Election bannerElection banner
Published:Updated:

`நம் மனதை மலரச்செய்யும் 3 விஷயங்கள்!’ - ’மதுரை’ முத்துவின் ரிலாக்ஸ் ரகசியங்கள்!

`நம் மனதை மலரச்செய்யும் 3 விஷயங்கள்!’ - ’மதுரை’ முத்துவின் ரிலாக்ஸ் ரகசியங்கள்!
`நம் மனதை மலரச்செய்யும் 3 விஷயங்கள்!’ - ’மதுரை’ முத்துவின் ரிலாக்ஸ் ரகசியங்கள்!

`நம் மனதை மலரச்செய்யும் 3 விஷயங்கள்!’ - ’மதுரை’ முத்துவின் ரிலாக்ஸ் ரகசியங்கள்!

துரை முத்து, மேடைகளில் நின்ற நிலையிலேயே அனைவரையும் சிரிப்புக்கடலில் ஆழ்த்துபவர். அள்ளித்தெளித்த புள்ளிக் கோலம்போல் நகைச்சுவைத் துணுக்குகளை அடுக்கடுக்காக எடுத்துவிட்டு அசத்துபவர். ஜோக் சொல்பவர்களுக்கே இருக்கவேண்டிய 'டைமிங் சென்ஸ்' இவருக்கு மிகப்பெரிய வரம். ``இப்படி அனைவரையும் சிரிக்கவைக்க உங்களால் எப்படி முடிகிறது... உங்களுக்கு டென்ஷனே வராதா, வந்தால் எப்படிச் சமாளிப்பீர்கள்?’’ எனக் கேட்டோம்.

''எப்பவுமே நமக்கு மேல உள்ளவங்களைப் பார்த்து, 'ஐயோ, அவன் அப்படி இருக்கானே... இவன் இப்படி இருக்கானே'னு நினைக்காம, நமக்குக் கீழே உள்ளவங்களைப் பார்த்து, `அவங்களைவிட நாம எவ்வளவோ நல்லா இருக்கோமே’னு நெனைச்சுக்குவேன்.  
அது, என் மனைவி, கார் விபத்துல மறைவுற்றிருந்த நேரம். என் வாழ்க்கையைக் கடக்க முடியாம நான் ரொம்ப வேதனைப்பட்டுக்கிட்டு இருந்த நேரம் அது. அப்போ, என் ஃப்ரெண்டு ரெண்டு நிகழ்ச்சியைச் சொல்லி ஆறுதல்படுத்தினார்.  

ஒரு கார்ல பயணம் பண்ணின ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேரும் இறந்துட்டாங்க. ஒரே ஒரு கைக்குழந்தைதான் பொழைச்சிருக்கு. அந்தக் குழந்தையை ஒரு ஹோம்ல விட்டுட்டாங்க. அதை நினைச்சுப் பார்க்குறப்போ, `என் பிள்ளைங்களுக்கு நான் இருக்கேனே’னு ஒரு ஆறுதல்.  

அதே மாதிரி இன்னொரு சம்பவம்...

கோயம்புத்தூர் பக்கம் ஒரு பெரிய தொழிலதிபர்... அவருக்குப் பத்துப் பதினைஞ்சு மில் இருக்கு. ஒரே மகன். `அம்மா! ஹார்லிக்ஸ் போட்டுக் கொடும்மா’னு பாட்டிலை எடுத்துக்கிட்டு வந்தப்போ கால் தடுமாறிக் கீழே விழுந்து, பாட்டில் உடைஞ்சு வயித்துல குத்தி இறந்துபோயிட்டான். எட்டு வயசுப் பையன். என்ன ஆறுதல் சொல்லி, என்ன பண்ண முடியும்? இந்த ரெண்டு சம்பவங்களையும் சொல்லி என்னை ஆறுதல்படுத்தினான்.  

எவ்வளவு கஷ்டம் வந்தாலும், ஒண்ணை மட்டும் நான் ஞாபகம்வெச்சுக்குவேன். செருப்பு இல்லேனு கவலைப்படுறதைவிட, காலே இல்லாதவங்களைப் பத்தி யோசிச்சுப் பார்த்தா போதும். நமக்கு, 'மன அயர்ச்சி', 'ஆயாசம்' இதெல்லாம் ஏற்படாது. ஆனா, இதுக்கு ஒரு பக்குவப்பட்ட மனநிலை தேவைப்படுது. மனசை நாம எப்பவும் ஆனந்தமாவெச்சிக்கணும்னா அதுக்குச் சில வழி முறைகள் இருக்கு.
சில பேர் இசைப் பாடல்களைக் கேட்பாங்க. சில பேர் மூடு அவுட்டாக இருந்தா, குளிர்ச்சியான தண்ணியில ஒரு குளியல் போடுவாங்க. வேறு சிலர் மனசுக்குப் பிடிச்சதைச் சாப்பிடுவாங்க.  மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம்னு மூணுவிதமான விஷயங்கள் நம் மனசை மலரச்செய்யும்.

மகிழ்ச்சிங்கிறது, நாம சுயமா எதையாவது சாதிக்கணும்னு முடிவு பண்ணி சாதிச்சிருப்போம். திடீர்னு லாட்டரியில பரிசு விழுந்திருக்கும். எதிர்பார்த்த மாதிரி குழந்தை பிறந்திருக்கும். இதையெல்லாம் மகிழ்ச்சினு சொல்லலாம்.

சந்தோஷம்ங்கிறது நாம ஜாலியா ஒரு டூர் போயிட்டு வர்றது. நணபர்களுடன் விருந்துகளில் கலந்துக்குறதுனு சொல்லலாம்.
ஆனந்தம்ங்கிறது, முடியாதவங்களுக்கு, வயசானவங்களுக்கு தானம் பண்ணும்போது, பத்து ரூபா போடுறதுக்கு பதிலா 100 ரூபா போட்டோம்னா அவங்க முகத்துல கண்கள் மிளிர்ற ஒரு சந்தோஷம் தவழும் பாருங்க. அதைப் பார்க்கும்போது நம்ம மனசுல ஏற்படுறதுதான் ஆனந்தம்" என்று நிறுத்தியவரிடம், ``அடுத்தவங்களை ஜோக்குகள் மூலமாக சந்தோஷப்படுத்துற ஐடியா உங்களுக்கு எப்போ, எப்படி வந்துச்சு?’’ என்று கேட்டோம்.

``நான் ஸ்கூல்ல படிக்கிற காலத்துல இருந்தே நம்ம மதுரை மண்ணுக்கே உள்ள நக்கல் நையாண்டியோடதான் பேசுவேன். ஸ்கூல் லைஃப்ல நான் சாப்பிடப்போனா என்கூட ஏழெட்டு நண்பர்கள் வருவாங்க. அப்பவே சிரிக்கச் சிரிக்கப் பேசுவேன். அதுதான் இன்னிக்கிவரைக்கும் எனக்குக் கைகொடுக்குது. வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில எம்.காம் ஃபஸ்ட் இயர் படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் படிக்கலை. அப்போ என்கூட படிச்ச நண்பர்... குருனு பேர்... அவர்தான் என்னோட திறமை என்ன... நான் எந்த லைன்ல போனா ஷைன் பண்ண முடியும்ங்கிறதைச் சொன்னார். 

அதுக்கப்புறம் விஜய் டி.வி-யில மதன்பாப், சின்னிஜெயந்த் நடத்தின 'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியில  கலந்துக்கிட்டு 'டைட்டில் வின்னர்' ஆனேன். அப்போ ஆரம்பிச்சது, இன்னைக்கு உலகம் முழுக்க, கிட்டத்தட்ட 80 நாடுகளுக்குப் பயணம் போயிட்டு வந்துட்டேன். ரெண்டாயிரம் நிகழ்ச்சிகளுக்கு மேல ஸ்டேண்ட்அப் காமெடி பண்ணிட்டேன். வடிவேலு அண்ணன்கூட சொல்லுவார். 'நான் பாடி லாங்க்வேஜ், டயலாக் டெலிவரி பண்ணிச் சிரிக்கவெப்பேன். நீ வெறும் டயலாக்குலேயே சிரிக்கவெக்கிறேன்னா அதுக்கு நம்ம மதுரைத்தமிழ்தான் காரணம்’பார். 

சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம், அடுத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதுதான். வாழ்க்கை ரொம்ப குறுகியது. இன்னைக்கு இப்போ இருக்கிற வாழ்க்கையைச் சரியா சந்தோஷமா வாழணும். அவ்வளவுதான். ஆனா, ஒருத்தன் எந்த அளவு மத்தவங்களைச் சிரிக்க வைக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் உள்ளுக்குள்ள அழுதிருக்கான்னு அர்த்தம். அந்த அளவுக்கான காயங்கள் என் மனசுலயும் இருக்கு. இந்த மூஞ்சியெல்லாம் வேலைக்கு ஆகாதுனு சொன்னவங்கல்லாம், 'அவன் நம்ம உறவுக்காரன்'னு சொல்லி சிறப்பு விருந்தினரா அவங்க வீட்டு நிகழ்ச்சியிலேயே இன்னைக்குக் கலந்துக்க வைக்கிறாங்க’’ என்கிறார் முத்து சிரிப்பு மாறாமல்

  
  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு