Published:Updated:

அல்ஸைமர் நோயை குணப்படுத்த முடியுமா? | முதுமை எனும் பூங்காற்று

முதுமை

யார் யார் வந்தனர்? யார் யார் போயினர்? இன்று காலையில் என்ன நடந்தது? என்பது கூட அவர்கள் நினைவில் இருப்பதில்லை. தான் உணவு உண்டதையே மறந்து விட்டு மறுபடியும் உணவு வேண்டும் என்று ஒரு குழந்தையைப் போல அடம்பிடிப்பார்.

அல்ஸைமர் நோயை குணப்படுத்த முடியுமா? | முதுமை எனும் பூங்காற்று

யார் யார் வந்தனர்? யார் யார் போயினர்? இன்று காலையில் என்ன நடந்தது? என்பது கூட அவர்கள் நினைவில் இருப்பதில்லை. தான் உணவு உண்டதையே மறந்து விட்டு மறுபடியும் உணவு வேண்டும் என்று ஒரு குழந்தையைப் போல அடம்பிடிப்பார்.

Published:Updated:
முதுமை

டாக்டர் அலோசிஸ் அல்ஸைமர், ஜெர்மனியிலுள்ள மனோதத்துவப் பேராசிரியர் இந்நோயை 1907ம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடித்தார். அவர் பெயராலே இந்நோய் அழைக்கப்படுகிறது.

டிமென்சியாவின் அறிகுறிகள் மெதுவாக வெளிப்படுவதால் அதை எளிதில் கண்டு கொள்ள முடியாது. அவருடைய நடை, உடை, பாவனைகள் மற்றும் பேச்சில் சிறு சிறு மாற்றங்கள் வெளிப்படும். இதை கூட இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தான் இவருக்கு மறதி நோய் இருக்குமோ என்று சந்தேகம் வரக்கூடும். அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் டிமென்சியா உண்டா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.

முதுமை
முதுமை

அல்ஸைமர் நோயின் பத்து அறிகுறிகள்

1.மறதி

இந்நோயின் முதல் அறிகுறியே மறதியில் தான் ஆரம்பமாகிறது. இவர்கள் மறதி மற்றும் கவனக்குறைவால் எதையும் மனதில் பதிய வைக்க முடிவதில்லை. இவர்களின் மறதியில் ஒரு தனித்தன்மை உண்டு. முக்கியமாக அண்மைக்கால நினைவு (Recent memory) பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால், அதில் கவனம் செல்லாததால் அதை நினைவில் பதிய வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் அண்மைக்கால நினைவுகள் அற்றுப்போய் விடுகின்றன. யார் யார் வந்தனர்? யார் யார் போயினர்? இன்று காலையில் என்ன நடந்தது? என்பது கூட அவர்கள் நினைவில் இருப்பதில்லை. உதாரணம்: தான் உணவு உண்டதையே மறந்து விட்டு மறுபடியும் உணவு வேண்டும் என்று ஒரு குழந்தையைப் போல அடம்பிடிப்பார். ஆனால் கடந்த கால நினைவுகள் (Past memory) நிலைத்திருக்கும். அதனால் அதைப் பற்றியே பேசிக் கொண்டும், நினைத்துக் கொண்டும் வாழ்ந்து வருவார். உதாரணம்: தான் எப்பொழுது உத்தியோகத்தில் சேர்ந்தது, எந்த, எந்த ஊரில் வேலை பார்த்தது. யார், யார் நண்பர்கள் என்பதை எல்லாம் நன்றாகவே நினைவில் வைத்து இருப்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. பொருளைத் தேடுவது

வைத்த பொருளை மறந்து விட்டு வீடு பூராகவும் தேடுவது. கடைசியாக அவர் தேடிய கண்ணாடி, கைகடிகாரம், மணிபர்ஸ் எல்லாமே அவரிடமே தான் இருக்கும்!

3. நடை, உடை, பாவனைகளில் மாற்றம்

இதில் ஒரு மாற்றம் தெரியும். சுத்தமாக பளிச்சென உடை உடுத்துபவர், அழுக்கான கசங்கிய சட்டையை அணிவார். சட்டை பொத்தானை மாற்றி போட்டுக் கொள்வார், காலணியை பொறுத்தமாக அணியமாட்டார். வில் தைகளோடு குச்சி ஐஸ் கீரிம் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார் அல்லது தெரு நாயை கல்லால் அடிக்க துரத்திக் கொண்டு போவார். இப்படி அவருடைய எல்லா செயல்களும் சற்று வழக்கத்திற்கு மாறாகவே இருக்கும்.

முதுமை
முதுமை

4. தெரிந்த வேலைகள் செய்வதில் தடுமாற்றம்

பழக்கப்பட்ட வேலை செய்வதில் சற்று தடுமாற்றத்தையும் சிரமத்தையும் காணலாம். தட்டில் சாதம் இருக்கும் ஆனால் அதை எடுத்து சாப்பிட வேண்டும் என்ற யாராவது சொன்னால் தான் அதைச் செய்வார், மற்றும் போன் ரீசிவரை சரியான இடத்தில் வைக்கவும் மறந்து விடுவார்.

5. இடம், காலம் அறிவதில் சிரமம்

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூறத் தெரியாது. உதாரணம்: மருத்துவரின் கிளினிக்கை ஹோட்டல் என்பார். காலை, மாலை என்ற வித்தியாசமும் தெரியாது.

6. பேசுவதில் சிரமம்

பேச்சு சரியாக வராது. சரியாக சொல்லக் கூடிய வார்த்தையை சொல்ல முடியாமல் தவிப்பார் அல்லது அதற்குப் பதிலாக வேறொரு தவறான வார்த்தையை சொல்லிவிடுவார்.

7. முடிவு எடுப்பதில் சிரமம்

ஒரு காரியத்தை யோசித்து அதற்கு தகுந்த முடிவு எடுப்பதில் சிரமப்படுவார்.

8. பகுத்தறியும் தன்மை குறைதல்


ஒருபொருளைபகுத்தறியும்தன்மையும்குறையும். உதாரணம்: இட்லியைபூரிஎன்பார். பூரியைப்பார்த்துஇட்லிஎன்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

9. மாறுபடும் மனோபாவம்

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மனோ நிலை அடிக்கடி மாறும். சில நேரங்களில் அமைதியாகவும், மற்ற சில நேரங்களில் கோபமாகவும் மற்றும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்.

10. எதையும் ஆரம்பிப்பதில் தயக்க நிலை

புதியதாக எந்த காரியத்தையும் தொடங்க மாட்டார். அப்படியே செய்தாலும் அதில் முழு கவனமும் இருக்காது.

இந்நோயின் தன்மை தீவிரமடைய அடைய, ஒருவர் அன்றாடம் செய்யும் வேலைகள் பாதிக்கப்படும் (Activities of Daily Living). அதாவது அவர் குளிப்பதற்கும் உடை உடுத்துவதற்கும், சாப்பிடுவதற்கும் மற்றவர் உதவி தேவைப்படும். மறதி நோய் சற்று முற்றிய நிலையில் கூட இருப்பவர் யார் யார், தான் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் போய்விடும். அவரை அறியாமலேயே சிறுநீர் மற்றும் மலம் வீட்டிலேயே எங்கு வேண்டுமானாலும் போய் விடுவார். அவர் ஒரு குழந்தையாக மாறி விடுவார். கடைசியாக தம்மையே மறந்து ஒரு தாவர வாழ்க்கையை வாழ்வார். அதாவது சுருக்கமாக சொன்னால் மனதளவில் இறந்து, உடல் அளவில் வாழும் மனிதர்களாக இருப்பார்கள். இறுதியாக உணவு குறைவதால் உடல் இளைக்க ஆரம்பித்து விடும். படுக்கைப் புண், நெஞ்சில் சளி மற்றும் சளி நெஞ்சில் அடைத்தல் போன்ற தொல்லைகள் ஏற்படும். டிமென்சியா ஆரம்பித்ததிலிருந்து சுமார் 7 - 10 ஆண்டுகளுக்குள் அவருடைய இறுதிப் பயணம் முடிந்து விடும்.

முதுமை
முதுமை

நோயைக் கண்டறிவது

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் தான் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாததால் அவராகவே மருத்துவரிடம் செல்லமாட்டார். கணவன், மனைவி அல்லது உறவினர்கள் தான் அவரை அழைத்து வருவார்கள். நோயாளிடம் என்ன தொந்தரவு என்று கேட்டால் அதற்கு அவர் பதில் சற்று ஆச்சரியமானதாக இருக்கும். "எனக்கு ஒன்றுமில்லை, இவர்கள் தான் என்னை அழைத்து வந்தார்கள் அவர்களையே கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு அமைதியுடன் இருப்பார். ஆகையால் உறவினரிடம் அவருடை தொல்லைகள் பற்றிய முழு விவரத்தையும் பொறுமையாக மருத்துவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் அவர் உடலை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். டிமென்சியாவுக்கு வேறு எதாவது காரணங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்ய முழு உடல் பரிசோதனை அவசியம். உதாரணம்: தைராய்டு தொல்லை, உதறுவாதம், பக்கவாதம், உயர்இரத்த அழுத்தம்.

நினைவாற்றலை மதிப்பிடுதல்

முழுமையான உடல் பரிசோதனைக்குப் பின்பு ஒருவரின் நினைவாற்றலை உளவியல் நிபுணர் (Psychologist) மூலம் அறியப்படும்.

கடிகாரம் வரையும் பரிசோதனை (Clock Drawing Test)

ஒருவருடைய கவனம், புத்தி கூர்மை மற்றும் வெளிப்படுத்தும் திறமை போன்றவைகளை அறிய இப்பரிசோதனை செய்யப்படும். இதை எளிதில் செய்ய முடியும். ஆனால் ஒருவருடைய படிப்பறிவு, கண் பார்வை மற்றும் எழுதும் திறமை பொறுத்து பரிசோதனையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உதாரணம்: ஒருவரை கடிகாரம் வரைந்து அதில் 11 மணி 10 நிமிடம் என்று குறிக்கச் சொல்லலாம். அதில் கடிகாரம் வட்டம் போட்டால் ஒரு அளவீடு, கடிகாரம் எண்களை சரியாக போட்டால் இரண்டு அளவீடு, கடிகாரம் முள்கள் சரியான நேரத்தை காட்டினால் மூன்று அளவீடு. மூன்றுக்கு மூன்று (3/3) எடுத்தால் அவர் நினவைாற்றல் நன்றாக இருக்கிறது. அதற்கு மாறாக ஒன்று மட்டும் எடுத்தால் (1/3) டிமென்சியா உள்ளவராக எண்ணலாம்.

கடிகாரம் வரையும் பரிசோதனை

கடிகாரம் வரையும் பரிசோதனை
கடிகாரம் வரையும் பரிசோதனை

• நினைவாற்றலை அறிய உதவும் பரிசோதனை (Montreal Cognitive Assessment)

இது மருத்துவர்களாலும் மற்றும் உளவியல் நிபுணர்களாலும் ஒருவரின் நினைவாற்றலை அறிய செய்யப்படும் முக்கியமான பரிசோதனை. இது மிகவும் நம்பகத் தன்மையுடையதாகும். இப்பரிசோதனையில் கடிகாரம் வரையும் பரிசோதனையும் சேர்ந்து இருப்பதால் ஒருவரின் நினைவாற்றலை அறிய இப்பரிசோதனை ஒன்றே போதுமானது ஆகும்.

● நினைவாற்றலை அறிய உதவும் சிறு பரிசோதனை (Mini Mental State Examination Test)

குறியீட்டின் மொத்த அளவு 30

 • அறிவுத் திறன் நன்றாக உள்ளது - 25 - 30

 • ஓரளவுக்கு குறைந்து உள்ளது - 20 - 25

 • மேலும் சற்று குறைந்து உள்ளது - 15 – 20

 • மிகவும் குறைந்துள்ளது - 15 கீழ்

மேற்கண்ட பரிசோதனைகள் எல்லாம் டிமென்சியாவை கண்டறிய மருத்துவர்களுக்கு ஒர உதவும்.

பரிசோதனைகள்

மருத்துவர் நோயாளியின் உடலை முழுமையாகப் பரிசோதித்த பின்பு, உளவியல் நிபுணர் நினைவாற்றலை அறியும் பரிசோதனைகளை செய்வார். அதன் பிறகு டிமென்சியா வருவதற்கான காரணங்களை கண்டறிய கீழ்கண்ட பரிசோதனைகள் செய்யவேண்டும்.

 • முழு இரத்த பரிசோதனை (Full blood count)

 • மார்பு எக்ஸ்ரே (X-ray Chest)

 • சுருள் படம் (E.C.G.)

 • சி.டி. மூளை பகுதி (C.T.Brain) - தலையில் அடிபட்டு மூளையில் இரத்த கட்டி ஏற்படுதல் அல்லது எலும்பு முறிவு பற்றி அறிய உதவும்.

 • எம்.ஆர்.ஐ. (M.R.I.. Brain) - மூளையில் இரத்த ஓட்டம், கட்டி போன்றவற்றை அறிய உதவும்

 • பெட் ஸ்கேன் (PET Scan Brain)- இப்பரிசோதனை மூலம் அல்ஸைமர் டிமென்சியாவை கண்டறிய முடியும். மேலும் வேறு காரணங்களால் வரும் டிமென்சியாவையும் கண்டு கொள்ள முடியும்.

