Published:Updated:

`மக்களே சீரியஸ்னஸ் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!’ - வெளிநாட்டுவாழ் தமிழரின் வேண்டுகோள் #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Unsplash )

கட்டுக்கோப்பான, சர்வாதிகார நிர்வாகத்தைக் கொண்ட சீனா, கொரோனாவின் பிடியிலிருந்து தலை தூக்க மூன்று மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஐரோப்பிய நாடுகள் விழி பிதுங்குகின்றன. இத்தாலியின் பல பகுதிகளில் மருத்துவ சேவை ஸ்தம்பித்துவிட்டது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் அதிகமற்ற, முறையான மருத்துவ வசதி பொதுவாக அனைவருக்கும் கிடைக்கும் வசதிகள் பெற்ற ஐரோப்பிய நாடுகளே திணறும் போது, வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு ஜாதிமத கூறுகளையும், மொழி வேறுபாடுகளையும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட இந்தியா மிகக் கடுமையான தற்காப்பு நடவடிக்கைகளை உடனடியாக முடுக்க வேண்டும்.

Representational Image
Representational Image

ஆனால் என் பூர்வீகமான காரைக்காலில், ஒரு அரசியல் பிரமுகர், `ஒரு கூட்டுக் கிளியாக' பாடலின், ` என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்' வரிகள் பின்னணியில் ஒலிக்க, பெருங்குக்கூட்டத்தினூடே தொண்டர்களுக்கு மாஸ்க் அணிவித்துவிடும் காட்சியையும், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்த கரகோஷம் எழுப்பக் கோரிய வேண்டுகோளுக்கு, தாரை தப்பட்டைகளுடன் கூட்டமாக நகர்வலம் செல்லும் வடநாட்டுக் காட்சிகளையும் சோசியல் மீடியாவின் மூலம் வெளிநாட்டில் இருக்கும் நான் காண நேர்ந்தது.

மக்கள் தொற்றுப் பரவலின் அபாயத்தைப் புரிந்துகொள்ளாத கொண்டாட்ட நிலையில் இருக்கிறார்களோ என்ற அச்சம் எனக்குள் மேலிடுகிறது. அதன் விளைவே இக்கட்டுரை...

ஒரு புலவனின் கவிதையால் மகிழ்ந்த மன்னன் அப்புலவனிடம், `நீ என்ன கேட்டாலும் தருகிறேன்' என்கிறான். `நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது மன்னா' எனப் புலவன் அடக்கமாய்க் கூற, `நான் ஒரு சாம்ராஜ்யத்துக்கு அதிபதி என்பதை மறந்து பேசுகிறாய். பொன், பொருள், நிலம் என நீ எதைக்கேட்டாலும் கொடுக்கும் வல்லமை பொருந்தியவன் நான்' என இறுமாப்புடன் கூறுகிறான் மன்னன்.

`சரி மன்னா, அப்படியானால் ஒரு சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்தில் ஒரு பொற்காசை வைத்து, இரண்டாவது கட்டத்தில் அதை இரண்டாக்கி, மூன்றாவது கட்டத்தில் இரண்டை இரண்டால் பெருக்கி, இப்படியாக ஒவ்வொரு கட்டத்தில் வரும் எண்ணிக்கையையும் அதே எண்ணிக்கையால் அடுத்த கட்டத்தில் பெருக்கி, இறுதியில் என்ன வருகிறதோ அந்த எண்ணிக்கைக்கான பொற்காசுகளைத் தாருங்கள் அரசே' என வேண்டுகிறான்.

` இதென்ன பிரமாதம்' எனச் சிரித்த மன்னன், சற்றும் யோசிக்காமல் சதுரங்கப்பலகையைக் கொண்டுவர செய்து பெருக்கலை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே செய்வதறியாது திகைத்து தலைகுனிந்தான். பலகையின் மூன்றாம் கட்டத்தில் நான்காகப் பெருகிய எண்ணிக்கை ஏழாம் கட்டத்திலேயே கோடிகளில் பல்கிப்பெருகியது.

Representational Image
Representational Image

உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன நீதிக்கதையைவிடவும் சிறந்த உதாரணம் இருப்பதாகத் தோன்றவில்லை. மூன்றே மாதங்களில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டிவிட்டது. உலக சுகாதார அமைப்பின் அதிகாரபூர்வமான இந்த எண்ணிக்கை ஏதோ ஒருவகையில் தொற்று இருப்பதை உணர்ந்தோ அல்லது தொற்றின் தீவிரத்தாலோ மருத்துவ மையங்களை நாடியவர்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. கிருமி தொற்றின் தாக்கம் தெரியாதவர்களையும் சேர்த்தால் இன்னும் பல லட்சங்கள் கூடும்.

இந்த மூன்று மாத காலத்தில், உலகின் நான்கு திக்கிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் இதுவரையிலும் கொரோனா கிருமிக்கு எந்தவொரு மருந்தும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. ஒரு தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்கு முன்னால் பல சோதனைகளை தாண்ட வேண்டும். முதல் பரிசோதனை முயற்சியாக வெள்ளை எலிகளின் உடம்பில் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாகப் பல்வேறு வயது மற்றும் வியாதிகளைக் கொண்ட மனிதர்களிடம் சோதித்து, பக்கவிளைவுகளை அறிந்த பின்னரே பரவலான பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இன்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பொதுப் பயன்பாட்டுக்கு வர பலமாதங்களாகும் என்பதுதான் உண்மை.

Representational Image
Representational Image

புது தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சியுடன், புழக்கத்தில் இருக்கும் தடுப்பு மருந்துகளில் ஏதேனும் உதவுமா என்ற வகையிலும் பல்வேறு நாடுகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. உதாரணமாக, மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து கொரோனா பாதிப்பிலிருந்து மீட்பதாக பிரான்ஸ் நாட்டின் பரிசோதனை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இதே பரிசோதனை முயற்சி அமெரிக்காவிலும் நடைபெற்றாலும் அந்த மருந்தின் பக்கவிளைவுகளான அஜீரணக்கோளாறு மற்றும் இதயத்துடிப்பில் ஏற்படுத்தும் மாற்றங்களை நுரையீரல் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளால் தாங்க முடியுமா என்பதை பொறுத்தே இப்பரிசோதனையின் முடிவுகள் அமையும். இதற்கும் நாள்களாகலாம். ஆக, கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்த நமக்கிருக்கும் இரண்டே வழி சுத்தம் காப்பதும் ஊரடங்கலும்தான் !

பொதுவாக ஓர் உயிரைக் காக்க ரத்தம் கொடுக்கவேண்டிய தேவை ஏற்படும். சில நேரங்களில் உடல் உறுப்பையே தானமாகக் கொடுக்கக்கூடிய சூழலும் ஏற்படலாம். தீமையிலும் நன்மையாய் கொரோனா நம்மிடம் இதையெல்லாம் கேட்கவில்லை! உயிர் காத்தல் இதற்கு முன்னர் இவ்வளவு எளிதாய் அமைந்ததில்லை என்பதை நினைவில் கொண்டு தயவுக் கூர்ந்து,

வீட்டிலிருப்போம்! உயிர்கள் காப்போம்!!

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு