Published:Updated:

ரசனையும், காமெடியுமே... உளைச்சலுக்கு மருந்து! - தம்பி ராமையா...

ரசனையும், காமெடியுமே... உளைச்சலுக்கு மருந்து! - தம்பி ராமையா...

தேசிய விருது பெற்றவர். இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு திரையுலகுக்குள் நுழைந்தவர். பல வருடங்கள் காத்திருந்து, உழைப்பை மூலதனமாக்கி தன் கனவை மெய்ப்படுத்திக்கொண்டவர். ஆனால், இயக்கிய முதல் படமே படுதோல்வி!

 “கடவுள் என் கழுத்துல காலை வெச்சி மிதிச்சிட்டு இருந்தான் தம்பி. கால் வலிக்குதுனு கொஞ்சம் ஓய்வெடுத்தான் பாரு... இதான் சான்ஸ்னு மேலே ஏறி வந்துட்டேன்” சோகத்தையும் நகைச்சுவையால் துரத்துகிறார் இந்த மனிதர். 

ரசனையும், காமெடியுமே... உளைச்சலுக்கு மருந்து! - தம்பி ராமையா...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மன உளைச்சல்

மன உளைச்சலுக்கு பஞ்சமே இல்லாத ஒரு துறை, சினிமா. எனக்கு மன உளைச்சல் வர்ற மாதிரி இருந்தா, அதற்கான காரணத்தை ஆராய்வேன். ஒரு மனிதனோ, ஒரு சம்பவமோதான் அந்த மன உளைச்சலுக்குக் காரணமா இருக்கும். மனசுக்குப் பிடிக்காத மனுஷனைப் பற்றி நினைப்பதும், உடலுக்குப் பிடிக்காத உணவை உண்பதும் நமக்குக் கேடாகவே முடியும். எனக்குப் பிடிக்காத மனுஷங்களைப் பற்றின நினைப்பைத் தவிர்த்திடுவேன். நம்மோட எண்ணங்களே செயலாகும். நேர்மறையான எண்ணங்களே மகிழ்ச்சியைத் தரும்.

அவன் நிறைய சம்பாதிக்கிறானே, பெரிய வீட்டைக் கட்டிட்டான். ஆனா, நாம மட்டும் இன்னும் உயரவே இல்லையேனு நினைச்சாலே, நாம வளர முடியாது. நம்மால நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கும் பிரச்னை. அதுபோன்ற எண்ணங்கள் மனசுல ஓரமா வந்தாக்கூட, உடனே கண்ணதாசனோட “உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு” என்ற வரிகளை நினைச்சுப்பேன். 

குழந்தைப் பருவத்தைத் தாண்டிட்டாலும், நாம குழந்தைங்க மாதிரியே வாழப் பழகிக்கணும். சிரிப்பும் சந்தோஷமும் மட்டும்தான் வாழ்க்கையில் இருக்கணும். எல்லா விஷயத்தையும் காமெடியா, ரசனையா பார்க்க ஆரம்பிச்சதுனாலதான், டென்ஷன், சோர்வு, மன உளைச்சல் எதுவும் என்கிட்ட நெருங்கவே பயப்படுது. காலையில தூங்கி எழுந்தா காபி, எழுந்துக்கலைன்னா பால்... இவ்வளவுதான் தம்பி வாழ்க்கை. இதுக்கு நடுவுல தேவையில்லாத மன உளைச்சல்ல சிக்கித் தவிச்சா... வாழ்வே சூன்யமாயிடும். ஆல்வேஸ் பி ஹேப்பி!  ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லாமத் திண்டாடறவங்க மத்தியில, கடவுள் நம்மை அந்த நிலைக்குக் கொண்டுசெல்லலைனு ரொம்பவே சந்தோஷப்பட்டுக்குவேன்.

ரசனையும், காமெடியுமே... உளைச்சலுக்கு மருந்து! - தம்பி ராமையா...

உணவுப் பழக்கம்

‘இந்தியர்கள் அத்தனை பேரும் உணவுப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்’ என்றார் காந்தி. நான் அதைச் செஞ்சு பார்த்தவன். பருவத்துக்கு ஏற்ற உணவு வகைகளை மட்டுமே எடுத்துப்பேன். கல்லையும் செரிக்கிற பருவத்தில் எல்லா வகை உணவையும் சாப்பிட்டிருக்கேன். அந்தப் பருவத்தைக் கடந்த பிறகு, ரொம்பவும் செலக்ட்டிவான உணவை எடுத்துக்கிறேன். பெரும்பாலும் அசைவ உணவைத் தவிர்க்கிறேன். காலையில் இட்லி, இடியாப்பம், புட்டு, தோசைனு டிஃபன். மதியம் காய்கறி, கீரை வகைகள் சேர்த்த சாப்பாடு. வெரைட்டியான பழங்கள், ஜூஸ் வகைகள், மோர்னு அதிகம் குடிப்பேன். ராத்திரியிலும் மிருதுவான உணவுகளுக்குத்தான் முதல் இடம். இந்த உணவுகளே என் வயிற்றைப் பதம் பார்க்காம இதமா வெச்சிருக்கு. உங்களுக்கு ஞாபக சக்தி நல்லா இருந்தா, நீங்கள் எடுத்துக்கிற உணவுல எந்தப் பிரச்னையும் இல்லைனு அர்த்தம். ஒரு வேளை நீங்கள் பயங்கர ஞாபகமறதியால் அவதிப்படுகிறீர்களா... தொடர்ந்து எந்த விஷயத்துலயும் கவனம் செலுத்த முடியலையா... சோர்வும் மந்தமுமா இருக்கா... உடனே, உங்களோட உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் மாற்றம் தெரியும். 

உடற்பயிற்சி

காலை எழுந்ததும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செஞ்சே தீருவேன். உடற்பயிற்சி என்றால், கையில் தம்புள்ஸ் தூக்குவது, தண்டால் எடுப்பது இல்லை. ஐந்து நிமிடங்கள் கைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுவேன், தாவுவேன், குதிப்பேன், குட்டிக்கரணம் அடிப்பேன். எனக்குத் தேவை என் உடலில் இருந்து வியர்வை வெளியே வரணும். மனம் லேசாகி புத்துணர்வு கிடைக்கணும். ஆனால், என் மனைவி உட்பட, நான் செய்யற பயிற்சிகளைப் பார்ப்பவர்கள் சிரிப்பாங்க... கேலி பண்ணுவாங்க. அதற்காகக் கவலைப்பட்டு பயிற்சி செய்யறதை நிறுத்துவதோ, கூச்சப்படுவதோ கிடையாது. எனது ஆடைகள் முழுக்க வியர்வையால் நனைந்தால் மட்டுமே பயிற்சியை நிறுத்துவேன். உடல் முழுக்க வியர்க்கும்போது, அரை மணி நேரத்துல ஐந்து கோடி ரூபாய் சம்பாதித்த சந்தோஷம் கிடைக்கிறது.

ரசனையும், காமெடியுமே... உளைச்சலுக்கு மருந்து! - தம்பி ராமையா...

விடிகாலையில் விழித்தெழு!

இரவு ஷூட்டிங் முடிஞ்சு, எவ்வளவு நேரம் தாமதமாக வந்தாலும் காலையில் நாலரை மணிக்கெல்லாம் ‘டாண்’னு முழிச்சிடுவேன். உடனே, உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சிடுவேன். ‘வாழ்க்கையில் ஜெயிச்சவனெல்லாம் காலையில சீக்கிரம் எந்திரிச்சவன்தான்டா’னு சொல்வார் பாலுமகேந்திரா சார். காலையில் மூளை படுவேகமாக வேலை செய்யும். காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம்னு இதுவரைக்கும் மருத்துவர்கிட்ட போனதே இல்லை. உடல் சுகத்துக்கு எப்படி விஷயங்கள் படைக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல் உடல் சுகவீனம் அடையும்போது அதிலிருந்து மீண்டு வர்றதுக்கும் உடலில் விஷயங்கள் படைக்கப்பட்டிருக்கும். இதையெல்லாம் சரியாகப் பின்பற்றுவதாலயோ என்னமோ தினமும் படுக்கைக்குப் போன அஞ்சாவது நிமிஷமே தூக்கம் கண்ணைத் தழுவிடும்.  ‘மைனா’ படத்துல ஒரு டயலாக் பேசுவேன். ‘லவ் பண்ணுங்க சார்... லைஃப் நல்லா இருக்கும்’னு. அதே மாதிரிதான். உடலை லவ் பண்ணுங்க சார்... வாழ்க்கை நல்லா இருக்கும்!’’     


    - குரு அஸ்வின்