Published:Updated:

கேமரா வழியே வெப்பநிலை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் செயலி! பயன்பாட்டுக்கு வருமா?

கேமரா வழியே, கொரோனா அறிகுறியைக் கண்டுபிடிக்கும் புதிய செயலி தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனித உடலின் வெப்பநிலையைக் கணக்கிட்டு, கொரோனா அறிகுறியைக் கண்டறிகிறது இந்தத் தொழில்நுட்பம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`கொரோனா தொற்று பாதிப்பில், தமிழ்நாடு 3-ம் கட்டமான சமூகப் பரவலை எட்டிவிட்டது' என்று சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன செய்திகள். `தமிழ்நாடு 3-ம் கட்டத்தை எட்டவில்லை' என்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர். ஆனால், கொரோனா பரிசோதனைகளுக்கான பி.சி.ஆர் டெஸ்ட் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதும் மற்றுமொரு பரிசோதனைக் கருவியான `ரேபிட் கிட்', தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்ற தகவலும், ரேபிட் டெஸ்ட் கருவியில் சில ரிசல்ட்டுகள் முரணாக இருப்பதால், அதை இரண்டு நாள்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதையடுத்து, பொதுமக்களிடையே கொரோனா காய்ச்சலை எளிதில் கண்டறியும் வகையிலான கருவிகளுக்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், `தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்ற சொல்லாடலை உறுதிப்படுத்தும்விதமாக, `தெர்மல் கேமரா ஸ்கேனர் செயலி'யைக் கண்டுபிடித்து நம்பிக்கையளித்திருக்கிறார்கள், கோவை இளைஞர்கள்.

மொபைல் கேமரா ஸ்கேன் செயலி
மொபைல் கேமரா ஸ்கேன் செயலி

`கேமரா வழியே காய்ச்சலைக் கண்டுபிடித்துவிடுவதால், மேற்கொண்டு நோய் பரவாமல் தடுப்பதற்கான வேலைகளையும் எளிதில் செய்துமுடிக்க உதவியாக இருக்கிறது இந்தச் செயலி' என்கிறார்கள் இவர்கள்.

செயலியை வடிவமைத்திருக்கும் `நியூநெட்ஸ்' நிறுவனத்தினரின் சிஇஓ ஜெய் கீர்த்தி இதுகுறித்துப் பேசும்போது, ``சிசிடிவி கேமரா மற்றும் மொபைல் கேமரா வழியே ஒரு மனிதரின் உடல் வெப்பநிலை - காய்ச்சலைக் கண்டறிவதுதான் இந்தத் தொழில் நுட்பத்தின் அடிப்படை! இதற்காக, இன்ஃப்ரா ரெட் தெர்மல் ஸ்கேனிங் கேமராவைப் பயன்படுத்துகிறோம். இது, 50 அடி சுற்றளவில் உள்ள பொருள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து, அதன் வெப்பநிலையைக் காட்டிவிடும்.

ஒரு மனிதனின் இயல்பான வெப்பநிலை என்பது 98.6 ஃபாரன்ஹீட். நபர்களைப் பொறுத்து இந்த சராசரி வெப்பநிலையிலிருந்து ஒரு டிகிரி கூடுதலாகவும் இருக்க வாய்ப்புண்டு. இதனால் பயம் ஏதும் கொள்ளத் தேவையில்லை. ஆனால், 101 டிகிரிக்கும் அதிகமானால், அது கொரோனா பாதிப்பாக இருக்கலாம் என்பதைக் கண்டறிந்து `ரெட் அலெர்ட்' செய்வதுதான் எங்கள் செயலி!

சாதாரணமாக, தெர்மல் ரீடிங், தெர்மல் கேமரா, தெர்மல் ஸ்கேனர் கருவிகளின் வழியாகவும் ஒருவரது உடலின் வெப்பநிலையைக் கணக்கிட்டு, அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பதைக் கண்டறியமுடியும். ஆனால், துப்பாக்கி வடிவிலான இந்த தெர்மல் ஸ்கேனரைக்கொண்டு ஒரு நபரின் வெப்பநிலையைக் கண்டறிய 40 விநாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரை கூட ஆகலாம். எனவே, பஸ் ஸ்டாண்டு, மால் போன்ற பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகின்ற இடத்தில், இந்த சாதாரண தெர்மல் ஸ்கேனரைக் கொண்டு ஒவ்வொரு நபரையும் பரிசோதிப்பதென்பது அதிக நேரம் பிடிக்கக்கூடியததாகவும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததாகவும் இருக்கிறது.

இந்த நடைமுறை பிரச்னையைச் சரிசெய்யும் விதமாகத்தான் `தெர்மல் கேமரா ஸ்கேனர் செயலி'யை 10 பேர் கொண்ட எங்கள் குழு வடிவமைத்துள்ளது. அதாவது, பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிற இடங்களில், கேமரா வழியாகவே மக்களைப் படம்பிடித்து, அவர்களது முகம் மற்றும் நெற்றிப் பொட்டைப் பதிவு செய்துகொள்வதோடு, அதிகபட்சமாக 2 விநாடிகளில் சம்பந்தப்பட்ட நபரின் உடல் வெப்பநிலையையும் கணக்கிட்டு அறிவித்துவிடுகிறது கேமரா வழியிலான இந்தப் பரிசோதனைக் கருவி.

தெர்மல் கேமரா
தெர்மல் கேமரா

அடுத்ததாக, மற்றைய பரிசோதனைகளின்போது, சோதனை செய்பவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆனால், கேமரா வழியாகவே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால், இங்கே மனிதர்களுக்கும் ஆபத்து இல்லை என்பது இதன் கூடுதல் நன்மை'' என்று இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் செயல்பாடு மற்றும் நன்மைகளைப் பட்டியலிட்டவர், தொடர்ந்து இதைப் பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கத் தொடங்கினார்.

``பொதுமக்கள் கூடுகிற இடங்களில், நுழை வாயிலில் கேமராவைப் பொருத்திவிட்டால், வரிசையாக ஒவ்வொருவரது முகத்தையும் பதிவுசெய்து, அவர்களது உடல் வெப்பநிலையையும் கணக்கிட்டு, பீப் சவுண்டு மூலம் அலெர்ட் செய்கிறது.

அதாவது, ஒருவரது வெப்பநிலை 100 டிகிரியாக இருந்தால், இயல்பைவிட அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கிறீர்கள் என ஒரு பீப் சத்தத்துடன், மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை செய்யும். அதுவே 101 டிகிரிக்கும் அதிகமாக இருந்தால், `உங்கள் உடல்நிலையில் மாற்றம் உள்ளது. எனவே, மருத்துவரை ஆலோசிக்கவும்' என 5 பீப் சத்தத்துடன் `ரெட் அலெர்ட்' காட்டிவிடும்!'' என்றார் ஜெய் கீர்த்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தொழில்நுட்ப உருவாக்கப் பின்னணியில் உள்ள திண்ணியம்பாளையம் ஶ்ரீசக்தி பொறியியல் கல்லூரியின் இணைச் செயலாளர் ஷீலன் தங்கவேலு இதுகுறித்துப் பேசும்போது, ``சீனாவில், விரைவிலேயே கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்கு, இந்த டெக்னாலஜி அங்கு பயன்படுத்தப்பட்டதும் ஒரு காரணம்.

தெர்மல் கேமரா ஸ்கேனர் செயலியின் பரிசோதனைக்கு உள்ளாகும் ஒவ்வொரு நபரின் அடையாளமும் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும். இந்த வகையில், பாதிப்புக்குள்ளான நபரைக் கண்டறிந்த பின்னர், அந்த நபர் இதுவரை சென்றுவந்த இடங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேமித்துவைப்பதுவும் தேவைப்படும் சமயங்களில் அந்தத் தகவல்களைத் திரட்டி உதவுவதுமே எங்கள் பணி.

அதாவது, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் இதற்கு முன்பு எங்கெங்கு சென்றுள்ளார் அப்போதெல்லாம் அவருடைய உடல்நிலை எப்படியிருந்தது என்பதுபோன்ற புள்ளிவிவரங்களையும் எடுத்துவிட முடியும். இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நபரின் முன் பின், யார் யார் சென்றுள்ளனர் என்பதையும் கண்டுபிடித்து, உடனடியாக அவர்களையும் ரெட் அலெர்ட் வளையத்துக்குள் கொண்டுவந்து தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உதவ முடியும்'' என்றவர், கொரோனா தடுப்புப் பணியில், தமிழக அரசின் சுகாதாரத் துறையோடு கைகோத்து செயல்படும் முறைகள் குறித்தும் நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.

