Published:Updated:

`துயரத்தில் தோள்கொடுப்போம்!' -அரசு ஊழியர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் #MyVikatan

Representational Image
Representational Image

இத்தருணத்தில் அரசுக்கு நிதி என்பது மிக மிக அவசியமானது. இன்னும் இரண்டு மாத காலங்கள் சமாளிக்கும் அளவிற்கு நிதி ஆதாரத்தை அரசு பெருக்கியாக வேண்டும்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழக முதலமைச்சர், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல அறிவிப்புகளைச் செய்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பிற சலுகைகளையும் அறிவித்துள்ளார். இது போதுமானதல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நிதி நெருக்கடியில் உள்ள ஓர் அரசால் இந்த அளவிற்குதான் செய்ய முடியும் என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் உணர்கிறார்கள். நோய் பரவல், ஏப்ரல் 14-.ம் தேதியோடு முடிந்துவிடும் அதற்குப் பிறகு நாம் அனைவரும் அவரவர் பணிக்குச் செல்லலாம். தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளலாம் என்று நாம் ஒரு உறுதியான முடிவுக்கு வந்துவிட முடியாது. இது இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கப்போகிறது எனத் தெரியவில்லை.

Representational Image
Representational Image

இந்தச் சூழலில், அரசின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், ஏழை எளிய மக்களுக்கு நிதி உதவி வழங்கவும், தமிழக முதலமைச்சர் கொரோனா நோய்த் தடுப்பு நிவாரணத்திற்கு நிதி உதவி வழங்குமாறு பொதுமக்களையும் தனியார் நிறுவனங்களையும் அரசு சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களையும் கொடையாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு,100 சதவிகித வருமான வரிவிலக்கு அளிக்கப்படும் எனவும், ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் நிதி வழங்கினால், அது அரசால் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழல்களில் இதுபோன்று நிதி திரட்டுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், எதிர்பார்த்த வகையில் நோயைக் கட்டுப்படுத்த, நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் போதுமான நிதி கிடைக்குமா எனத் தெரியவில்லை. மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால், நிதி பெருக்குவதில் சிரமம் இருப்பதை உணர முடிகிறது.

இத்தருணத்தில் அரசுக்கு நிதி என்பது மிக மிக அவசியமானது. இன்னும் இரண்டு மாத காலங்கள் சமாளிக்கும் அளவிற்கு நிதி ஆதாரத்தை அரசு பெருக்கியாக வேண்டும். அதற்கு எனது தனிப்பட்ட ஆலோசனையை அரசின் கவனத்திற்கும் அரசுப் பணியாளர்கள் பார்வைக்கும் கொண்டுவர விரும்புகிறேன்.

அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை அரசு நிவாரண நிதிக்கு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

Representational Image
Representational Image

தமிழ்நாட்டில், தற்போது சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், போக்குவரத்துப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறைப் பணியாளர்கள், மின் வாரியப் பணியாளர்கள் எனப் பல துறைகளிலும் பணியாற்றிவருகின்றனர்.

தமிழக அரசு தனது பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 5,500 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழக அரசு இதனை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மட்டும் சுமார் 2750 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஏப்ரல் முதல் தேதி, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சுமார் 8250 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியாக வேண்டும். இத்தருணத்தில், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம்செய்து நிதி திரட்டலாம்.

அதாவது, அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூபாய் 25 ஆயிரம் சம்பளம் கொடுத்துவிட்டு மீதித் தொகையை நிவாரண நிதிக்கு ஒதுக்கலாம். அதேபோன்று, பென்ஷன்தாரர்களுக்கும் இதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இதில் விலக்கு அளிக்கலாம். நல் உள்ளம் கொண்ட அரசு ஊழியர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நிச்சயமாக இதற்கு சம்மதிப்பார்கள் என நம்புகிறேன்.

Representational Image
Representational Image

ஏனென்றால், மூன்று மாத காலத்திற்கு கடன் தவணை கட்டத் தேவையில்லை என்றும், பிற சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக அரசு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஏப்ரல் மாதத்தில் நிதி திரட்ட முடியும். அதைக் கொண்டு கூலித் தொழிலாளிகள், ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு தாராளமாக நிதி வழங்கவும், கொடிய நோயிலிருந்து மக்களைக் காக்க மருத்துவ சேவைக்கும் இந்த நிதி பயன்படும்.

சாப்பிட வழியில்லாமல், குழந்தைகளுக்குப் பால் வாங்கக்கூட காசு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் கோரப் பிடியில் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்கள். கூலி வேலைக்குச் சென்று மாலையில் சம்பளம் வாங்னதும் அரிசி வாங்கி சமைக்கும் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டியது அரசின் தலையாய கடமை. அதற்கு அரசு ஊழியர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினால், ஒட்டுமொத்த மக்களும் அரசு ஊழியர்களைக் கடவுளுக்கு நிகராகப் பார்ப்பார்கள்.

-கே.பாலு, வழக்கறிஞர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு