`மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் நிலை என்னவாகும்?' - கொரோனா பெருந்தொற்றின் அதிர்வுகள் #MyVikatan

உலக பங்குச் சந்தையின் குறியீடுகள், மார்ச் மாதத்திலிருந்து அதலபாதாளத்துக்கு இறங்கிக்கொண்டிருக்கின்றன.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
உலகம் முழுவதையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா பெருநோய்த் தொற்றின் அதிர்வு, நீண்ட பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சுகாதாரம், சமூகம், பொருளாதாரம், முதலீடு போன்ற பல்வேறு துறைகளில் கொரோனா பரவலின் பின்விளைவுகள் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை மட்டுப்படுத்தும் சவாலுடன், வருங்கால பெருநோய் தொற்றுகளைத் தவிர்ப்பது எப்படி என்ற ஒற்றைக்கேள்வியும் உலகத் தலைவர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் என அனைவரின் தூக்கத்தையும் ஒட்டுமொத்தமாகக் கெடுத்துக்கொண்டிருக்கிறது.

கி.மு, கி.பி என வரலாற்றைப் பிரித்ததுபோல், கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என மனித வாழ்க்கையைப் பிரிக்கும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் உலகளாவிய மாற்றங்கள் ஏற்படப்போவது நிச்சயம்.
பொருளாதாரம் தொடங்கி ஸ்போர்ட்ஸ் வரை, கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மாற்றங்களையும் பற்றிய ஓர் அலசல் :
வரலாறு காணாத பொருளாதார பாதிப்பு
வல்லரசு நாடுகளின் சுகாதார அமைப்புகளின்மீது அந்நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்ட கொரோனா பெருந்தொற்று, உலகப் பொருளாதாரத்தில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக பங்குச் சந்தையின் குறியீடுகள் மார்ச் மாதத்திலிருந்து அதலபாதாளத்துக்கு இறங்கிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஐரோப்பிய அரசாங்கங்களின் உதவித் திட்டங்களும், வட்டியில்லா கடன்களும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை 'நெகட்டிவ்' எனப்படும், பூஜ்ஜியத்துக்குக் கீழே இறங்கிவிட்டது.
ஊரடங்கு நாள்களின் எண்ணிக்கை கூடக்கூட, வேலையில்லாத் திண்டாட்டமும் கூடிக்கொண்டேபோகிறது. படிப்படியாக தளர்த்தப்படும் ஊரடங்கினால், உற்பத்தி சகஜ நிலையை எட்ட நீண்ட நாள்கள் பிடிக்கும் என்பதால், கொரோனா பரவலால் வேலையில்லாமல் இருப்பவர்களில் ஒரு பகுதியினர், நிரந்தரமாய் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.
ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நிறுத்தப்படாத கனரக தொழிற்சாலைகள் மாதக்கணக்கில் முடங்கிக்கிடக்கின்றன. வானத்தில் பறந்தால்தான் லாபம் என இதுநாள் வரையிலும் இயங்கிய விமானங்கள் அனைத்தும் தரையில் நிற்கின்றன. இவற்றையெல்லாம் மீண்டும் பழையபடி இயங்கவைக்கத் தேவையான முன்னேற்பாடுகளுக்கு ஆகப்போகும் செலவையும் இப்போதைக்கு திட்டவட்டமாகக் கூற இயலாது என்பதோடு, இந்தச் செலவுகளெல்லாம் விலையேற்றத்தின் மூலம் பயன்பாட்டாளர்களின் தலையில் விழும் வாய்ப்பும் ஏற்படலாம்.

உணவுப் பஞ்சம்
விவசாய உற்பத்தி தடைபடுவதால், உலகின் பல பகுதிகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், அரசாங்க உணவு சேமிப்பும் குறையும்.
ஐ.நா-வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் 265 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள். இது, தற்போதைய எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகம். மேலும், உள்நாட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டிய நெருக்கடிகளால் வளர்ந்த நாடுகள் அளிக்கும் நிதிகள் குறைவது அல்லது நிறுத்தப்படும் அபாயத்தால், அவற்றை நம்பியிருக்கும் ஹைட்டி, சோமாலியா போன்ற நாடுகள் பெரிதும் பாதிக்கப்படும்.
ஏற்கெனவே, வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் உணவுப் பற்றாக்குறையில் தவிக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் நிலை இன்னும் மோசமாகும்.
ராஜாங்க நெருக்கடிகள்
கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில், உலக அரசியல் அரங்கின் வெட்டாட்டம் மட்டுப்பட்டு, ஒற்றுமையும் மனித நேயமும் மேலெழும்பின. எல்லாம் சில நாள்களுக்குத்தான். காலங்காலமாய் நடப்பதைப் போலவே கம்யூனிஸ சீனாவின் கொரோனா தடுப்பு செயல்பாடுகளைப் பற்றி கேள்வி எழுப்பியதோடு மட்டும் நின்றுவிடாமல், தவறுகள் நடந்து மறைக்கப்பட்டிருந்தால், சீனா அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கை வெடியையும் அமெரிக்கா கொளுத்தி வீச, அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்துகொண்டு அரசியல் வான வேடிக்கையை ஆரம்பித்துவிட்டன.

தங்கள் நாட்டு மக்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் ஒன்றாக, ஐ.நா-வின் உலக மருத்துவக் கழகத்தின் பெருந்தொற்று தடுப்பு செயல்பாடுகளைக் குறைகூறத் தொடங்கிவிட்டனர் உலகத் தலைவர்கள். தன் வலிமைக்கு ஏற்ப ஒரு படி மேலே எம்பிய அமெரிக்கா, இந்த அமைப்புக்கான நிதியையே நிறுத்தி வைத்திருக்கிறது.
அணுஆயுத தயாரிப்புச் சண்டைகளில் அமெரிக்காவுடன் வார்த்தைப்போரில் மல்லுக்கட்டும் ஈரான், கொரோனாவினால் பாதிக்கப்படும் பெட்ரோல் உற்பத்தி பற்றிய வார்த்தை விநியோகங்களை ஆரம்பித்துவிட்டது.
தற்காலிகப் போர் நிறுத்தம்
அடாது ஆட்டியெடுக்கும் கொரோனாவுக்கும் அடங்காமல் ஏவுகணைப் பரிசோதனைகளை முன்னெடுக்கும் வட கொரியா போன்ற சண்டியர்களைப் போலல்லாமல், சில நாடுகள் பிரச்னைகளை அடக்கியும் வாசிக்கின்றன.
சவுதி அரேபியா, தன் அண்டை நாடான ஏமன் நாடு மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியிருக்கிறது. தென்னாப்பிரிக்க நாட்டின் `கேப் டவுன் கேங்ஸ்' எனப்படும் குண்டர் குழுக்கள், நாடு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு எழும் வரை தங்களுக்குள் மோதிக்கொள்வதை நிறுத்தியுள்ளன.
இனவெறி
அரசியல் காரணங்களுக்காக ஒரு நாடோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது மொழி சார்ந்த குழுவோ ஏற்படுத்தும் கலகத்தினால், அவர்கள் சார்ந்த சமூகத்தின்மீது படியும் தவறான அபிப்ராயம், அந்த சமூகத்துக்கு ஏற்படுத்தும் இன்னல்கள் மிகக் கொடுமையானது.
இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கிய சமூகத்தின்மீது படிந்த வெறுப்பு, ராஜீவ் காந்தி படுகொலையினால் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்தின்மீது படிந்த சந்தேகக் கண்ணோட்டம், அடிப்படைவாத குழுக்களின் தீவிரவாதத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய அபிப்ராயம் போன்ற வரிசையில், இன்று கொரோனா பரவலினால் ஒட்டுமொத்த சீன சமூகமும் பல்வேறு நாடுகளில் வெறுப்புடன் நடத்தப்படுகிறது.

சீன உணவகங்களின் கதவுகளில் இனவெறி வாசகங்கள் கிறுக்கப்பட்டது தொடங்கி, பொது இடங்களில் அவமானப்படுத்தப்படுவது, சமூக ஊடகங்களில் வெறுப்புப் பகிர்வுகள் என உலகின் பல நாடுகளிலும் சீன மக்கள் மீது இனவெறிச் செயல்கள் அரங்கேறிவருகின்றன. உலகின் ஆகப்பெரும் வல்லரசு நாட்டின் ஜனாதிபதியே, `வுஹான் வைரஸ்' எனக் குறிப்பிட்டு கண்டனத்துக்கு ஆளானார்.
சீனாவில் தவறுகள் நடந்திருக்கலாம் என வாதிடும் அதே நேரத்தில், பெருந்தொற்றை முதலில் கண்டறிந்த சீனா மற்ற நாடுகளுக்கு உதவியதையும் குறிப்பிட வேண்டும். கிருமியின் தன்மை மட்டுமல்லாது, நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய ஆய்வுகளையும் உலக சுகாதார அமைப்பின் மூலம் மற்ற நாடுகளுடன் உடனுக்குடன் பகிர்ந்தது மட்டுமல்லாமல், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு மருத்துவ உதவிகளையும் அனுப்பியது.
சீன மொழியில் வெளியான மருத்துவ ஆராய்ச்சி அறிக்கைகளை மொழி பெயர்த்துக் கொடுத்தது தொடங்கி, சீன வர்த்தக சங்கங்களின் மூலம் நிதி திரட்டியது வரை, ஐரோப்பிய நாடுகளில் வாழும் சீன சமூகத்தினர் கொரோனா ஒழிப்பில் தீவிரமாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
ஜனநாயகத்துக்கு ஆபத்து
ஆசிய நாடுகள் தொடங்கி ஐரோப்பா வரை பெரும்பான்மையான உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்று நிலவரத்தைக் காரணம் காட்டி, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்துள்ளன.
அரசியல் சாசனத்தில் நோய் தொற்றுக்கென தனியான அவசரநிலை சட்டம் என்று ஒன்றும் கிடையாது. ராணுவ பலத்தை துஷ்பிரயோகம் செய்வது, ஊடக சுதந்திரத்தை தணிக்கைக்கு உட்படுத்துவது, ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிரான வழக்குகள், தேர்தல்களைத் தள்ளிவைப்பது என ஜனநாயகத்துக்கு எதிரான எதையும் கொரோனாவுக்காகப் பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலையின் மூலம் சாதிக்கலாம். உதாரணமாக, கொரோனா ஒழிப்புக்காக ஹங்கேரியா பாராளுமன்றம் அந்நாட்டின் பிரதமருக்கு காலவரையற்று பதவியில் இருக்கும் உரிமையை வழங்கியிருக்கிறது.

தற்காலிகமான இந்த அவசரநிலைப் பிரகடனங்கள் அந்தந்த நாடுகளில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளும், அவை புவி அரசியலில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உடனடியாகக் கணிக்க இயலாது.
காலியாகும் சிறைச்சாலைகள்
உலகின் பெரும்பாலான சிறைச்சாலைகளில், அவற்றின் கொள்ளளவையும் தாண்டி, மிக அதிகமான கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இடப்பற்றாக்குறை மற்றும் சரியான சுகாதார வசதிகள் இல்லாத சிறைச்சாலைகளில், கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பும் இறப்பு சதவிகிதமும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறு குற்றங்களில் தண்டனை பெறும் ஆயிரக்கணக்கான கைதிகளை விடுதலைசெய்துவிட்டன. இந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் மட்டும் 9000 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு அவசர சட்டத்தின் மூலம், துருக்கி நாட்டில் ஒரு லட்சம் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
இதன் விளைவாக, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளும் கடத்தல் குற்றங்களும் அதிகரிக்கலாம்.

துளிர்க்கும் இயற்கை
கடந்த நான்கு மாத காலமாக சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கொரோனா பெருந்தொற்றால் பூமிக்கு ஏற்பட்ட பெரும் நன்மை எனத் தாராளமாகக் குறிப்பிடலாம்.
மனிதர்களின் கனரக தொழிற்சாலைகளின் இயக்கமும், வாகனங்களின் போக்குவரத்தும் தடைபட்டதால், இயற்கையின் சுவாசம் சீராகிக்கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் இரண்டு வாரங்களிலேயே காற்றின் மாசுபாடு குறையத்தொடங்கியதுடன், பறவைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டமும் தொடங்கிவிட்டது.
ஆனாலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், புவி வெப்பமாவதையும் தடுக்க, இந்தச் சூழல் நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியிலும் உலகமயமாக்கலிலும் இவ்வளவு முன்னேறிவிட்ட மனிதன், ஒரு சில மாதங்களில் தன் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிக்கொள்வான் என்பதற்கும், கொரோனாவுக்குப் பிறகான உலகம் நிச்சயம் பசுமையானதாக இருக்கும் என்பதற்கும் எந்த நிச்சயமும் இல்லை.
சுற்றுச்சூழல் மேம்படும் இந்தச் சூழலின் முரண்நகையாக, அழிந்துவரும் சில உயிரினங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
வன சரணாலயங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து நின்றுபோனதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தடைபட்டதும் கடத்தல்காரர்களுக்கு சாதகமாகிவிட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஆப்பிரிக்கக் காடுகளில் உடல் உறுப்புகளுக்காக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துவருகிறது. உதாரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், பத்துக்கும் மேற்பட்ட காண்டா மிருகங்கள் அவற்றின் கொம்புகளுக்காக கொல்லப்பட்டிருக்கின்றன.

பாதிக்கப்படும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்
ஒலிம்பிக், லீக் ஒன் கால்பந்தாட்டப் போட்டிகள் போன்ற சர்வதேச போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்களின் பாடு திண்டாட்டமாகி வருகிறது. முன்னேற்பாடுகளுக்கே பல ஆண்டுகள் தேவைப்படும் இந்தப் போட்டிகளை ஒரு சில மாதங்களுக்கு தள்ளிவைப்பது பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும், ஓரிரு மாதங்களில் அனைத்தும் சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நடப்பு சூழலில், திட்டவட்டமான ஒரு தேதியையும் அறிவிக்க முடியாது.
உலகளாவிய பல்வேறு விளையாட்டு சம்மேளனங்கள், இது போன்ற போட்டிகளை சகஜ நிலை திரும்பும் வரை காலவரையற்று தள்ளிவைப்பதற்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கிவிட்டன.
நவீன தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கணிப்புகள் தவறவிட்ட இந்தப் பேரிடரின் பாதிப்பினால் உலகமயமாக்கல், நுகர்வு கலாசாரம், அத்தியாவசிய தேவைகளுக்கான உற்பத்தியை வெளிநாடுகளிடம் ஒப்படைக்கும் அவுட்சோர்ஸிங் முறை போன்ற அனைத்து அரசியல் மற்றும் பொருளாதார வியூகங்களும் கேள்விக்குள்ளாகிவிட்டன. இந்த பாதிப்பிலிருந்து உலகம் மீண்டெழ பல ஆண்டுகள் பிடிக்கும்.
-காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.