மூன்றடுக்கு கவச உடை, வியர்வையில் புழுங்கும் உடல்... கொரோனா வார்டு பணியாளர்களின் வாழ்வில் ஒரு நாள்!

தமிழக அரசு மருத்துவமனைகளிலுள்ள கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்களின் அனுபவங்கள் இங்கே....
ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழந்துதான் ஆக வேண்டும் என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருப்போம். உலகமே கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்க, அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற நமக்குக் கேடயமாக இருப்பவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்தான். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் பட்டியலில் அவர்களுக்கு சிகிச்சையளித்தவர்களின் எண்ணிக்கையும் இடம்பெறுவது மனதை வருந்தச்செய்கிறது.

நோயாளிகளுக்கான சிகிச்சையில் தன் இன்னுயிரையும் பணயம் வைத்துப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர் மருத்துவத் துறையினர். தன்னலமற்ற சேவையில் ஈடுபடும் அவர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருப்பது அவர்கள் அணியும் கவச ஆடைகள்தான். காற்றுகூட நுழைய முடியாத அந்த ஆடையை அணிந்து கிட்டத்தட்ட தங்கள் ஐம்புலன்களையும் அடக்கித்தான் பணியாற்றுகின்றனர். தமிழக அரசு மருத்துவமனைகளிலுள்ள கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்களின் அனுபவங்கள் விகடன் வாசர்களுக்காக....
பெண் செவிலியர்களுக்கு இணையாகப் பணியாற்றும் ஆண் செவிலியரின் கொரோனா வார்டு அனுபவம்:
̀̀̀̀`எனக்கு இரவுப் பணி என்பதால் 12 மணி நேரம் கொரோனா வார்டில் பணியாற்ற வேண்டும். இரவு 7 மணிக்குப் பணிக்காக மருத்துவமனைக்குச் செல்வேன். கொரோனா வார்டு என்பது தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டமே இருக்காது. நுழையுமிடத்தில் பகலில் பணியில் இருந்த செவிலியரிடமிருந்து நோயாளிகளுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்த விவரங்கள், இரவுப் பணியில் நாங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த விவரங்களையும் பெற்றுக்கொள்வோம். கொரோனா வார்டுக்குப் போவதற்கு முன்பாக இருக்கும் அறையில் உடை மாற்றித் தயாராக வேண்டும். கவச ஆடைகளை அணிந்தபிறகு வேறு எந்தப் பணியும் செய்ய முடியாது என்பதால் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கழிவறைக்குச் சென்று வருவது போன்ற அனைத்து வேலைகளையும் முன்னதாகவே முடித்துவிட வேண்டும்.

ஆடை மாற்றும் அறையிலேயே ஹேண்ட் சானிடைஸர், கவச ஆடைகள் அனைத்தும் இருக்கும். அங்கு சென்றதும் அணிந்திருக்கும் வாட்ச், செயின் போன்ற ஆபரணங்கள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட வேண்டும். பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டு, நாங்கள் அணிந்திருக்கும் உடைகளை மாற்றிவிட்டு அறுவை சிகிச்சை அரங்கில் அணியும் ஆடையை முதலில் அணிந்துகொள்ள வேண்டும். அந்த ஆடை கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்தமாக இருக்கும். பிறகு கொரோனா வார்டில் அணிவதற்கான பிரத்யேகக் காலணி இருக்கும். அதையும் அணிந்துகொள்வோம். அதன் பிறகு கையுறை, மருத்துவமனையில் பயன்படுத்தும் தொப்பி ஒன்றையும் அணிவோம்.
அதற்குப் பிறகுதான் PPE (Personal Protective Equipment) கிட்டைப் பிரிப்போம். அதில் சட்டையும் பேன்ட்டும் சேர்ந்ததுபோன்ற ஓர் உடை இருக்கும். அதனை அணிந்துகொண்டு, கால்களை மறைக்கும் கவர், முகக்கவசம், கண்களை மறைக்கும் கண்ணாடி ஆகியவற்றை அணிந்துகொள்வோம். PPE கிட்டில் உள்ள ஆடையுடன் சேர்ந்து கழுத்தையும் தலையையும் மறைப்பது போன்ற தொப்பி இருக்கும்.
அதை அணிந்த பிறகு மீண்டும் தலையை மறைக்கும் வகையில் ஒரு கவரை அணிய வேண்டும். அதன் முன்பக்கம் ஒரு ஷீட் போன்று தொங்கும். கண்ணாடிக்கு மேல் அந்த ஷீட் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் கிட்டில் உள்ள கையுறையைம் அணிந்துகொண்டு வார்டுக்குள் நுழைவோம். மொத்தமாக மூன்றடுக்கு ஆடைகளை அணிந்துதான் பணியைத் தொடங்க வேண்டும்.
எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால்கூட பயப்படவேமாட்டேன். இந்த நோய் குணப்படுத்தக்கூடியது என்பதை அறிவேன். இதிலிருந்து பலர் வெற்றிகரமாக மீண்டுள்ளனர்.அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் செவிலியர்
எந்தெந்த நோயாளிக்கு மருத்துவர் என்னென்ன பரிந்துரையை வழங்கியிருக்கிறார் என்பதையும், செவிலியர்கள் என்ன குறிப்பெழுதி வைத்திருக்கிறார்கள் என்பதையும் ஒருங்கிணைத்து, என்னென்ன பணிகள் இருக்கின்றன என்ற தீர்மானத்துக்கு வருவோம். அந்த ஷிஃப்டில் பணியிலிருப்பவர்களுடன் கலந்து ஆலோசித்து எங்களுக்குள் வேலைகளைப் பிரித்துக்கொள்வோம்.
முதலில் நோயாளிகளுக்கான நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றைப் பரிசோதிப்போம். அதன்பிறகு இரவுக்கான மாத்திரைகள் கொடுப்போம். மீண்டும் நோயாளிகள் இரவு உணவு எடுத்துக்கொண்டார்களா, மாத்திரைகளைப் போட்டுக்கொண்டார்களா என்று விசாரிப்போம். நோயாளிகள் ஏதேனும் பிரச்னைகள் இருப்பதாகத் தெரிவித்தால் மருத்துவருக்குத் தகவல் கொடுப்போம்.
இரவு நோயாளிகள் அனைவரும் நிம்மதியாகத் தூங்குகிறார்களா என்பதை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சென்று பரிசோதிப்போம். யாராவது தூங்காமல் சிரமப்பட்டால் மீண்டும் மருத்துவருக்குத் தகவல் கொடுத்து வந்து பார்க்கச் சொல்வோம். காலையில் நோயாளிகள் அனைவரும் சுய சுகாதாரத்தைப் பின்பற்றி காலை நேரத்துக் கடைமைகளை முடிக்கிறார்களா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்வோம். வார்டில் சர்க்கரை நோயாளிகள் இருந்தால் அவர்களின் சர்க்கரை அளவைப் பரிசோதிப்போம். ரத்த அழுத்தப் பிரச்னையுள்ளவர்களுக்கு அதன் அளவையும் பரிசோதிக்க வேண்டும்.

எங்களுக்கான பணிகள் எல்லா நோயாளிகளையும் கவனிப்பது போன்றதுதான் என்றாலும் PPE ஆடையை அணிந்துகொண்டு அந்த வேலைகளைச் செய்வதுதான் மிகப்பெரிய சவால். அந்த ஆடையை அணியும்போது கண்களில் ஒரு கண்ணாடி அதற்கு மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட் இருப்பதால் பார்வை தெளிவாகத் தெரியாது. நோயாளிகளிடமிருந்து ரத்தப் பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பதே கடினமாக இருக்கும்.
நான் ஒருநாள் பணிக்குச் சென்றபோது, கொரோனா வார்டிலிருந்த நோயாளி ஒருவர், 'சார், சரியா பாத்து ஊசியைக் குத்துங்க...நேத்து எடுத்த நர்ஸ் இந்த டிரெஸ்ஸப் போட்டதால பார்வை சரியா தெரியாம, அஞ்சாறு தடவ குத்திட்டாங்க...எனக்கு வலி தாங்க முடியல' என்றார். இதில் செவிலியர்களையும் குற்றம் சொல்ல முடியாது. சரியான பார்வையே தெரியாமல் நாங்கள் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.
அடுத்த பிரச்னை மூன்றடுக்கு ஆடையை அணிந்தாலும் வார்டில் ஏ.சி கிடையாது. ஃபேனும் குறைந்த வேகத்தில்தான் இயக்கப்படும். கோடைக்காலம் என்பதால் வியர்த்து கொட்டிக்கொண்டே இருக்கும். வியர்வையைக் கை வைத்துத் துடைக்கக்கூட முடியாது. அப்படியே வழிந்து ஆடைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும்.
கவச ஆடையை ஒருமுறைப் பயன்படுத்திய பிறகு கழற்றிவிட்டால் அதனை மீண்டும் பயன்படுத்த முடியாது. கவச ஆடைகளுக்கான தேவையும் அதிகமாகயிருக்கிறது, அதற்கான விலையும் அதிகம் என்பதால் கூடுமானவரை ஒருநாள் பணிக்கு ஓர் ஆடையை மட்டுமே பயன்படுத்துவோம்.

அதற்காக 12 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல், கழிவறையைப் பயன்படுத்தாமலே எங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வோம். காலைப் பணிக்கு வரும் செவிலியர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டுக் கிளம்புவோம். பணி நிறைவடைந்ததும் ஆடையை மாற்றும் அறைக்குச் சென்று முதலில் கையுறையின் மீதே சானிடைஸர் போடுவோம். அதற்குப் பிறகு PPE ஆடையை ஒவ்வொன்றாகக் களைய வேண்டும். அதனை ஒரு குப்பைத்தொட்டியில் போட்ட பிறகு மீண்டும் கையில் சானிடைஸர் போட்டு சுத்தம் செய்வோம். அதன் பிறகு அறுவை சிகிச்சை அரங்கு ஆடையையும் மாற்றிவிட்டு எங்கள் உடையை அணிந்து மருத்துவமனையில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்வோம்.
சென்றதும் முதல் வேலையாகக் குளிக்க வேண்டும். தினமும் ஷாம்பூ போட்டு நன்றாகச் சுத்தமாகக் குளிப்போம். ஒருமுறை பல்துலக்கிவிட்டு குளித்து, மீண்டும் பல்துலக்கி குளிக்க வேண்டும். ஒருவேளையே இரண்டு முறை குளிப்போம். அதன்பிறகே சாப்பிடச் செல்வோம். தினமும் வீட்டுக்குச் செல்ல அனுமதியில்லை.
மருத்துவமனை வளாகத்திலேயேதான் தங்கியிருக்க வேண்டும். ஒருவாரம் கொரோனா வார்டில் பணியாற்றிய பிறகு ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோம். அதன் பிறகு ஒரு வாரம் நாங்கள் பணியாற்றிய துறையிலேயே பணியாற்ற வேண்டும்.

அதற்கடுத்த வாரம் மீண்டும் கொரோனா வார்டுக்குப் பணிக்குத் திரும்புகிறோம். ராணுவத்தினர் எல்லையில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடன் போராடுவார்கள். ஆனால் மருத்துவப் பணியாளர்களோ எப்போதும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளுடன்தான் போராடுவோம். உயிரைப் பணயம் வைத்துத்தான் கொரோனா பணியில் இறங்கியிருக்கிறோம். நாங்கள் என்ன சேவை செய்தாலும் மருத்துவர்களுக்குத்தான் அந்தப் பாராட்டும் அங்கீகாரமும் சென்று சேரும். இந்த உலகம் செவிலியர்களுக்கான அங்கீகாரத்தை இப்போதுதான் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன். செவிலியர் பணி என்பது எல்லாருக்கும் கிடைத்துவிடாது. கடவுளின் பரிசாகத்தான் இந்தச் செவிலியர் பணியைக் கருதுகிறேன்" என்று உருக்கமாகப் பேசினார் அந்த ஆண் செவிலியர்.
பொதுவாக ஒரு குடும்பம் அந்த வீட்டின் பெண்ணைச் சார்ந்துதான் இயங்கும். தலைவலி என்று ஒருநாள் அந்த வீட்டுப்பெண் படுத்துவிட்டால்கூட, வீட்டின் இயக்கமே முடங்கிவிடும். ஆனால் ஒரு குடும்பத் தலைவியாகவும் பொறுப்புமிக்க செவிலியராகவும் தன்னுடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் தென்தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் செவிலியர் ஒருவர்.

"கொரோனா வார்டுக்குப் பணியாற்றுவதற்குச் செல்வதற்கு முன்பு வெளியில் கேட்கும் தகவல்கள் அனைத்தும் சற்று பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தின. முதன்முதலில் PPE அணியும்போதுகூட நம்முடைய சருமம் எதுவும் வெளியே தெரிந்துவிடக்கூடாது. அப்படி ஏதாவது நடந்து நமக்கும் தொற்று பாதித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றியது. ஆனால் பணிக்கு உள்ளே நுழைந்த பிறகு நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் பிரதானமாக இருந்ததே தவிர, பிற குழப்பங்கள், பயங்கள் அனைத்தும் பின்னால் சென்றுவிட்டன.
மிகவும் ஆர்வத்துடன் பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். எனக்கு பகல் நேரப் பணி என்பதால் ஆறு மணி நேரம்தான் வேலை இருக்கும். ஆனால் அந்த ஆடையின் வெப்பத்தைத்தான் தாங்கவே முடியாது. ஓடி ஓடி வேலை செய்ய வேண்டும். ஆனால் ஒரு வாய் தண்ணீர்கூட குடிக்க முடியாது. ஒரு கட்டத்தில் மயக்கமாக உணரும் நிலை ஏற்பட்டுவிடும்
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்துதல், தொடாமல் இருத்தல் போன்ற செயல்களால் நோயாளிகள் மிகவும் மனச்சோர்வுடன் காணப்படுவார்கள். ஆனால் நாங்கள் அவர்களிடம் சென்று இயல்பாகப் பேசும்போது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நம்மை யாரும் ஒதுக்கிவைக்கவில்லை என்று சந்தோஷப்படுகின்றனர். நோயாளிகளைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசும்போது நம்மை ஸ்பெஷலாகக் கவனிக்கிறார்கள் என்றும் சந்தோஷப்படுகிறார்கள்.

ஆனால் என் குடும்பத்தினர்தான் இந்த நிமிடம் வரை பயந்துகொண்டே இருக்கிறார்கள். உறவினர்கள் எல்லாம் போன் செய்து 'ஏன் நீ கொரோனா வார்டில் பணியாற்ற ஒப்புக்கொண்டாய்? பாதுகாப்பாக இரு!' என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். நான் பணிக்கு வந்த நாளிலிருந்து என் கணவர் சவரம்கூடச் செய்யாமல் இருக்கிறார். அவ்வளவு பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டிருக்கிறது. என்னுடைய 8 வயதுப் பெண் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். மாமியார், மாமனார்தான் கவனித்துக்கொள்கிறார்கள்.
ஒரு வார காலம் கொரோனா வார்டில் பணி முடிந்து, இப்போது ஒரு வாரம் க்வாரன்டீன் காலத்தில் இருக்கிறேன். வீட்டுக்குச் செல்ல முடியாமல், மருத்துவமனை குவார்ட்டர்ஸில்தான் தங்கியிருக்கிறேன். தினமும் குழந்தையுடன் வீடியோ காலில்தான் பேச முடிகிறது. அவள் எப்போதும் பேசினாலும் எப்போது வீட்டுக்கு வருவீங்க என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறாள்.
ஒருநாள் என் கணவர் குழந்தையை அழைத்துக்கொண்டு என்னைப் பார்க்க வந்தார். தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமே என்ற காரணத்தால் தூரத்திலிருந்து இருவரையும் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். என் குழந்தையைக்கூட அள்ளிக்கொஞ்ச முடியாமல் கனத்த இதயத்துடன்தான் நான் தங்கியிருக்கும் பகுதிக்குத் திரும்பினேன்.

ஆனால் அந்த வார்டில் பணியாற்றும் அனுபவத்தின் அடிப்படையில் கூடுதலாக ஒரு வாரம் பணி செய்யச் சொன்னால்கூட சந்தோஷமாகவே செய்யக் காத்திருக்கிறேன். அதே போன்று எனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டால்கூட அதைக் கண்டு பயப்படவேமாட்டேன். இந்த நோய் குணப்படுத்தக்கூடியது என்பதை அறிவேன். இந்த நோயிலிருந்து பலர் வெற்றிகரமாக மீண்டுள்ளனர். அதனால் நோயைப் பிறருக்குப் பரப்பாமல், தனி மனித சுகாதாரத்தைக் கடைப்பிடித்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் நானும் அதிலிருந்து மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கையிருக்கிறது" என்று கூறி நிறைவு செய்தார்.
இறுதியாக சென்னையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவரிடம் பேசினோம்:
"கொரோனா வார்டில் பணியாற்றுபவர்களுக்கு PPE ஆடையை அணிவதற்கு முன்பாக அணியும் அறுவை சிகிச்சை அரங்கு ஆடைகள் இரண்டு செட் கொடுப்பார்கள். தினமும் பணியை நிறைவு செய்துவிட்டு, மருத்துவமனை குவார்ட்டர்ஸுக்குச் சென்று அதனைத் துவைக்க வேண்டும். இரண்டு ஆடையையும் மாற்றி மாற்றி அணிய வேண்டும். தற்போது ஆறு மணி நேரப் பணி என்பதால் PPE ஆடையை அணிவது சிரமமாகத் தெரியவில்லை. ஓரளவு சமாளித்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டி நேர்ந்தால் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று தெரியவில்லை. குடும்பத்தினரும் மிகவும் பயந்த நிலையில் இருக்கிறார்கள். அதனால் குடும்பத்தினரிடம் கொரோனா வார்டில் பணியாற்றுவது குறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்துதான் வைத்திருக்கிறேன்.
கொரோனா வார்டில் பணியாற்றுவதைச் சந்தோஷமாகச் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. ஆனால் அர்ப்பணிப்புடனும் என் பொறுப்பை உணர்ந்தும் செய்கிறேன். நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைத்து தினமும் பணிக்குச் சென்று வருகிறோம். ஆனால் இன்னும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே கருதுகிறேன்.
பலர் அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்திவிட்டு வெளியில் அலைந்து திரிகிறார்கள். இந்த நோயை ஒழிப்பதற்கு அது வராமல் தடுப்பதுதான் சிறந்த வழி என்பதை உணர்ந்து பொதுமக்கள் எங்கள் நிலையையும் உணர்ந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என்று ஆதங்கமாகப் பேசினார்.
சில மருத்துவமனைகளில் நீண்ட நேரம் கொரோனா வார்டில் பணியாற்றுவோருக்குக் கழிவறைக்குச் செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு முதியவர்கள் பயன்படுத்தும் டயபர் கொடுக்கப்படுகிறது. அதிலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கவச உடையையும் அணிந்து பணியாற்றுவது என்பது மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

நம்மிடம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். வைரஸுக்கு எதிராக முதுகைக் காட்டாமல் நெஞ்சைக் காட்டி நிற்கின்றனர். இதே போன்று கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான மருத்துவத் துறையினருக்கு விகடனின் ராயல் சல்யூட்!