நாடு முழுவதும் மருத்துவப்பணியை நெறிமுறைப்படுத்தும் வகையில் மருத்துவர்களுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண், உரிமம் உள்ளிட்டவை கொண்டு வரப்பட உள்ளது.
நம் நாட்டில் மருத்துவம் புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் புதிய விதி ஒன்றை, தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அனைத்து மருத்துவர்களும் தங்களின் அடையாளத்திற்காக தேசிய அளவிலான தனித்துவமான அடையாள எண்ணை (Unique Identification number) வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாள எண்ணை வழங்குதல் மற்றும் மேற்பார்வை செய்யும் பணியை, தேசிய மருத்துவ ஆணையம் கவனித்துக்கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு மருத்துவரும் தேசிய மருத்துவ ஆணையத்தில் தனிப்பட்ட அடையாள எண்ணுக்கு விண்ணப்பித்து அதைப் பெற்றால்தான் மருத்துவச் சேவையைச் செய்ய முடியும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவ அடையாள எண்ணின் மூலம் மருத்துவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட நாள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் புதிய நெறிமுறைகளின்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் பொதுவான ஒரே தகவல் பதிவேடு இருக்கும். இதன் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களை பற்றிய தகவலையும் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.
மாநிலம் வாரியான மருத்துவர்களை பற்றிய தகவல்கள், அந்தந்த மாநிலங்களின் மருத்துவ ஆணையத்திடம் ஏற்கெனவே உள்ளது. அதை தேசிய அளவில் ஒருங்கிணைத்துப் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பதிவேடுகள் மூலம் மருத்துவர்களின் பெயர், தந்தை பெயர், பதிவு எண், பணிபுரியும் இடம், படித்து முடித்த வருடம், கல்லூரியின் பெயர் போன்ற விவரங்களை அறிய முடியும்.

மருத்துவம் புரிவதற்கு மருத்துவ ஆணையத்தின் மூலமாக உரிமம் வழங்கப்படும். இது, ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதன்பிறகு அந்த உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். மாநில மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்து, உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். உரிமம் காலாவதி ஆவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே புதிய உரிமத்திற்கு பதிவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
மருத்துவர்களுக்கான தனித்துவ அடையாள எண் நடைமுறை குறித்து, தமிழக மருத்துவ ஆணையத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்... ``ஒவ்வொரு மருத்துவரும் படித்து முடித்தவுடன் அந்தந்த மாநிலத்தின் மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டியது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது. தற்போது அந்தத் தகவல்களை தேசிய மருத்துவ ஆணையம் ஒருங்கிணைக்கும் போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களின் தகவல்களும் ஒரே பதிவேட்டில் இருக்கும்.

மேலும் மருத்துவர்களின் நடவடிக்கை பற்றி அந்தந்த மாநில் மருத்துவ ஆணையம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. அந்தப் பணியை நெறிமுறைப்படுத்துவதிலும் அனைத்து மாநில மருத்துவ ஆணையங்களுக்கும் தலைமை பொறுப்பில் தேசிய மருத்துவ ஆணையம் இருக்கும். ஒரு மாநிலத்தில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், வேறு மாநிலத்தில் சென்று பணி புரிய வேண்டுமெனில் அங்கு சென்று பதிவு செய்து அனுமதி பெற வேண்டிய சூழல் இருந்தது. தற்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான தனித்துவமான அடையாள எண் இருக்கும்பட்சத்தில் வேறு மாநிலங்களில் பணி செய்வது மருத்துவர்களுக்கு எளிதாக மாறலாம்" என்றார்.