ஸ்கேன் செயலி
ஸ்கேன் செயலி

``கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி `ரெட் அலெர்ட்'டில் இருப்பவர்களின் தகவல்கள் அனைத்தும் இணையம் வழியே உடனுக்குடன் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும். எனவே, தனிமைப்படுத்தலில் இருக்கும் அந்நபர் வேறு எங்கும் பொது இடங்களில் சுற்றித்திரிந்தால், அவரைப் படம்பிடிக்கும் இந்தக் கேமரா, அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உடனடியாக சுகாதாரத் துறையின் கவனத்துக்குக் கொண்டுசென்றுவிடும். இதையடுத்து அந்த நபரை எளிதில் கண்டறிந்து பொது இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி சிகிச்சையளித்துவிட முடியும்.

உதாரணமாக, ஒரு அரசு அலுவலகத்துக்கு வரும் ஒருவருக்கு 102 டிகிரி வெப்பநிலை இருக்கிறதென்றால், அவருக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்படும். அவர், உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் இரண்டு நாள் கழித்து, அதே அரசு அலுவலகத்துக்கோ அல்லது வேறு ஏதேனும் பொது இடத்துக்கோ வந்து, அங்குள்ள கேமராவில் பதிவானால், உடனடியாக அவரது இருப்பிடம் பற்றிய அத்தனை தகவல்களும் சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுவிடும். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுப்பதோடு, கடந்த நாள்களில் அவர் யார் யாரோடெல்லாம் தொடர்பில் இருந்துள்ளார் என்ற புள்ளிவிவரங்களையும் திரட்டி, உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிட முடியும்'' என்கிறார் உறுதியாக.

இது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதாகாதா என்று நாம் கேட்ட கேள்விக்கு ஷீலன் தங்கவேலு,

``தனிப்பட்ட நபர்களைப் பின்தொடர்ந்து கண்காணிப்பதால், இந்த டெக்னாலஜி தனிமனித சுதந்திரத்தைப் பாதிப்பதாக, சொல்லிவிட முடியாது. ஏனெனில், நாங்கள் எல்லோரையும் கண்காணிப்பதில்லை. நோய் பாதிப்பு உள்ள நபர்களை மட்டுமேதான் கண்காணித்து தகவல் கொடுக்கிறோம். அந்தத் தகவல்களும்கூட, அரசு நிறுவனமான சுகாதாரத் துறையோடு சம்பந்தப்பட்டதுதான் என்கிறபோது, பொதுமக்களுக்கு இதுகுறித்து எந்தவித பயமும் தேவையில்லை.

இன்றைய சூழலில், வீட்டைவிட்டு வெளியில் வரும் நாம் எல்லோருமே சி.சி.டி.வி கேமராவில் பதிவாகிக் கொண்டுதான் இருக்கிறோம். நம் எல்லோரையுமே காவல்துறை, விசாரிப்பதோ பின்தொடர்வதோ இல்லையே... குற்றவாளிகளை மட்டும்தானே தேடிப் பிடிக்கிறார்கள். அதுபோல்தான் இந்த டெக்னாலஜியும்.

உயிர் குடிக்கும் கொரோனா பாதிப்பு என்பது, தொற்று நோயாக இருப்பதினால்தான் இந்தக் கண்காணிப்புமே அவசியமாகிறது. இதையும்கூட தவறு என்று கருதினால், கொரோனா தொற்று ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே பேராபத்தை விளைவித்துவிடும்!'' என்று கூறினார்.

தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பின் தீவிரம் வலுவடைந்துவரும் இந்நேரத்தில், இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய கேமராக்கள் நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பொருத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டுவருகிறது. முன்னதாக, இந்தச் செயலியின் அறிமுக விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டார்.

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

எனவே, `இந்தப் புதிய தொழில்நுட்பம் தமிழகம் முழுக்க விரிவுப்படுத்தப்படுமா...' என்ற கேள்வியை அமைச்சர் வேலுமணி தரப்பில் விசாரித்தபோது, ``முதற்கட்டமாக 3 மாவட்டங்களில் செயிலியின் பயன்பாடு எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்துவருகிறோம். இதிலிருந்து கிடைக்கும் முடிவைப் பொறுத்தே, தமிழகம் முழுக்க இத்தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தலாமா என்பதை முடிவெடுக்க முடியும்!'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு