Published:Updated:

ஒமைக்ரான்... டெல்டா... டெல்மைக்ரான்!- நாம் எந்த அளவு கவலைப்பட வேண்டும்?

ஒமைக்ரான்
News
ஒமைக்ரான்

ஒமைக்ரான் அறிகுறிகள், தொற்றின் வீரியம், ஆய்வுகளின் முடிவுகள் அடங்கிய ஓர் முழுமையான அலசல்!


'கொரோனா' என்ற வார்த்தையே மறந்து போகும் அளவுக்கு 'ஒமைக்ரான்' பற்றியே உலகம் பேசுகிறது. ''காட்டுத்தீ போல தொற்று பரவுகிறது'' என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே உருமாறிய டெல்டா வைரஸ் மிரட்டி வந்த நாடுகளை இப்போது ஒமைக்ரான் அச்சுறுத்துகிறது. ''டெல்டாவும் ஒமைக்ரானும் இணைந்து அதிகம் பேரைத் தொற்றி நோய்ப்பரவலை அதிகரிக்கும். இந்த டெல்மைக்ரான் பேரலையை நினைத்து அச்சப்படுகிறோம்'' என்று இந்த நாடுகள் கூறுகின்றன.

ஒமைக்ரான் தொற்றை எப்படி அறிவது? நாம் எந்த அளவுக்கு இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?

* இந்தியாவில் மோசமான பேரழிவை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலையின்போது டெல்டா உருமாற்றமே பரவலாகத் தொற்றியது. அந்த டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் சாதாரண பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது.


* வழக்கமான கொரோனா தொற்றுக்கும் ஒமைக்ரான் தொற்றுக்கும் இருக்கும் வித்தியாசங்களை டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். கொரோனா அறிகுறிகளை ஆராய பிரிட்டனில் ZOE Covid Symptom என்ற ஆப் பயன்படுத்துகிறார்கள். இது தரும் தகவல்களின் படி, சோர்வு, தொண்டை எரிச்சல், அதிகமான உடல்வலி, தானாகவே சரியாகிவிடும் லேசான காய்ச்சல் ஆகியவையே ஒமைக்ரான் அறிகுறிகள்.

omicron awareness
omicron awareness

* சுவை உணர்வை இழப்பதும், வாசனை அறியும் திறனை இழப்பதும்தான் கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக இருந்தன. ஒமைக்ரான் அந்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. முந்தைய கொரோனா தொற்றுகளில் இல்லாத ஓர் அறிகுறியாக, ஒமைக்ரான் தொற்றியவர்களுக்கு பசி எடுக்காமல் போய்விடுகிறது.


* இந்தியாவில் அதிக ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம், டெல்லி லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை டாக்டர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ''34 பேருக்கு இதுவரை சிகிச்சை அளித்துள்ளோம். அவர்களில் ஒரே ஒருவருக்கு லேசான ஜுரம் இருந்தது. இன்னொருவருக்கு உடல்வலி இருந்தது. மற்ற 32 பேருக்கும் ஜலதோஷம் தவிர வேறு எந்த அறிகுறிகளும் இல்லை'' என்கிறார் இந்த மருத்துவமனையின் டாக்டர் சுரேஷ்குமார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

* ஒமைக்ரானை முதலில் கண்டுபிடித்த தென் ஆப்பிரிக்காவில் இன்னும் சில தெளிவான அறிகுறிகளைச் சொல்கிறார்கள். ''முந்தையை கொரோனா தொற்று போல இல்லாமல், தொண்டை வலியும் மூக்கடைப்பும் ஆரம்ப அறிகுறிகளாக உள்ளன. மூக்கு ஒழுகுதல், தலைவலியும் சிலருக்கு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட சாதாரண ஜலதோஷத்தின் அறிகுறிகளும், ஒமைக்ரான் அறிகுறிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன'' என்கிறார் தென் ஆப்பிரிக்க மருத்துவர் ரியான் நோச். ஒமைக்ரான் பரவ ஆரம்பித்து ஒரு மாத காலமே ஆவதால், முழுமையாக இன்னும் அதுபற்றி அறியப்படவில்லை என்பதே உண்மை.


* ஆனால், எல்லா நாட்டு டாக்டர்களும் ஒரே குரலில் சொல்லும் ஒரு விஷயம், 'வழக்கமான கொரோனாவைவிட ஒமைக்ரான் தொற்று வீரியம் குறைவாக இருப்பதால் அலட்சியம் காட்ட வேண்டாம்!' என்பதுதான். இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள், ஏற்கெனவே கொரோனா தாக்கி நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் போன்றவர்களுக்கு லேசான அறிகுறிகளுடன் ஒமைக்ரான் தொற்று ஏற்படலாம். ஆனால், தடுப்பூசி போடாதவர்கள், முதியவர்கள், மோசமான இணை நோய் உள்ளவர்களுக்கு அப்படி ஆகாது. எனவே, கவனம் அவசியம்.


* ஒமைக்ரான் ஏன் வேகமாகப் பரவுகிறது என்று ஹாங்காங்கில் ஒரு பரிசோதனை செய்தார்கள். பரிசோதனைக்கூடத்தில் மனித திசுக்களில் இந்த ஆய்வு நடந்தது. சீனாவின் வூஹானில் கண்டறியப்பட்ட ஆரம்ப கால கொரோனா வைரஸுடன் ஒப்பிடும்போது, ஒமைக்ரான் 70 மடங்கு வேகத்தில் பெருகுவது அதில் உறுதியானது. அதனால்தான் ஒமைக்ரான் தொற்றிய ஒருவர், அதிகம் பேருக்கு அந்தத் தொற்றைப் பரப்புகிறார்.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

* டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வீரியம் குறைவான தொற்றாகவும், சாதாரண அறிகுறிகளுடனும் இருப்பது ஏன்? இதையும் அதே ஹாங்காங் ஆய்வு கண்டறிந்தது. உடலின் மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது நுரையீரல் திசுக்களில் ஒமைக்ரான் வைரஸ் பெருகும் வேகம் 10 மடங்கு குறைந்துவிடுகிறது. ஆறுதலான இந்த விஷயம் காரணமாகவே, ஒமைக்ரான் தொற்றின் வீரியம் குறைந்திருக்கிறது.


* மூன்றாவது அலை குறித்து கணிப்புகளைப் பலரும் சொல்லும் நேரத்தில், ''இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் எடுக்கப்பட்ட சீரோ சர்வேக்கள், பெருமளவு மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவி நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பதை உறுதி செய்கின்றன. 88 சதவிகிதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி போட்டிருக்கின்றனர். எனவே, நாம் அதிகம் பீதி அடையத் தேவையில்லை'' என நம்பிக்கை தருகிறார், மகாராஷ்டிர மாநில கொரோனா தடுப்புக் குழுவில் இருக்கும் டாக்டர் சஷாங் ஜோஷி.


* ஒமைக்ரான் நமக்கு உணர்த்தும் முக்கியமான ஓர் உண்மை... பனிக்காலத்தில் ஏற்படும் அவஸ்தைகளை சாதாரண ஜலதோஷம் என்று அலட்சியம் செய்ய வேண்டாம். முறைப்படி கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். லேசான அறிகுறிகள் தெரிந்தாலே தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது.


* தரமான முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது என்று பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றிய பலர், கொரோனா இரண்டு அலைகளிலும் தொற்று ஏற்படாமல் தப்பித்திருக்கிறார்கள். ஒமைக்ரான் தொற்றையும் இப்படி இருந்தால் சமாளிக்க முடியும்.

- அகஸ்டஸ்