Published:Updated:

எடைக் குறைப்பு முதல் நீரிழிவு தடுப்பு வரை! -சிறுதானியங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? #Myvikatan

தானியங்கள்
தானியங்கள்

வழக்கமான உணவுகளுக்கு மாற்றாகப் பயன்படும் சிறு தானியங்கள் மற்றும் அதன் சிறப்புகள்.

மில்லட்ஸ் என்று பொதுப்பெயரால் இன்று குறிப்பிடப்படும், சிறு தானியங்களாலான உணவுகள் பற்றிய விவரங்கள், பரவலாகக் கலந்த சாதங்கள், பிஸ்கெட் வகையறாக்களாகவே இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.

வரகுப்பொங்கல், குதிரைவாலி பிரியாணி, திணை சர்க்கரைப் பொங்கல், சாமை தயிர் சாதம் என்று குறுகிய அளவில்தான் பெரும்பான்மையான வீடுகளில் இந்த அரிசிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால், காலை உணவுகள் முதல் சிற்றுண்டிகள் வரை, சிறப்பு உணவுகள், பண்டிகைக்கால உணவுகள், இரவு உணவுகள் வரை எல்லாவற்றிலும் இந்த அரிசிகளை உபயோகப்படுத்தலாம்.

வரகு அரிசி
வரகு அரிசி

சாதாரண அரிசியால் ஆன உணவு வகைகள் ஜீரணமாகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட்டும். ஆனால், தோல் உரிக்கப்படாத சிறு தானியங்களில் இருக்கும் நார்ச்சத்து அத்தனை எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டுவதில்லை. ஐஆர் 20 அரிசியைப் பயன்படுத்திச் செய்த இட்லியைவிட, சாமை அரிசியை உபயோகப்படுத்தி செய்த இட்லி நீண்ட நேரத்துக்கு உடலுக்கு சக்தியைத் தரும் என்பதால்தான் அதை உடல் சார்ந்த உழைப்பாளர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள்.

சாதாரண பச்சை அரிசியில் செய்த பொங்கல் வழக்கமாக மயக்க மாத்திரை செயல்படுவதைப்போல உறக்கத்தை வரவழைக்கும். ஆனால், வரகினாலான பொங்கலை உட்கொள்ளும்போது உடல் சுறுசுறுப்பாக இருப்பதை நீங்களே கண்கூடாகக் காணலாம். இந்தத் தானியங்களை தனியாகப் பயன்படுத்த விரும்பாதவர்கள், மற்ற தானியங்களான கம்பு, கேழ்வரகு, கோதுமை, கார் அரிசிகள் ஆகியவற்றுடன் கலந்து உபயோகப்படுத்தலாம்.

ஹோல் வீட் பிரெட் உண்மையில் உடலுக்கு நல்லதா? - டயட்டீஷியன் விளக்கம்

நீரிழிவு நோயாளிகள் முதல் எடைக் குறைப்புக்கான உணவு பரிந்துரைகள் வரை மருத்துவர்கள் சொல்வது கேழ்வரகு தானியத்திலான உணவு வகைகளைத்தான். அதிலும், கேழ்வரகு கூழ், சூடாக பால், நாட்டுச் சர்க்கரை கலந்தோ, ஆறவைத்து பின் மோர், உப்பு, பச்சை மிளகாய் கலந்தோ சாப்பிடுவதைப் பரிந்துரைப்பார்கள்.

கேழ்வரகு கூழை வெறும் மாவை நீரில் கரைத்துக் கொதிக்க வைத்து பயன்படுத்துவதைவிட, சாமை அரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, சாதம் போல் வடித்து வைத்துக்கொண்டு, கேழ்வரகு மாவை கூழ் பதம் வரும் வரை காய்ச்சிய பின் வெந்த சாமை அரிசியை அதனுடன் கலந்து கூழை மீண்டும் சிறிது நேரம் காய்ச்சி எடுத்து வைத்து ஆறவைத்து பால், சர்க்கரை அல்லது மோர், உப்பு கலந்து பயன்படுத்தலாம். காலையில் இரண்டு கோப்பை அளவில் இதை உட்கொண்டாலே மதியம் வரை உங்கள் வயிறு பசிக்க மறக்கும். உடலுக்குத் தேவையான புத்துணர்வும் கிடைக்கும்.

கேழ்வரகு கூழ்
கேழ்வரகு கூழ்

இட்லி அவிக்க, கார் அரிசி ஒரு கோப்பை, சாமை அரிசி ஒரு கோப்பை, தோல் உளுந்து அரைக் கோப்பை, ஒரு தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை வழக்கமாக இட்லி மாவுக்கு அரைப்பது போல அரைத்தெடுத்து, மூன்று தேக்கரண்டி கேழ்வரகு மாவை கலந்து இரவு முழுதும் புளிக்க வைத்து பின்னர் இட்லியாக வார்த்தெடுத்து உண்டால் அதுவுமே வயிற்றுக்கு நிறைவான ஒரு உணவாக இருக்கும்.

கேழ்வரகு மாவு, திணை அரிசி மாவு சம பங்கு, வெல்லம், ஏலக்காய் அல்லது வெங்காயம், முருங்கைக்கீரை, பச்சை மிளகாய், உடைத்த வேர்க்கடலை கலந்து அடையாக சிறுந்தீயில் வேகவைத்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் திடீரென ஏற்படும் பசி குறையும். நீரிழிவு நோயாளிகளுக்கு முழுச் சத்தும் வீணாகாமல் ரத்தத்தில் கலக்கும்.

ராகி, சாமை, திணை, வரகு ஆகியவற்றை ஒன்றாக வறுத்து அரைத்த மாவு, முந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை சிறிதளவு, ஏலம், சுக்கு, அமுக்கரா பொடி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்து சத்து மாவுக் கஞ்சியாகச் சாப்பிட உடலில் ஏற்படும் சோர்வு மெல்ல குறையும். இதேபோல வழக்கமான நம் உணவுகளில் சிறுதானியங்களை மாற்றாக உபயோகப்படுத்தினால் நம் உடல் வளம் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.

- கவி

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: இதயத்துக்கு இதமான உணவுகள்!
அடுத்த கட்டுரைக்கு