Published:Updated:

`ஒருபுறம் மனிதம் மறுபுறம் அலட்சியம்!' -அதிர்ச்சி கொடுத்த இலங்கை லாக்டவுன் நாள்கள் #MyVikatan

இலங்கை
இலங்கை

களுத்துரை எனும் இடத்தில் தனக்கு COVID-19 தொற்று இருப்பது தெரிந்தும் அதை மறைத்து ஒரு கர்ப்பிணிப் பெண் சாதாரண பிரசவ வார்டில் சென்று சேர்ந்தார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

குடும்பத்தினருடன் டென்மார்க்கில் வசிக்கும் நான், அம்மாவின் எதிர்பாராத உடல்நிலை காரணமாக மார்ச் முதல் வாரத்தில், இலங்கை நோக்கிப் பயணிக்க வேண்டியிருந்தது. பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இலங்கை வந்தடைந்தேன். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய அனைவரும் உடனடியாக 119 என்ற இலக்கத்திற்கு அழைத்துப் பதிவு செய்யுமாறு செய்திகள் நொடிக்கொருதரம் அறிவித்துக்கொண்டிருந்தன. எமது விவரங்களை அன்றைய தினம் காலையிலேயே 119 மற்றும் எமது பகுதிக்குப் (மொராடுவா) பொறுப்பான போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துவிட்டு, self quarantine எனும் 14 நாள் அஞ்ஞாதவாசத்தை என் மகனும் நானும் தொடங்கினோம்..

இலங்கை
இலங்கை

MOH (Medical Officer of Health), PHI (Public Health Inspector) மற்றும் போலீஸார் வீட்டுக்கு வந்து எமது உடல்நிலையையும் ஏனைய விவரங்களையும் சரி பார்த்து விட்டுச் சென்றனர். அதன் பிறகான 14 நாள்களில் கிட்டத்தட்ட நான்கு ஐந்து தடவை போலீஸார் வந்து எனக்கு பிரச்னை ஏதும் இல்லையே என விசாரித்து விட்டுச் சென்றனர். அந்த வகையில் இலங்கை போலீஸாரை மிகவும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஏனெனில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றாலே, ஏதோ பத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி வந்து தலைமறைவாக இருக்கும் ஒரு தீவிரவாதியைப் போலவே இங்கு மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். இதுவரையில் ஒன்றாக ஒரு குடும்பம் போல் இணைந்திருந்த அயலவர்கூட ஏதோ வேண்டாத அந்நிய மனிதனைப்போல தள்ளி நின்று முறைக்கின்றனர்.

அதேபோல வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய அனைவரையுமே, போலீஸ் ஒரு கிடுக்குப்பிடி பிடித்து, கடுமையான சட்டங்களைப் போட்டுத் தொடர்ச்சியான கண்காணிப்பின்கீழ் கொண்டு வந்தது ஒரு வகையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. ஏனெனில் இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் இலங்கை திரும்பிய பலர் தலைமறைவாகியது, நோய் அறிகுறிகளை மறைத்து சமூகத்துக்குள் ஊடுருவியது போன்ற செயல்களால், எம்மைப் போன்ற நேர்மையாக, legally சட்டத்துடன் இணைந்து செயற்பட்டவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாக நேர்ந்தது.

கொஞ்சம்கூட சமூகப் பொறுப்பு இல்லாத சிலரால் ஒட்டுமொத்தமாக அனைவரும் பாதிக்கப்படும் அவலம் காலங்காலமாக நடைபெற்று வருவதொன்றே. இந்தச் சூழலிலும் கொஞ்சமும் விதிவிலக்கின்றி அதே அவலம் மீண்டும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது!

இலங்கை
இலங்கை

பல இடங்களில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் அண்டை அயலவரால் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாக என்னைத் தேடி வந்த போலீஸார் கூறினார்கள். வீட்டுக்குள் கல்லெறிவது, ஹோட்டலுக்குள் உட்புகுந்து கலாட்டா செய்வது, நாட்டை விட்டு திரும்பிப் போய்விடு போன்ற கோஷங்களை எழுப்புவது போன்ற பலவிதமான செயல்களில் மக்கள் ஈடுபட்டு வருவதாகக் கேள்விப்பட்டேன்.

உயிர் பயம், தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்வது எல்லாம் நியாயமானதுதான். அதில் குறை சொல்ல எதுவும் இல்லை. ஆனால் அதற்காக சகமனிதன் மீது இத்துணை வன்மத்தைப் பொழிவது, அதுவும் இவ்வாறான சூழ்நிலையில் நிச்சயமாக சரியானதல்ல. அந்த வகையில் எனது அயலவர்கள் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டனர். அதேபோல Mount Lavinia போலீஸாரும் மிக உதவியாக இருந்தனர்.

இலங்கை
இலங்கை

அடிக்கடி தொலைபேசி மூலம் விசாரித்துக்கொள்வதும் எனக்குத் தேவையான சகல உதவிகளையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதுமாக அவர்களது காவலர் பணியைச் சிறப்பாகவே செய்தனர். எனக்கு மட்டும் அல்ல; எங்கள் பிரதேசத்தில் இருந்த அனைத்து வெளிநாட்டிலிருந்து திரும்பிய/ வந்திருந்தவர்களுக்குமே அவர்கள் அதே மாதிரியான பாதுகாப்பையும் சேவையையும் வழங்கி வருகின்றனர். அதேபோல் எங்கள் பிரதேச MOH ( Medical officer of health) அந்த 14 நாள்களில் தினமும் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்கள்.

14 நாள்கள் quarantine முடிவுற்றதும் MOH மற்றும் போலீஸார் வீடு தேடியே வந்து medical clearance சான்றிதழ் வழங்கிச்சென்றனர். வீடுகளில் self quarantine இருக்கும் அனைவருக்குமே ஊரடங்குச் சட்டம் காரணமாகப் பெரும்பாலும் இவர்கள் வீடு தேடிச் சென்றே clearance சான்றிதழ் வழங்கிவிட்டுச் செல்கிறார்கள்.

நான் வந்த மறுநாள் தொடங்கி இந்தக் கட்டுரை எழுதும் இந்தநாள் வரைக்கும் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமலிலேயே உள்ளது. ஒன்று சொன்னால் அதற்கு மாறாக இன்னொன்றைச் செய்யும் குணம் கொண்ட நம் மக்களைக் கட்டுப்படுத்தி, கொரோனா பரவலைத் தடுக்கவும், தவிர்க்கவும் இதை விடுத்து வேறு சிறந்த தீர்வு ஒன்று இல்லை. ஆயினும் அவ்வாறு நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் மக்களுக்கு அவசியமான அன்றாடத் தேவைக்கான உணவுகளையும் பொருள்களையும் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்வதும் அரசின் கடமையாகும். தொலைக்காட்சியிலும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் ஊடாகவும் பலநூறு தொலைபேசி இலக்கங்கள் தினமும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

‘உங்களுக்கு தேவையான பொருள்களை இந்த இலக்கங்களுக்கு அழைத்து லிஸ்டை வழங்கினால் அவர்கள் வீட்டுக்கு வந்து தருவார்கள்’ என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்விலக்கங்களில் பாதி செயலிழந்தவையாகவும், மீதி தொடர்புகொள்ள முடியாதவையாகவுமே உள்ளன. பரவலாக அனைவரினதும் இன்றைய புலம்பல், எந்தவொரு சூப்பர் மார்க்கெட்/ மளிகைக் கடையையுமே தொடர்புகொள்ள முடியவில்லை என்பதாகும்.

இலங்கை
இலங்கை

கொழும்பு 1-15 வரையான எல்லைக்குள் ஓரளவிற்கேனும் பொருள்கள் டெலிவரி உள்ளன, ஆயினும் எம்மைப் போன்ற கொழும்புக்கு வெளியே இருப்போரின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. வீடுகளுக்கு அருகில் கீரை, மரக்கறி, மீன் போன்றவை கொண்டு வந்து அவ்வப்போது விற்பனை செய்தாலும், அதைத் தாண்டிய அரிசி, சீனி, சவர்க்காரம், சலவை பொருள்கள், குழந்தைகளுக்கான பால் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அவசியமான பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வழியின்றி வாழ்வு ஒரு பெரும் சவாலை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றது!

அது மாத்திரமன்றிப் பணம் ஓரளவு இருப்போர் தமக்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அன்றாடம் உழைத்து, அன்றன்றைக்குத் தேவையான பொருள்களை வாங்கி உண்ணும் வறுமைகோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்களின் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது! பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய், சம்பளம் கொடுபடாத நிலையில், வருமான மார்க்கங்கள் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஒருவேளை உணவுக்கே அல்லாடவேண்டிய அவலநிலை உருவாகி உள்ளது.

இடைப்பட்ட நாள்களில், ஒரு தடவை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டது. அன்று மக்கள் கடைகளிலும், மருந்தகங்களிலும் கூட்டம் கூட்டமாக அலை மோதினார்கள். கொரோனாவாவது கொக்காவது என்ற அலட்சிய மனநிலையில், அடுத்த பத்து நாளைக்காவது சாப்பாடு கிடைத்தால் போதுமென்பதே பெரும்பாலானவர்களின் மனநிலையாகக் காணப்பட்டது.

இலங்கை
இலங்கை

கடைகளில் பொருள்கள் வாங்கும் கியூவில் ஆரம்பத்தில் ஆறு அடிக்கு ஒருவர் என இடைவெளி விட்டு நின்றனர். பின் சிறிது நேரத்தில் அந்த ஆறடி இடைவெளிக்குள் ஐந்து பேர் வந்து புகுந்துகொண்டனர். அடுத்த அரைமணி நேரத்தில் அடி பிடி தள்ளு முள்ளு என இனிதே ஆரம்பமானது. மக்கள் ஆரம்பத்தில் மாஸ்க் அணிந்திருந்தாலும் நேரம் செல்லச் செல்ல, வெப்பம் புழுக்கம் தாளாமலும், அருகில் இருப்பவருடன் ஊர் வம்பு பேசும் பொருட்டும், வரிசை ஒழுங்கை மீறுவோரை வசைபாடி விரட்டியடிக்கவுமெனப் பல்வேறு காரணங்களுக்காக, தங்கள் முகக் கவசங்களை வாய்க்குக் கீழே இறக்கி விட்டு விட்டு, மூக்கோடு மூக்கு உரசிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்..

சுதாரித்த போலீஸார் அன்று மாலை 2 மணிக்கே மீண்டும் ஊரடங்கை அமல்படுத்திவிட்டார்கள். அதன்பின் இன்று வரை தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தாலும், நம் மக்கள் அதற்கெல்லாம் அசருவதாயில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடமாடிக்கொண்டுதான் உள்ளனர். மாலை நேரங்களில் வீதிகளில் இறங்கி சாவகாசமாக உடற்பயிற்சி செய்யுமளவிற்கு ஒருசிலருக்குக் கொரோனாவும், அரச சட்டங்களும் அல்பமாகி உள்ளன.

Representational Image
Representational Image

நான் அவதானித்த வரையில் இலங்கையில் கொரோனா பற்றிய விழிப்புணர்வில் மிகப் பெரும்பான்மையான மக்கள் ஒரே ஒரு பகுதியைத்தான்தான் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டும்தான். அந்த மாஸ்க்கை அணிந்து கொள்வதை விடவும் முக்கியமாக, எவ்வாறெல்லாம் பத்திரமாக இருக்க வேண்டும், கைகளைக் கழுவி அல்லது சானிடைசர் கொண்டு எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கைகளால் கண் மூக்கு வாய் போன்ற பகுதிகளைத் தொடாமல் இருக்க வேண்டும், இருமல் தும்மலின் போது என்ன செய்ய வேண்டும், எவ்வளவு முக்கியமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.

வெறும் முகக் கவசத்தை (face mask) மட்டும் அணிந்து கொள்கிறார்கள். அதுவும் use and throw surgical mask எங்குமே இல்லை. ஆகையால் துணியால் தைக்கப்பட்ட face mask-ஐ பத்து நாளுக்கும் மேல் துவைக்காமலே போட்டுக்கொள்கிறார்கள். அதையும் வாய்க்குக் கீழே இறக்கி வைத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் கதைபேசி, சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதற்கும் மேலாக கைகளில் கையுறையோ அல்லது சானிடைசர்களோ எதுவுமே இல்லாமல் தங்கள் வேலைகளை ஏனோதானோவென்று செய்து கொண்டிருக்கிறார்கள் (தற்போது Sanitizers இலங்கையில் எங்குமே இல்லை எனப்படுகிறது. இதன் பயன்பாடு மற்றும் அவசியத்தையும் அரசு போதியளவு வழியுறுத்தவும் இல்லை).

Representational Image
Representational Image

அவ்வப்போது மருந்தகங்கள் திறந்து மக்களுக்கான மருந்து விநியோகம் நடைபெறுகிறது. நாட்டில் அனைத்து விமான வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. Quarantine நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 14 நாள்கள் காலக்கெடு முடிவில் அவர்கள் பிராதேசிய போலீஸ் நிலையங்களில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டு, பின் அங்கிருந்து போலீஸாரால் அவர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று விடப்படுகின்றனர்.

வைத்தியர்களும் சுகாதார சேவை பணியாளர்களும், முப்படையினரும், போலீஸாரும் தங்கள் நலன் பாராது தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித வைத்திய உதவிக்கும் அரச வைத்திய சாலைகளையே நாடவேண்டும். அனைத்து தனியார் கிளினிக்குகளும் அரசால் மூடப்பட்டுவிட்டன. மின் மற்றும் குடிநீர் விநியோகம் தங்குதடையின்றி உள்ளது. ஆயினும் இதர சேவைகள் அனைத்துமே முடக்கப்பட்டுவிட்டன. இதனால் சாதாரணமாக வீட்டில் ஒரு water leak ஏற்பட்டாலோ, மின் சாதனமேதும் பழுதுபட்டாலோ அதைச் சரிசெய்ய ஆட்களின்றி மக்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர்.

இன்றைய அதிகாரபூர்வ நிலவரப்படி (as of 6th April 2020) 5 கொரோனா மரணங்கள் பதியப்பட்டுள்ளன. 176 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். 33 நோயாளிகள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கான விசா காலம் மே மாதம் 12-ம் தேதி வரை நீட்டிப்பதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீதும், பொய் வதந்தி பரப்புவோர் மீதும் போலீஸார் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கோள்ளுகின்றனர். கொஞ்சம் தாமதம் என்றாலும் கூட சுதாகரித்துக்கொண்ட இலங்கை அரசு, ஒப்பீட்டளவில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடியுமானவரை விரைந்து மேற்கொள்ளுகிறது என்றே கூறலாம்.

Srilanka
Srilanka

அதேபோல், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறியவுடன் ஒருவித பயத்துடனும் வன்மத்துடனும் அந்நியனைப் போல் விரோதமாகப் பார்க்கும் அதே மக்கள், quarantine காலம் முடிந்து உடம்பில் நோய்த் தொற்று இல்லை என்று தெரிந்துதெளிந்த பிறகு ஓரளவு சகஜமாகத்தான் பழகுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். அந்தந்த இடங்களில் வாழும் சமூக மக்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் தகவல்கள் பரிமாறிக்கொள்வதும், பொருள்கள் வாங்கும் பொழுது உதவி செய்துகொள்வதுமாக ஒரு சிலர் மனித நேயத்தோடு இருப்பதையும் கூட ஒரு பக்கம் பார்க்கிறேன். மனிதன் என்பவன் கூடி வாழும் ஒரு சமூக விலங்கு என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

அனைவருக்குமே இது ஒரு புது அனுபவம். வீட்டினுள் அடைப்பட்டிருப்பது, கிடைக்கும் பொருள்களை வைத்து காலம் தள்ளப் பழகுவது என இவ்வனுபவம் இலங்கையருக்கு மாத்திரமல்லாது முழு உலகத்திற்குமே புதிதுதான். இலங்கை அரசு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினாலே, இதற்கு மேலும் பாதிப்புகள், உயிரிழப்புகள் இல்லாமல், இந்தக் கொடிய நோயிலிருந்து இந்தச் சிறிய அழகிய நாடு மிக வெற்றிகரமாக மீண்டெழ முடியும்.

Representational Image
Representational Image

கொரோனா தொற்றுப் பரவலினால் ஒரு சில பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. சில நாள்களுக்கு முன்னர் அட்டுலுகம எனும் முற்றாக முடக்கப்பட்ட கிராமத்திலிருந்து நேற்று இரவு மக்கள் திருட்டுத்தனமாக ஓடங்களிலும் படகுகளிலும் ஏறி ஆற்றின் ஊடே தப்பிச்செல்ல முற்பட்டதையடுத்து அப்பிரதேசத்தைச் சுற்றி போலீஸ் மற்றும் ராணுவக் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, கொரோனா சம்பந்தமாக விசாரிக்கச் சென்ற PHI (Public Health Inspector) ஒருவர் கத்தியால் குத்தி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியையும், களுத்துரை எனும் இடத்தில் தனக்கு COVID-19 தொற்று இருப்பது தெரிந்தும் அதை மறைத்து ஒரு கர்ப்பிணிப் பெண் சாதாரண பிரசவ வார்டில் சென்று சேர்ந்ததால், அந்த வைத்தியசாலையில் இருந்த அனைத்து வைத்தியர்கள், தாதிமார் மற்றும் ஏனைய கர்ப்பிணிகள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்ற செய்திகளையும் இன்று தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன்.

இவ்வாறாக மக்களின் துளி கூட பொறுப்பற்ற நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் நாள்தோறும் வந்தவண்ணமே உள்ளன.

Representational Image
Representational Image

இவ்வாறான, ஊரடங்குச் சட்டத்தை மதிக்காமல் வெளியே சுற்றும் கும்பலும், நோய் அறிகுறி தெரிந்தும் அதை மறைத்து சமூகத்துக்குள் நடமாடும் சுயநல மாந்தரும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அரசியலையும் துவேசத்தையும் கக்கும் கூட்டமும், எரியுற வீட்டில் பிடுங்குவது லாபமென இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொருள்களை பதுக்கியும் விலையை நான்கு மடங்காக்கியும் விற்பனை செய்யும் வணிகரும், சட்டத்தையும் ஒழுங்கையும் பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவோரும் என எந்தவிதச் சமூக அக்கறையுமே இல்லாத மக்கள் இருக்கும் வரை, நாம் இன்னும் பல மாதங்கள் முக்கி முணங்கி கடைசியில் கொரோனாவின் முன் முடங்கிப்போகும் நிலை வெகுதூரத்தில் இல்லை!!

-றின்னோஸா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு