Published:Updated:

கொரோனா... கொஞ்சம் கூலா ஹேண்டில் பண்ணலாமா? - யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு? #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நோயைவிட நோயைப் பற்றிய பயமே மனிதனைக் கொல்லும் என்பார்கள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழலே காணப்படுகிறது. ஆனால், அனைவரும் தத்தமது பொறுப்புணர்ந்து செயல்பட்டாலே நோய் பரவுதலை கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.

யார் யார் என்னென்ன செய்ய வேண்டும்?

தனிமனிதர்கள்:

1) இன்றைய சூழலில், சமூகவலைதளங்கள் மூலமாக வரக்கூடிய தகவல்களின் உண்மைத்தன்மை பற்றி அறியாமலே அவை தொடர்ந்து பகிரப்படுகின்றன.

எனவே, நாம் அறியாத ஒன்றைப் பற்றி அப்படியே பகிராமல் இருப்பதே, சிக்கலான இன்றைய நாளில் தனி மனிதர்கள் சமூகத்திற்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவையாக இருக்கும். தீயைவிட வேகமாக வதந்தி பரவும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Representational Image
Representational Image

2) கொரோனாவைப் போக்க தனி மருந்துகள் இல்லை. எனவே, பொய்யான மற்றும் போலியான மருந்துகளையும், மருத்துவக் குறிப்புகளையும் கவனமாகத் தவிர்த்துவிட வேண்டும். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே உடலில் வைரஸ் தங்கும் காலமும், நோயின் தாக்கமும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, உடலாலும் மனத்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த மனிதர்களாக நம்மை மாற்றிக்கொள்ளத் தேவையான முயற்சிகளை எடுப்பதே தற்போதைய ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

3) நீர், காற்று, உணவு மூலமாக கொரோனா வைரஸ் பரவாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே, இது சார்ந்து வரும் தகவல்களை நம்பாமல், ஹோட்டல்கள் உள்ளிட்ட வியாபாரங்களுக்கு நாம் வழக்கம்போல கைகொடுக்க வேண்டும்.

4) குழந்தைகளையும், வயதானவர்களையும் வைரஸின் தாக்கம் அதிகம் பாதிக்கும்.

எனவே, வயதானவர்களிடம் வைரஸ் குறித்த தகவல்களை தொடர்ந்து கூறிக்கொண்டிருக்காமல், அவர்களை கவனமுடன் பார்த்துக்கொள்வது சிறந்தது. அவ்வாறே குழந்தைகளையும் கவனமுடன் பராமரிக்க வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த முதியவர்களை முடிந்தவரை செய்தி ஊடகங்களிடமிருந்து விலகியிருக்கச் செய்யலாம்.

வயதானவர்களுடன் நோயைப் பற்றி அதிகம் விவாதிக்காமல் இருப்பதும், குழந்தைகளுக்கு திகிலூட்டாமல் கற்றுத்தருவதும் அவர்களை நோய் மற்றும் பயத்திலிருந்து விடுவிக்கும்.

Representational Image
Representational Image

5) நமக்குத் தேவையான உணவுப்பொருள்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றத்தில் மனிதர்கள் உணவுப் பொருள்களை வாங்கி பதுக்குவது தேவையற்றது. அவ்வாறே கைகழுவ சேனிடைசர்கள் மற்றும் முகக்கவசங்களையும் தேவைக்கு அதிகமாக வாங்கி பதுக்கிவைப்பதும் தேவையில்லாதது. உங்கள் ஊர் கடையில் உள்ள சோப்புகளை முழுக்க நீங்களே வாங்கிவிட்டால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்ன செய்வார்? கொரோனோவைப் பொறுத்தவரை உங்களைச் சுற்றியுள்ளவர்களும் ஆரோக்கியமாக இருந்தால்தான், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவது சிறந்தது.

6) மனிதனுக்கு சுவையூட்டக் கூடிய ஏதேனும் ஒன்று தேவைப்படுகிறது. பேச்சு சுவாரஸ்யம் என்பதும் அதில் அடங்கும்.

எனவே, நமக்கு வரக்கூடிய, நம் காதுகளில் விழுக்கூடிய எல்லா தகவல்களையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்காமல், எது சரியானதோ அதைப்பற்றி மட்டுமே பேசினோம் என்றால், அவற்றை மட்டுமே பிறருடன் பகிர்ந்தோம் என்றால் அனைவருக்குமே நோய் குறித்த பயம் நீங்கும். விழிப்புணர்வும் அதிகமாகும். இந்த விஷயத்தில், பேசுவதைக் காட்டிலும் கேட்பதை அதிகப்படுத்தலாம். "தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பவனைவிட, கேட்பவன் புத்திசாலி" என்பது இன்றைய சூழலுக்கு பொருத்தமானதாய் இருக்கும்.

Representational Image
Representational Image

7) தற்போதைய சூழலில், அரசின் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படைக் கடமையாகும்.

அரசாங்கம்:

1) கொரோனா நோயைத் தடுக்கவேண்டி, அரசு எண்ணற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஆனால், அவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளா அல்லது நோயின் தாக்கம் அதிகமானதால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளா? என்பதை அரசு, மக்களுக்கு தெளிவுபடுத்தி புரியவைத்தல் வேண்டும்.

இன்றைய சூழலில், அரசு நோயின் தாக்கத்தை மறைக்கிறது எனும் மனநிலையில் பலர் உள்ளனர். போகிறபோக்கில் மற்றவர்களுக்கும் இதை கூறிவிட்டுச் செல்கின்றனர். இதனால் மக்கள் மனத்தில் தேவையற்ற பயம் உண்டாகும் சூழல் ஏற்படுகிறது.

இவர்களுடைய மனத்தில் தெளிவை ஏற்படுத்தவேண்டியது அவசியம். இப்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பதை மக்கள் மனதில் ஆழமாகப் பதியவைக்க வேண்டியது அரசின் முக்கியப் பொறுப்பு.

Representational Image
Representational Image

2) பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மற்றும் மால்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், பொது போக்குவரத்து இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பொது போக்குவரத்தை நிறுத்தினால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுமையாகும். எனவே, பொது போக்குவரத்தை முற்றிலும் தடை செய்து, மாஸ் ஷட்டவுன் என்ற ஒரு தற்காப்பு நிலைக்கு அரசு தயாராக வேண்டும்.

3) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைஸர்கள் மற்றும் முகக்கவசங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு முகக்கவசங்கள் உற்பத்தி செய்யும் ஆர்டர்களை வழங்கலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை WHO- வின் வழிமுறையைப் பின்பற்றி சானிடைஸர்கள் தயாரிக்க ஊக்குவிக்கலாம். தொழில் முனைவோர் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலமாக உரிய முறைகளைப் பின்பற்றி சோப்புகள், முகக் கவசங்கள் மற்றும் சானிடைஸர்களைத் தயாரிக்கவைக்கலாம்.

Representational Image
Representational Image

4) சானிடைஸர்கள், முகக் கவசங்கள், சோப்புகள் போன்ற தற்காப்பு உபகரணங்களை அரசு மக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ நியாயவிலைக் கடைகள்மூலம் விநியோகம் செய்யலாம்.

5) நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்பு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், அவரது மனத்தில் நேர்மறை மாற்றத்தை உண்டாக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும். ஓய்வுடன், அவர் வேறு என்ன மாதிரியான உபயோகமான மற்றும் மனமாற்றம் தரும் செயல்களை அந்த நேரத்தில் செய்யலாம் என்பதை அரசு திட்டமிட்டு வழங்க வேண்டும்.

6) வதந்தி பரப்புவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, அதை ஊடகங்கள் மூலம் வெளியிட வேண்டும். இதன்மூலம் வதந்தி பரப்புவது கட்டுப்படுத்தப்படும்.

7) தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த தற்போதைய விழிப்புணர்வுடன், நோய்பாதிப்பு குறைவு மற்றும் அதிலிருந்து மீண்டோர் குறித்த செய்திகளை மக்களிடம் பரப்பும் பணிகளையும் அரசு மேற்கொள்ளலாம். இந்த விஷயத்தில் அரசு நேர்மறையான மனநிலையில் (Positive approach) செயல்படலாம்.

ஊடகங்கள்:

1) இன்றைய சூழலில், ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். தங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை உடனுக்குடன் அப்படியே ஒளிபரப்பிவிடாமல், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, பின்பு அவற்றை மக்களுக்குக் கூறலாம். இதனால் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ பிந்தி, செய்தி மக்களைப் போய்ச் சேரும். "உடனே செய்திகள் என்பதைவிட, முறையான வடிவில் சரியான செய்திகள்" என்பதை அனைத்து ஊடகங்களும் பின்பற்ற வேண்டும்.

Representational Image
Representational Image

2) நோய் விழிப்புணர்வு குறித்த விளம்பரங்களை குறிப்பிட்ட நாள்களுக்கு ஊடகங்கள் இலவசமாக ஒளிபரப்பு செய்யலாம். நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள், விளம்பரதாரர்களை எதிர்பார்க்காமல், தாமே விழிப்புணர்வு விளம்பரங்களைத் தமது இதழ்களில் அச்சடித்து வழங்க முயற்சி எடுக்க வேண்டும்.

3) வழங்கக்கூடிய செய்திகளை பரபரப்புடன் வழங்காமல், பொறுமையாகவும் அமைதியாகவும் மக்களுக்கு பதற்றத்தைக் குறைக்கும் வகையிலும் வழங்கலாம். ஒரே விஷயத்தை பதற்றமாகக் கூறுவதற்கும் பொறுமையாகக் கூறுவதற்கும் புரிதலில் மிகப்பெரிய வேறுபாடு ஏற்படும். இடிச் சத்தம் போன்று ஃபிளாஷ் நியூஸ்களை சில நாள்களுக்காவது ஊடகங்கள் தவிர்த்துவிட வேண்டும்.

4) எங்கெங்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களிடம் உரிய முறையில் கேட்டறிந்து, அவற்றை அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.

5) பிற நாடுகளில் நோயிலிருந்து மீண்டவர்களின் நேர்காணல்களை மொழிபெயர்த்து ஒளிபரப்பி, மக்கள் மனத்தில் நேர்மறை சிந்தனைகளை விதைக்க வேண்டும்.

6) நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விஷயத்தில் அரசு செய்யக்கூடிய தவறுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டுவதுடன், உரிய நிபுணர்களுடன் இணைந்து, அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை ஊடகங்கள் வழங்க வேண்டும். அவ்வாறே அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைப் பாராட்டும்விதமாக அவற்றை மக்களிடம் முழுவதுமாகக் கொண்டுசேர்க்க வேண்டும்.

Representational Image
Representational Image

7) தொலைக்காட்சிகளின் விவாத நிகழ்வுகள், எப்போதுமே ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களையும், பக்கங்களையும் கொண்டிருக்கும். கருத்து சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டுதான். ஆயினும், தற்போதைய சூழலில் இந்த இரு பக்க கத்தியைப் பயன்படுத்தும்போது நோய் குறித்த எதிர்மறை கருத்துகளைக் கூறுகின்ற நபர்களைத் தவிர்த்துவிடுவது ஊடகங்களின் அடிப்படை அறமாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில், ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இந்த நோயை முழுமையாக உலகத்திலிருந்து விரட்ட முடியும். பதற்றமும் படபடப்பும், பயமும் தேவையற்றது. அனைவரும் ஒன்றிணைந்து, தொடுகையைத் தவிர்த்து, "Break the chain" என்பதை மனத்தில் கொண்டு செயல்படல் வேண்டும்.

நமது தேவையற்ற பயத்தைக் குறைத்து, முழுமையான விழிப்புணர்வு அடைவதன் மூலமாக மட்டுமே நோயைத் துரத்த முடியும் என்ற நம்பிக்கையை அனைவருமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

"நம்பிக்கை அதுதானே எல்லாம்!"

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு