Published:Updated:

"என்னைப்போல யாரும் மதுவால் பாதிக்கப்படக்கூடாது!" - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்

Alex
Alex

"என்றைக்கு மதுவால் என் வாழ்க்கையை இழந்தேனோ அன்றிலிருந்து மதுவை தொட்டுக்கூட பார்க்கவில்லை. என்னைப்போல யாரும் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பலரிடம் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்."

எல்லோரையும்போல குறைகள் எதுவும் இல்லாமல் பிறந்து, பல லட்சியக் கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய ஓர் இளைஞரின் வாழ்வில் எதிர்பாராத விபத்து. அதில் அவனது உடல் உறுப்புகளை இழக்க நேர்ந்தால் ஏற்படும் மனவேதனை கொடுமையானது. ஆம்... அப்படியோர் இளைஞரின் வாழ்க்கையைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

Accident
Accident
pixabay.com

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் அலெக்ஸ். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் அலெக்ஸின் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு அவரது கழுத்துப்பகுதிக்குக் கீழே எல்லா உறுப்புகளும் செயலிழந்து போனது. டைல்ஸ் மேஸ்திரியாகப் பணியாற்றிய அலெக்ஸ் வேலை மற்றும் அலைச்சல் காரணமாக உடல் பலவீனப்பட்டிருந்த நிலையில் மது அருந்தியிருக்கிறார். போதை தலைக்கேறிய நிலையில் வாகனம் ஓட்டிச் சென்றதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக தன் கதையை நம்மிடம் பேசத் தொடங்கினார்.

"விபத்து நடப்பதற்கு முன் வரை நான் செய்யும் தொழிலுக்கு தகுந்த ஊதியம் கிடைத்தது. இதனால் என் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. அதுவரை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த நான் விபத்துக்குப் பிறகு எல்லாவற்றையும் இழந்து நிர்கதியானேன். உணவுக்குக்கூட வழியில்லாத சூழல் ஏற்பட்டபோது உறவினர்கள் கண்டும் காணாதவர்களாக கடந்து சென்றனர். ஒரு சூழலில் உயிர்வாழ்வதன் மீதான வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். என்ன செய்வதென்று தெரியாமல் வெறுப்புடனே வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன்.

Alex
Alex

இத்தகைய சூழலில்தான் என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிபா எனும் அமைப்பை அறிமுகப்படுத்தினார்கள். அந்த அமைப்பின் மூலம் சகாய் எனும் மறுவாழ்வு பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டேன். அங்கு இலவசமாகப் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டேன். அங்கே என்னைப் போலவே முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நடக்க முடியாத பலரைச் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் பார்த்தபிறகுதான் நான் தற்கொலை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டேன். இப்போது தன்னம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறேன்.

வீட்டில் முடங்கிக் கிடப்பதால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது என்பதால் வீட்டை விட்டு வெளியே வந்தேன். இன்னும் சில மாதங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. அந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன். அதேநேரத்தில் என்னால் முடிந்த அளவு இந்தச் சமூகத்துக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறேன். சாலையில் உணவில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு கொடுத்து வருகிறேன். உடையில்லாமல் நிர்வாணமாக உறங்குபவர்களுக்கு அவ்வப்போது உடைகள் வழங்கி வருகிறேன். எனக்குத் தெரிந்த சில தம்பிகளுடன் சேர்ந்து இந்தப் பணியைச் செய்கிறேன். அப்படி உதவும்போது அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நானும் மகிழ்வேன்.

Alex
Alex

எனக்கு உணவுக்கு வழியில்லாத சூழலில் பலரிடம் கையேந்தினேன். தற்போதுகூட என்னிடம் மிகப்பெரிய பொருளாதாரம் இல்லை. ஆனாலும் நான் சிலரிடம் உதவியாக பெறுவதை என் தேவைக்குப்போக மீதமுள்ளவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவுகிறேன். உணவுத் தேவை இருப்பவர்கள்தானே பிறரிடம் கையேந்தப் போகிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்ததைக் கொடுத்து வருகிறேன்.

ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட கேம்ஸ்கேனர் ஆப்... நீங்கள் செய்யவேண்டியது என்ன?

சில நேரங்களில் என்னுடைய இயலாமையைக்கூட சிலர் கேலி செய்ததுண்டு. ஆனால் அவற்றை ஒருபோதும் நான் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. என்னுடைய இந்த நிலைக்குக் காரணம் மது போதை என்பதால் மது அருந்தும் இளைஞர்களைச் சந்தித்து என்னுடைய நிலைமைக்கு மதுதான் முதன்மைக் காரணம் என்பதை எடுத்துக்கூறி பலரை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டு வருகிறேன். குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் மதுப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்'' என்றார்.

Alex
Alex

`ஜாலிக்காக குடிக்கத் தொடங்கினேன், ஆனால் அதுதான் என்னை இந்த இடத்தில் நிறுத்திவிட்டது' எனக் கூறும்போது அலெக்ஸின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. தொடர்ந்து பேசிய அவர் `என்றைக்கு மதுவால் என் வாழ்க்கையை இழந்தேனோ அன்றிலிருந்து மதுவை தொட்டுக்கூட பார்க்கவில்லை. என்னைப்போல யாரும் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பலரிடம் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் என்னைப்போல முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வு பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் சிகிச்சை பெற வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன்' என்றார் நிறைவாக.

அலெக்ஸைப்போலவே ஏராளமானோர் மதுவால் தங்கள் வாழ்க்கையைப் பறிகொடுத்து தினம்தினம் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வேதனைகளைக் கடந்தும் பிறருக்கு தன்னாலான உதவியைச் செய்வது என்பது எல்லோராலும் முடியாது.

Alex
Alex

வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளுக்குக்கூட தற்கொலையை நாடும் மனிதர்களுக்கு மத்தியிலும் தன்னால் சிறு மாற்றத்தையாவது செய்ய முடியும் என முயற்சி செய்துவருகிறார் அலெக்ஸ். ஜாலிக்காக மதுப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களின் வாழ்க்கையில் அலெக்ஸின் வாழ்க்கை சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என நம்புவோம்.

அடுத்த கட்டுரைக்கு