கொரோனா சிறப்பு பாலிசிகளை நம்பி வாங்கலாமா? விரிவான அலசல்! #VikatanAnalysis
இந்தக் கொரோனா பாலிசி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலிசியாகும். இந்த பாலிசிதாரருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான சிகிச்சைக்கு கவரேஜ் தொகையை ஒரே தவணையாகக் கொடுத்துவிடுவார்கள். அதோடு அந்த பாலிசியின் செயல்பாடு முடிந்துவிடும்.
கடந்த காலங்களில் எத்தனையோ வைரஸ் தாக்குதல்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், அப்போது இல்லாத ஓர் உயிர் பயம், கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்த வைரஸின் தாக்குதலால் இதுவரை உலகெங்கும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 480-ஐ கடந்துவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் பொதுமக்கள் மட்டுமன்றி, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரவும் வேகத்தைக் கணிக்கவே முடியாததாக உள்ளது.

ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிவதற்கே இரண்டு மூன்று வார காலமாகிறது. காய்ச்சல், சளியால் அவதிப்பட்டாலே கொரோனா பாதிப்பு இருக்கலாமோ என்று பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும்கூட தனிமைப்படுத்தப்பட்டே சிகிச்சையளிக்கப்படுகிறார்கள். அதன்பின்பும் கொரோனா பாதிப்பு தொடர்ந்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும். ஆக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கான சிகிச்சைச்செலவு அதிகமாக இருக்கிறது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களால் அதனை எதிர்கொள்வது சவாலான ஒன்றாகும்.
கொரோனா தாக்குதலால் இந்தியா ஒரு மாத காலமாக லாக் டௌனில் இருக்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் தொழில் நிறுவனங்களும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மளிகை, காய்கறிக்கடை உட்பட சில அத்தியாவசியக் கடைகளுக்கு மட்டுமே திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் கையிருப்பு குறைந்துவருகிறது. விலைவாசியோ உயர்ந்து வருகிறது. சிக்கனமாகச் செலவு செய்யும் கட்டாயச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் தாக்கப்பட்டால் அதற்கான சிகிச்சைச்செலவுக்கு எங்கு செல்வார்கள்?
இந்தச் சூழலில்தான் சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கொரோனாவுக்கான சிகிச்சைக்கென பிரத்யேக பாலிசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த பாலிசிகளுக்கான பிரீமியம் தொகை குறைவாக இருப்பதால், இந்த பாலிசிகளை வாங்கினால் பாதுகாப்பாக இருக்கலாமே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒவ்வொரு பாலிசியின் பிரீமியம் மற்றும் க்ளெய்ம் பெறுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் இருக்கிறது. இந்தக் கொரோனா பாலிசிகளை வாங்கலாமா, வாங்குவதானால் எந்த பாலிசியை வாங்கலாமென்று நிதி ஆலோசகர் ஸ்ரீதரனிடம் கேட்டோம்.
``கொரோனாவுக்கான சிறப்பு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்துமே ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஒழுங்குமுறை விதிகளுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டார் ஹெல்த் & அலையன்ஸ் இன்ஷுரன்ஸ் தவிர மற்ற பாலிசிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தோடு இணைந்து கொண்டுவந்துள்ளன. பார்தி ஆக்ஸா பாலிசியானது ஏர்டெல் பேமன்ட் நிறுவனத்தோடு இணைந்து கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை ஏர்டெல் பேமன்ட் பேங்கிங் பயன்பாட்டாளர்கள் மட்டுமே எடுக்க முடியும். ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் பாலிசியைப் பொறுத்தவரை ட்ரூ பேலன்ஸ் எனும் மொபைல் ரீசார்ஜ் ப்ளாட்ஃபார்மோடு இணைந்து கொண்டுவரப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனம், யெஸ் பேங்கோடு இணைந்து கொண்டுவந்துள்ளது.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஒழுங்குமுறை விதிமுறைப்படி, பொதுவான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியிலேயே கொரோனா சிகிச்சைக்கான செலவுக்கும் க்ளெய்ம் செய்யலாம். எனவே ஏற்கெனவே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கைவசம் வைத்திருப்பவர்கள், இந்தச் சிறப்பு பாலிசியை வாங்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளை, கைவசமுள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏற்கெனவே பயன்படுத்தி முடித்தவர்கள், இதற்குமேல் அதில் க்ளெய்ம் செய்ய முடியாது என்றபட்சத்தில் இந்தக் கொரோனா பாலிசியை எடுக்கலாம். இதுவரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியே எடுக்காதவர்களும் கொரோனா சிறப்பு பாலிசியை வாங்கலாம்.
கொரோனா பாலிசி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலிசியாகும். இந்த பாலிசிதாரருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான கவரேஜ் தொகையை ஒரே தவணையாகக் கொடுத்துவிடுவார்கள். அதோடு அந்த பாலிசியின் செயல்பாடு முடிந்துவிடும். அதன்பின் பயன்படுத்த இயலாது. அதேபோல, காத்திருப்புக் காலம், கவரேஜ் தொகை, பிரீமியம் தொகை, அந்த பாலிசியால் கிடைக்கும் நன்மை போன்றவற்றில் ஒவ்வொரு பாலிசிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டே தேர்வு செய்ய வேண்டும்.

பார்தி ஆக்ஸா - ஏர்டெல் பேமென்ட் பாலிசியானது, கோவிட்-19 பரிசோதனைக்குப் பிறகு உறுதிசெய்யப்பட்ட அல்லது அரசாங்க/ராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் ட்ரூ பேலன்ஸ் பாலிசியை, அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வக பரிசோதனைக்குப் பிறகு உறுதிசெய்யப்பட்டவர்கள் பயன்படுத்தலாம். இதன் காத்திருப்புக்காலம் 14 நாள்கள். அதன்பின்புதான் பாலிசியைப் பயன்படுத்த முடியும்.
ஸ்டார் ஹெல்த் & அலையன்ஸ் இன்ஷுரன்ஸ் பாலிசியை, கோவிட்-19 பரிசோதனைக்குப் பிறகு உறுதிசெய்யப்பட்ட அல்லது அரசாங்க/ராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் காத்திருப்புக்காலம் 16 நாள்கள். 8 - 65 வயது வரையிலானவர்களுக்கும் கவரேஜ் உண்டு. இந்த பாலிசியில் ஐசியு மற்றும் வென்டிலேட்டர் சப்போர்ட்டுக்கு கவரேஜ் கிடைக்காது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷுரன்ஸ் மற்றும் யெஸ் பேங்க் பாலிசியைப் பொறுத்தவரை, 15 நாள்களுக்கு கோவிட்-19 சிகிச்சை மற்றும் வேலை இழப்பு கவர் செய்யக்கூடியது. இது யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக பாலிசியாகும்" என்றார்.

கொரோனா சிறப்பு பாலிசிகளைப் பொறுத்தவரை பிரீமியம் தொகை குறைவாக உள்ளது. எனவே, எந்த பாலிசியும் இல்லாதவர்கள், முன்னெச்சரிக்கையாக இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். கொரோனாவுக்குத் தற்போது கொண்டுவரப்பட்டதுபோல டெங்குக் காய்ச்சல் பரவிய காலத்திலும் இதேபோல டெங்குக்காகவே சிறப்பு பாலிசி கொண்டுவரப்பட்டது. எனவே இத்தகைய நடவடிக்கை ஒன்றும் புதிதல்ல. கொரோனா சிறப்பு பாலிசிகளை மேலும் சில நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இணையத்தில் தேடினால் அனைத்து விவரங்களும் கிடைக்கும். அவற்றில், உங்களுக்குப் பொருத்தமான பாலிசியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் ஆலோசகர்களைத் தொடர்புகொண்டாலும் அவர்கள் வழிகாட்டுவார்கள்.