முதல் நோயாளி பற்றிய குறைந்தபட்ச விவரங்களைக் கூட சீனா வெளியிடாதது ஏன்? - வாசகர் பார்வை #MyVikatan

இந்தப் பிரச்னையின் ஆரம்பத்திலிருந்தே `வுகான் வைரஸ்' எனக் குறிப்பிட்டு சீனர்களைக் கடுப்பேற்றிக்கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப்...
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
``எனக்கு இப்ப ஓர் உண்மை தெரிஞ்சாகணும்" என்ற ரீதியில் கொரோனா வைரஸ் பரவலின் மூலம் சமூக ஊடகங்களில் சுழன்று கொண்டிருந்த நெட்டிசன்களின் புலம்பல்கள் உலக அரங்குக்கு வந்துவிட்டன. உலக மக்களின் சகஜ வாழ்க்கை முழுவதையும் முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவைக் காரணமாக்கி, முதல்கட்டத் தகவல் அறிக்கையை வாசிக்கத் தொடங்கிவிட்டன மேற்கத்திய வல்லரசு நாடுகள்.

மருத்துவர்களின் முதல்கட்ட எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியது, தொற்றின் ஆரம்ப நாள்களில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்நகரில் பல்லாயிரம் பேர் கூடியது, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தினசரி நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும்போது மூன்று மாதங்களுக்கும் மேலாக கொரோனாவின் பிடியிலிருந்த சீனாவின் மொத்த கொரோனா உயிரிழப்பு வெறும் மூவாயிரத்து சொச்சம் மட்டுமே என்பது போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களைக் கூட புறந்தள்ளிவிடலாம். காரணம், உலகின் பல நாடுகளும் ஆரம்பத்தில் மேற்சொன்ன தவறான மதிப்பீடுகளுடன் தான் கொரோனா பரவலை அணுகின.
ஆனால் கொரோனா வைரஸ் செயற்கையாக தயாரிக்கப்பட்டது என்பது உண்மையில்லை என்றாலும் அது வுகான் நகரிலிருக்கும் கிருமி பரிசோதனைக்கூடங்கள் ஒன்றிலிருந்து கவனக்குறைவான செயல்பாடுகளின் வாயிலாக வெளியேறியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் உலக அரங்கில் வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது.
இப்படித்தான் முதல் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என சந்தேகம் எழுப்பும் அமெரிக்க ஊடகங்கள் அதற்கு வலு சேர்க்கும் விதமாய் பல காரணங்களையும் முன்வைக்கின்றன.

இந்தப் பிரச்னையின் ஆரம்பத்திலிருந்தே `வுகான் வைரஸ்' எனக் குறிப்பிட்டு சீனர்களைக் கடுப்பேற்றிக்கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப். இப்போது அமெரிக்க ஊடக செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா விசாரணையில் இறங்கும் என்று அறிவித்ததோடு நில்லாமல் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கூற்றுகளை நம்பி பெருநோய் பரவலைக் குறைவாக மதிப்பிட்டுவிட்டதாக குற்றம் சாட்டி அந்த அமைப்புக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியையும் நிறுத்திவிட்டார்.
இவை அனைத்தும் ட்ரம்ப்பின் வழக்கமான எதிர்மறை பேச்சுகள் என்றும் ஆரம்பத்தில் கொரோனா பரவலை அலட்சியப்படுத்தி இப்போது கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அமெரிக்க அதிபரின் திசை திருப்பல் முயற்சிகள் என்பதாகவும் பார்க்கப்பட்ட நிலையில், வுகான் நகரில் முதல் தொற்று அறியப்பட்டதிலிருந்து 6 நாள்களில் என்ன நடந்தது என்பதைச் சீனா விளக்க வேண்டும் என இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளும் நெருக்கத் தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் உலக அரசியல் அரங்கிலும் தன் ஆட்டத்தை தொடங்கிவிட்டது.

சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாய் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் விவாதிக்கப்படும் விஷயங்களை அலட்சியமாக ஒதுக்கிவிட முடியாது.
சீனாவின் சிகாகோ என மேற்கத்திய நாடுகளால் அழைக்கப்படும் வுகான் நகரில் முந்நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவற்றில் நுண்கிருமி ஆராய்ச்சி மையங்களும் அடக்கம். அங்கு இயங்கும் இரண்டு நுண்கிருமி ஆராய்ச்சி மையங்கள் கொரோனா பரவலுக்குக் காரணமாய் சந்தேகிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி காரணங்களுக்காக வைரஸ் கிருமிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எபோலா, ஹென்ரா போன்ற கொடிய நோய்க்கிருமிகள் ஆங்கிலத்தில் `பெத்தோஜெனிக் கிளாஸ் 4' என்றழைக்கப்படும் நான்காம் வகையில் அடக்கம். இந்த நான்காம் வகைகிருமிகளைக் கையாளுவதற்குத் தேவையான பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்ட சோதனைக்கூடங்கள் "பி4" என்று அழைக்கப்படுகின்றன.

பி4 வகை சோதனைக்கூடங்கள் உலகம் முழுவதும் முப்பது இடங்களில் மட்டுமே உள்ளன. இவற்றில் ஒன்று வுகான் நகரில் அமைந்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்புடன் 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மையம்தான் கொரோனா பரவலின் முதல் கட்டத்தில் அந்தக் கிருமியை ஆராய்ந்து, அதன் மரபணுவை வெளியிட்டது.
சந்தேக வட்டத்தினுள் வரும் பி2 வகையைச் சேர்ந்த சோதனைக்கூடம் கொரோனாவின் ஆரம்பப் புள்ளி என நம்பப்படும் வுகான் சந்தைக்கு மிக அருகே, முந்நூறு மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு வௌவால்களிலிருந்து மனிதனுக்குத் தொற்றும் கொரோனா வகை கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தச் சோதனைக்கூடங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் நம்பகத்தன்மை பற்றி சீன ஊடகங்களே சந்தேகம் எழுப்பியது மட்டுமல்லாமல், அங்கு சென்ற சில அமெரிக்க ஐரோப்பிய வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூற்றுக்கு வலுசேர்க்கும் விதமாக இன்டெக்ஸ் கேஸ் அல்லது பேசன்ட் ஜீரோ என ஆங்கிலத்தில் கூறப்படும் பெருநோய் தொற்றின் முதல் நோயாளி பற்றிய விவரங்களை சீனா இதுவரையிலும் வெளியிடவில்லை. மேலும், முதல் கட்ட நோயாளிகளாய் அறிவிக்கப்பட்ட நாற்பது பேரில் பதினேழு பேர் வுகான் நகரின் சந்தை பக்கமே செல்லாதவர்கள்.

கொரோனா வகையைச் சேர்ந்த கோவிட் 19 கிருமி செயற்கை மரபணு முறையில் மனிதனால் உருவாக்கப்பட்டது கிடையாது என்பதை நிச்சயப்படுத்தும் நடுநிலையான விஞ்ஞானிகள் கூட, அது சோதனைக்கூடத்தில் பாதுகாக்கப்படும் மாதிரிகளிலிருந்தோ அல்லது பறவை, மிருகங்களிடமிருந்தோ வெளியேறியிருக்கலாம் என்ற கூற்றையும் முற்றிலுமாக மறுக்கவில்லை.
அணு உலைகளைப் போலவே விபத்துக்கு வாய்ப்பே இல்லாத கிருமி ஆராய்ச்சி மையங்களும் கிடையாது. பாதுகாப்பு அடுக்குகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் தனிமனித தவறுகளால் விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன என்பதுதான் யதார்த்தமான உண்மை.
இதற்கு கடந்தகால உதாரணங்களும் உண்டு. 1979-ம் ஆண்டு ரஷ்யாவின் ராணுவ ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேறிய ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவினால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பதப்படுத்தப்பட்ட இறைச்சியினால் ஏற்பட்ட மரணங்களாகக் கூறி, இந்த விபத்தினை பல ஆண்டுகள் மறைத்தது சோவியத் ரஷ்யா. 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் கிருமி பரவல் சோதனைக்கூடத்திலிருந்து வெளியேறியதாகவே நம்பப்படுகிறது.

இவற்றுக்கெல்லாம் பதிலாய், ஆரம்ப கட்ட ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட தவறுகளால் விட்டுப்போய்விட்டதாகக் கூறி இறப்பு எண்ணிக்கையை ஐம்பது சதவிகிதம் உயர்த்தி அறிவித்துவிட்டு, ``கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை உலக சுகாதார அமைப்பின் மூலம் உடனடியாக அனைத்து நாடுகளுக்கும் ஒளிவு மறைவின்றி தெரியப்படுத்திவிட்டோம். கிருமி போருக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் கைகோக்க வேண்டிய சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது நல்லதல்ல" என்ற சீனாவின் மிதமான அறிக்கையை வழக்கம் போலவே ரஷ்யா மட்டுமே ஆதரித்திருக்கிறது.
வுகான் நகர சோதனைக்கூடத்திலிருக்கும் கொரோனா மாதிரிகளுடன் கோவிட் 19 வகையை ஒப்பிட்டு ஆராய்ந்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும். ஆனால், அதற்கு சீனா நிச்சயமாக ஒத்துக்கொள்ளாது.
வரலாறு காணாத வகையில் மாதக்கணக்கில் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதினால் உண்டான அலுப்பு மற்றும் தாங்கள் நம்பிய மருத்துவ அமைப்பு திணறுவதால் உண்டான பயம் ஆகிய காரணங்களால் சலசலக்கத் தொடங்கிவிட்ட மக்களை திசைதிருப்ப காரணம் தேடிக்கொண்டிருந்த மேற்கத்திய நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு சீனாவின் இரும்புத்திரை, மெல்லுவதற்கு வசதியான அவலாகிவிட்டது.

ஏகாதிபத்திய அமெரிக்க கூட்டு நாடுகள் மற்றும் கம்யூனிச ரஷ்யா, சீனாவின் கூட்டு நாடுகள் எனும் தராசில்தான் உலக அரசியல் அரங்கம் தொங்கிக் கொண்டிருக்கிறது. உலகத்தை பாதிக்கும் அனைத்து நிகழ்வுகளும் இந்த இரண்டு கண்ணோட்டங்களில்தான் அலசப்படுகின்றன.
முன்னுதாரணம் இல்லாத அளவுக்கு உலகத்தை பாதித்திருக்கும் கொரோனா பெருநோய் தொற்றின் மூலத்தை அரசியலாக்குவதினால் மருத்துவ முயற்சிகள் புறந்தள்ளப்பட்டு மனித குலம் மொத்தமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என நடுநிலையான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அஞ்சுகின்றனர்.
-காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.