இப்பவரை என் மனைவி எனக்கு இன்னொரு தாயா இருக்காங்க. தினமும் சாயந்திரம் ஆஸ்பத்திரியில இருந்து வந்ததுமே, சோர்வு இருந்தாலும்கூட முதல் வேலையா என் காலுக்கு எண்ணெய் தேய்ச்சுவிடுவாங்க. எனக்காக அவங்களும் எந்த வெளிநிகழ்ச்சிகள்லயும் கலந்துக்க மாட்டாங்க. அம்மாவுக்கும் ஸ்ரீமதிக்கும் முழு உலகமும் நான் மட்டும்தான். அதனாலயே மனைவியால மேற்படிப்புக்குத் தயாராக முடியலை” - பெருக்கெடுக்கும் கண்ணீர், அவினாஷின் உரையாடலை இடைமறிக்கிறது.

கணவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு பேசும் ஸ்ரீமதி, "இருவருக்கும் வெளிநாட்டு வேலை கிடைச்சும் போக மறுத்தோம். எங்களைப்போல எங்க குழந்தையையும் அரசுப் பள்ளியில படிக்க வைக்கணும். வாழ்நாள் முழுக்க அரசு மருத்துவமனையிலேயே வேலை செய்யணும். ஏழைகளைத் தேடிப்போய் சிகிச்சை கொடுக்கணும்னு நிறைய கனவுகளோடு இருந்தோம். எல்லாத்தையும் அந்த விபத்து கனவா மாத்திடுச்சு. இப்பவும் நம்பிக்கையோடு இருக்கோம். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது டேபிள் டென்னீஸ், ஹாக்கி, பேட்மிட்டன் உட்பட பல விளையாட்டிலும் ஆர்வமாவும் சுறுசுறுப்பாவும் இருந்தவர். இன்னைக்கு நடக்க முடியாம முடங்கி இருக்கிறதைப் பார்க்கிறப்போ என் மனசு தினமும் வேதனைப்படும்.

டாக்டர் அவினாஷ் மனைவியுடன்
டாக்டர் அவினாஷ் மனைவியுடன்

இவர் எழுந்து நடக்கிற அளவுக்கு முன்னேறி வந்தால்கூட, மீண்டும் மருத்துவப் பணியைத் தொடர முடியும். அது நடக்குமான்னு தெரியலை. ஆனாலும், கடைசி முயற்சியா இப்போ சிப் வைக்கிற ஆபரேஷனை நடத்தியிருக்கோம். எனவே, இவர் உடல்ல சிறிய முன்னேற்றம் ஏற்படுவதுகூட எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி தரும். அதுக்காக எந்த ரிஸ்க் எடுக்கவும் தயாரா இருக்கேன். பல்வேறு சிரமங்களுக்கும் நடுவே, எங்க காதல் ரொம்பவே பலமாகுது” - மனதில் பொதிந்திருக்கும் வலிகளையெல்லாம் சற்றும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னகையால் மறைப்பவர், கணவரின் தோல்மீது சாய்ந்து சிரிக்கிறார்!

டாக்டர் அவினேஷூக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com – என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். உங்களுக்கு உடனடியாக தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism