Published:Updated:

ஆற்றாமை, ஏக்கம், அதிர்ச்சி, எதிர்வினை... மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு உளவியல்!

ஆற்றாமை, ஏக்கம், அதிர்ச்சி, எதிர்வினை... மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு உளவியல்!
ஆற்றாமை, ஏக்கம், அதிர்ச்சி, எதிர்வினை... மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு உளவியல்!

ஆற்றாமை, ஏக்கம், அதிர்ச்சி, எதிர்வினை... மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு உளவியல்!

ரு வார இறுதியில், சென்னையின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தின் கூட்ட நெரிசலில் நடந்துகொண்டிருந்தேன். தினந்தோறும் இந்த நெரிசலை ஒரு விஷயமாகப் பொருட்படுத்த இயலாத வாழ்க்கையைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சாமான்யனுக்கும் பல நடுக்கம் தரும் தகவல்கள், பிரேக்கிங் நியூஸாக வந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றில் யாரின் பிரச்னையைக் கவனிப்பது, எழுதுவது என்பது எப்போதுமே கடினமான ஒன்று. நாம் தேர்ந்தெடுக்கும் பிரச்னையைக்கூட, அதற்கு டி.ஆர்.பி வேல்யூ இருந்தால்தான், அதை நம்மோடு சேர்ந்து அலசவோ மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளவோ உடன்வருவார்கள்.

“நல்லாதான் நியாயம் பேசுனாங்க... ஒண்ணுத்துல ஏத்தினா, இன்னொண்ணுத்துல குறைச்சிருக்கணும். பெட்ரோலுக்கு வரியைக் குறைச்சிருந்தா, நானும் பைக் வாங்கி இந்நேரம் பைக்குல போயிருப்பேன்...’’ எனக் குமுறும் ஓர் இளைஞன் என்னைக் கடந்து சென்றுவிட்டான். இரண்டாயிரம் நோட்டை நீட்டியபடி ஆட்டோகாரரிடம் மல்லுக்கட்டும் 60 வயது தாத்தா... ‘அட்லீஸ்ட் கார்டாவது வாங்கிக்க’ என்று மல்லுக்கட்டும் டிஜிட்டல் இந்தியன் தாத்தா. ‘வர்மக்கலை தெரியாத அவர் வீடு போய்ச் சேர்ந்துவிடுவாரா?’ என்கிற கவலை வேறு தொற்றிக்கொண்டது. 

இந்த தினசரிப் போராட்டங்கள் எப்படியான விளைவுகளைத் தந்தாலும், வயிற்றுக்கும் கைக்கும் போட்டி போடும் நடுத்தர வர்க்கத்தின் மிகப்பெரிய நம்பிக்கையான கல்வியிலும் தீர்வில்லா ஒரு மாறுதல் மிக அதிகமாகவே அச்சுறுத்திக்கொண்டிருந்தது. மனதிலே அவளைத் தேடினேன்... `இன்றைக்காவது நாங்கள் சந்தித்துக்கொள்வோமா?’

திடீரென ஒரு நாற்றம்... `சரிதான்! சின்னமோ, வண்ணமோ... எது மாறினாலும், இடம்மாறாத டாஸ்மாக்கின் நீடித்தநிலைத் தன்மைகூட எங்கள் கல்வி முறையில் கிடைக்கப் போவதில்லையா?’ என்று நினைத்தபடி காசு கொடுத்துக் கற்ற பிராணாயாமக் கல்வியால் மூச்சைப் பிடித்தபடி டாஸ்மாக்கைக் கடந்து, மாநகரப் பேருந்து நிற்கும் இடத்துக்கு விரைந்தேன்.

‘எம்.டி.சி எப்படா பஸ் ஸ்டாப்ல நின்னுருக்கு..?’  என விவேக் அடிக்கும் காமெடிக்கு ஏற்ப, நிறுத்தங்களைக் கடந்து சென்று நின்றன பேருந்துகள். சோர்ந்து, களைத்து பேருந்தில் ஏறும் சில மாணவர்களைப் பார்த்தபோது, வார இறுதியில் என்னுடன் பயணித்து வந்த அவளுடைய நினைவே மீண்டும் வந்தது. இன்றும் அவளைத் தேடுகிறேன். 

***

‘காஞ்சிபுரம் டு சென்னை.’ - வழக்கமாக வார இறுதியில் நான் பயணிக்கும் வழித்தடம். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பேருந்தின் இரு பக்கமும் மரங்களும் ஏரிகளும் எங்களை வரவேற்கும். இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டது. ஜன்னல் சீட்டுக்காக கர்சீஃப் போடவேண்டிய அவசியம்கூட இல்லை. இயற்கையைவிட்டுத் தள்ளிப்போகும்போது மகிழ்ச்சியும் தொலைந்துதான் போகிறது. 

இயற்கைக் காட்சிகளும் இல்லை, அடிக்கடி போனை எடுக்கவும் பிடிக்கவில்லை என்ற நிலையில் அயர்ந்த முகத்துடன் ஒரு சிறுமி பேருந்தின் கம்பிகளைப் பிடித்துத் தாங்கிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. இது நடந்து ஒரு வருடம் ஆகிறது. அப்போது அவள் பெயர்கூட எனக்குத் தெரியாது. சனி, ஞாயிறுகளில் மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தில் ஏறுவாள். இதுவரை கவனித்ததில் ஒரே ஒருமுறை மட்டும் ‘1100’ வகையான அதாவது பேசுவதற்கும், நார்மல் டெக்ஸ்டுக்கும் மட்டும் பயன்படுத்தும் போன் வகை ஒன்றைப் பயன்படுத்தி, தன் அம்மாவிடம் பேசிக்கொண்டு வந்தாள். 

அவள் சாய்ந்திருந்த விதம், புத்தகப்பையின் சுமையைத் தெரிவித்தது. உடல் சோர்வைப் பார்த்து, “நீ உட்காரும்மா...” எனச் சொல்ல, “பழகிடுச்சி’’ என்றாள் அவள். அவளிடமிருந்த கனமான பையை வாங்கிக்கொண்டபோது `நீட்’ தேர்வுக்காகப் படிக்கிறாள் என்பதைப் பையிலிருந்த நீட் பயிற்சி நிறுவனத்தின் விளம்பரம் சொன்னது. 

அடுத்த முறை பயணித்தபோது, என் மீது ஏதோ நம்பிக்கை வந்திருந்ததுபோலப் பேசத் தொடங்கினாள். அப்பா தறி நெய்பவர். தறியை மட்டுமே நம்பிப் பிழைக்கும் வழமையான ஏழ்மைக் குடும்பம். சிறு வயதிலிருந்து டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவையும், தன் குடும்ப டாக்டரின் சேவையால் தனக்கு இந்த எண்ணம் உருவானதையும் ஆழமாகப் பேசிக்கொண்டிருந்தாள். உட்கார இடம் கிடைத்தால் போதும், கையில் புத்தகத்தை எடுத்துவிடுவாள்.

பேருந்தின் சத்தமோ, ஓட்டமோ அவளைத் தொந்தரவு செய்ததில்லை. வாரம் முழுதும் பள்ளிப் படிப்பு, பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டில் இரவு 11 மணி வரை படிப்பு, மீண்டும் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து படிக்கத் தொடங்கிவிடுவாள் என்பதை அவளுடைய அம்மா பின்னொரு நாளில் பயணித்தபோது சொல்லக் கேள்விப்பட்டேன். இன்னமும் வீட்டில் யாராவது ஒருவரை கரையேற்றிவிட்டால், ஒட்டுமொத்தக் குடும்பமும் கரையேறிவிடும் என்ற எண்ணம் தொடர்ந்துகொண்டிருந்தது.

அண்ணன், தம்பிகளுக்கு அவ்வளவாகப் படிப்பு வரவில்லை. எனவே, அகிலாதான் அந்தக் குடும்பத்தின் ஒரே நம்பிக்கை விளக்காக ஒளிர்ந்துகொண்டிருந்தாள். இப்போது அவள் பெயர் அகிலா என்பதும், அவள் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறாள் என்பதும் தெரிய வந்திருக்கும். நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுக்க லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்கும் ஒரு பெரும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்திருந்தாள். 40 சதவிகிதம் ஸ்கால்ர்ஷிப்... மீதிப் பணத்தை வட்டிக்கு வாங்கியிருப்பார்கள் போலும். 

‘வட்டிக்கு வாங்கிப் படிக்க வேண்டுமா?’ எனக் கேட்காதீர்கள். சென்னையின் மிகப் பெரிய பள்ளியில் படிக்கும் மாணவர்களே இந்த எக்ஸ்ட்ரா பயிற்சிக்கு உட்படும்போது, நகர்ப்புற மாணவர்களின் தகுதியை உயர்த்த, அவர்கள் எந்த அளவு மெனக்கெட வேண்டும் என்பதை மறுக்க முடியுமா? ‘கனவுக்கு எல்லை! இலக்கை அடைவதுதான்’. அதுவும் நடுத்தர மற்றும் அதன் முன் பின் அடுக்குகளில் உள்ள மக்களின் கனவை நம்பித்தான் இன்றைய உலகப் பொருளாதாராமே இயங்கிக்கொண்டிருக்கிறது. 

ஒரு வருடத்துக்கும் மேலாக சனி, ஞாயிறுகளில் காலை முதல் இரவு 7 மணி வரை நீட் பயிற்சிக்குப் படித்து, பயணித்து, கலைத்து, உறங்கி, உறக்கத்திலும் கனவு துரத்த விடியலைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் அகிலாவின் மருத்துவப் பயணம் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வை நம்பிப் பயணித்தவள், பின்னர் ஒருநாள் என்னைச் சந்திக்கவும் என்னுடன் நூலகத்துக்கு வரவும் ஒப்புதல் அளித்தாள். அவள் நம்பிக்கை பொய்த்துப் போகுமோ என்ற பயத்தில்தான் வராமல் இருந்தாளோ என்றும் தோன்றியது.

அவள் முகவரி தெரியாது, எப்படி இருக்கிறாள் எனக் கேட்க போன் நம்பரும் என்னிடம் இல்லை. 

நாங்கள் சந்திப்பதாக இருந்த நாளுக்கு முந்தைய நாள் அவளே போன் செய்தாள். “நான் அகிலா...’’ என்றாள். பிறகு பேசவே இல்லை, அழுகை, விம்மல் முட்டும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. 

“அக்கா, என் போனைப் பார்த்திருக்கீங்கல்ல.. அதை வித்தா எவ்ளோக்கா கிடைக்கும்?’’ எனக் கேட்டாள். 

“உனக்கு எவ்ளோ வேணும்? நானே வாங்கிக்கிறேன். நாளைக்கு வர்றேன். விலாசம் சொல்லு’’ என்றேன். 

“நீங்கதான் பெரிய போன் வெச்சிருக்கீங்களேக்கா...’’ எனத் தொடர்ந்தாள். 

“இல்லம்மா... ஆபிஸுக்காக அப்படி ஒண்ணு வேணும். இப்ப என்ன பண்ற... அம்மா அப்பா...’’ எனக் கேட்டுக்கொண்டிருந்தபோதே, “இல்லைக்கா... சூழ்நிலை சரியில்லை. நானே திரும்பக் கூப்பிடறேன். எனக்காக வேண்டிக்கங்க...’’ என்றாள்.

பிரார்த்தனைகள் இருக்கட்டும்! அகிலாவைப்போல எத்தனையோ குடும்பங்கள் மருத்துவக் கனவை நோக்கி இரு வருடங்களுக்கு முன்னரே நகர்ந்துவிட்டன. சொல்லப் போனால் எட்டாம் வகுப்பு முடித்தவுடனேயே அதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்கிறார்கள். 

கேளிக்கை, விளையாட்டு, விசேஷ நாள்கள்... என எதற்கும் இடமளிக்காமல், நான்கு வருடங்களாக மருத்துவக் கனவில் ஊறி, எப்படியாகினும் படித்துவிட வேண்டும் என்ற பிள்ளைகளின் உழைப்பும், வீட்டையும், நிலத்தையும் விற்று, ஓட்டை டூவிலரைக்கூட மகன் டாக்டரான பிறகு மாற்றிக்கொள்ளலாம் என வங்கியில் லோன் போட்டு, ஃபீஸ் கட்டிய எத்தனையோ அப்பாக்களின் முகமும், கண்ணீரும் மட்டுமே இன்று என்னை யோசிக்கச் செய்கிறது. 

இரண்டு வருடங்களுக்குப் பின்னர் வரப்போகும் பரீட்சைக்காக நான்கு வருடம் சிக்கனம் செய்து திட்டமிடும் குடும்பத் தலைவர்களின் அக்கறைகூட நம்மில் பலருக்கு இல்லை. ஓர் உயர் கல்வி முறையில் உருவாகும் ஒரு மாற்றம், வருட இறுதியில், அதுவும் பரீட்சைகள் நடத்தி முடித்த பின்னர் வெளிவரும் என்றால், இதுவரை கல்வி முறையின் சட்ட திட்டங்களை மதித்து வந்த மாணவர்களிடம், எதிர்கால இந்தியாவின் மீது எந்தவிதமான நல்ல நம்பிக்கையை உருவாக்கும்? எனக்குத் தெரியவில்லை. 

மத்திய அரசோ, மாநில அரசோ... எல்லோருக்கும் ஒரே மாதிரியான வசதிகள், கல்வி நிலையங்கள் இல்லாத நிலையில், அனைவருக்கும் ஒரே தேர்வு என்ற விதி எப்படிச் சாத்தியப்படும் என யோசித்திருக்க வேண்டும். அப்படியே காஞ்சிபுரத்தின் ஒரு சாதாரணப் பள்ளியில் படிக்கும் மாணவியும், சென்னையிலேயே பத்து கிளைகளை வைத்து நடத்திக்கொண்டிருக்கும் பெரு நிறுவனப் பள்ளிகளில் பயிலும் மாணவியும் ஒரே தகுதியில் இருக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படி இல்லை என்றால், தேவைகளை மாற்றவும் அல்லது தேர்வு முறையை மாற்றவும் செய்யலாம். ஆனால், வயிற்றில் குழந்தை வந்த உடனேயே எல்.கே.ஜி சீட் வாங்க வேண்டி, பள்ளியில் துண்டு போடும் அளவுக்குக் கல்விக்கு முக்கியம் தரும் மக்களாகிய நாங்கள் கல்விக்காக எந்த மாற்றத்துக்கும் உட்பட்டு பிழைத்துக்கொண்டிருக்கிறோம். வருடா வருடம் ப்ளஸ்டூ-வில் தேர்ச்சி பெறவில்லை எனத் தற்கொலை செய்துகொண்ட பல மாணவர்களின் அழுத்தங்களை இங்கு நினைத்துப் பாருங்கள். கல்வி என்பது எங்களுக்குப் பொழுதுபோக்கு அல்ல, கேளிக்கையும் அல்ல... அடுத்தகட்ட வாழ்வை நோக்கி அடி எடுத்துவைக்கும் வாழ்க்கையின் நம்பிக்கை. 

இக்கல்வி முறையில் ஏற்படும் ஆற்றாமை, ஏக்கம், எதிர்வினை... அனைத்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அவர்களின் மனஅழுத்தத்தைப் பன்மடங்காக மாற்றிவிடுவது மட்டுமல்ல, கல்வியின் மீதான அயர்ச்சியையும் உருவாக்கிவிடும். 

`ஃபோகஸ்... ஃபோகஸ்...’ இது மட்டும்தான் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த ஒரே தாரக மந்திரம். கண்களைக் கட்டிவிட்ட குதிரைபோல், மருத்துவம் கிடைக்கவில்லையென்றால் வேறு வாய்ப்பே இல்லை என்பதுபோல் ஓர் ஓட்டம். இந்த ஃபோகஸ் - மாணவர்களுக்கு மட்டும் இருந்தால் போதுமா?   

‘இனி நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற நீட் தேர்வு எழுதாத மாணவனின் கேள்விக்கு, நாளை என்ன பதிலளிக்கப் போகிறோம்? இங்கு மாணவர்கள் யார்... ஆசிரியர் யார்... முடிவெடுப்பது யார்?

இப்போது ஏன் இத்தனைப் பிரச்னைகளுக்குள் அகிலாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன்? பின்னே இரு குரல்கள்... மெடிக்கல் சீட் கிடைக்காததால், சென்னையில் தனக்கு விருப்பமில்லாத ஒரு கோர்ஸில் சேர்ந்துவிட்ட ஒரு பெண்ணின் குரல். தன் உறவினர் யாரோடோ தன் கனவு போய்விட்டதை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தாள். என் மொபைல் 'ஆப்'பில் பிரேக்கிங் நியூஸ் வந்தபடி இருந்தது. யாராவது அழைத்து, ஏதோ ஒரு செய்தி குறித்து என்னிடம் கேட்பார்கள். நான் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தேன். பின்னே திரும்பி அகிலாதானா என்று தெரிந்துகொள்ள பயமாக இருந்தது.

என்ன செய்யலாம் இப்போது?

அடுத்த கட்டுரைக்கு