Published:Updated:

`ஏன் கொரோனாவைப் பற்றி மட்டும் இவ்வளவு பயம்?' - சில கேள்விகளும் பதில்களும் #MyVikatan

Representational Image
Representational Image

கொரோனா தொற்று குறித்து அரசு காட்டும் முனைப்பும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வும் அதிகமானதோ என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1979-ம் ஆண்டு ஸ்கைலாப் என்ற அமெரிக்காவின் பழுதான செயற்கைக்கோள் பூமியின் மேல் விழுந்து நொறுங்கும் என்ற செய்தி பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. `சாகப் போவது உறுதி’ என்று முடிவு செய்து சிலர் நிலங்களை விற்கத் தொடங்கினார்கள். தினமும் கறி விருந்து சாப்பிட்டார்கள். கடைசியில் அந்தச் செயற்கைக்கோள் இந்துமாக்கடலில் யாருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் விழுந்தது. என் வாழ்நாளில் ஸ்கைலாப்புக்கு அடுத்தபடியான பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது கொரோனா வைரஸ் தொற்று.

கொரோனா தொற்று குறித்து அரசு காட்டும் முனைப்பும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வும் அதிகமானதோ என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. சமூக ஊடகங்களில் கொரோனா பற்றிய செய்திகளும் மீம்ஸ்களும் கணக்கற்று உலவுகின்றன. இவ்வளவுக்குப் பிறகும்கூட மக்களிடையே நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

Representational Image
Representational Image

கொரோனா வைரஸ் என்பது என்ன?

கொரோனா என்பது ஒரு RNA வைரஸ். ஹெச்.ஐ.வி வைரஸ்கூட RNA வைரஸ்தான். பாக்டீரிய செல்களுக்குள் RNA, DNA ஆகிய இரண்டு கருவமிலங்களும் இருக்கும். பாக்டீரியாவால் மனித உடலுக்கு வெளியே வாழவும் பெருகவும் முடியும். வைரஸ் கிருமிகளுக்குள் RNA அல்லது DNA மட்டுமே இருக்கும். வைரஸ் கிருமியால் மனித உடலுக்கு வெளியே, உயிரற்ற பொருள்களில் பெருக முடியாது. கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவியது. சமைக்கப்படாத அல்லது பாதி சமைக்கப்பட்ட புலால் உணவிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியது.

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்.ஐ.வி கிருமியும் குரங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ் கிருமி. ஆப்பிரிக்கக் காடுகளில் யாரோ ஒரு மனிதன் சிம்பன்சி குரங்கை காதலித்திருக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் எப்படிப் பரவுகிறது?

கொரோனா வைரஸ் தொற்று உள்ள ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வைரஸ் கிருமிகள் எச்சில், சளித் திவலைகள் வாயிலாகக் காற்றில் பரவுகிறது. 20% கொரோனா தொற்று காற்றின் வாயிலாக ஏற்படுகிறது.

80% கொரோனா தொற்று பொருள்களின் மூலம் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று உள்ள ஒருவரின் கைகளிலும் ஆடைகளிலும், அவர் பயன்படுத்திய அல்லது தொட்ட பொருள்களின் மீதும் வைரஸ் இருக்கும். ஹெச்.ஐ.வி வைரஸால் உடலுக்கு வெளியே சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். ஆனால், கொரோனா வைரஸ் 30 செல்சியஸ் வெப்பத்தில் கண்ணாடி, இரும்பு, மரம் போன்ற பொருள்களின் மேல்பரப்பில் 72 மணி நேரம் வரை உயிர் வாழ முடியும். இந்தப் பொருள்களைத் தொட்டு, அதே கைகளால் ஒருவர் தன்னுடைய வாய், கண், மூக்கு ஆகியவற்றைத் தொடும்போது வைரஸ் உடலுக்குள் செல்கிறது.

Representational Image
Representational Image

கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 18% பேருக்கு எந்த அறிகுறியும் தோன்றாது. 60% பேருக்கு லேசான காய்ச்சல், சளி ஏற்படலாம். 20% பேருக்கு இருமல், மூச்சுத் திணறல் போன்ற கடுமையான அறிகுறிகள் தோன்றும். தொற்று ஏற்பட்டவர்களில் 10% பேருக்கு மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு செயற்கை சுவாசம் தேவைப்படலாம். 2% முதல் 7% பேர் இந்த நோயால் சாகிறார்கள்.

மனித வரலாற்றில் பல கொள்ளை நோய்கள் லட்சக்கணக்கான பேர்களை சாகடித்திருக்கின்றன. ஏன் கொரோனாவைப் பற்றி மட்டும் இவ்வளவு பயம்?

நவீன பாக்டீரியாக்களை முற்றிலும் அழிக்கக்கூடிய மிகச் சிறந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், வைரஸ் கிருமிகளை முழுவதுமாக அழிக்கக்கூடிய மருந்துகள் இல்லை. பெரியம்மை, தட்டம்மை, போலியோ போன்ற வைரஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் மட்டுமே உள்ளன. அந்தக் கிருமிகளை அழிக்கக்கூடிய மருந்துகள் இல்லை. எய்ட்ஸ் நோயை முழுமையாகக் குணமாக்கக்கூடிய மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் நோய்க்கும், வைரஸ்களுக்கு எதிராகக் கொடுக்கும் பொதுவான மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. இவை ஓரளவுக்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 10% பேருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இவர்களுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும். உலகில் எந்த நாட்டிலும் லட்சக்கணக்கான செயற்கை சுவாசக் கருவிகள் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் 15 லட்சம் பேர் வாழ்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை, தர்மபுரி மாவட்டம் முழுவதுமாக அரசு, தனியார் மருத்துவமனைகள் சேர்த்து, செயற்கை சுவாசக் கருவிகள் 30 இருக்கலாம். ஐரோப்பிய நாடான இத்தாலியில், தீவிர சிகிச்சை வசதிகள் தேவைக்கேற்ப இல்லாததனால், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது. நம் நாட்டில் இருக்கும் தீவிர சிகிச்சை வசதிகளைக் கொண்டு நாம் என்ன செய்ய முடியும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை எப்படி இருக்கிறது?

இந்தியாவில் இன்று வரை சமூகப் பரவல் (Community spread) ஏற்படவில்லை. அதாவது, ஒரு இந்தியரிடமிருந்து இன்னொரு இந்தியருக்கு பரவவில்லை. அரசின் தடுப்பு நடவடிக்கைகளை மட்டுமே இதற்கான காரணமாகக் கூறிவிட முடியாது. இரண்டு காரணங்களால் இந்தியாவில் பெரிய அளவில் தொற்று பரவாமல் இருக்கலாம்.

Representational Image
Representational Image

இந்தியச் சூழலில், இந்த நாட்டின் தட்பவெட்ப நிலையில் கொரோனா வைரஸ் நீண்ட நேரம் மனித உடலுக்கு வெளியே உயிர் வாழ முடியாமல் இருக்கலாம். நுண்ணியிரியல் வல்லுனர்கள் இந்தக் கருத்தை மறுக்கிறார்கள். கொரோனா வைரஸ் குறித்த உண்மைகள் இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை. எனவே இந்திய தட்பவெப்ப நிலையில் அந்த வைரஸ் எப்படி செயல்படும் என்பதை இப்போது கூற முடியாது.

இந்தியாவில் இன்னமும் பெரிய அளவில் கொரோனோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. தென் கொரியா, கொரோனா இருக்கக்கூடிய சந்தேகமுள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தியது. 2,69,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் தென்கொரியா கொரோனா தொற்றை வென்றுவிட்டது.‌ இந்தியாவில் இதுவரை 10,000 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. பரிசோதனைகள் செய்யாமல் நோய்ப் பரவலின் உண்மையான எண்ணிக்கையை கூற முடியாது.

கொரோனா நோயைத் தடுப்பதற்காக இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதுமானவையா?

இந்திய அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திருக்கிறது. நாட்டின் தலைமை அமைச்சரே எச்சரிக்கை விடுக்கிறார். ஓர் ஒத்திகையாக, நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக்குப் பயணம் செய்து திரும்பியவர்கள், நோய்த் தொற்று உள்ளவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள்.

ஆனால், மக்களிடம் முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. டவுன் பஸ்களில் வழக்கமான நெரிசலில்தான் பொதுமக்கள் பயணிக்கிறார்கள். பலர் இன்னமும் கொரோனா வேறு ஏதோ ஒரு கிரகத்தில் நடைபெறுகிற விஷயம் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

குறைந்தது இரண்டு வாரங்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது மிகச் சிறந்தது. இது நோய்த்தொற்று வளையத்தை உடைத்து, நோய்ப் பரவலை முற்றிலுமாகத் தடுக்கும்.

கொரோனா தொற்றுள்ளவர் இருமும் போதும் தும்மும்போதும் காற்றின் மூலம் கிருமிகள் பரவுகின்றன. இவை நம் உடலுக்குள் செல்லாமல் தடுப்பதற்காக முகமூடி அணிய வேண்டும். கண் மூக்கு வாய் தவிர தோல் வழியாக வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பில்லை.

ஏன் கைகளைக் கழுவ வேண்டும்?

கண்ணாடி, உலோகம், துணி போன்ற பொருள்களில் கொரோனா வைரஸ் உயிர் வாழும். நாம் வைரஸ் உள்ள பொருள்களைத் தொட்டு, அதே கைகளினால் கண்களைக் கசக்கினாலோ, மூக்கைத் தடவினாலோ, உதடுகளைத் தொட்டாலோ, வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் சென்றுவிடும். கைகளைக் கழுவுவதின் வாயிலாக இதைத் தடுக்கலாம். அரசு விளம்பரப்படுத்தும் முறையில் குறைந்தது 20 விநாடிகள் கைகளைக் கழுவ வேண்டும்.

ஆன்ட்டிசெப்டிக் அவசியமா?

கொரோனா வைரஸை சுற்றி இருக்கும் உரை கொழுப்பினால் ஆனது. சோப்பு போட்டுக் கழுவினாலே வைரஸ் இறந்துவிடும். ஆன்ட்டிசெப்டிக் இருந்தால், சோப்பினால் கழுவிய பிறகு பயன்படுத்தலாம். கட்டாயமில்லை.

கைகளைக் கழுவுவதைவிட, கைகளை முகத்துக்கு அருகில் கொண்டு சொல்லாமல் இருப்பது அவசியம். நம்மையறியாமல் நூற்றுக்கணக்கான முறை நம் கைகளை முகத்திற்கு கொண்டு செல்கிறோம். இது கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒன்று.

Representational Image
Representational Image

என்ன செய்ய வேண்டும்?

இன்னமும் அதிக அளவில் பரிசோதனைகள் செய்து நோய்ப் பரவலின் உண்மையான நிலையைக் கண்டறிய வேண்டும்.

`பரிசோதனை பரிசோதனை பரிசோதனை...'

என்பதே கொரோனா நோய்த் தடுப்புக்கான தாரக மந்திரமாக உலக சுகாதார நிறுவனத்தால் முன்மொழியப்பட்டிருக்கிறது.

கைகளைக் கழுவுவது, மற்ற மனிதர்களிடம் இருந்து தள்ளி இருப்பது, கைகளை முகத்துக்கு அருகில் கொண்டு சொல்லாமல் இருப்பது இவை குறித்த விழிப்புணர்வை மேலும் பரப்புரை செய்யப்பட வேண்டும். காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்புரையை இன்னமும் தீவிரப்படுத்த வேண்டும்.

கொரோனா இந்தியாவில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?

இந்தக் கட்டத்தில் இது குறித்துப் பேசுவது, முழுக்க, முழுக்க ஊகத்தின் அடிப்படையிலானதாகவே இருக்கும். இந்தச் சமயத்தில் நோய்ப் பரவலை கவனமாகக் கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அரசு தரும் அறிவுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும்.

21-ம் நூற்றாண்டின் மருத்துவமும் அறிவியலும் இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றி காணும் என்ற நம்பிக்கையோடு அறிவியலுக்கு ஒத்துழைப்போம்.

- மருத்துவர் இரா. செந்தில்

(தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு