Published:Updated:

இது டென்டிஸ்ட் குடும்பம்!

இது டென்டிஸ்ட் குடும்பம்!

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் பரபரப்பாக இயங்குகிறது உதயராஜா டென்டல் கிளினிக். வெள்ளை கோட் சகிதம், சீனியரும் ஜூனியருமாக மும்முரமாக இருக்கும் மருத்துவப் படையை நெருங்கி விசாரித்தால்தான் தெரிகிறது, அந்த மருத்துவர்களில் ஆறேழு பேர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தன் டென்டிஸ்ட் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார் டாக்டர் உதயராஜா.

இது டென்டிஸ்ட் குடும்பம்!

“இவங்க டாக்டர் ஜமுனா, என் மனைவி. எங்க பொண்ணு டாக்டர் ப்ரீத்தி, பையன் டாக்டர் பிருத்வி’’ என்றவர், இன்னும் இரண்டு டாக்டர்களைச் சுட்டிக் காட்டி, “இவங்க ரெண்டு பேரும் என் சகோதரியின் மகள்கள், டாக்டர் தீபிகா, டாக்டர் விவேகா. இப்படி எங்க குடும்பத்தில் 10 பல் டாக்டர்கள்!’’ என்றார் பெருமிதம் பொங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“என் சொந்த ஊர் கோயம்புத்தூர். மண் மணக்க மணக்கப் பேச்சு, சாப்பாடு, சொந்தம்னு ஊர் பாரம்பர்யத்தை மறக்காம இருக்கணும்னு நினைக்கிறவன். எங்க கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்து, எங்க குடும்பமே ஆசிரியர் குடும்பம். அதில் விதிவிலக்காக, எங்கப்பா மட்டும் பார்மசிஸ்ட் ஆனார். எனக்கு மெடிசின் படிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனால், மெடிசின் கிடைக்கலை. அக்ரி, வெட்னரி, டென்டல்... இந்த மூணுல ஏதாவது ஒண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமை. நான் டென்டலைத் தேர்ந்தெடுத்தேன். காலேஜ்ல சீனியர் பசங்க எல்லாரும் என்னை பயங்கரமா ராகிங் பண்ணாங்க. ‘பல் டாக்டருக்குப் படிச்சு என்ன சாதிக்கப்போற?’்னு கிண்டல் பண்ணாங்க. அதனாலேயே, இந்தத் துறையில் சாதிக்கணும்னு  ஒரு வெறி  வந்தது. எங்க தலைமுறையிலேயே நான்தான் முதல் டாக்டர்!’’ - என்கிறார் உதயராஜா.

``ஆனா, மேடம் குடும்பமே பயங்கரப் படிப்பாளி குடும்பம்’’ என்று அவர் கண் சிமிட்டி மனைவியை வம்புக்கு இழுக்க, ஜமுனாவின் முகத்தில் புன்னகை.

இது டென்டிஸ்ட் குடும்பம்!

``கடலூர் பக்கத்துல நெல்லிக்குப்பத்தில் பெரிய குடும்பம் எங்களோடது. நாங்க ஏழு பொண்ணுங்க, ஒரே பையன்.  அதுல நாங்க மூணு சகோதரிகள் டாக்டர்ஸ். இன்னும் ரெண்டு பேர் டாக்டரேட். அதிக மார்க் எடுத்து, மெரிட்ல தேர்வான எங்க பெரிய அக்கா டாக்டர் சாமுண்டி சங்கரிதான், முதலில் டாக்டர் ஆனாங்க.  அவங்கதான் எங்களையும் என்கரேஜ் பண்ணி, டாக்டருக்குப் படிக்கவெச்சாங்க. அவங்க, கைனகாலஜிஸ்ட். நானும் என் சிஸ்டர் கோமதியும் டென்டிஸ்ட்ஸ். அக்கா பிள்ளைங்களும் பல் டாக்டர்கள்!

என் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம். இவர் படிச்சு முடிச்சு, ஹவுஸ் சர்ஜனாக இருக்கிறப்பவே, அயனாவரத்தில் சின்னதா ஒரு கிளினிக் ஆரம்பிச்சிட்டார். நான் அப்போ சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இருந்தேன். கிளினிக்நல்லா பிக்கப் ஆக ஆரம்பிச்சதும், இந்த கிளினிக்கையும் தொடங்கினோம்.  அப்புறம், இவரும் எம்.டி.எஸ். படிச்சிட்டு,  ஸ்பெஷலைஸ் பண்ணி, பல்சீரமைப்பு நிபுணர் (Orthodontist) ஆனார். ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியில் 20 வருஷம் பேராசிரியராகவும் இருந்தார். எங்க பொண்ணையும் பையனையும் இதே துறையில்தான் டாக்டர் ஆக்கணும்னு நினைச்சோம். எங்க விருப்பப்படியே,  இப்போ ரெண்டு பேருமே பல் மருத்துவர்கள். இதைவிட சூப்பரான நியூஸ் என்னன்னா, என் அக்கா பொண்ணு, ‘பல் டாக்டராக இருக்கிற சித்தி, சித்தப்பா இவ்வளவு சந்தோஷமா இருக்காங்களே’னு எங்களை ரோல்மாடலாக எடுத்துக்கிட்டு, தனக்கு கிடைச்ச எம்.பி.பி.எஸ். சீட்டை வேணாம்னு சொல்லி, பி.டி.எஸ். சேர்ந்துட்டா!’’ - ஜமுனா சொல்லச் சொல்ல, அங்கிருந்த அத்தனை இளம் மருத்துவர்களும் தங்கள் அழகுப் பல்வரிசை காட்டி புன்னகைத்தனர்.

சர்வதேச அளவில் அடிக்கடி மாநாடுகள், கருத்தரங்குகள் என்று உலகத்தையே சுற்றி வந்தாலும், இந்த டாக்டர் தம்பதிக்கு நம்ம ஊர்தான் சொர்க்கமாம்.

இது டென்டிஸ்ட் குடும்பம்!

``நாங்க ரெண்டு பேருமே பள்ளி நாட்களில் அத்லெட்ஸ். காலேஜ் வந்ததும் படிக்கிற மும்முரத்தில் நேரம் கிடைக்காமல் அதையெல்லாம் விட்டாச்சு. ஆனாலும், காலையில் ஒரு மணி நேரம் வாக்கிங் நிச்சயம் போவோம்.  நடைப்பயிற்சியோடுதான் நாளே தொடங்கும். வாரத்தில் மூன்று  நாட்கள் யோகா.  நேரம் கிடைக்கிறப்போ ஸ்விம்மிங் போவோம். கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம்னு நம்ம சொந்த ஊர் சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். சாப்பாட்டுல அரிசி குறைவாகவும் காய்கறி, சூப், கீரை, பழங்கள் அதிகமாகவும் இருக்கிற மாதிரி பார்த்துக்குவோம். நார்ச்சத்து நிறைஞ்ச உணவுகளை நிறைய எடுத்துக்குவோம். மூணு வேளையும் சாப்பாட்டில் காய், பழம் இருக்கும்.   பிரியமான உறவுகள் மற்றும் நண்பர்களை அடிக்கடி சந்திச்சுப் பேசுறது, சொந்தங்களோடு அப்பப்ப சின்னதா பிக்னிக், டூர் போறது, ரோட்டரி மூலமா சமூகசேவை செய்றதுனு வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்ந்திட்டிருக்கோம்!’’ என்று ஜமுனா நிதானமாகச் சொல்ல...

``நகைச்சுவை உணர்வு ரொம்ப முக்கியம். எதையும் லைட்டாக எடுத்துக்கிறது, மத்தவங்களோடு ஷேர் பண்ணிக்கிறது, நல்ல இசை கேக்கிறது எல்லாமே மனசுக்கான பயிற்சிகள்தான். பற்களுக்கு அழகே சிரிப்புதான். சிரிப்பு, முகத்தை அழகாக்கும்.  இந்த கிளினிக்குக்கு வர்றவங்க, சிரிக்காமப் போறதே இல்லை!’’ என்கிறார் உதயராஜா.

``பல் டாக்டர் குடும்பமாச்சே! உடல் ஆரோக்கியத்துக்கு ஈடாக பல் பராமரிப்புக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பீங்களே!’’

“ஆமா! தினசரி ரெண்டு வேளை பல் துலக்கறது, பச்சைக் காய்கறிகளை நல்லா மென்னு சாப்பிடறது, தண்ணீர் நிறையக் குடிக்கிறதுன்னு சில பழக்கங்களைக் கட்டாயம் கடைப்பிடிப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களை `க்ளீனிங்’ பண்ணிப்போம். ராத்திரி படுக்கிறதுக்கு முன்னால பிரஷ் பண்ணிட்டு, உணவுத்் துகள்கள் ஏதாவது பல்லிடுக்கில் மாட்டியிருந்தால், `ஃப்ளாஸ்’ வெச்சு சுத்தப்படுத்திட்டுத்தான் தூங்கப் போவோம். மூணு மாசங்களுக்கு ஒரு தடவை பிரஷ் மாத்திடுவோம்” என்று ஜமுனா புன்னகைத்தபோது, அவர் முத்துப் பற்களின் ரகசியம் புரிந்தது.

`பல்’லாண்டு வாழ்க!

 - பிரேமா நாராயணன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘பல்’ பராமரிப்பு டிப்ஸ்:

•  டூத்பிரஷ் அதிகக் கடினமாகவோ, அதிக மென்மையாகவோ இருக்க வேண்டாம். மீடியமாக இருந்தால் போதும்.

•  பேஸ்ட்டில் உப்பு, சர்க்கரை எல்லாம் இருக்கத் தேவை இல்லை. ஃப்ளூரைடு இருந்தால் நல்லது.

•  கைக் குழந்தைகளுக்கு, இரவில் பால் கொடுத்ததும், ஈரத் துணியால் ஈறு, பற்களை அழுத்தித் துடைத்துவிட வேண்டும்.

•  6 மாதங்களுக்கு ஒரு முறை அனைவருக்குமே பல் பரிசோதனை அவசியம். இதனால், பற்குழி, சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, சரிசெய்துவிடலாம்.

•  நகம் கடித்தல், விரல் சூப்புதல், வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குதல், நாக்கை முன்பற்களுக்குள் விட்டுத் துழாவுதல் போன்ற பழக்கங்களால் குழந்தைகளுக்கு முன் பல் வெளியே எத்திக்கொண்டு வந்துவிடும். இந்தப் பழக்கத்தை `habit breaking appliance’ என்ற கருவி மூலம் கட்டுப்படுத்தலாம்.

•  பெரியவர்களுக்கு, வயோதிகம் காரணமாகவும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மருத்துகள் காரணமாகவும் ஈறுகள் வீங்கும். அதற்கு ஈறு சிகிச்சை செய்துகொள்ளலாம்.

•  இப்போது 18 - 25 வயதுக்குள் இருக்கும் அனைவருக்குமே, ஞானப்பல் எனப்படும் கடைசி கடைவாய்ப்பல், சாய்வாகவும் கோணலாகவும் முளைக்கிறது. அந்தப் பற்களை எடுத்துவிடுவதன் மூலம், அதனால் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.