Published:Updated:

பன்றிக் காய்ச்சல்

பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம்!

“இந்த நூற்றாண்டில், திடீர் திடீரென நோய்கள் பரவி, பதற்றத்தை உருவாக்கி வருகின்றன.  நம் முன்னோர்கள், பல காய்ச்சல்களுக்கும் கண்டறிந்துவைத்துள்ள மருந்துகளை நாம்தான் கண்டுகொள்வதும் இல்லை.  உபயோகிப்பதும் இல்லை. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே `கபசுரம்’ என்று வகை பிரித்து, மருந்தும் சொல்லியிருக்கிறார் யூகி முனி என்ற மாமுனிவர். இப்போது மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சலும் இந்த கபசுரத்துக்குள் அடங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

பன்றிக் காய்ச்சல்

“பன்றிக்காய்ச்சல் வரக் காரணம் என்ன?”

“எச்1என்1 (H1N1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின நுண்ணுயிரிதான் (Mutated virus) இந்தக் காய்ச்சலுக்குக் காரணம். மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் குப்பையில் கொட்டப்படும் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை அழுகிய நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து உருவாகும் நுண்ணுயிரி இது. அங்கிருந்துதான் நம் நாட்டுக்குப் பரவியிருக்கிறது. அந்த நாடுகளின் சீதோஷ்ண நிலையில் இது வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் அவ்வளவு வேகமாகப் பரவாது.”

“எப்போது இந்த வைரஸ் பரவும்? எல்லோருக்கும் தொற்றுமா?”

“பொதுவாக, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில்தான், எல்லா வைரஸ்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த வைரஸும் அப்படித்தான் பரவும். காற்று மூலம் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கி, கபத்தை உண்டாக்கும். முக்கியமாக, காசநோய் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தொற்றி, நோயை இன்னும் தீவிரமாக்கிவிடும்.”

“கபசுரக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?”

“மூக்கு, தொண்டை போன்ற மேல் சுவாசப் பாதை (Upper respiratory tract) உறுப்புகளைத்தான் இந்தக் கிருமி முதலில் தாக்கும். எனவே, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, தொண்டையில் தொற்று, தொண்டை வலி எனக் காய்ச்சல் வரை போய் நிற்கும்.”

பன்றிக் காய்ச்சல்

“சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து உள்ளதா?”

“யூகி முனி என்ற சித்தர், காய்ச்சலை 64 வகைகளாகப் பிரித்துள்ளார். உலகிலேயே வேறு எங்கும், இத்தகைய பகுப்பு  கிடையாது. இப்போது பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படும் காய்ச்சலுக்கு உரிய தன்மையையும் அதைக் குணப்படுத்துவதற்கு மருந்தையும் கூறியிருக்கிறார். ‘கபசுரக் குடிநீர்’ என்னும் மருந்து, இந்தக் காய்ச்சலைப் போக்கும் என்பது, அவருடைய ‘யூகி வைத்திய சிந்தாமணி’ என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும், வந்த பின் குணமளிக்கும் மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம்.”

“கபசுரக் குடிநீர் என்றால் என்ன?”

“நிலவேம்புக் கஷாயம் போலவே, இதுவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இந்த மருந்தில் நிலவேம்பும் ஓர் உட்பொருளாகக் கலந்துள்ளது.

நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, அக்ரஹாரம், கண்டுபாரங்கி (சிறு தேக்கு), ஆடாதொடை வேர், சீந்தில், கோஷ்டம், கற்பூரவள்ளி, கோரைக் கிழங்கு உள்ளிட்ட 15 மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துதான் கபசுரக் குடிநீர். இந்தத் தூளை 10 கிராம் (2 டீஸ்பூன்) எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து, அரை டம்ளராக வற்றியதும், இறக்கி, வடிகட்டி, காலையிலும் மாலையிலும் உணவுக்கு முன் அருந்த வேண்டும். ஒரு முறை செய்துவைத்த மருந்தை, அடுத்த வேளைக்குப் பயன்படுத்தாமல், அவ்வப்போது புதிதாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

பன்றிக் காய்ச்சல்

நோய் வருவதற்கு முன் தடுப்பு மருந்தாகக் குடிக்க நினைப்பவர்கள், 30 மி.லி எடுத்தால் போதும். தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்வதென்றால் மூன்று நாட்களும், சிகிச்சையாக எடுத்துக்கொள்வதென்றால் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்ப 15 நாட்கள் வரையிலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கபசுரக் குடிநீர், சித்த மருந்துக் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.

டெங்குக் காய்ச்சல் பரவியபோது, நிலவேம்புக் குடிநீர் பற்றிய தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டு, ஊடகங்களில் விளம்பரப்படுத்தியதன் விளைவாக, மக்களுக்கு நல்ல விழிப்புஉணர்வு ஏற்பட்டது. அதேபோல இந்தக் கபசுரக் குடிநீர் பற்றியும் அரசு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு, ஊடகங்களில் பெரிய அளவு விளம்பரப்படுத்தி, மக்களிடையே பன்றிக் காய்ச்சல் குறித்துப் பரவியுள்ள பீதியைக் குறைக்கவேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்தி நோயைத் தடுத்துக்கொள்ள, அரசு முயற்சி எடுக்க வேண்டும்.”

 - பிரேமா நாராயணன்

படங்கள்: குமரகுருபரன், சி.தினேஷ்குமார்

பன்றிக் காய்ச்சல்... என்ன டயட்?

1.வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில்  கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.

2.வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.

3.குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.

4.அன்னாசிப் பூ மிகவும் நல்லது. உணவில் சேர்க்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கு அரசு வழங்கும் ‘டேமிஃப்ளூ’ மாத்திரைகளில் அன்னாசி  பூ கலந்துள்ளது.

5.பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம்.

எளிய - வலிய சில மருந்துகள்!

தொண்டையில் தொற்று, வலி மற்றும் கரகரப்பு ஆரம்பிக்கும்போதே, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும்.

மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறு துண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்துகொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப்
பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும்.

அடுத்த கட்டுரைக்கு