முதுமை
முதுமை

நோயாளிக்குச் செய்யும் முழுமையான உடல் பரிசோதனை, நினைவாற்றலை அறிய உளவியல் நிபுணர் செய்யும் பரிசோதனை, இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஒருவர் டிமென்சியாவினால் பாதிக்கப்பட்டவரா இல்லையா? என்பதை சுமார் 80% உறுதி செய்யப்பட முடியும். மேலும் அது எந்த நிலையில் (ஆரம்பம் அல்லது முற்றிய) உள்ளது என்பதையும் கண்டுகொள்ள முடியும். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒருவருக்கு டிமென்சியா நோய் ஏற்பட்டுள்ளதா அல்லது காரணமின்றி அந்நோய் (அல்ஸைமர் டிமென்சியா) ஏற்பட்டுள்ளதா என்பதையும் அறிய முடியும்.

சிகிச்சை முறை

டிமென்சியா வருவதற்கு எதாவது காரணம் கண்டறியப்பட்டால் அதற்கு தக்க சிகிச்சை அளித்தால் ஞாபக மறதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உதாரணம்:

 • டிமென்சியாவுடன் மனச்சோர்வு (Depression) உள்ளவர்களுக்கு மனச்சோர்வுக்குண்டான சிகிச்சையளித்தால் டிமென்சியாவில் சற்று குணம் தெரியும்.

 • மதுவை நிறுத்தினால் நினைவாற்றல் திரும்பும்.

 • மருந்துகள் - துாக்க மாத்திரை, மனநோய்க்கு கொடுக்கும் மாத்திரை. இவைகளை குறைப்பது அல்லது நிறுத்துவதின் மூலம் நினைவாற்றலை மீண்டும் பெறலாம்.

 • தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் தைராய்டு மாத்திரை மூலம் மறதியை மீண்டும் பெறலாம்.

 • வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் அதை ஊசி மருந்து செலுத்துவதின் மூலம் மறதி நோயை குணப்படுத்த முடியும்.

 • மூளையில் இரத்தக் கட்டி (Haematoma) அல்லது வேறு ஏதாவது கட்டி (Tumor) இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்த முடியும்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன்
டாக்டர் வி.எஸ்.நடராஜன்

அல்ஸைமர் டிமென்சியா - சிகிச்சை முறை

அல்ஸைமர் நோயை பூரணமாக குணப்படுத்த கூடிய மருந்துகளை இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை, இருப்பினும் அதன் வீரியத்தைக் குறைக்க ஒரு சில மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் நரம்பு மண்டலங்களை (Neuroprotectives) பாதுகாக்கும் தன்மை கொண்டவை. இவைகள் மூலம் சிகிச்சை அளித்துப் பார்க்கலாம்.

உறவினர்களின் நிலை

நோயாளியை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இரவு பகல் என்று நேரம் காலம் பாராமல் ஒரு மனவளர்ச்சி குன்றிய (பெரிய) குழந்தையை பார்ப்பது போல் இவர்களை கவனித்து வரவேண்டும். இவர்கள் எவ்வளவு செய்தாலும் அதனுடைய அருமை, பெருமை டிமென்சியா நோயாளிக்கு தெரியாது. ஆகையால் பல நேரங்களில் மனசோர்வும் விரக்தியும் ஏற்படுவதுண்டு. இத்தோடு இவர்களின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்படும். நேரத்திற்கு உணவு இல்லை, உறக்கம் இல்லை. நோயாளியின் கவனிப்பு, வேலைச் சுமை, இத்தோடு குடும்பத்தில் ஏற்படும் அன்றாட பிரச்சனைகள் இவை அனைத்தும் உறவினர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இத்தோடு நோயாளியின் தொடர் சிகிச்சையால் நிதி வசதியும் பாதிக்கப்படும். இளம் கணவர் மனைவி இடையே தாம்பத்திய உறவும் சீர்கேடும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.


டிமென்சியாவை பூரணமாக குணப்படுத்தக் கூடிய மருந்து இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்நோய் மேலை நாடுகளில் அதிகம் உள்ளதால் நோயைக் குணப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவிலேயே குணம் அடைவதற்கான சிகிச்சை முறைகள் வரலாம் என்ற நம்பிக்கையோடு இருப்போம் !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism