சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

இவர் ‘வேற லெவல்’ டாக்டர்!

அசோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
அசோகன்

மருத்துவம்

மனிதர்களுக்கு மருத்துவம் பார்ப்பதைவிட விலங்குகளுக்கு மருத்துவம் பார்ப்பது கடினமானது. `நமக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்பதையே புரிந்துகொள்ள முடியாத அவற்றுக்குச் சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதானதா என்ன... அந்தச் சவாலான பணியை 28 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருகிறார் `சத்தியமங்கலம் புலிகள் காப்பக’த்தின் மருத்துவர் அசோகன்.

யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் சீடரான இவர், யானை, பறவைகள், மான்கள், காட்டு மாடுகள் எனப் பல உயிரினங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றியிருப்பவர்.

இவர் ‘வேற லெவல்’ டாக்டர்!

28 ஆண்டுகளில் 14 பணியிட மாற்றங்களைச் சந்தித்திருக்கிறார். அசோகன் குறித்த ஒரு சம்பவம், வனவிலங்குகளுக்கான அவரின் அர்ப்பணிப்பைப் புரிந்துகொள்ள உதவும். சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் வந்தது எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு கழுதைப் புலி. அதை அந்த மக்கள் மிகக் கடுமையாகத் தாக்கினார்கள். அடி என்றால் சாதாரண அடி அல்ல. எலும்புகள் நொறுங்கி, கண் பார்வையை இழந்து கோமா நிலைக்கே சென்றுவிட்டது அந்தக் கழுதைப் புலி. அசோகன் அதைப் பார்த்தபோது, அதன் உடலில் பாதி உயிர்தான் இருந்தது. `அவ்வளவுதான்’ என்று அதைக் கைவிட்டுவிடவில்லை அசோகன். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கே அதற்கு சிகிச்சை ஆரம்பமானது. வனத்துறையும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க, தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து, தொடர் சிகிச்சையளித்து, கழுதைப் புலியை மீட்கப் போராடினார் அசோகன். அதற்குப் பலன் கிடைத்தது. ஒரு வருடம் கழித்து, அந்தக் கழுதைப் புலி கோமாவிலிருந்து மீண்டு வந்தது.

“சேலம் எடப்பாடிதான் எனக்குச் சொந்த ஊர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கே வசதி இல்லாத சூழல். படித்துக்கொண்டிருக்கும்போதே, பகுதி நேரமாகக் கிடைக்கும் வேலைகளுக்கெல்லாம் சென்றேன். ஒருவழியாகப் படித்து முடித்து, 1990-ம் ஆண்டு, கால்நடைப் பராமரிப்புத்துறையில் சின்ன சேலம் ஆட்டுப் பண்ணையில் பணிக்குச் சேர்ந்தேன். அடுத்து, ஓசூர்க் கால்நடைப் பண்ணையில் மேலாளராக இருந்தேன்.

1996-ம் ஆண்டு, வனத்துறை மருத்துவராகப் பணிக்குச் சேர்ந்தேன். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் வித்தியாசம் இருப்பதைப்போல, சாதாரண விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும், வனவிலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

இவர் ‘வேற லெவல்’ டாக்டர்!

`யானை டாக்டர்’ என்று அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்திதான் யானைகள் குறித்து எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். அவர் ஓர் அறிவுப்பெட்டகம். யானைக்குச் சிகிச்சையளிப்பது சாதாரணமான விஷயமல்ல. யானை படுத்துவிட்டால், அதை எழுப்புவது மிகவும் கடினம். படுத்துக் கொண்டிருக்கும்போது யானையின் இதயத்துடிப்பு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். முதலில் அதற்கு மனரீதியாக நம்பிக்கை கொடுத்து, எழுப்பி நிற்கவைக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும், யானையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதுவரை, உயிருக்குப் போராடிய பத்துக்கும் மேற்பட்ட யானைகளை நான் காப்பாற்றியிருக்கிறேன்.

கேரளாவில் 22 பேரைக் கொன்ற மக்னா யானையைச் சுடச்சொல்லி அம்மாநில அரசு உத்தரவு போட்டுவிட்டது. ஆனால், அதை உயிருடன் பிடிப்பதற்காக இரண்டு மாதங்கள் நாங்கள் ஆய்வு செய்தோம். பிறகு மயக்க ஊசி போட்டுப் பிடித்தோம். உடல் முழுக்கத் துப்பாகிக் குண்டுகள். ஓராண்டுக்கு அதற்குச் சிகிச்சையளித்தோம். என் வாழ்வில் அதைப்போல ஓர் அறிவான யானையை நான் பார்த்ததில்லை. கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக, அந்த யானைக்கும் `கிருஷ்ணமூர்த்தி’ என்றே பெயர்வைத்துவிட்டோம். இப்போது, முதுமலையில் அந்த யானையைப்போல ஒரு சாதுவான யானை இல்லை’’ என்று அசோகன் சொல்லிக் கொண்டிருந்தபோது, உடல்நிலை சரியில்லாத ஒரு கழுகை அசோகனிடம் கொண்டு வந்தார்கள். ``ட்ரீட்மென்ட் ஃபர்ஸ்ட்’ என்று நம்மிடம் கூறிவிட்டு, கழுகுக்குச் சிகிச்சை கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்.

``மயில், கழுகு போன்ற பறவை இனங்களுக்கு அதிக அளவில் சிகிச்சையளித்திருக்கிறேன். பறவை இனங்களுக்கு நோய் குணமாகச் சற்றுத் தாமதமாகும். இதனால், அவற்றுக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சையளிக்க வேண்டும். அப்படி சிகிச்சையளிக்கப்பட்டு சரியான இரண்டு கழுகுகள் மீண்டும் எங்கள் மருத்துவமனைக்கு வந்து வட்டமடித்துக்கொண்டிருந்தன. கோவை, வ.உ.சி உயிரியல் பூங்காவில் நான் பணிக்குச் சேர்ந்தபோது பாதிக் கூண்டுகள் காலியாக இருந்தன. மொத்தமாகவே 485 உயிரினங்கள்தான் (பறவைகள், விலங்குகள்) இருந்தன. நான் அங்கிருந்து வெளியில் வந்தபோது, அந்த உயிரினங்களின் எண்ணிக்கை 900-ஆக அதிகரித்திருந்தது. நாட்டிலேயே முதன்முறையாக, நாகப்பாம்புக்குப் புற்றுநோய்க் கட்டியைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை மூலம் அதை வெற்றிகரமாக அகற்றினோம். இதனால், அந்தப் பூங்கா பெரிய அளவில் பிரபலமடைந்துவிட்டது” என்று பேசிக்கொண்டே சிகிச்சையிலிருக்கும் கழுதைப் புலி அருகே அழைத்துச் சென்றார்.

``நான் இதைப் பார்த்தபோது உடலில் நரம்பே கிடைக்கவில்லை. உடலில் சுத்தமாகத் தண்ணீர் இல்லை. காதில் புழு உற்பத்தியாகி, அது கண் வழியே வெளியில் வந்துகொண்டிருந்தது. திருப்பூரில் எனக்குத் தெரிந்த ஸ்கேன் சென்டரில் பேசி, இதற்கு எக்ஸ்ரே, ஸ்கேன் செய்தோம். பற்கள், தோள்பட்டை உடைந்திருந்தன. முதுகிலும் முறிவு ஏற்பட்டிருந்தது. ஆர்த்தோ டாக்டரிடம் ஆலோசனை செய்தோம். இப்போது, கழுதைப் புலியின் உடல் நன்கு தேறிவிட்டது. எலும்பு முறிவெல்லாம் சரியாகிவிட்டது. உணவு எடுத்துக்கொள்கிறது. 18 கிலோவிலிருந்து இப்போது 47 கிலோவாக அதிகரித்துவிட்டது. பார்வை மட்டும்தான் சரியாகவில்லை. அதைச் சரிசெய்வதற்காக சர்வதேச அளவில் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். இந்தியாவில் மொத்தமே 5,000 கழுதைப் புலிகள்தான் இருக்கின்றன. எனவே, அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்றவரிடம், விலங்குகளின் தாக்குதலுக்குள்ளான சம்பவம் குறித்துக் கேட்டோம்.

இவர் ‘வேற லெவல்’ டாக்டர்!

``அது நிறைய... கோவை வ.உ.சி பூங்காவில் முதலை என் கையைக் கடித்து 32 தையல்கள் போட வேண்டியதாகிவிட்டது. சத்தியமங்கலத்தில் தாய் யானைக்குச் சிகிச்சை அளித்தபோது, குட்டி யானை கடித்ததில் என்னுடைய கையிலிருந்து சதை வெளியில் வந்துவிட்டது. எட்டிமடையில் பச்சைப் பாம்பு மூக்கைப் பிடித்திருக்கிறது. பல இடங்களில் கீழே விழுந்திருக்கிறேன். என் குடும்பத்தினர் திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். இப்போதுவரை நான் பெரிய அளவில் சொத்து சேர்த்து வைக்கவில்லை. வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன். இதுவே, மனிதர்களுக்கான மருத்துவரென்றால், அவரின் நிலைமையே வேறு. நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. என்னால் முடிந்த விஷயங்களைச் செய்துகொண்டே இருப்பேன். அதற்கான உரிய அங்கீகாரம் அரசிடமிருந்து கிடைத்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம்.’’ புன்னகை மாறாமல் சொல்கிறார் அசோகன்.