`குரங்கு அம்மை' நோய்க்கு புதிய பெயர் வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் குரங்கு அம்மை என தற்போது இருக்கும் பெயருக்கு மாற்றாக, எம்பாக்ஸ் (mpox) என்ற புதிய பெயரை வைத்துள்ளது.

சமீபத்தில் உலக மக்களிடையே பரவிய குரங்கு அம்மை (Monkey Pox) நோய்த்தொற்றால், கடுமையான காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்றவை ஏற்பட்டன. நோயின் தீவிரம் அதிகரித்து வேகமாகப் பரவியது. சில நாடுகள் அவசர நிலையைப் பிரகடனபடுத்தின.
அதேநேரம், பல நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களும், நிபுணர்களும் `குரங்கு அம்மை’ என்ற பெயரை மாற்றியமைக்குமாறு உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.
ஏனெனில் எந்த ஒரு நோயையும், குறிப்பிட்ட நாடு அல்லது பகுதியோடு தொடர்புபடுத்தாமல், அந்தத் தொற்று வைரஸின் பெயரையோ அல்லது அதன் திரிபுகளையோ வைத்துக் குறிப்பிடுவது நல்லது.
ஆனால் குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்பிரிக்க நாட்டோடு தொடர்புடையதாகப் பலராலும் கருதப்பட்டது. பெரும்பாலான தொற்றுநோய்கள் ஆப்பிரிக்காவில் இருந்துதான் பரவுகின்றன என்ற பொதுவான எண்ணமும் மக்களிடையே உருவாகி விடுகிறது.

அதோடு குரங்குகளை ஆப்பிரிக்க மக்களோடு தொடர்புபடுத்திப் பேசும், கடந்த கால கசப்பான வரலாற்றுச் சம்பவங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே பெயரை மாற்றும்படி வலியுறுத்தப்பட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனமும் மாற்றியமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வந்தது.
இந்நிலையில், உலகளவில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைப் படி, குரங்கு அம்மை என்ற பெயருக்கு மாற்றாக எம்பாக்ஸ் (mpox) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை என்ற பெயர் படிப்படியாக நீக்கப்படும் வரை, ஒரு வருடத்திற்கு இரண்டு சொற்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.