கட்டுரைகள்
Published:Updated:

தலையணைக்கும் கழுத்து வலிக்கும் தொடர்பு இருக்கிறதா?

தலையணைக்கும் கழுத்து வலிக்கும் தொடர்பு இருக்கிறதா?
பிரீமியம் ஸ்டோரி
News
தலையணைக்கும் கழுத்து வலிக்கும் தொடர்பு இருக்கிறதா?

கழுத்தெலும்புத் தேய்மானம் பிரச்னை இருப்பவர்கள், தலையணை விஷயத்தில் இன்னும் கூடுதலாக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

`கழுத்து வலிக்குது’ என்று சொன்னாலே, அருகில் இருப்பவர்களில் ஒருவர் ‘தலையணை சரியா இல்லையா..?’ என்பார்கள். அந்த அளவுக்குத் தலையணைக்கும் கழுத்து வலிக்கும் சம்பந்தமிருக்கிறது. இதையே வழிமொழிகிற பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன், தலையணை எப்படி கழுத்து வலிக்குக் காரணமாகிறது என்பதையும், அதற்கான தீர்வுகளையும் விளக்குகிறார்.

ஸ்ரீநாத் ராகவன்
ஸ்ரீநாத் ராகவன்

‘‘இரவில் எட்டு மணி நேரம் உறங்குகிறோம் என்றால், அந்த எட்டு மணி நேரமும் மல்லாந்து படுத்தே உறங்க மாட்டோம். வலப்புறம், இடப்புறம் என ஒருக்களித்தும் தூங்குவோம். நம்மில் பெரும்பாலானோர் உறங்குவதற்குத் தட்டையான தலையணையைத்தான் பயன்படுத்துகிறோம். மல்லாந்து படுத்து உறங்குகையில், தட்டையான தலையணை கழுத்தின் வளைவுடன் பொருந்தி, கழுத்து வலி ஏற்படாதபடிக்கு உதவும். ஆனால், ஒருக்களித்துப் படுக்கையில் கழுத்து வளைவில் தலையணையைச் சரியாக வைக்கவில்லை என்றால், தலை லேசாகத் தொங்குவதுபோல இருக்கும் அல்லது தலை சற்று மேலேறி கழுத்துப் பிடிமானம் இல்லாமல் இருக்கும். இதனால், நம்மையறியாமல் தோள்பட்டையின் மீது அதிக அழுத்தம் கொடுத்துவிடுவோம். இது பல நாள் தொடர்ந்தால் கழுத்துவலியுடன் தோள்பட்டை வலியும் சேர்ந்து வரும். இப்படி பக்கவாட்டில் படுக்கும்போது நம்மையறியாமலே கையை மடித்து வைத்து, அதன் மேலே தலையை வைத்து உறங்குவோம். இதனால், கைகளில் மேலோட்டமாக இருக்கிற நரம்புகள் அழுத்தப்பட்டு, காலையில் விழிக்கும்போது அழுத்தப்பட்ட கை மரத்துப்போயிருக்கும். இதற்கெல்லாம் காரணம், நீங்கள் பயன்படுத்தும் தலையணை உங்கள் கழுத்து வளைவுடன் சரியாகப் பொருந்தாததுதான்.

கழுத்தெலும்புத் தேய்மானம் பிரச்னை இருப்பவர்கள், தலையணை விஷயத்தில் இன்னும் கூடுதலாக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், பிரச்னை அதிகமாகி கழுத்தெலும்பின் டிஸ்க்கில் ஏதோவொன்று கைகளுக்கு வருகிற நரம்புகளை அழுத்த ஆரம்பிக்கும். விளைவு, கைகளில் குடைவது போன்ற வலி, ஷாக் அடிப்பது போன்ற வலி, கைகள் வலிமை குறைந்ததுபோல உணர்தல் அல்லது மரத்துப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

தலையணைக்கும் கழுத்து வலிக்கும் தொடர்பு இருக்கிறதா?

நல்ல தூக்கத்துக்கு அவரவர்க்கு சௌகர்யமான படுக்கையும் தலையணையும் முக்கியம். ‘புது இடத்துக்குப் போனா ராத்திரி தூக்கமே வராது’ என்று பலரும் சொல்வார்கள். நமக்கேற்ற படுக்கையும் தலையணையும் அங்கு கிடைக்காததுதான் அதற்கு முக்கியமான காரணம். ஒரே தலையணையை வருடக்கணக்கில் பயன்படுத்துவது கழுத்துக்கு நல்லதல்ல. ஏனென்றால், அந்தத் தலையணை இறுக்கமாகி, தட்டையாகி, கல்போல மாறியிருக்கும். உங்கள் தலையணை இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறதென்றால் உடனே மாற்றிவிடுங்கள். சிலருக்கு, இரண்டு தலையணைகளை ஒன்றன் மீது ஒன்று வைத்துப் படுத்தால்தான் தூக்கமே வரும். இதுவும் கழுத்துக்கு நல்லதல்ல.

தலையணைக்கும் கழுத்து வலிக்கும் தொடர்பு இருக்கிறதா?

மனித வாழ்வில் தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. ஒருநாள் தூக்கம் கெட்டாலும், அடுத்த நாள் உங்கள் செயல்திறன் குறையும். செளகர்யமாகத் தூங்குவதற்கும், கழுத்து வலி வராமல் இருப்பதற்கும் சரியான தலையணை மிக மிக அவசியம்’’ என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன்.