Published:Updated:

அன்பெனும் ஆக்ஸிஜன்..! - நோய்கள் பற்றின பயத்தை போக்கும் வழிமுறைகள் #MyVikatan

Representational Image
News
Representational Image ( Pixabay )

நம் உடலில் நாம் காணும் நோய்கள் எல்லாவற்றுக்கும் ஒருவகையில் அச்சம்தான் மூல காரணம் என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும்.

அன்பெனும் ஆக்ஸிஜன்..! - நோய்கள் பற்றின பயத்தை போக்கும் வழிமுறைகள் #MyVikatan

நம் உடலில் நாம் காணும் நோய்கள் எல்லாவற்றுக்கும் ஒருவகையில் அச்சம்தான் மூல காரணம் என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும்.

Published:Updated:
Representational Image
News
Representational Image ( Pixabay )

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

நம் உடலில் நாம் காணும் நோய்கள் எல்லாவற்றுக்கும் ஒருவகையில் அச்சம்தான் மூல காரணம் என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும்.

இதோ அதற்கான அறிவியல், மருத்துவம் கலந்த ஆய்வு.

ஓர் இரவு வேளையில் நாம் காட்டின் வழியே செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். திடீரென்று ஒரு புலி எதிர்ப்படுகிறது. உடனே நம் மனதிலே அச்ச உணர்வு தோன்றி, நம் உடலில் அட்ரினல் சுரப்பி அட்ரினலின் எனும் ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது.

Representational Image
Representational Image
Pixabay

உடனே நம் தசைகள் எல்லாம் வலுப்பெறும் வகையில் ரத்த ஓட்டம் உடலெங்கும் பாயும். இதயம் வேகமாகத் துடிக்கும். மூளை நமக்கு உடனே கட்டளை பிறப்பிக்கும்... `சண்டையிடு அல்லது தப்பித்து ஓடிவிடு (fight or flight mode)' என்று.

உடனே நாம் சுதாரித்துக்கொண்டு இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றில் நம்மை தற்காத்துக்கொள்வோம். இது இயற்கை நமக்கு உடலில் செய்திருக்கும் ஏற்பாடு.

ஆனால், இதே அச்ச உணர்வு தேவையின்றி எழுந்தாலும், கற்பனையாக வந்தாலும்கூட உடனே அட்ரினலின் சுரக்கும். அதன் தொடர்ச்சியாக நம் நோய் எதிர்ப்புத் திறன் (immune system) முழுமையாக முடக்கப்பட்டுவிடும். சிந்திக்கும் திறன் குறைந்துபோகும். அந்த வேளையில் எந்த நோயும் நம்மை எளிதில் தாக்கும். ஒருவேளை நீங்கள் கொண்ட அச்சமே அந்த நோயைப் பற்றியதென்றால் சந்தேகமே வேண்டாம், அது நிச்சயம் நம்மை தாக்கும். (நன்றி: Bruce Lipton research on cell biology)

பொதுவாக கிராமத்தில் இருப்பவர்கள் எந்த நோயைப் பற்றிய தகவல்கள் பற்றியும் பெரிதாக அறியாமல் இருப்பார்கள். பெரும்பாலும் அவர்களை நோய் அணுகுவதில்லை. காரணம் அறியாமையே வரம் (ignorance is bliss) என்ற கூற்று. அவர்கள் எந்த நோயைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

Representational Image
Representational Image
Pixabay

ஆனால், இதுவே நகரத்தில் ஏதாவது ஒரு சிறிய நோய் அறிகுறி தென்பட்டாலும் உடனே கூகுள் செய்து இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று கற்பனை செய்து கவலைப்படுவார்கள். அதனாலேயே அந்த நோய் அழையா விருந்தாளியாக நம் உடலில் நுழையும். மாறாக அதை அலட்சியப்படுத்திவிட்டு நம் வேலையைப் பார்த்தால், உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும், அந்த அறிகுறிகள் காணாமலே போய்விடும்.

பயத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, உண்மை பயம். மற்றொன்று, கற்பனை பயம்.

Representational Image
Representational Image
Pixabay

ஒரு புலியைப் பார்க்கிறோம், பயம் கொள்ளத்தான் வேண்டும். தப்பித்து ஓடத்தான் வேண்டும். இது உண்மையான பயம்.

அதே நேரம் கடலில் அலைகளைப் பார்க்கிறோம். சுனாமியாக மாறுமோ என்று கற்பனையாக பயப்படுகிறோம். அது தேவையற்ற பயம். என்றோ வரும் சுனாமிக்கு என்றும் பயப்படலாமா? அச்சம் தவிர்த்து அலைகளை ரசிக்க வேண்டாமா?

``அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்."

வள்ளுவர் சொன்னதுபோல, அஞ்ச வேண்டியவற்றுக்கு மட்டும்தான் அஞ்ச வேண்டும்.

நாய்கூட யாரைத் துரத்தும் என்றால், பயப்படுபவர்களைத்தான். நமக்குள் இருக்கும் பய உணர்வை, நாய் தன் உள்ளுணர்வில் அறிந்துவிடும். திரும்பி நின்று பார்ப்பவர்களை அது துரத்தாது.

பேய் இருக்கிறது என்று நம்பி, பேய்ப்பிடுத்துவிடுமோ என்று அஞ்சுபவர்களுக்குத்தான் (இல்லாத) பேய் பிடிக்கும். பேய் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று தைரியமாய் இருப்பவர்களுக்கு இதெல்லாம் நிகழ்வதில்லை.

அந்த நாய், பேய் போன்றதுதான் நோயும். நாம் பயந்தால் நம்மைத் தாக்கும். நாம் தைரியமாய் எதிர்கொண்டால் தாக்காது.

நிற்க, தற்போது உள்ள கொரோனா சூழ்நிலைக்கு வருவோம்.

எல்லா சளி, காய்ச்சலும் கொரோனா அல்ல என்பது தைரியம். கொரோனாவாகவும் இருக்கலாம், சோதித்து தெளிவோம் என்பது விழிப்புணர்வு.

ஆனால் அதே நேரம், விழிப்புணர்வு என்ற பெயரில் எல்லா புள்ளி விவரங்களையும் பார்த்து, படித்து, அதையே மீண்டும் மீண்டும் பார்த்து, பயந்து, உறைந்துபோகக்கூடாது. மாறாக, `கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பூரண குணமடைகிறார்கள்' என்ற நேர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

Representational Image
Representational Image
Pixabay

பயம் தேவையற்றது. முகக் கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி போன்ற விளைவறிந்த விழிப்புணர்வு மட்டும்தான் தேவை.

இதற்கு முன்பும் உலகில் இதுபோன்ற பல நோய்கள் மனிதகுலத்தைத் தாக்கியுள்ளன. ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவுக்கு ஊடக வளர்ச்சி இல்லை. அதனால் எந்த நாட்டில் நோய் வந்ததோ அந்தத் தகவல் மற்ற நாடுகளுக்குப் பரவ பல காலம் ஆகும். ஆனால் இப்போது உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்படும்போது, அதன் மூலம் எச்சரிக்கைகொள்வது நல்லதுதான். ஆனால் அதுவே, அந்தச் செய்திகள் எல்லாம் பயத்தை பெருக்கெடுக்க வைப்பதுதான் நடக்கிறது. அவை, எல்லோரையும் ஓர் அச்ச உணர்வில் உறைந்துபோகச் செய்கிறது.

அந்த தைரியத்தை, நோய் எதிர்ப்பை வளர்க்கும் கலைதான், யோகா. குறிப்பாக பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சி, நாடிசுத்தி பயிற்சி மற்றும் கபாலபதி பயிற்சி.

தியானம் மன அமைதியைத் தரும். தைரியத்தை தரும். ஆன்ம பலத்தைத் தரும்.

யோகா மற்றும் தியானப் பயிற்சிகளின்போது, நம் உடலில் ஹேப்பி ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவைப் பொறுத்தவரை சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதே நேரத்தில் வீட்டிலே இருப்பதால் இப்போது உழைப்பு குறைவு, நடைப்பயிற்சி குறைவு. எனவே உணவின் அளவையும் குறைத்துக் கொள்ளுதல் நலம்.

உணவின் அளவைப் பொறுத்தவரை, `அருந்தியது அற்றது போற்றி உணின்' என்ற குறள்தான் நமக்கு வழிகாட்டி. அதாவது, முந்தைய வேளைக்கு உண்ட உணவு செரித்த பின்னரே அடுத்த வேளை உணவை நாட வேண்டும்.

Representational Image
Representational Image
Pixabay

அதேபோல நோயைத் தீர்க்கும் காரணிகள் நான்கு என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். அவை நோயாளி, மருத்துவர், மருந்துகள் மற்றும் உடனிருந்து கவனித்துக்கொள்பவர். இதில் முக்கியமாக உடனிருந்து கவனித்துக்கொள்பவர், வேளா வேளைக்கு தரும் மருந்தோடு நம்பிக்கையைக் குழைத்துத்தர வேண்டும். அன்பெனும் ஆக்ஸிஜனை அவசியம் தரவேண்டும், `நான் இருக்கிறேன்' என்று.

இறுதியாக, நோய் அணுகாமல் இருக்க எளிய வேத வார்த்தைகள் நான்கு...

காலார நட

கண்ணாற உறங்கு

வயிறார உண்

வாய் விட்டுச் சிரி

எத்தனையோ கொள்ளை நோய்கள் இதற்கு முன்னும் பல காலகட்டங்களில் மனிதகுலத்தை தாக்கியுள்ளன. ஆனால் அவற்றில் இருந்தெல்லாம் மனிதகுலம் மீண்டு வந்தது என்பதும் சரித்திர உண்மை. இதை மனதில் நிறுத்தினால், `இந்த நிலையும் கடந்து போகும், எதிர்வரும் நாளில் மறந்தும்போகும்'.

எனவே அறிவற்ற அலட்சியம் விடுப்போம். விளைவறிந்த விழிப்புணர்வு கொள்வோம்.

அச்சம் தவிர்ப்போம், கொரோனாவை வெல்வோம்!

-சங்கர் வெங்கட்ராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/